தண்டனை தப்பாது! கதை: ராஜேஷ்குமார், முடிவு: ஜெயகாந்தி மகாதேவன்

தண்டனை தப்பாது! கதை: ராஜேஷ்குமார், முடிவு: ஜெயகாந்தி மகாதேவன்
ஓவியம்: தமிழ்

“அண்ணா!”

டி.வியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தினம் தனக்குப் பின்பக்கம் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

அறைக்கதவு அருகே அவனுடைய தம்பி பூவராகவனும் தங்கைகள் பிரபாவும், மணிமாலாவும், கவலை ரேகைகள் படர்ந்த முகங்களோடு நின்றிருந்தார்கள். ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வியின் வெளிச்சத்திரையை இருட்டாக்கிவிட்டு என்ன? என்பதைப் போல் அவர்களைப் பார்த்தான் ஜனார்த்தனம்.

பூவராகவன் மெல்லிய குரலில் முனகினான்.

“லாயர் ரமணனும், ஆடிட்டர் ஞானசம்பந்தமும் புறப்பட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டிருக்காங்க… அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் போன் வந்தது.”

ஜனார்த்தினம் உதட்டில் பரவிய ஒரு சின்ன புன்முறுவலோடு தலையசைத்தான்.

“வரட்டுமே?”

“என்னண்ணா… இவ்வளவு அலட்சியமா சொல்றே? உனக்கு டென்ஷனாய் இல்லையா?”

“எதுக்கு டென்ஷன்?”

“அப்பாவோட முதல் வருஷ திதி காரியமெல்லாம் நேத்திக்கு முடிஞ்சது. அதுக்கு அடுத்த நாள் அதாவது இன்னிக்கு அப்பா எழுதி வெச்ச உயிலை ஆடிட்டர் முன்னிலையில் லாயர் படிக்கப் போறார். இப்ப இருக்கிற சொத்து பூராவும் அப்பா தன்னோட சுய சம்பாத்தியத்துல சம்பாதிச்ச சொத்து. உயிலை அவர் எப்படி எழுதி வெச்சிருப்பாரோன்னு எங்களுக்கெல்லாம் மனசு பூராவும் ‘திக் திக்’ன்னு இருக்கு… ஆனா நீ மட்டும் அலட்டிக்காமே நிம்மதியா சோபாவுக்கு சாய்ஞ்சு உட்கார்ந்துட்டு டி.வி பார்த்துட்டிருக்கே?”

ஜனார்த்தனம் சோபாவை விட்டு எழுந்து வந்தான்.

“எதுக்காக டென்ஷன் படணும்..? சொத்தோட மதிப்பு பத்து கோடிக்கு மேல் தேறும்… நம்ம நாலு பேர்க்கும் சொத்தை எப்படி பிரிச்சு எழுதி வைக்கணும்ன்னு அப்பாவுக்குத் தெரியாதா என்ன…? உயிலை எழுதறதுக்கு முன்னாடி அவர் பலதடவை யோசனை பண்ணியிருப்பார்.”

இரண்டு தங்கைகளில் ஒருத்தியான பிரபா தயக்கமான குரலில் “அண்ணா… நான் ஒரு விஷயம் சொன்னா நீ அதை தப்பா நினைக்கக் கூடாது..?” என்றாள்.

“என்ன சொல்லப் போறே?”

“அப்பாவோட மனசைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவர்க்கு உங்க மேலேயும், சின்ன அண்ணன் மேலேயும் கூடுதல் பிரியம். எனக்கும் மணிமாலாவுக்கும் இந்த சொத்தில் சரியான பங்கு கிடைக்காதுன்னு என்னோட மனசுக்குப் படுது. அப்படி ஒரு வேளை எங்களுக்கு சமமான பங்கு கிடைக்கலைன்னா, நீங்க ரெண்டு பேரும்தான் அதுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கணும்.”

அதுவரைக்கும்மெளனமாய் இருந்த பூவராகவன் கோபத்தோடு பிரபாவை ஏறிட்டான்.

“தீர்வுன்னா என்ன தீர்வு..?”

“எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டியதை பெரிய அண்ணனும் நீங்களும் பிரிச்சுத் தரணும்.”

“இதோ பார்… அப்பா எப்படி உயில் எழுதி வெச்சிருக்காரோ அப்படித்தான் பிரிச்சுக்கப் போறோம். அதுல எந்த மாற்றமும் செய்ய முடியாது. அம்மா உயிரோட இருந்த காலத்திலேயே அப்பா உங்களுக்கெல்லாம் நிறைய நகைபோட்டு கல்யாணத்தைப் பண்ணியிருக்கார். அதெல்லாம் உனக்கும் மணிமாலாவுக்கும் ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.”

“அப்படீன்னு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் வெளிநாடு போய் படிக்கிறதுக்காக, அப்பா லட்சக் கணக்கில் செலவு பண்ணினாரே அதை எந்தக் கணக்குல சேர்த்துக்கிறது, சொல்லுங்கண்ணா?”

இன்னொரு தங்கையான மணிமாலா முகம் சிவந்து போனவளாய், ஏதோ பேச முயன்ற விநாடி வீட்டுவாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

பூவராகவன் பரபரத்தான்.

“லாயரும், ஆடிட்டரும் வந்துட்டாங்க போலிருக்கு. லாயர் மொதல்ல உயிலைப் படிச்சு முடிக்கட்டும். உயில்ல ஏதாவது பிரச்னையிருந்தா நாம நாலு பேரும் உட்கார்ந்து நிதானமாய் பேசித் தீர்த்துக்கலாம். அவங்களுக்கு முன்னாடி சண்டை போட்டா நமக்குத்தான் அசிங்கம்…”

காரினின்று லாயரும், ஆடிட்டரும் இறங்கி வாசற்படி ஏறி வர, நான்கு பேரும் செயற்கை புன்னகைகளோடு எதிர் கொண்டார்கள்.

“வாங்க ஸார்.”

லாயர் ரமணன், “ஸாரி… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றார்.

“நோ ப்ராப்ளம் ஸார்… இன்னிக்கு திங்கட்கிழமை. மத்தியானம் பனிரெண்டு மணியிலிருந்துதான் நேரம் நல்லாயிருக்கு. இப்போ மணி பனிரெண்டரை. அமிர்தயோகம் வேற. நீங்க நல்ல நேரத்துலதான் புறப்பட்டு வந்து இருக்கீங்க.” ஜனார்த்தனம் சொல்லிக்கொண்டே ஹாலில் போட்டிருந்த சோபாவைக் காட்டினான்.

லாயர் மெல்லச் சிரித்தபடி சொன்னார்.

“அப்பா கடைசியா வாழ்ந்த மாடி ரூமுக்குப் போயிடலாம். உயிலை அங்க வெச்சுத்தான் படிக்கணும்ங்கறது அவரோட ஆசை…”

“இப்படியொரு செண்டிமெண்ட் வேற அப்பாவுக்கு இருந்திருக்கா? இட்ஸ் ஓ.கே… வாங்க ஸார் அந்த ரூமுக்கே போயிடலாம்…”

ஆடிட்டர் ஞானசம்பந்தம் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டே ஜனார்த்தனம், பூவராகவன் இரண்டு பேரையும் பார்த்தபடி கேட்டார்.

“உயில் படிக்கப் போற இந்த நேரத்துல… உங்க ரெண்டு பேரோட ஃபேமிலியும்… வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்…ஏன் வரலை?

“அவங்களுக்கும் வர்றதுக்கு  ஆசைதான் ஸார்… ஆனா அமெரிக்கா, கனடாவோட எஜீகேஷன் சிஸ்டத்துல வெக்கேஷனைத் தவிர மற்ற நாட்களில் குழந்தைகளுக்கு லீவு கிடையாது. மீறி லீவு எடுத்தா ரேங்கிங் ரேட் குறையும். அதனாலதான்… அவங்களை அங்கேயே விட்டுட்டு நாங்க மட்டும் வந்தோம்… மற்றபடி எந்த ஒரு காரணமும் இல்லை ஸார்.”

“இட்ஸ்… ஓ.கே.”

ஆறு பேரும் மாடிப்படிகளில் ஏறி சற்றே இருட்டான அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

பூவராகவன் அனலாய் பெருமூச்சு விட்டான்.

“அப்பா… கடைசி வரைக்கும் இதே ரூம்ல ஒரு சிம்பிளான வாழ்க்கையை வாழ்ந்துட்டு போயிட்டார்.”

ஜனார்த்தனம் சுவரில் கை வைத்து ஸ்விட்ச்களைத் தேய்க்க, சீலிங்கில் அப்பியிருந்த ஒரு ட்யூப்லைட்டும், ஒரு எல்.இ.டி குண்டுபல்பும் வெளிச்சம் பிடித்துக்கொண்டு ஒளிர்ந்தன. ஃபேன் ஒன்று மெல்ல வேகம் பிடித்து சுழன்றது.

எல்லாரும் நாற்காலிகளை எடுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

லாயர் தன் கையோடு கொண்டு போயிருந்த ப்ரீப்கேஸைப் பிரித்து உள்ளேயிருந்து அரக்கு சீல் வைக்கப்பட்ட அந்த நீளமான ப்ரவுன் கவரை எடுத்தார். அனைவருக்கும் காட்டிக்கொண்டே சொன்னார்.

“இது போன வருஷம் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி எழுதப்பட்ட உயில். அதுக்கு அடுத்த நாளே ரெஜிஸ்டர் செய்யப்பட்டு, ஒரு கவர்ல போட்டு, சீல் வெச்சு ரெஜிஸ்ட்ரார் முன்னாடி என்கிட்டே உங்கப்பா பஞ்சலிங்கம் கொடுத்தார். அந்த நேரத்துல நம்ம ஆடிட்டர் ஞானசம்பந்தமும் இருந்தார். உங்க நாலு பேர்ல யார்க்காவது சந்தேகம் இருந்தா கவரை வாங்கிப் பார்த்து செக் பண்ணிக்கலாம். சீல் உடைஞ்சிருக்கா இல்லையான்னு பார்த்துக்கலாம்.”

ஜனார்த்தனம் சிரித்தான்.

“என்ன லாயர் ஸார்… நீங்க எங்க ஃபேமிலி லாயர். உங்க மேல நாங்க சந்தேகப்படுவோமா… கவரைப் பிரிச்சு உயிலைப் படிங்க.”

“உங்க நம்பிக்கைக்கு நன்றி” என்று சொன்ன லாயர் ரமணன் கவரின் வாய்ப்பகுதியில் இருந்த அரக்கு சீல்களை அகற்றிவிட்டு உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பக்க ஸ்டாம்ப் பேப்பர் தாள்களை வெளியே எடுத்தார். அதன் மடிப்புகளை சீராக்கிக் கொண்டு, நிதானமான குரலில் படிக்க ஆரம்பித்தார்.

“உயில் சாசனம்

2021-ம் வருடம் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி சென்னை அய்யப்பன்தாங்கல் பாரதி நகர் கதவு எண் 737-AB இலக்கமிட்ட விலாசத்தில் வசிக்கும் எஸ். பஞ்சலிங்கம் ஆகிய நான் நல்ல ஞாபகசக்தியுடனும், நல்ல உடல் மற்றும் மன நிலையிலும் இருந்து, தீர்க்கமாக ஆலோசனை செய்து, பிறர் தூண்டுதல், நிர்பந்தம் ஏதுவுமின்றி என் சுய விருப்பத்தின் பேரில் எழுதி வைத்த உயில் சாசனம் என்னவென்றால்…

எனக்கு இப்போது 81 வயதாகிறது. தற்சமயம் நான் அனுபவித்து வரும், எனது சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த கீழ்க்காணும் சொத்தினைக் குறித்து, ஒரு உயில் சாசனம் எழுதி வைத்துவிட வேண்டும் என்று மனப்பூர்வமாக நான் விரும்புவதாலும், என்னுடைய ஜீவிய திசைக்குப் பிறகு கீழ்க்காணும் சொத்தினைக் குறித்து என்னுடைய வாரிசுகள் மற்றும் உறவினர்களிடையே வீண் சண்டை சச்ரவுகளும், மனஸ்தாபங்களும் வழக்குகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தின் பேரிலும் இந்த உயில் சாசனத்தை எழுதி வைக்கிறேன்.”

இந்த இடத்தில் உயிலைப் படிப்பதை நிறுத்திய லாயர் ரமணன் எல்லோரையும் மெளனமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தார்.

“என்னுடைய மனைவி சகுந்தலா இப்போது உயிரோடு இல்லை. எனக்கு பிரபா, மணிமாலா என்கிற இரண்டு குமார்த்திகளும், ஜனார்த்தனம், பூவராகவன் என்கிற இரண்டு குமாரர்களும் இருக்கிறார்கள். நான்கு பேரும் தத்தம் குடும்பங்களோடு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் பச்சை அட்டைகளை வாங்கிக்கொண்டு அந்தந்த நாட்டு குடிமகன்களாக மாறிவிட்டார்கள். நான் சென்னையில் இங்கு தனியாய் வசித்து வருகிறேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் சேமித்த தொகைகளைக் கொண்டு சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினேன். இப்போது நான் இருக்கும் வீடு இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்டது. இந்த சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு பத்து கோடி ரூபாய் வரைக்கும் இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனது இரண்டு மகன்களும் மகள்களும் வெளிநாட்டு குடிமக்களாக மாறி, அங்கேயே தங்கிவிட்டார்கள். எனவே இந்த சொத்துக்களை அவர்களால் பராமரிக்க முடியாது என்பதால் இவைகளை விற்று வரும் பணம் முழுவதையும் பிரித்து, யார் யார்க்கு எவ்வளவு சேர வேண்டும் என்பதை இந்த உயில் சாசனத்தின் மூலம் உறுதிபடுத்த விரும்புகிறேன்.”

லாயர் ரமணன் படிப்பதை சில விநாடிகளுக்கு நிறுத்திவிட்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

“சொத்துக்களை விற்பதின் மூலம் எவ்வளவு பணம் வருகிறதோ அந்த பணத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்தை நான் நோய்வாய்பட்டு பக்கவாதம் வந்து, படுக்கையில் விழுந்த போது, ஒரு வருட காலம் என்னை ஒரு குழந்தையைப் போல் பாவித்து, உணவு ஊட்டி, உடை மாற்றி, நொடிக்கு நொடி ‘அப்பா’ என்று அழைத்து என்னை கவனித்துக்கொண்ட ஹோம் நர்ஸ் சகாயமேரிக்கும், இன்னொரு பகுதியை இவ்வளவு பெரிய வீட்டை பராமரித்து சுத்தப்படுத்தி காவல் காத்து பாதுகாப்பு கொடுத்த செக்யூர்ட்டி வாட்ச்மேன் பொன்னுசாமிக்கும், மூன்றாவது பகுதியை, ஒரு நோயாளியான எனக்கு, எது மாதிரியான உணவை மூன்று வேளையும் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று அட்டவணைப் போட்டுக்கொண்டு ஆத்மார்த்தமான அக்கறையோடு சமைத்துக் கொடுத்த ராஜாமணி அய்யர்க்கும், மீதியுள்ள ஒரு பாக பணத்தை நான்காகப் பிரித்து அதை சரிசமமாக என்னுடைய இரண்டு குமாரர்களுக்கும், இரண்டு குமார்த்திகளுக்கும் பிரித்து தரவேண்டியது. சொத்து என்னுடைய சுய சம்பாத்தியம் என்பதால் சொத்தின் பேரில் எந்தவித உரிமையோ, பாத்திய சம்பந்தங்களோ, பின் தொடர்ச்சியோ எக்காரணம் கொண்டும் கிடையாது. அவ்விதம் ஏதேனும் உரிமை கொண்டாடினாலும் அது எக்காரணம் கொண்டும் செல்லத்தக்கதல்ல. வழக்குகள் ஏதேனும் தொடர்ந்தாலும் அது இந்த உயில் சாசனத்தைக் கட்டுப்படுத்தாது.”

லாயர் ரமணன் அந்த உயிலை மேற்கொண்டு படிக்கும் முன்பு ஜனார்த்தனமும், பூவராகவனும் ஆவேசமாய் பாய்ந்தார்கள். கையில் வைத்து இருந்த உயிலைப் பறித்தார்கள்.

பிரபாவும், மணிமாலாவும் முகம் இருண்டு போனவர்களாய் வயிறுகளை எக்கிக் கத்தினார்கள்.

“நாங்க வெளிநாட்டுல இருந்ததால அப்பாவை நல்லபடியா பார்த்துக்க முடியலை. அது உண்மைதான். அதுக்காக பெத்த குழந்தைகள்னு கூட பார்க்காமே இப்படியா உயிலை எழுதி வைக்கிறது?”

பூவராகவன் லாயரின் கையில் இருந்த ஸ்டாம்ப் பேப்பர் தாள்களை பறித்து தாறுமாறாய் கிழித்து கால்களுக்கு கீழே போட்டு மிதித்தான்.

லாயர், பூவராகவனின் கோபாவேசமான செயலைக் கண்டு சிறிதும் சலனமின்றி நின்றார்.

"என்ன சார் உங்க கோபமெல்லாம் தணிந்ததா?"

பதிலேதும் சொல்லாமல் முறைத்தபடி நின்றான் பூவராகவன்.

"நீங்க இப்பக் கிழித்துப் போட்டது ஒரு போலி உயில். உங்க பல்ஸ் பாக்க தயாரிக்கப்பட்டது. ஒரிஜினல் இல்ல"

"அப்ப வேறொரு ஒரிஜினல் உயில் இருக்கா"

"ஆமாம். ஒன்றல்ல ரெண்டு ஒரிஜினல் இருக்கு"

"ரெண்டா?" - கோரசா கூவினர்

நால்வரும்.

"நான் இப்பப் படித்த உயிலைக்  கேட்டுட்டு உங்களில் யாராவது யோசித்தீங்களா? எந்த அப்பாவாவது தான் பெற்றுப், பேணி வளர்த்து ஆளாக்கி பெருமைப்படும் விதத்தில் வாழச்செய்திருக்கும் தன் பிள்ளைகளுக்கு சொத்தின் பெரும் பாகத்தைக் கொடுக்காமல், ஒரு வருட காலம் சம்பளம் வாங்கிக்கொண்டு சேவகம் செய்த ஊழியர்களுக்கா கொடுப்பார்?"

லாயர் கூறியதை கேட்டு நால்வரும் நிம்மதியுடன் அமைதியாயினர்.

ஜனார்த்தனன் லாயரிடம்  ஒரிஜினல் உயிலைப் படிக்கக்

கோரினான்.

"போலி உயிலை கேட்டுட்டு நீங்க நால்வரும் ஒரு மனதா 'அப்பா விருப்பம் அதுவானா,

அப்பிடியே செய்யுங்க' ன்னு அமைதியா சொல்லியிருந்தா, நான் உண்மையை கூறி ஒரிஜினல் உயில், ஒன்றின்படி,

சொத்து விற்று வரும் பணத்தை ஐந்து சம பாகமாக்கி உங்க நாலு பேருக்கும் ஒவ்வொரு பாகமாகவும், மீதமுள்ள ஒரு பாகத்தை சமமாக மூணு பங்கிட்டு, நர்ஸ் சகாயமேரி, வாட்ச்மேன் பொன்னுசாமி, சமையல்கார

ஐயர் ஆகியோர்க்கு வழங்கியிருப்பேன். ஆனா...."என்று இழுத்தார் லாயர்.

ஜனார்த்தனன் உடனே,

"அப்படியே செஞ்சுடுங்க " என்றபடி, மற்றவர்களை நோக்கினான்.

அவர்கள் முகத்திலும் அதை ஏற்றுக்கொள்ளும் பாவனை தெரிந்தது.

லாயர் தொடர்ந்தார்: "நீங்க நால்வரும் அப்பாவை தவறா புரிஞ்சிக்கிட்டு உயிலைக் கிழித்து, கத்திக் கூச்சலிட்டு அநாகரீகமா நடந்துகிட்டீங்க.

அதனால, ஒரிஜினல் உயில் ரெண்டின்படிதான் பாகம் பிரிக்கப்படும். அதாவது, உங்க நாலு பேருக்கு கிடைக்க வேண்டியது, முதல்வரின் அவசரகால நிதி, ஆதரவற்ற முதியோர் இல்லம், அனாதை குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனம், ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு ஆகியவற்றிற்கு சென்று சேரும். கடைசி கால சேவை செய்தவர்களுக்கு உரியது எந்த மாற்றமும் இன்றி அவர்களை சென்றடையும். இதற்கான அனைத்து ஆவணங்களும், பவர் ஆஃப் அட்டார்னியும் என் வசம் உள்ளது" என்று கூறிவிட்டு, புறப்பட ஆயத்தமானார்.

மற்ற நால்வரும் அதிர்ச்சியிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று.

***************************************************************

கதை இங்கே ? முடிவு எங்கே ?

ராஜேஷ்குமாரின் கதை 5 - நாளை 03.02.2023 வெள்ளிக்கிழமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com