ஓட்டம்!

சிறுகதை
ஓட்டம்!

ஓவியம்: பிள்ளை

காற்று பலமாக அடிக்கத் தொடங்கவே சட்டென்று எழுந்து நடக்கத் தொடங்கினான் கண்ணன். மூன்று நாட்களாக அவன் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வைராக்கியத்தில் கிளம்பி வெகுதூரத்திற்கு வந்து விட்டான். நினைவு மட்டும் அவனை விடாமல் அழுத்திக்கொண்டே இருக்கிறது. வெண்ணிலா பாவம், தனியாக என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளோ என்ற கவலை அவனை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

   அவளிடம் கோபித்துக்கொண்டு கிளம்பி வந்த பிறகு, ஏன் அப்படி நடந்துகொண்டோம் என்று தன்னையே நொந்துகொண்டான். திடீரென்று தன் வேலை பறி போகும் என்று கற்பனை கூட அவன் செய்யவில்லை. நான் ஒழுங்காகத்தானே வேலை செய்துகொண்டிருக்கிறேன். திடீரென்று என் வாழ்வில் மிகப் பெரிய இடி இறங்கும் என்று எதிர்பார்க்கவே இல்லையே..... நொறுங்கிப் போனான் கண்ணன். சின்ன வயதிலிருந்தே அவன் பாட்டி சொன்ன மூன்று விஷயங்கள் மட்டும் அவன் காதில் மீண்டும் மீண்டும் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதே, உனக்குக் கீழே உள்ளவனை பார், உன்னால் சாதிக்க முடியும் என்று நம்பு... இந்த மூன்று அறிவுரைகளும் தாரக மந்திரமாக இப்போது மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது.

    வெண்ணிலாவை கைபேசியில் அழைத்தான். வெண்ணிலா உடனே ஃபோனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவளை அழைத்தான். கடைசியில் அவள் ஃபோனை எடுத்தாள். “ஹலோ.... வெண்ணிலா நான்தான் கண்ணன் பேசறேன்மா....  சாரிம்மா.... உன்னிடம் கோவிச்சுக்கிட்டு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்தது தப்புதான். என்னை மன்னிச்சுடு... நாளைக்கு கிளம்பி வரேன்.... இங்க பக்கத்துல திருவண்ணாமலை வரைக்கும்தான் வந்திருக்கேன். நாளைக்கு கிளம்பி வந்துடுவேன் கோவிச்சுக்காதே...” என்று அன்பு பொங்கக் கூறினான். ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு ஃபோனை உடனே கட் செய்தாள் வெண்ணிலா. கண்ணனுக்கு நிம்மதி. ஒரு வழியாக உம் என்றாவது பதில் சொன்னாளே என்று.

    மலையடிவாரத்தை சுற்றி முடித்த பின் நேராக அண்ணாமலையார் சன்னதி முன் வந்து நின்றான். மனதில் ஒரு தெளிவு பிறந்தது. இனிமேல் இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரத்தனம் ஒருபோதும் செய்யக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

      மாலை ஆறு மணி ஆனதால் நேராக தான் தங்கி இருந்த ஹோட்டல் ரூமிற்கு திரும்பிப் போகலாம் என்று எண்ணினான் கண்ணன். அதற்கு முன் அருகிலே உள்ள ஒரு சிறிய கடையில் டீ குடிக்கலாமே என்று தோன்றியது. கடை வாசலில் வந்து நின்றான். சுற்றுமுற்றும் பார்த்தால், இரண்டு நண்பர்கள் காரசாரமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். வெளியில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ஒருவர் மும்முரமாக செல்ஃபோனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் மற்றொருவர் நின்று கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

   எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான் கண்ணன். என்னவோ தனக்குத்தான் கஷ்டம் இருப்பது போலவும், உலகமே அவசர கதியில் இயங்குவது போலவும் தோன்றியது.

   எதிர் ப்ளாட்ஃபார்மில் ஒரு வயதான பெண்மணி பூ விற்றுக்கொண்டிருந்தாள். அவள் அருகில் பதினாறு வயது பெண் ஒருத்தி செல்ஃபோனை பார்த்துக்கொண்டிருந்தாள். குடி இருப்பதற்கு வீடு இருக்கிறதோ இல்லையோ, எல்லோர் கையிலும் ஒரு ஸ்மார்ட் ஃபோன் மட்டும் உள்ளதை எண்ணி கண்ணனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க தான் பட்ட பாட்டை எண்ணிப் பார்த்தான். இந்த நாற்பத்தி ஐந்து வயதில்தான் தன்னால் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க முடிந்தது. ஆனால், இந்த பதினாறு  வயது பெண்ணுக்கு ரொம்ப சுலபமாக அதை எப்படி வாங்கிக் கொடுத்தார்கள் என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனதில் தலைவலி வந்ததுதான் மிச்சம்.

   தான் செய்த அசட்டுத்தனத்தை எண்ணி மீண்டும் மீண்டும் மருகத் தொடங்கினான். இப்போது திரும்பிப் போனால் வேலைக்கு என்ன செய்வது? வெண்ணிலாவால் எப்படி சமாளிக்க முடியும்? சொற்ப சம்பளத்தில் நாலு ஜீவன்கள் சாப்பிட வேண்டும். இதைத்தவிர அவன் அவ்வப்போது அப்பாவை போய்ப் பார்க்க வேண்டும். அவன் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. டீக்கடை பெஞ்சிலிருந்து எழுந்து நேராக நடக்கத் தொடங்கினான்.

   நாலு ரோடு சந்திக்கும் சந்தியில் ஒரு கழைக்கூத்தாடி வித்தை காட்டிக்கொண்டிருந்தான். அவன் அருகில் அவன் மனைவி மற்றும்  நண்டும் சிண்டுமாக மூன்று குழந்தைகள். அவனுக்கு பகீரென்று இருந்தது.

    தனக்கு ஒரு வேலை போனாலும் தன்னுடைய தகுதிக்கேற்றவாறு ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்பதில் அவனுக்கு அசாத்திய நம்பிக்கை. அப்படி இருக்கும்போதே நான் இப்படி இடிந்து போய்விட்டேன். இந்த கழைக்கூத்தாடி குடும்பத்தைப் பாரு... மூன்று குழந்தைகள் இருந்தும் அந்த பெண் ஜாலியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள். படிக்காத அவளிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் உழைப்பும் தனக்கு இல்லையா... என்ன ஒரு ஜென்மம் நான்! இந்த ஒரு சாதாரண விஷயத்திற்கு போய் வீட்டை விட்டு சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்துவிட்டேனே... திரும்பத் திரும்ப அதை நினைக்கக்கூடாது என்றாலும் மனது அதையே நினைத்து மீண்டும் மீண்டும் அசை போடத் தொடங்கியது.

    சற்றென்று வேறு பாதை நோக்கி நடையைப் போட்டான். அங்கிருந்து தான் தங்கி இருக்கும் ரூமிற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும். எதையும் யோசிக்க கூடாது என்று தீர்மானத்துடன் ஹோட்டலை நோக்கி நடந்தான். ரூமிற்குள் நுழைந்து கட்டிலில் சாய்ந்தான். அவனை அறியாமல் அவன் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் பேக் செய்து தான் கொண்டு வந்திருந்த சிறிய பையில் அடுக்கி வைத்தான். அடுத்த நாள் காலை ஆறு மணி பஸ்ஸில் சென்னை போகலாம் என்று தீர்மானித்தபோது அவன் ரூம் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. அவன் அண்ணன் மோகன் நின்றுகொண்டிருந்தார்.

     “என்னடா.... வெண்ணிலாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டாயாமே... என்னிடம் சொல்லி புலம்பினாள். ‘நல்லவேளை நீ ஃபோன் செய்தாயாம்... உடனே என்னைக் கூப்பிட்டு ‘அண்ணா நீங்கள் அவரை உடனே அழைத்து வாருங்கள்’ என்றாள். அதான் இங்கு கிளம்பி வந்தேன்” என்றார் மோகன். கண்ணன் அவர் தோளில் சாய்ந்து “என்னை மன்னித்துவிடு அண்ணா.... அவசரத்தில் என் புத்தி வேலை செய்யவில்லை” என்றான் சற்றே அசடு வழியே.

   “உனக்கு புத்தி என்னைக்குத்தான் ஒழுங்கா வேலை செஞ்சுருக்கு? நான் போய்  உன் மேனேஜரை பார்த்துவிட்டு வந்தேன். அவரும் உன்னை அனுப்பிவிட்டு பிறகு அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நீ இப்படி திருவண்ணாமலை கிளம்பிப் போனதை சொன்னவுடன் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.  அவர் உன்னை மதுரைக்கு மாற்றல் செய்து உடனே மதுரையில் போய் ஜாயின் செய்ய சொல்லி இருக்கிறார். இதோ அதற்கான ஆர்டர்.... எங்கே நீ வருவதற்கு தாமதமாகி விடுமோ என்று பயந்து வெண்ணிலாதான் உடனே இதை உன்னிடம் கொடுத்து உன்னை கையோடு அழைத்து வரச் சொன்னாள்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் மோகன்.

   கண்ணனுக்கு பேச்சே எழவில்லை.

   எல்லாம் அவன் செயல் என்று சொல்லி தன் அண்ணனை கட்டிக்கொண்டான். அதை ஆமோதிப்பது போல கோயில்  மணி  கணீரென்று ஒலித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com