செல்போன்கள் -  அன்று முதல் இன்று வரை.

செல்போன்கள் -  அன்று முதல் இன்று வரை.

ண்ணிமைக்கும் நேரத்தில் மொபைல் போன்கள் தொலைதொடர்பு உலகில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காலத்தில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் போல இருக்கும் செல்போன் முதல், இன்றைய அதிநவீன மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரை அதன் வடிவம் மற்றும் தொழில்நுட்பங்களில் வியக்கத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 

1. செல்போன்களின் வருகை (1980கள் - 1990ள்):

1980களில் செங்கல் அளவில் இருக்கும் செல்போன்கள் சந்தையில் பிரம்மாண்டமாக நுழைந்தபோது இதன் கதை தொடங்குகிறது. ஆரம்ப காலத்தில் அவற்றின் மிகப்பெரிய அளவு காரணமாக இவை செங்கல் தொலைபேசிகள் என்று அழைக்கப்பட்டது. முதல் முறை வந்த செல்போனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். பின்னர் 1983இல் Motorola DynaTAC 8000X அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் வணிகரீதியாகக் கிடைக்கும் முதல் மொபைல்போன் எனக் கருதப்பட்டது. இதன் எடை ஏறக்குறைய ஒரு கிலோ வரை இருந்தது. அத்துடன் அதிக விலையுடன் விற்கப்பட்டதால், இந்தத் தொலைபேசிகள் ஆடம்பரமான சிலருக்காகவே ஒதுக்கப்பட்டது. 

2. ஃபிளிப் போன்களின் எழுச்சி (1990களின் பிற்பகுதி - 2000களின் ஆரம்பம்):

தொழில்நுட்பம் வளர வளர செல்போன்கள் மிகவும் கச்சிதமாகவும், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் மாறத் தொடங்கியது. 1990களின் பிற்பகுதியில் ஃபிளிப் ஃபோன்கள் வளர்ச்சியைக் கண்டது. இந்த போனை அதை பயன்படுத்துபவர்கள் பாதியாக மடித்து கீபோர்ட் மற்றும் டிஸ்ப்ளேவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் Motorola StarTAC என்ற ஃபிளிப்போன் நம்ப முடியாத அளவுக்கு பிரபலமடைந்து, மொபைல்ஃபோன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 

3. கேண்டி பார் மற்றும் ஸ்லைடர் ஃபோன்களின் தொடக்கம் (2000களின் ஆரம்பம் - 2000களின் நடுப்பகுதி):

2000வது ஆண்டுகளின் முற்பகுதியில் சாக்லேட் பார் மற்றும் ஸ்லைடர் ஃபோன்கள் முக்கிய பங்கு வகித்தது. பார்ப்பதற்கு சாக்லேட் பார் போன்ற வடிவத்தில் இருந்ததால் இந்த ஃபோன்களுக்கு சாக்லேட் பார் போன்கள் எனப் பெயரிடப்பட்டது. இத்தகைய போனை உருவாக்குவதில் நோக்கியா நிறுவனம் முன்னணியில் இருந்தது. மறுமுனையில் ஸ்லைடர் ஃபோன்கள் புதுமையை வெளிப்படுத்தும் ஸ்டைலான இயக்கமுறையை கொண்டிருந்தது. இந்த வடிவமைப்பு தான் பெரிய திரைகள் மற்றும் கூடுதல் அம்சங்களை சாதனங்களில் இணைக்க அனுமதித்தது. 

4. ஸ்மார்ட் போன்களின் காலம் (2000களின் பிற்பகுதி - 2010களின் ஆரம்பம்):

மொபைல் தொழில்நுட்பத்தின் உண்மையான புரட்சி டச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகுதான் ஏற்பட்டது எனலாம். 2007 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் ஆப் ஸ்டோர் மற்றும் சக்தி வாய்ந்த மொபைல் இயக்கமுறை போன்ற முற்றிலும் மேம்பட்ட அம்சங்களுடன், ஒரு பெரிய டச் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டு கிடைத்தது. இந்த சாதனம் தான் நவீன ஸ்மார்ட்போன்களுக்கான தொடக்கத்தை அமைத்து, பல உற்பத்தியாளர்களிடையே தங்கள் சொந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கடுமையான போட்டியைத் தூண்டியது. 

5. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் (2010களின் பிற்பகுதி - தற்போது):

2010 களின் பிற்பகுதியில் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் மீண்டும் புதுமையின் எல்லைகளை அதிகரிக்கத் தொடங்கினர். இதுதான் மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இந்த அதிநவீன சாதனங்கள் நெகிழ்வான டிஸ்ப்ளேக்களுடன் வருகின்றன. இவ்வகை ஃபோனின் டிஸ்ப்ளேவை நாம் மடித்துப் பயன்படுத்தலாம். இது தொலைபேசி பயன்படுத்தும் விதத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்தது. சாம்சங் கேலக்ஸி Fold மற்றும் ஹவாய் நிறுவனத்தின் Mate X ஆகிய ஸ்மார்ட் போன்கள் இந்த காலகட்டத்தில் வெளிவந்த முன்னோடியான மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்றாகும். தொழில்நுட்பம் தற்போது அதிவேகமாக முன்னேறி வருவதால் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்கள் இன்னும் அதிகமாக மாறும் என எதிர்பார்க்கலாம். நீடித்த உழைப்பு, துல்லியமான திரைக்காட்சி மற்றும் மலிவு விலை போன்ற மேம்பாடுகள் ஸ்மார்ட்போன் உலகில் தொடர்ந்து ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. 

தொடக்கத்தில் செங்கல் போன்று காட்சியளித்த செல்போனிலிருந்து இன்று பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வரை மொபைல் ஃபோன்களின் பரிணாம வளர்ச்சி அசாதாரணமானது அல்ல. காலப்போக்கில் இந்த செல்போனின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும் போது புதுமை, உறுதிப்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான வேட்கை போன்ற விஷயங்களே, மொபைல் துறையை புதிய உயரங்களை அடைய உந்தியுள்ளது என்பது தெரிகிறது. 

இந்த தொழில்நுட்ப சாதன அலையில் நாம் தொடர்ந்து பயணிக்கையில் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது செல்போன்களின் குறிப்பிட்ட பரிணாம மாற்றம் இன்னும் பூர்த்தி அடையவில்லை, இந்த சாதனம் மேலும் சிறப்பாக, புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தல்களுடன் எதிர்காலத்தில் வந்துகொண்டே இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com