குலசாமிக்கு ஒரு கோயில்

குலசாமிக்கு ஒரு கோயில்

காலை எட்டு மணி என்பது, அமெரிக்க வாழ்க்கையில், பணிக்கு செல்லும் அனைவருடைய தூக்க எல்லைக் கோடு. அந்த நேரத்தில், நடுங்கும் குளிரில் படுக்கையை விட்டு எழுந்திருக்க யாருக்கும் மனது வராது. “இன்னும் அரை மணி நேரம் தூக்கம் வேண்டுமா...அல்லது அரை மில்லியன் டாலர் பணம் வேண்டுமா..?' என்று கேட்டால், 'அரை மில்லியன் யாருக்கு வேண்டும்..?' என்ற நிராகரிப்பு பதிலைத்தான் அந்த தருணத்தில் எதிர் பார்க்க முடியும்.

 பத்து வருடங்களாக அமெரிக்க வாழ்க்கையில் உழன்றும், மதிவாணன், வளர்மதி தம்பதியருக்கும், தினமும் அதே மன நிலைதான். இருவரும் பணிக்கு செல்லும்போது, மூன்று வயது மகன் இளவரசனை விட்டு பிரிய வேண்டும் என்ற ஆதங்கமும், கூடுதலாக மனதை அழுத்தும்.

 அன்றும் அப்படித்தான். ஏற்கனவே தயாரித்து குளிர் சாதன பெட்டியில் தேதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்களில்,  அன்றைய தேதியிட்ட டப்பாவை தேர்வு செய்து, அதை மைக்ரோ ஓவனில்  வைத்து சூடிட்டு, கணவனுக்கும், தனக்குமான மதிய உணவை தயார் படுத்தினாள் வளர்மதி.

 அதற்குள், இளவரசனை தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, காலை உணவு கொடுத்து, அலுவலகம் போகும்போது, தங்களோடு அழைத்துச் செல்ல மதிவாணன் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

 அமெரிக்க வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒருவொருக்கொருவர் வேலைகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு, உடல் மற்றும் மன அளவில் விட்டுக் கொடுத்து போகவில்லையென்றால், வாழ்க்கை நரகமாகிவிடும். அந்த அணுகுமுறை சூத்திரத்தின் புரிதல் இல்லாத சிலர், நரகத்திற்கான பயணத்தை சீக்கிரமாகவே துவங்கி விடுகிறார்கள்.  

 பச்சை காய்கறிகளை நடுவில் அழுத்திப் பிடித்த இரு ரொட்டி துண்டுகளை வாயில் கவ்விக் கொண்டு, லேப்டாப் பையை முதுகில் மாட்டி, கடவு எண்களை கைபேசியில் அழுத்தி வீட்டை பூட்டி, இருவரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். அந்த வாரத்திற்கான முறைப்படி, மதி காரை ஓட்டினான்.  

 “கல்யாணமாகி ஆறு  வருடங்களுக்கு பிறகுதான் பிள்ளை பெற்றுக் கொண்டோம். அமெரிக்க வாழ்க்கையில் திட்டமிடுதல்ங்கற பெயரில், குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட, அப்படித்தான் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், கடவுளின் திட்டம் நம்ம நினைப்பது போல் இருப்பதில்லைங்கறதை நினைத்தால்தான் வருத்தமா இருக்கு..” வளர்மதி முதன் முறையாக வாய்விட்டு கணவன் மதியிடம் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினாள்.

 “எதற்காக இன்றைக்கு நீ இப்படி கண் கலங்கறே..?' நான்கு வயது மகன் இளவரசனை குழந்தை காப்பகத்தில் கலங்கிய கண்களுடன் ஒப்படைத்து விட்டு, அலுவலகம் செல்ல காரில் ஏறி  புலம்பியவளின் கண்ணீரை தன் விரல்களால், ஆதங்கத்துடன் துடைத்தான் மதிவாணன்.

 “நாம இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை இப்படி மூன்றாம் நபர் பொறுப்பில் விட்டுவிட்டு போவதை நினைத்து என்றுமில்லாமல் இன்றைக்கு துக்கம் அதிகமா இருக்கு. அவனுடன் அந்த காப்பகத்தில் தங்கும் மற்ற குழந்தைகள் மழலையில் பேசுவதை அவன் ஆர்வத்தோடு பார்ப்பதை பார்த்து, எனக்கு துக்கம் தொண்டையை அடைச்சுடுச்சு.  தனக்கும் இந்த மாதிரி பேச்சு எப்ப வரும்னு அந்த குழந்தைக்கும் ஏக்கம் இருக்குமில்ல..?”

 பதில் எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தான் மதி.

 “நம்ம பையனுக்கு நான்கு வயதாகியும், இன்னும் சரியா பேச்சு வரலை. இங்க இருக்கிற டாக்டர்களால் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ‘ப்ரே டு காட்’ என்ற ஆறுதல் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.  நம்ம குழந்தையின் நிலையை நினைத்தால், எனக்கு சாப்பிட கூட பிடிக்கலை. சென்ற வருடம், நான் நம்ம ஊர் பக்கம் போயிருந்த போது, குடும்ப குல தெய்வத்திற்கு சிறிய  கோவில் கட்டினால் சரியாயிடும்னு ஒரு ஜோசியர் சொன்னார். அந்த குல தெய்வம் எதுன்னு கண்டுபிடிச்சாகணும்..” குழந்தைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினாள் வளர்மதி.

 “ஜாதகம், ஜோசியம் இதில் எல்லாம் நமக்கு ஆரம்பத்திலிருந்து  நம்பிக்கை இல்லை. ஆனால், குழந்தை என்று வந்துவிட்டால், எதையும் நம்ப தயாராகி விட்டாய் என்று தோன்றுகிறது. நம்ம இருவருடைய பெற்றோரும் தற்போது உயிரோடு இல்லை; அதனால், குடும்ப குல தெய்வம் யாருன்னு அறிவுரை சொல்வதற்கு ஆளில்லை. ஆனாலும், உன் திருப்திக்காக, இந்த முறை நான் நம்ம ஊருக்கு சென்று, விசாரிக்கிறேன். கவலையை விடு..” என்று அந்த சமயத்திற்கு அவளை தேற்றினான்.

 சொன்ன சொல்லை காப்பாற்ற, அடுத்த வாரமே, ஊருக்கு புறப்பட்டான்.

 செங்கல்பட்டை அடுத்த சிறிய ஊரான சிங்கப் பாக்கம்தான் அவன் சொந்த ஊர். அந்த பகுதியில், சமீப காலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதை, சோம்பேறித்தனமாக ஆங்காங்கே விரிந்து கிடந்த தரிசு நிலங்கள் காட்டிக் கொடுத்தன. பள்ளிக் காலங்களின் விருப்ப இடங்களான புளிய மரம், ஆலமர மேடை ஆகிய சில அடையாளங்கள் மட்டும் அவன் நினைவிற்கு வந்தன. புளிய மரத்திற்கு கீழ் நின்று, கல்லால் அடித்து சில புளியங்காய்களை பறித்து, ஊருக்கு விஜயம் செய்ததற்கு அடையாளமாக, கால் சட்டை பையில் போட்டுக் கொண்டான். நகரம் போல் அல்லாமல், விசால மனம் படைத்த கிராமத்தவர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அவனை யாரென்று தெரியாமல் பலர் கடந்து செல்ல, இடிந்த நிலையில் இருந்த பல கட்டிடங்கள் என்னவென்று நினைவில்லாமல் அவைகளை அவன் கடந்து சென்றான்.

 யாராவது தெரிந்தவர்கள் கண்களில் தென்படுகிறார்களா என்று சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான். அவன் நினைவில் நின்றவர் யாரும் தென்படவில்லை. ‘குடும்பத்து குல தெய்வம் பற்றி, பெற்றொரிடம் பழகியவர் யாருக்காவதுதான் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது?' என்ற சிந்தனையோடு நடந்து கொண்டிருந்தபோது, மேலே வேயப்பட்ட கூரைகள் இன்றி, எலும்புக் கூடாக தெரியும் மனிதன் போல், வெறும் செங்கல்களை மட்டும் தாங்கி நின்ற ஒரு பழைய கட்டிடம் அவன் கண்களில் பட்டது.

 அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ சொல்லிவிட்டு, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தான்.

 “இந்த பாழடைந்த கட்டிடத்தில், என்ன இருந்துதுங்க..?”

 அனைவரும் அவனை ஏற இறங்க அதிசயத்துடன் பார்த்தனர்.

 “என்னப்பா..ஊருக்கு புதுசா..தெரியாமத்தான் கேட்கிறியா..இல்லை தெரிஞ்சு என்ன பண்ணப் போறே..?” சூடான டீயை உறிஞ்சியபடியே ஒருவர் கேட்டார்.

 “ஆமாம் ..ஒரு ஆர்வம்தான் ஐயா..”

 “அங்கதான் இந்த ஊரு பள்ளிக்கூடம் இருந்தது. எங்களுக்கே இப்ப அடையாளம் தெரியலை. இப்ப அங்க பிள்ளைங்க, ஆசிரியர்கள் யாரும் இல்லை; கட்டிடமும் இல்லை!” எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

 தானும், வளர்மதியும் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடம்தான் அது என்பது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்ததும் அதிர்ந்து போனான்.

 “கட்டிடத்தை யாரும் பராமரிக்கலையா ஐயா..?”

 “பொம்பளை பசங்க ஒதுங்கறதுக்கு தடுப்பு இடம் கூட அங்கே இல்லை. காற்று, மழையில் அடித்து சென்றது போக பாக்கிதான் இது. சரியான பராரிப்பும் இல்லை.  வெயில், மழைக்கு எந்த தடுப்பும் இல்லாததால், இரண்டு வருஷமா, நாங்களே பசங்களை பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டாம்னு சொல்லிட்டோம். சும்மா பெயருக்குத்தான், பள்ளிக்கூடம்னு ஒரு போர்டு எழுதி, உள்ளே வச்சுருக்காங்க. ஆனால், இரவு நேரங்களில் அங்கே பல அட்டூழியங்கள் நடக்குது. அங்கே படிச்ச எல்லா பசங்களும் இப்ப சுதந்திரமா, மூலைக்கு மூலை கபடியும், கோலியும் விளையாடிக்கிட்டு இருப்பதை பார்த்திருப்பியே..?” ஒரு பெரியவர் நிலைமையை முழுவதும் விளக்கியதும், பேரதிர்ச்சி அவனை தாக்கியது.

 “அறிவைக் கொடுக்கும் கல்விதான், மனிதனுக்கு மூன்றாம் கண். அந்த கல்வியை தொடரலைன்னா, மூன்றாம் கண் அடைபட்டு, ஊர் பையன்கள், இன்னும் சில வருடங்களில் வாழ்க்கை முழுவதும் அறிவு குருடர்களாக ஆயிடுவாங்கன்னு உங்களுக்கெல்லாம் புரியலையா ஐயா..?” அவன் குரலில் கோபம் கொப்பளித்து நின்றது.

 “என்ன சொன்னே…நீ பேசறது ஒண்ணும் புரியலை. இரண்டு வேளை சாப்பாட்டுக்கே வருமானம் இல்லாமல் திண்டாடிக்கிட்டு இருக்கோம். எங்களால் என்ன செய்ய முடியும்? ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை, ஓட்டுக்கு மட்டும் கும்பிடு போட்டு ஊருக்குள் வருகிற அரசியால்வாதிங்க, அதற்கு பிறகு காணாமல் போயிடறாங்க.. இதையெல்லாம் யார் கிட்ட போய் சொல்ல..?” எங்க பசங்க படிக்கலைன்னா ஒன்னும் குடி முழுகிடாது. உன் பேச்சு போலவே, படிப்பு இல்லாத அவுங்க குருடர்களாகவே இருந்துட்டு போகட்டும்..” பெரியவரின் பேச்சில் விரக்தி மேலிட்டு நின்றது.

 “படிப்பை பாதியிலேயே நிறுத்தினவங்க இந்த ஊரில் எத்தனை பேர் இருப்பாங்க ஐயா..?”

 “பெரிய கலெக்டர் படிப்பு..?..குறைந்தது ஒரு நூறு பசங்களாவது இருப்பாங்க..ஆமா..நீ ஏன் தம்பி இதையெல்லாம் இவ்வளவு மும்முரமா கேட்டுக்கிட்டு இருக்கே..பள்ளிக்கூட கட்டிடத்தை நீ கட்டித் தரப்போறியா..?” குதர்க்கமாக ஒருவர் கேட்டு, அன்றைய செய்தி தாளில் மூழ்கினார்.

 சாமி வந்தது போல் மதியின் நரம்புகள் நர்த்தனம் ஆடின. வாழ்க்கை முழுவதும் அறியாமையால் சிக்கித் தவிக்க போகும்  சிறுவர்களை நினைத்து அவன் மனம் பொங்கியது.

 அந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் நுழைந்ததும், தானும் வளர்மதியும் படித்த வகுப்பறை, கை இடுக்கில் செருகிய மெல்லிய பிரம்புடன் வலம் வந்த மணி வாத்தியார்,  மணி அடிக்க பயன்படுத்திய தண்டவாள துண்டு, பள்ளிக்கு பின்புறத்தில் ஓடியாடி விளையாடிய மைதானம், மைதானத்தில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் இட்ட ஆலமரம் ஆகியவைகள் அவன் நினைவில் விரிந்து கண் முன் நிழலாடின. படர்ந்து விரிந்த அந்த காட்சிகளுக்கு முன், சிதைந்த பள்ளியின் உருவமும் புதைந்து அவன் கண்களிலிருந்து, கண்ணீரை பிடிங்கின. சில நிமிட யோசனைக்கு பிறகு, மதி தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான்.

 மறு நாள், அந்த பகுதியின் கல்வி அதிகாரியை சந்தித்து, அந்த ஊரையும் பள்ளியையும் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் மன சங்கடத்தை சொன்னான்.

 “எனக்கும் புரியுது. அந்த பள்ளிக்கூடம் இயங்காமல் இருப்பதால், இரண்டு தற்காலிக இளம் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. ஆனால், இந்த மாதிரி கிராமத்து பள்ளி கட்டிடங்களை புனரைப்பதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் அரசாங்கத்தால் அவ்வளவு எளிதாக ஒதுக்கப்படுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டு வழிமுறைகள் இருக்கு. கிராமத்து ஜனங்களுக்கே ஆர்வம் இல்லாதபோது, அந்த வேலையை யார் எடுத்து செய்யமுடியும் சொல்லுங்க..” என்றார் கல்வி அதிகாரி.

 “இந்த ஊரில் இருக்கும்போது, என்னுடைய அப்பா கட்டிட கூலி வேலைதான் செய்துகிட்டு இருந்தார். அந்த வேலை அவருக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில், அவர் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்த எனக்கும் அது பிடித்துப் போனது.  குடும்பத்தில்,  போதிய பொருளாதார சூழல் இல்லாத நிலையிலும், நான் பெற்ற உயர்  மதிப்பெண்களால், படிப்புக்கான கல்வி உதவி தொகை தாராளமாக கிடைத்தது. கட்டிடக் கலையில் மேல் படிப்பை தொடர்வதற்கு, அமெரிக்கா சென்றேன். அங்கேயே வேலையும் கிடைத்தது. தேவையான அனுமதிகளை விரைவில் வாங்கி கொடுத்தால், நானே முன்னின்று  என் சொந்த செலவில், இந்த கட்டிடத்தை, ஒரு மாதிரி பள்ளியாக கட்டி முடித்து விடுவேன். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு அது உதவியாக இருந்தால், அதைவிட சந்தோஷம் என் வாழ்க்கையில் இருக்க முடியாது..” என்று உணர்ச்சி பொங்க சொன்னான்.

 "கரும்பு தின்ன கூலியா? என்னுடைய கல்வி வட்டாரத்தில் அது மாதிரி ஒரு நல்லது நிகழ்ந்தால், எனக்கும் நல்ல பெயர்தான். விரைவான அனுமதி பெறுவதற்கான முயற்சியை இதோ, இப்பொழுதே துவங்கி விட்டேன்"..என்று உற்சாகமாக சொன்னார்.

 அவனுடைய பேச்சிலிருந்த உண்மை தன்மையையும், தன் ஊர் மற்றும் தான் படித்த பள்ளியின் மீதான பற்றுதலையும் முழுவதும் புரிந்து கொண்ட அதிகாரி, சில நாட்களில், தேவையான அனுமதிகளை வாங்கி தந்தார்.

 எதற்காக, சொந்த ஊருக்கு வந்தோம் என்பதை மறந்து, தன் சொந்த செலவில் பள்ளிக் கட்டிட புனரைப்பு பணிகளில் மதி தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தான். முதலில் அவனை ஏளனமாக பார்த்த ஊர் மக்கள், கட்டிட வேலைகள் வளர, வளர, அவனுக்கு தேவையான உடல் உதவிகளை தாங்களாகவே முன் வந்து செய்ய ஆரம்பித்தார்கள்.

 மனைவி வளர்மதி விசாரித்த போதெல்லாம், தான் ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொன்னானே தவிர, குறிப்பிட்டு எதையும் சொல்ல அவனுக்கு தோன்றவில்லை.

 அவனுடைய நேரடிப் பார்வையில், இரவு பகலாக, கட்டிட வேலைகள் வேகமாக முன்னேறி, ஒரு மாதத்தில் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புதுக் கட்டிடத்தை அமைச்சர் வந்து திறந்து வைக்கப்போவதாக அவனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 அவன் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆசிரியர், மாணவ மாணவியர் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளுடன் கூடிய அந்த கட்டிடத்தை பார்த்ததும், அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை, அங்கிருந்த வகுப்பறைகளில் உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.

 “எங்கள் முயற்சியால், இந்த பள்ளிக்கூடம் புத்துயிர் பெற்றது..” என்ற அமைச்சரின் திறப்பு விழா பேச்சிற்கு அவருடைய கட்சிக்காரர்கள் கை தட்டினார்கள்.

 ஆசிரியர் போதித்து மாணவ மாணவிகள் திரும்ப உச்சரித்த உயிர், மெய் எழுத்துக்களின் ஒலி, வகுப்பறைகளுக்கு உயிர் ஊட்ட ஆரம்பித்தன. நீண்ட நாள் மௌனம் காத்த வகுப்பறை சுவர்கள்,  மீண்டும் ஆத்தி சூடி, திருக்குறள் ஒலிகளை உள் வாங்கி  உற்சாகமாக அவைகளை எதிரொலிக்க ஆரம்பித்தன. கல்வி அறிவை துறந்து குருடர்களாக மாற இருந்த பிள்ளைகளின் அறிவு கண்கள் மெதுவாக திறந்து, ஒளி வீச துவங்கின.

 “மதி...குல தெய்வத்தை கண்டுபிடிச்சு, தேவையான வேலைகளை ஆரம்பித்து விட்டாய் போலிருக்கு..? அதற்கான அறிகுறிகள் நம்ம பையனிடத்தில் தெரிய ஆரம்பிச்சுடுச்சு...” வளர்மதி, குதூகலத்துடன் அலைபேசியில் கேட்டாள்.  

 “என்ன சொல்றே...புரியும்படியா சொல்லேன்...” என்றான் மதி.

 “ஆமா...ஒரு மாதத்திற்கு மேலாக நீ ஒரு தகவலும் சொல்லலை..நான் மட்டும் சொல்லணுமாக்கும்..” என்று சிணுங்கியவள், இளவரசன் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்கும் செய்தியை சந்தோஷத்துடன் பகிர்ந்தாள்.

 குல தெய்வத்தை தேடி வந்தவனுக்கு, இப்பொழுது அவர்களுடைய குல தெய்வம் யாரென்று புரிந்துவிட்டது. அந்த தெய்வம், அவர்கள் படித்த பள்ளிக்கூடம்தான். இடிந்த நிலையில் இருந்த அந்த தெய்வத்திற்கு கட்டிய கட்டிடம்தான் அவனைப் பொறுத்தவரையில் கோயில்...என்பதை உணர்ந்தபோது, அவன் உடலெங்கும் மயிர் கால்கள் குத்திட்டு நின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com