அதிதி

அதிதி

‘’சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேஷம்.

 விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்" சொல்லிக் கொண்டிருந்த ஸ்லோகத்தில் திடீரென கவனம் தடைப்பட்டு, தொலைக்காட்சி சத்தத்தின் மிகுதியால் நான் திரும்பிப் பார்க்க, என் பார்வையைப் புரிந்து கொண்ட தனம், "பிருந்தா, டி.வி சத்தத்தை கொஞ்சம் குறைச்சு வை கண்ணு. தாத்தா சாமி கும்பிடறாங்கள்ல..." என்று சொல்வது காதில் விழுந்தது. நான் மீண்டும் எதிரே இருந்த பெருமாள் படத்தில் மனம் லயிக்க முயன்றேன். 

பூஜை முடித்து கற்கண்டுகளை நீட்டிய போது, "வேண்டாம் தாத்தா, எனக்குப் பிடிக்காது" என்ற பிருந்தாவின் மீது லேசாக கோபம் வந்தது. "பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது" என்றதும் அசிரத்தையாக ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். 

 ‘’பிருந்தாக் கண்ணு... போய் முகம் அலம்பிட்டு தலை சீவி பொட்டு வை’’ என்று என் மனைவி மூன்றாவது முறை சொன்ன பிறகு எழுந்து உள்ளே போய், அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தாள் பேத்தி. தலையில் அதே குருவிக்கூடு கொண்டை , முகத்தில் பொட்டு இல்லை. என் மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்டவள், ‘’இட்ஸ் ஓ.கே பாட்டி. ஜஸ்ட் லீவ் இட்’’ என லகுவாக சிரித்தபடி தன்  மடிக்கணினியின் முன் அமர்ந்தாள். ‘’ம்.

அவ்வளவுதான். இன்னும் மூணு, நாலு மணி நேரத்துக்கு நம்ம என்ன பேசினாலும் அவ காதுல விழப்போறதில்லை. அப்படி என்னதான் இருக்குமோ அந்த லேப்டாப்புல’’ என அலுத்துக் கொண்டாள் தனம். 

‘’ அவ படிக்கிற ‘ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ் என்ஜினீயரிங் கோர்ஸுக்கு நிறைய அதில தேடணும்; படிக்கணும் தனம்’’ என என் வாய் சமாதானம் சொன்னாலும் மனம் என்னவோ"இந்தக் காலத்துப் பிள்ளைகள் ஏன் எதிலும் இப்படி பிடிப்பில்லாமல் இருக்கிறார்கள்? தான், தனது,  என்ற குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக் கொண்டு, பெரியவர்களின் பேச்சுக்களுக்கு காது கொடுக்காமல்...... ?என் பேத்தி மட்டுமல்ல.  இந்தக் கால பிள்ளைகளின் மனோபாவமே இப்படி மாறிவிட்டதே... ? என்று நினைக்கத்தான் செய்தது. என் பிள்ளைகளை அதட்டி வளர்த்ததைப் போல என் பேத்தியிடம் கண்டிப்புக் காட்ட முடியுமா? அதுவும் மகளும் மருமகனும்  இவளை எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு கனடா சென்றிருக்கும் இந்த நிலையில் ?’’

பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கம்  விஞ்ஞானியாக இருக்கும் மாப்பிள்ளை  அலுவலக காரியமாக ஒரு மாத வெளிநாட்டு பயணம் போக நேர்ந்த போது என் மகளையும் கூடவே அழைத்துச் சென்றார்.  கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த பேத்தியை பார்த்துக்கொள்ள நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். கிராமத்து வீட்டை பூட்டிவிட்டு வாசல் கேட்டின் சாவியை மட்டும் பணியாள் செல்வியிடம் ஒப்படைத்துவிட்டு தினந்தோறும் தவறாமல் வந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுமாறு சொல்லிவிட்டு வந்தோம். 

**** **** ****

 "என்ன சச்சிதானந்த்.... வாக்கிங் கிளம்பலாமா?" என்றபடி எதிர் வீட்டு பசவப்பா வந்தார். "வாங்க... வாங்க உட்காருங்க ஸார். இதோ ரெண்டே நிமிஷத்துல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்" நான் உள்ளறையை நோக்கி நகர்ந்தேன். பசவப்பா ஒரு உற்சாகமான மனிதர். ஓரளவு தமிழ் பேசக் கூடியவர். இந்த நான்கு நாட்களாக இருவரும் சேர்ந்து மாலை நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்டதில் நண்பர்களாகி விட்டோம்.  

"சொல்ப நீர் பேக்கு. ஓ. ஸாரி.. கொஞ்சம் தண்ணி கொடுங்க" வெளியில் அவர் கேட்டது  உடை மாற்றிக் கொண்டிருந்த என் காதில் விழுந்தது. மாடிப்படி ஏறி வந்த களைப்பாக இருக்கலாம். கீழ்த் தளத்தில் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, முதல் தளத்தில் என் மகள் குடும்பம் குடியிருந்தது.

"காஃபி சாப்பிடறீங்களா?" கேட்ட தனத்திடம்  "வேண்டாம்மா " காலி டம்ளரை அவளிடம் கொடுத்தபடி பசவப்பா சொல்ல, கணினித் திரையில் கவனம் கொண்டிருந்த பிருந்தாவின் தலை நிமிரவேயில்லை. பசவப்பா எழுந்து கொள்ள, ஷூக்களில்  கால்களை நுழைத்து கொண்ட பின்  இருவரும் வெளியே வந்தோம்.  

நாங்கள் பாதிப் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே வெள்ளையும் , கருப்பும் கலந்த கலவையில் சற்றே மெலிந்த உடல் வாகுடன் அந்தத் தெரு நாய், புஷ்டியான தன் மூன்று குட்டிகள் புடை சூழ மேலே ஏறி வந்து கொண்டிருந்தது. ‘’ என்னது இது? வீட்டுக்குள்ளே வந்துரும் போல இருக்கு.’’ எரிச்சலுடன் நான் சொல்ல,  ‘’அடடா நான்தான் வாசல் கேட்ட தாள் போடாம வந்துட்டேன் போல’’ என்ற பசவப்பா, ‘நாய் படியேறி  மேல வர்றது இந்த வீட்ல வழக்கமா நடக்கிறதுதான்’’ என்றார் முணுமுணுப்பாக. 

எங்களைத் தாண்டிக் கொண்டு மேலே செல்லத் தயங்கிய நாய் செல்லமாக குரைக்க ஆரம்பிக்க, அடுத்த நிமிடம் பிருந்தா வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். ‘’ஸ்வீட்டி வந்துட்டியா?கொஞ்சம் இரு. இதோ வரேன்’’ அடுத்த இரண்டே நிமிடங்களில் கையில் ஒரு பாத்திரத்துடன் வந்தவள் படிகளில் இறங்க ஆரம்பிக்க, நாய்க்கூட்டம் பின்தொடர்ந்தது. வாசலில் இருந்த புங்க மரத்தடியில் அவள் தயிர் சாதத்தை வைத்ததும் ஸ்வீட்டி உடனே உண்ணத் தொடங்க, குட்டிகள் உண்ணலாமா வேண்டாமா என யோசனையில் சாதத்தை முகர்ந்து பார்த்தன. எங்கிருந்தோ மேலும் இரண்டு நாய்கள் வந்து சேர்ந்துகொண்டு உண்ண ஆரம்பித்தன. 

நாங்கள் இருவரும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ‘’உங்க பேத்திக்கு இது வேண்டாத வேலை. நாள் தவறாமல் ரெண்டு வேளை இதுகளுக்கு சோறு வைக்கிறா. ஆக்சுவலா பாருங்க ஆனந்த், இந்தத் தெரு நாய்களால எப்பவுமே தொல்லை தான். அதுக பாட்டுக்கு  கண்ட இடத்துல அசிங்கம் பண்ணி வைக்கும். அப்புறம்  சமயத்துல நம்மள கடிச்சுக் கூட வைக்கும். உயிருக்கு ஆபத்தா முடியும் இல்லையா?’’ என்று அவர் கூறிய போது என் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

 பொதுவாக ஒற்றைப் பிள்ளையாய் வளரும் குழந்தைகள் தங்கள் பிரியத்தை  நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் மீதுஅதீதமாக காட்டுவர்.  "இந்த பிருந்தாவுக்கு நாய்னா அப்படி என்னதான் இஷ்டமோ தெரியலப்பா.  எங்க தெருவில்  திரியற  நாய்களுக்கு தினமும் சோறு வைப்பா.  அவ அப்பா வேற அவளுக்கு ஃபுல் சப்போர்ட். ஃப்ரிட்ஜ்ல இருக்கிற பிஸ்கட், பிரட் எல்லாம் அதுகளுக்கு தான் போடுவா. நானும் சொல்லிப் பாத்துட்டு முடியாம இப்போ தினமும்  நாய்களுக்குன்னே ஐ.ஆர். இருபது அரிசி வாங்கி தனியா சமைக்கிறேன். தயிர் சாதத்து மேல கொஞ்சம் வெண்ணையும் கலந்து வச்சாத் தான் நல்லா சாப்பிடும்னு உங்க பேத்தி அடம் பண்ணுவா. என்னவோ போங்க’’ என்று என் மகள் கூட போனில் என்னிடம் சொல்லி அலுத்துக் கொண்டிருக்கிறாள். 

 இந்தக் காலப் பிள்ளைகளின் உலகமே தனிதான். சென்ற தலைமுறையினர் தங்கள்  பெற்றோர் பேச்சுக்கு பயந்து கட்டுப்பட்டு நடந்தனர். ஆனால் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு பிடிப்பதில்லை. அறிவுரை அறவே ஆகாது. அவர்கள் உலகம் கணினி, அலைபேசி, இயர் போன் மற்றும் தொலைக்காட்சிகளால் ஆனது. மனிதர்கள் எல்லோரும்  அவர்களைப் பொறுத்தவரை வேற்று கிரக வாசிகள் தான். 

‘’சார், பத்து நாளைக்கு  முன்ன என்ன ஆச்சு தெரியுமா? இங்க சுத்திக்கிட்டு இருந்த ஒரு கருப்பு நாய்  மேல ஒரு பைக்காரன் வண்டியை ஏத்தி, அதோட முன்னங்கால்கள் ரெண்டும் அடிபட்டுருச்சு. உங்க பேத்தி  அதை வெட்னரி ஹாஸ்பிடல்ல கொண்டு போய் அட்மிட் பண்ணி வைத்தியம் பார்த்தா.’’ 

 ‘’ஆமா. தெரியுமே...   தெரிஞ்சவங்க, பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு,  வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் வச்சு பணம் கலெக்ட் பண்ணி அந்த நாய்க்கு வைத்தியம் பார்த்தா. நான் கூட பணம் அனுப்பி வைச்சேனே. கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் அந்த நாய் ஆஸ்பத்திரில இருந்துச்சு. எனக்கு கூட ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ஒரு தெரு நாய் மேல இவ்வளவு பிரியம் காட்டுறாளே என் பேத்தினு’’ 

‘’ எதுவும் அளவோட இருக்கறது நல்லது சார்’’ பசவப்பாவின் கூற்று சரி என்றே பட்டது எனக்கு.  

மறுநாள் காலை குளித்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்று சூரிய நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்த தொட்டி செடிகளுக்கு நீர் விட ஆரம்பித்த போது, கையில் இரண்டு டப்பாக்களுடன் பிருந்தா வந்தாள்.  ஒன்றில் கோதுமையும் மற்றொன்றில் அரிசியும் இருந்தன. அவற்றை வலப்புற கைப்பிடி சுவற்றின் மீது வரிசையாக வைத்தாள். 

நான் மௌனமாக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த இரண்டாவது நிமிடம் இரண்டு  புறாக்கள் பறந்து வந்து கோதுமையை கொத்தித் தின்ன ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் நான்கு மைனாக்கள், இரண்டு குருவிகள்,  என வருகை தரஅந்த இடமே வண்ணமயமானது.  

நான் பிருந்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வகை வகையாய் சமைத்து தன் பிள்ளைகளுக்குப் பரிமாறி அவர்கள் உண்ணும் அழகை பார்த்து ரசிக்கும்  ஒரு தாயின் முகத்தில் நிலவும் திருப்தியும் சந்தோஷமும் அவள் முகத்தில் தெரிந்தன. 

 ஒரு கோப்பையில் தண்ணீர் பிடித்து அதையும் ஒரு ஓரமாக வைத்தாள். இப்போது உண்டு முடித்த பறவைகள் அருகில் இந்த மரக்கிளைகளில் தஞ்சம் புகுந்தன. ‘’ தண்ணித் தாகம் அடிக்கறப்ப வந்து குடிச்சிக்கும்’’ என்றாள் என்னிடம் புன்னகையுடன். 

‘’ பிருந்தாக் கண்ணு, பறவைகளுக்கு தீனி வைக்கறதெல்லாம் சரிதான். ஆனா இந்த தெரு நாய்கள் கொஞ்சம் டேஞ்சர் இல்லையாடா?’’ என்றேன் இதமாக. 

‘’தாத்தா பொதுவா வீட்டுக்கு தெரிஞ்சவங்க யாராவது வந்தா அவங்களுக்கு தண்ணீர், ஸ்நாக்ஸ், சாப்பாடு போட்டு நல்லா கவனிக்கிறோம். அது ஏன்? அதே மாதிரி நீங்க ஊர்ல அடிக்கடி அன்னதானம் பண்ணுவீங்க இல்லையா? அதுக்கு என்ன காரணம் சொல்லுங்க?’’  

‘’வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லா கவனிக்கணும்ங்கிறது நம்ம பண்பாடு. அதிதி தேவோ பவன்னு சொல்லுவாங்க வேதத்துல. கடவுளே விருந்தினர் ரூபத்துல வராங்க அப்படின்னு அர்த்தம். அதே மாதிரி இந்த உலகத்திலேயே மிகக் கொடுமையானது பசிதான். அதனாலதான் என்னால முடிஞ்ச அன்னதானத்தை அடிக்கடி செய்கிறேன்’’ 

‘’ வெல் செட் தாத்தா. மனிதர்களால் உழைச்சு பிழைக்க முடியும். தனக்கான தேவையை தான் பார்த்துக் கொள்ள முடியும். அவங்களுக்கே சாப்பாடு தானமா கிடைக்கிறது. ஆனா தெரு நாய்கள் பாவமில்லையா? அதனாலதான் நான் சாப்பாடு போடறேன். இந்த தெருவுல  நிறைய பேரு அதை  அப்போஸ் பண்ணாங்க.  ஆனாலும் நான் அதை கைவிடல. அது மனிதர்களை எப்பயாவது கடிக்கிதுதான். அதுக்காக அதுகளை பட்டினி போட முடியுமா தாத்தா? கவர்மென்ட்தான் நாய்களை சரியா பராமரிக்கிறதில்லை. அட்லீஸ்ட் மனுஷங்களாவது கொஞ்சம் கேர் குடுக்கலாம் இல்லையா?’’    

‘’என்னைப் பொறுத்த வரை, நாய்களை இந்தத் தெருவின் அதிதியாகத்தான் பார்க்கிறேன். சில மனிதர்களுக்கு நாய் வேண்டாத ஜீவனாப் படலாம். ஆனா கடவுள் நிச்சயமா அப்படி நினைக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தா அவர் நாய்களை படைச்சே இருக்க மாட்டாரே. அதுகளோட பிறவிக்கும் ஏதோ அர்த்தம் உண்டு தானே தாத்தா?’’ அவள் பார்வையின் விசாலமும், தெளிவும் வியக்க வைத்தன. என் பேத்தியின் தலையை ஆதரவாய் தடவினேன் அவளைப் புரிந்துகொண்டதன் அடையாளமாய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com