‘பர்த்டே பேபி...‘

‘பர்த்டே பேபி...‘

வசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தாள் வள்ளி. அவளுடன் பேசியபடியே ஒட்டிக்கொண்டே வந்தாள் அவளது மகள் மஞ்சு.

“அடியேய் என்னை ஏண்டி உரசிக்கிட்டே வர்றே... என்னை கிளம்ப விடுடி...பெரியம்மா மூன்றுமணிக்கெல்லாம் வரச் சொல்லிச்சு... இப்பவே மணி ரெண்டரையாச்சு...’’ என்றபடி அவளைப் பிடித்து லேசாய் தள்ளிவிட்டாள். அவளோ சுதாரித்துக்கொண்டு ஆனாலும் ஒட்டியபடியே, ‘அம்மா, நானும் வர்றேம்மா, நான் பர்த்டே கேக்கு வெட்டறதையெல்லாம் பார்த்ததேயில்லைம்மா... வர்றேம்மா...’ என்று சிணுங்கினாள்.

‘‘அடியேய்... அங்கே எல்லாரும் பளபளான்னு டிரெஸ் போட்டுக்கிட்டு வந்து நிற்பாங்கடி... நீ இப்படி பழைய கவுனைப் போட்டுக்கிட்டு அங்கே வந்து நின்னா நல்லாவா இருக்கும்... கடைசில அவங்க கொடுக்கற ஒருதுண்டு கேக்குக்காக இவ்ளோ தூரம் வர்றேன்றியா... போ, போய் உட்கார்ந்து படி... நாளைக்கி பரிச்சை வருதில்லையா... வரும்போது நான் கேக் கொண்டாறேன் போ ’’ என்றாள்.

“இல்லம்மா...நானும் வர்றேமா... எனக்கு கேக்கெல்லாம் வேண்டாம்மா... வந்து பார்க்கறேம்மா...ஆசையா இருக்கும்மா...’’ என்று சிணுங்கினாள்.

கடைசியில் அவளது நச்சரிப்புத் தாங்கமுடியாமல், அவளையும் கூட்டிக்கொண்டுதான் கிளம்பினாள் வள்ளி.

வழியில், “அம்மா என்னோட பொறந்தநாள் என்னிக்கும்மா” என்றாள் மஞ்சு. சட்டென கண்கள் கலங்கின வள்ளிக்கு. ‘ இன்னிக்குத்தாண்டி உனக்கும் பொறந்தநாள் ‘ என்றாள். சொல்லும்போது தொண்டை அடைத்தது அவளுக்கு. ‘ அப்போ எனக்கும் இன்னிக்கு கேக்கு வெட்டுவியாமா...’ என்று மறுபடியும் அவள் கேட்க, தன் இயலாமையை எப்படி அவளிடம் விளக்குவது என்று தடுமாறினாள். மனதை கல்லாக்கிக் கொண்டு தோளைத்தட்டி ‘ சித்த பேசாம வாயேன்...தோ வீடு வந்தாச்சு ‘ என்றாள்.

“என்ன வள்ளி...மூணு மணிக்கு வான்னா, சரியா மூணு மணிக்கேத்தான் வருவியா... கொஞ்சம் முன்னால வரக் கூடாதா...? போ...போ...பின்னால துணிமணியெல்லாம் அப்படியேக் கிடக்குது. பாத்திரங்கள்லாம் காய்ஞ்சிக் கிடக்குது...கழுவிப் போடு...நாலரைக்கு ராகுகாலம் முடிஞ்சதுமே கேக் வெட்டணும்...எனக்கு நிறைய ஜோலி இருக்கு. உன்கிட்ட ஒவ்வொரு வேலையா சொல்லிக்கிட்டே இருக்க முடியாது... பார்த்து பண்ணு...” என்று சத்தம் போட்டவள் கூடவே அவளது மகள் அவளை ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, ‘இதென்ன கொசுறா...உன்வேலையைக் கெடுக்கவா, ஏற்கனவே நீயொரு நோஞ்சான்... இதுலே இவளையும் கூடவே வெச்சுக்குவியா... சரிசரி... மசமசன்னு நிக்காதே... போயி வேலையைப் பார் ’ என்றுவிட்டு வேகவேகமாய் திரும்பினாள் ராஜாத்தி.

அவளது பேத்தி பிரபாவுக்குத்தான் இன்று பிறந்தநாள். மகள் வயிற்றுப் பேத்தி. மகள் மாலதி ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். புருஷன் சென்னையில் இருக்கிறான். கல்யாணம் செய்துகொடுத்து ஆறே மாதங்களில் வந்தவள்தான் அவள். இன்னும் திரும்பிப் போகவேயில்லை. வள்ளி அரசல்புரசலாக உண்மை நிலைமையை தெரிந்துகொண்டாள். வாழாமல்தான் மாலதி வந்துவிட்டாள் என்பதுதான் அது. அந்த மனிதனும் இன்றுவரை ஒருதடவைக் கூட இங்கே வந்ததுமில்லை.

இன்றைக்கு பிரபாவுக்கு மூன்று வயது. ஆனால் அது ஊட்டச் சத்தின் காரணமாய் ஆறு வயது பெண்பிள்ளை மாதிரி வளர்ந்து உப்பி நிற்கிறது.

துணிகளை துவைத்துக் கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் வள்ளி. ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்தது. இரண்டு பையன்கள் கலர் பேப்பர்களால் தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் எக்கிப் பார்த்தாள். சுவற்றில் கலர் பேனர் தொங்கியது. அதில் பிரபா புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

ஒருதடவை பின்வாசலுக்கு வந்த பிரபா, தன் பட்டுப்பாவாடையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிக்கொண்டே நின்றுவிட்டு திரும்பினாள். அவள் பாவாடையை அசைக்கும்போது காலில் போட்டிருந்த தங்கக் கொலுசு பளபளத்தது. குழாயடியிலிருந்தபடியே அவளது அழகைப் பார்த்துவிட்டு இரண்டுகைகளையும் நெற்றிப்பொட்டில் வைத்து திருஷ்டிக் கழித்தாள், வள்ளி.

‘ பொறந்தா பணக்காரன் வூட்டுல பொறக்கணும். இல்லேன்னா பொறக்கவே கூடாது...’ என்று தனக்குள்ளாகவே முணகிக் கொண்டாள்.

பிரபா ஆடுவதைப் பார்த்துவிட்ட மஞ்சு, “அம்மா...எனக்கும் இன்னிக்குத்தானே பிறந்தநாள். எனக்கும் இதேமாதிரி பட்டுப்பாவாடை வாங்கிக் கொடுப்பியாமா...” என்றாள். திகீர் என்றது வள்ளிக்கு. அவளுக்கு ஒரு வயதாக இருக்கும்போது விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போன புருஷனை நினைத்து இப்போது அழுவதா, இல்லை இதுவரை ஒத்தையாளாய் இருந்து மகளை நல்லபடியாய் வளர்க்கிறோம் என்று பெருமைபடுவதா என்று அவளுக்குப் புரியவில்லை.

“என்னாங்கடி தொணதொணன்னு பேசிக்கிட்டு...இன்னுமா துணி துவைச்சு முடியலை...சீக்கிரம்...’‘ என்றுவிட்டு இரண்டு பேப்பர் கப்புகளை வைத்துவிட்டு, ‘ டீ வெச்சிருக்கேன், நீ ஒன்னு எடுத்துக்கோ, உன் கொசுறுக்கொன்னு...’ என்றுவிட்டு திரும்பிப்போனாள் ராஜாத்தி.

“ஏண்டி...வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியா... தொனத்தொனன்னு ஏதாவது பேசிக்கிட்டே இருப்பியா...” என்று மகளைத் திட்டியபடி டீக்கப்பை எடுத்தாள். கொதித்தது டீ. மேல்புறமாய் லேசாய் ஊதிவிட்டு மகளுக்குக் கொடுத்தாள்.

“அம்மா நான் உள்ளே போய் பார்க்கறேம்மா... ஜிகுஜிகுன்னு கலர்கலர் பேப்பரா தொங்கவிடறாங்கம்மா... அழகா இருக்கில்லே... நாமளும் இப்படி தொங்கவிடலாமா என் பொறந்த நாளுக்கு...”

“அடக் கடவுளே, இதென்ன உன்னோட ரோதனையாப் போச்சு...பேசாம உட்கார்...அங்கெல்லாம் நீ போகக்கூடாது...”

கொஞ்ச நேரத்தில் மேலும் நான்கைந்து பேர் வந்திருப்பது தெரிந்தது. பேச்சு சத்தம் அதிகமாய் கேட்டது.

துணிமணிகளைத் துவைத்து மொட்டைமாடியில் காயப் போட படிகளில் ஏறினாள். இதற்காகவே வெளிப்பக்கத்தில் படிகள் கட்டியிருக்கிறார்கள். வீட்டிகுள்ளிருந்தும் மாடிக்குப் போகலாம். துணிகளை காயப்போட்டுவிட்டு இறங்கினாள். அப்போது படியில் ஒரு சிறிய கொலுசு கிடப்பதை பார்த்துவிட்டாள். அது பிரபாவுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்று புரிந்தது. படியில் ஏறும்போதோ, இறங்கும்போதோத்தான் கழன்று விழுந்திருக்கவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டாள்.

யோசித்தாள். குழந்தையின் காலைப் பார்த்ததும் இவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டாமா, கொலுசைக் காணவில்லை என்று. ஹூம் தங்கத்தில் கொலுசு போடுபவர்களுக்கு வெள்ளிக் கொலுசு எம்மாத்திரம்...?

இப்படியே கொண்டு போய் கொடுத்துவிடலாமா என்று யோசித்தாள். ரொம்ப காலமாய் வெறும் காலுடனேயே திரியும் தன் மகளை ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். இத்துடன் கொஞ்சம் காசு போட்டால், மஞ்சு சைஸுக்கு ஒருஜதை கொலுசு வாங்கிவிடலாமே... என்று தோன்றியது.

“வள்ளி...கிச்சன்ல பாத்திரம் சேர்ந்திடுச்சு... வந்து அள்ளிக்கிட்டுப் போய் தேயி...’ என்றபடி பின்வாசலுக்கு வந்தாள் ராஜாத்தி. பின்னாலேயே வந்த மாலதி, ‘ அம்மா என் ஆபீஸ் ஸ்டாப்லாம் வந்திட்டாங்க, நீ வாம்மா...’ என்று அவளைப்பிடித்து இழுத்தாள். அவர்கள் நகர்ந்தவுடன், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கையில் மறைத்துவைத்திருந்த கொலுசை இடுப்பு சேலை மடிப்பில் திணித்துக் கொண்டாள் வள்ளி.

அப்படியே போய் கிச்சனுக்குள் நுழைந்தாள். பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. வாஷ்பேஸின் முழுதும் பாத்திரங்கள் ரொம்பிக் கிடந்தன. அதுமட்டுமில்லாமல் அடுப்புமேடையிலும் ஆங்காங்கே சில பாத்திரங்கள் கிடந்தன. மூன்று தடவை வந்து எல்லா சாமான்களையும் அள்ளிக்கொண்டு போய் போட்டு தேய்க்க ஆரம்பித்தாள்.

ஜனங்களின் சத்தம் அதிகமாய் கேட்டது. ரேடியோவில் பாட்டு நின்றுபோய் மெல்லிசை மெலிதாய் கேட்டது.

‘ அம்மா நான் போயி பார்க்கறேம்மா...’ என்றாள் மஞ்சு. இனியும் தட்டிக்கழிக்க முடியாதென்று உணர்ந்து, ‘ சரி...கதவு ஓரமா நின்னு பார்க்கனும்...குறுக்கு மருக்கே ஓடக்கூடாது...’ என்றாள். ஓடினாள் அவள்.

திடீரென்று கோரஸாக, ‘ ஹேப்பி பார்த்டே டூ யூ.....’ என்று தொடர்ந்து பாட்டுப் பாடினார்கள். ஆவலை அடக்கமுடியாமல் தானும் பாத்திரங்களை அப்படியேப் போட்டுவிட்டி ஓடினாள் வள்ளி. கதவு ஓரம் மஞ்சு நின்றிருக்க அவளுடன் ஒட்டி நின்றுகொண்டு பரவசத்துடன் நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்தாள் அவள்.

கேக்கை ஊட்டிக் கொண்டும், பரிசு பெட்டிகளை கொடுத்துக் கொண்டும் அங்கே குதூகலம் கொண்டாட்டம் போட்டது.

கதவருகில் நின்றிருந்த வள்ளியையும் மஞ்சுவையும் பார்த்துவிட்ட ராஜாத்தி இங்கே வா என்பது போல சைகை செய்தாள். தயங்கித் தயங்கி மகளுடன் அருகில் போனாள் வள்ளி.

ஒரு கேக்குத் துண்டை எடுத்து வள்ளியிடம் கொடுத்துவிட்டு இன்னொரு துண்டை எடுத்து குனிந்து மஞ்சுவிடம் கொடுத்தாள் ராஜாத்தி. கேக்கை வாங்கிக்கொண்டே, ‘ எனக்கும்... இன்னிக்கித்தான் பொறந்தநாளு... அம்மா சொல்லிச்சு...’ என்று திக்கித்திக்கிச் சொன்னாள் மஞ்சு. கொஞ்சம் திகைத்த ராஜாத்தி நிமிர்ந்து வள்ளியைப் பார்த்தாள்.

‘ அவ கிடக்கறாம்மா...விடுங்கம்மா... ‘ என்றுவிட்டு மகளைப் பார்த்து, ‘தேங்க்ஸ் சொல்லுடி ‘ என்றாள். அவள் ‘ டேங்க்ஸ்...’ என்றாள்.

பெரிய பெரிய பரிசுப் பேட்டிகள் மேஜை மேல் கிடந்தன. அதில் இரண்டு கரடி பொம்மைகளும் இருந்தன. மகளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் வள்ளி. அவசர அவசரமாய் பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு கைகால்களை கழுவிக்கொண்டு கிளம்பத் தயாரானாள்.

அதுவரை கதவருகிலேயே நின்றிருந்த மஞ்சுவைப்பிடித்து இழுத்தாள் வள்ளி. ‘ வா நாம போகலாம், கேக்தான் வாங்கிட்டேயில்லே ‘ என்றாள். கூடவே பெரியம்மா கண்ணுக்குத் தெரிகிறார்களா என்று தேடினாள். ஆனால், மாலதிதான் தெரிந்தாள். அவளிடம், ‘ சின்னம்மா, வேலையெல்லாம் ஆச்சு...நான் கிளம்பறேம்மா... பெரியம்மாக்கிட்டே சொல்லிடுங்க...’ என்றுவிட்டு நகறப்போனவளை கையைப்பிடித்து நிறுத்தி ஒரு பையைக் கொடுத்தாள் மாலதி. ‘ சிக்கன் பிரியாணி வச்சிருக்கேன், கொண்டு போய் சாப்பிடுங்க...’ என்றாள்.

சந்தோசத்துடன் மஞ்சுவை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள் வள்ளி. அதற்குள் ‘வள்ளி வள்ளி ‘ என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடிவந்தாள் ராஜாத்தி. கையில் இரண்டு பைகள். திகைத்து, நின்றுவிட்டாள் வள்ளி.

‘ உன் பொன்னுக்கும் இன்னிக்கித்தான் பர்த்டேயாமே...நான் டீ குடுக்க வரும்போதே உன் பொண்ணு சொல்லிக்கிட்டிருந்ததைக் கேட்டுடேன். கேக்கு வாங்கும்போதும் எவ்வளவு ஆசையா சொன்னா அவளுக்கும் இன்னிக்குத்தான் பிறந்தநாள்னு...என் நெஞ்சைத் தொட்டுட்டா போ. பிரபாவுக்காக மூணு பட்டுப் பாவாடை வாங்கியிருந்தோம்... உன்பொன்னுக்கு சரியா இருக்கும்னு நினைக்கறேன். இதுல ஒன்னு வச்சிருக்கேன் ‘ என்றபடி ஒரு பையை விரித்துக் காண்பித்தாள், பைக்குள் அட்டைப்பெட்டி இருந்தது. இன்னொரு பையைக் கொடுத்து, ‘இதுல பொம்மை இருக்கு. பிரபாக்கு வந்தது... ரெண்டு கரடிபொம்மைய வச்சிக்கிட்டு அவ என்ன பண்ணப் போறா இதுவும் உன் பொண்ணுக்குத்தான் ‘ என்று மஞ்சுவிடம் நீட்டினாள். பையிலிருந்து ஒரு கரடி பொம்மை அவர்களைப் பார்ப்பது போல இருந்தது.

‘ பர்த்டே பேபி... போய் சதோசமா புது டிரெஸ் போட்டுக்கிட்டு கொண்டாடு ‘ என்றுவிட்டு மஞ்சுவின் கன்னத்தில் லேசாய் தட்டினாள் ராஜாத்தி.

ஒருகணம் ஆடிப்போனாள் வள்ளி. ‘ இவ்ளோ பெரிய மனசு உள்ள பெரியம்மா வீட்டு கொலுசையா எடுத்து மறைச்சு வெச்சோம்...’ என்று நினைத்தவள் உடனே அதை மாடிப்படியிலேயே போட்டுவிட முடிவுசெய்தவளாய், மாடிப்படியருகில் வந்ததும், திரும்பி யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிசெய்துகொண்டு இடுப்பு மடிப்பிலிருந்த கொலுசை எடுத்து விட்டெறிந்தாள் மாடிப்படியில். எடுத்த இடத்திலேயே போய் விழுந்தது அது.

திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் லேசான மனதுடன்.

கதை இத்துடன் முடியவில்லை.

மறுநாள் அவள் வேலைக்கு வரும்போது, ‘ நேத்து பிரபாவோட கொலுசு ரெண்டுமே காணாமப் போச்சுடி, ஒன்னுமட்டும் மாடிப்படில கிடந்துச்சு...இன்னொன்னை நீ எங்கேயாவது பார்த்தே ? ‘ என்று ராஜாத்தி அவளை கேட்டவுடன் கதைத் தொடர ஆரம்பித்தது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com