ஊனம்!

ஊனம்!

சிறுகதை

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

ணபதி மெஸ் காலை ஆறுமணிக்கு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாதுங்கா பகுதியில் கணபதி மெஸ் இருந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கணபதி மெஸ்சை நாடினார்கள். எளிமையான தரமான உணவு. கந்தசாமி அம்சவள்ளி தம்பதியினர்விருதுநகரில் இருந்து பிழைப்புக்காகமும்பை மாதுங்காவிற்கு சென்றார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மாதுங்கா பிளாட்பாரத்தில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்தனர். அதில்தான் அவர்கள் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது. 

மாதுங்காவில் வசிக்கும் ராஜாராம் மதுரைக்காரன் தினமும் கந்தசாமி அம்சவள்ளி இட்லிக் கடைக்கு வாடிக்கையாளராக வந்து சென்றான். அவன் மூலம் இட்லிக்கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ராஜாராம் ரயில்வே தொழிலாளியாக பணியாற்றி வந்தான். அவன் ஒரு நாள் கந்தசாமியிடம் ‘’இந்தப் பகுதியில் நீங்க ரெண்டுபேரும் ஒரு மெஸ் ஆரம்பிக்கலாம்’’ என்று யோசனை கூறினான். அவன் உதவி செய்யும் குணம் படைத்தவன். அவன் செய்த உதவியினால் “கணபதி மெஸ்” என்ற பெயரில் கந்தசாமி ஆரம்பித்தார். கந்தசாமி அம்சவள்ளி இருவரும் சுறுசுறுப்பாக கணபதி மெஸ்சை நடத்தினார்கள். அவர்கள் மெஸ்ஸுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாக உபசரித்தார்கள். 

மெஸ் ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இப்போது மாதுங்காவில் ‘கணபதி மெஸ்’ என்று ஒரு சிறுவனிடம் கேட்டால்கூட சொல்லி விடுவான். மெஸ்ஸுக்கு  நாளடைவில் மக்கள் கூட்டம் அதிகம் வர ஆரம்பித்தார்கள். ரயில்வேயில் இருந்து தொழிலாளிகள் பெரும்பாலும் வந்தார்கள் .பக்கத்தில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களும் கணபதி மெஸ் சாப்பாடு என்றால் விரும்பிச் சாப்பிட்டார்கள். உயர் அதிகாரிகள் வந்தால் தங்களுக்கு கணபதி மெஸ்ஸிலிருந்து சாப்பாடு, டிபன் எது வேண்டுமென்றாலும் வாங்கிவரும்படி கூறினார்கள். 

 இப்போது கணபதி மெஸ்ஸில் ஐந்து வேலைக்காரர்கள் போட்டு சம்பளம் கொடுக்கும் அளவில் கணபதி மெஸ் முன்னேற்றம் அடைந்து விட்டது. கந்தசாமி - அம்சவள்ளி தம்பதியினருக்கு வயதாகி விட்டதால் கல்லாவில் இருந்து பில் போடவும் பணத்தினை வாங்கிப்போடவும் ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது.மெஸ்ஸுக்குஆள் தேவையென கம்ப்யூட்டரில்எழுதப்பட்டஅறிவிப்பு,அட்டையில் ஒட்டி மெஸ்ஸுக்கு முன்னால்தொங்கவிடப்பட்டது. 

 அறிவிப்பு அட்டை தொங்கவிடப்பட்டு ஒரு வாரம் கழிந்தது. அன்று ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும். மெஸ்ஸில் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. மூன்று சக்கர நாற்காலியில் இளைஞன் ஒருவன் வந்து ‘’அய்யா’’ எனக் குரல் கொடுத்தான். 

அம்சவள்ளி கீழே உட்கார்ந்து காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்தாள். கந்தசாமி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். கந்தசாமி, “அம்சவள்ளி யாரோ என்னை கூப்பிடுவதுபோல் தெரியுது. வெளியே யார் வந்திருக்கிங்காங்கன்னு போய் பார்.’’ என்றார். பில் போட்டு காசு வாங்க நம்பிக்கையானஆள் ஒருவரும் இதுநாள்வரை அமையவில்லையே என்று அவர் மனதில் நினைத்து அப்போது ஆதங்கப்பட்டுக் கொண்டார். 

அம்சவள்ளி மெஸ்ஸுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். மூன்று சக்கர நாற்காலியில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவன் வெளியே தொங்கவிடப்பட்ட  அறிவிப்பு அட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்கும். நெற்றியில் திருநீறு கீற்று, அதன் நடுவில் சந்தனப் பொட்டு. மீண்டும் ‘ஐயா’ என்று குரல் கொடுப்பதற்காக தலை நிமிர்ந்தான். வாசலில் அம்சவள்ளி நின்று கொண்டிருந்தாள். 

“தம்பி என்ன வேணும். சாப்பிட டிபன் ஏதும் வேணுமா. என்ன வேணும்னு சொல்லு கொண்டு வந்து தர்றேன்‘’என்று கூறிக்கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள். 

‘’அம்மா நான் சாப்பிட வர்லே. உங்க மெஸ்ஸில் பில் போட ஆள் வேணும்னு போர்டை பார்த்தேன். அதான்...’’என்று கூறினான். 

அம்சவள்ளி வாசலில் இருந்தபடி‘’என்னங்க இங்க வாங்க ஒரு தம்பி நம்மமெஸ்சுக்கு வேலை கேட்டு வந்திருக்கு‘’ என்று குரல் கொடுத்தாள். 

கந்தசாமி வெளியே வந்தவுடன் “அம்சவள்ளி, நான் வரும் வரை நீ போய் கல்லாவில் உட்காரு “ என்றுகூறினார். 

கந்தசாமி மூன்று சக்கர நாற்காலியை அணுகியபோது அந்த இளைஞன் சக்கர நாற்காலியில் சாய்த்துவைத்திருந்த ஊன்றுகோலை எடுத்து நிற்க முயற்சிப்பதை அவர் கண்டார்.

‘’தம்பி ஒண்ணும் நீ எந்திரிக்க வேண்டாம் அப்படியே வீல்சேரில் உட்கார்ந்திரு” என்று தடுத்து நிறுத்தினார். 

‘’எப்படி அய்யா நீங்க நின்னிட்டு இருக்கும்போது நான் இப்படி உட்கார்ந்து பதில் சொல்றது..’’ 

‘’ பரவாயில்ல தம்பி. உன் பேரு என்ன?‘’ 

    ‘’ என்னோட பேரு முத்து. எனக்கு சொந்த ஊர் விருதுநகர்.பிளஸ் டூ வரை படிச்சிருக்கேன். அங்க இங்க சுத்தி பிழைப்பைத் தேடி இங்க வந்திருக்கேன்.இங்கவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒரு வேலையும் கிடைக்க மாட்டேங்குது. அதுக்கு என்னோட இந்த நிலைமையும் ஒரு காரணம்.’’ என்று ஆதங்கத்துடன் கூறினான். 

  ‘’ அட அடா நம்ம ஊருக்காரனா? விருதுநகர்ல நீ எந்த தெருப்பா?’’ என்று கேட்டார். 

  ‘’ விருதுநகர் தந்தி மரத் தெருங்க. என்னை எங்க அப்பா அம்மா கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வளர்த்து பிளஸ் டூ வரை படிக்க வெச்சுட்டாங்க. இனிமேலும் அவங்களுக்கு பாரமா இருக்கக்கூடாதுன்னு அவங்களுக்குத் தெரியாமல் ஓடி வந்திட்டேன். அங்க இங்க சுத்தி இப்ப இங்க வந்திட்டேன்’’ என்று அவன் கூறும்போது கண்களில் நீர் கோர்த்தது.

‘’என்னோட அப்பா அம்மாவுக்கு நான் வேல பார்த்து என்னால் முடிந்த உதவி செய்யணும்ன்னு நினைக்கிறேன்’’ என்று தன் மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தான். 

‘’முத்து ஒண்ணும் கவலைப்படாதே. நீ நம்ம ஊருக்காரானாயிட்ட. உன்னால் பில் மட்டும் போடத் தெரியுமா வேறு என்ன வேலை உன்னால் செய்ய முடியும்’’ என்று கேட்டார்.

‘’மெஸ்ஸுக்கு வர்றே கஸ்ட்டமர்கள்கிட்ட அன்பா நடந்துக்கத் தெரியும். உட்கார்ந்து பார்க்கக்கூடிய வேலை எதுன்னாலும் நீங்க சொன்னாக்க பார்ப்பேனுங்க’’ என்றான். 

  ‘’உன்னைப் பற்றி கேட்ட பிறகு... நம்ம ஊருக்காரன்னு வேறு நீ சொல்லிட்டே...  உன்னை வேண்டாம்னு கூற எனக்குத் தோணலே. நாளைக்கு நல்ல நாள்... நாளைக்கு வந்து மெஸ்ஸில் சேர்ந்துக்க... ‘’ 

‘’ ரெம்ப நன்றிங்க ‘’ என்று சக்கர நாற்காலியை இயக்க ஆரம்பித்தான். 

  ‘’முத்து கொஞ்சம் இரு வர்றேன்’’ என்று கூறிய கந்தசாமி உள்ளே சென்று கையில் பார்சலுடன் வந்தார்.‘’முத்து இந்தா இதை வெச்சுக்கோ இட்லியும் வடையும் வெச்சிருக்கேன். சாப்பிட்டுக்கோ. நாளை காலையில் சீக்கிரமா இங்கவந்திரு’’ என்று கூறிக்கொண்டே பார்சலைக் கொடுத்தார். முத்து பார்சலை வாங்கிக்கொண்டு அவருக்கு நன்றி கூறினான். 

கந்தசாமி கூறியபடி கணபதி மெஸ்ஸுக்கு காலை ஏழு மணிக்குள் முத்து வந்து விட்டான். மெஸ் அப்போது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கந்தசாமி வரும் வாடிக்கையாளர்களை அமரச் செய்து அவர்கள் கூறும் உணவை கொண்டு வரும்படி சப்ளையர்களுக்கு கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். 

 மெஸ் வாசலில் ஒருபுறம் சாய்தளம் அமைத்து இருந்ததால் முத்து அதன் வழியே சக்கரநாற்காலியில் உள்ளே சென்றான். அவன் கந்தசாமி அமர்ந்திருக்கும் கல்லாவின் அருகில் சக்கர நாற்காலியின் மூலம் சென்றான். கந்தசாமி அவனைப் பார்த்து “ முத்து உனக்கு பில் போடறதுக்கு அந்த இடம் ஒதுக்கி இருக்கு’’ என்று இடத்தைச் சுட்டிக்காட்டி அதில் அமர்ந்து பில் போடும்படி கூறினார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு ஸ்டூலும் அருகில் ஒரு சிறு மேசையும்  போடப்பட்டிருந்தது. 

முத்து ‘’ஐயா எனக்கு அந்த இடத்தில் உட்கார்வதற்கு ஸ்டூல் வேண்டாம் நான் அமர்ந்திருக்கும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து பில் போடுறேன்’’. என்று கூறினான். 

கந்தசாமி சரி என்று அதற்குச் சம்மதித்தார்.

முத்து தன்னோட மூன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து பில் போட ஆரம்பித்தான். மெஸ்ஸில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. என்னென்ன சாப்பிட்டார்கள் என்று மூன்று சப்ளையர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சத்தமாக முத்துவை நோக்கிக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அதைக் கவனமாகக்கேட்டு விரைவாக கணக்கிட்டு முத்து பில் போட ஆரம்பித்தான். அவன் விரைவாக பில் போடுவதைக் கண்டு கந்தசாமி வியந்தார். 

 ஒருநாள் மெஸ்ஸில் கல்யாணக்கூட்டம் ஒரே நேரத்தில் வந்து சாப்பிடுவதற்குஅமர்ந்தார்கள்.மூன்றுசப்ளையர்களும் உணவு சப்ளை செய்வதற்கு திணறிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த முத்து சக்கரநாற்காலியில் அங்கும் இங்கும் நகர்ந்து தம்ளர்களை வரிசையாக வைத்து ஜக்கிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு அருந்த தண்ணீர் ஊற்றினான். தேவையானவர்களுக்கு அவர்கள் கேட்கும் சாம்பார், சட்டினி ஊற்றினான். 

சாப்பிட்டு முடித்தவர்கள் கைகழுவி வருவதற்குள் பில் போடும் இடத்துக்குச் சென்று விரைவாக பில் போட ஆரம்பித்தான். அவன் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்த கந்தசாமி மனதுக்குள் வியந்தார். முத்து சக்கரநாற்காலியில் உட்கார்ந்து பில் போடுவதாக கூறியதற்கு கந்தசாமிக்கு இப்போதுதான் காரணம் புரிந்தது. சில நேரங்களில் பார்சல் கேட்டு வருபவர்களுக்கு முத்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பார்சல் கட்டிக் கொடுத்தான். முத்து ஓய்வில்லாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டே உழைத்தான். 

முத்து தனது தந்தைக்கு போனில் மாதுங்காவில் இயங்கி வரும் கணபதி  மெஸ்ஸில் சேர்ந்தவுடன் அங்கு வேலை பார்ப்பது பற்றி கூறினான். அவன் தனது செலவைக் குறைந்துக்கொண்டு மாதாமாதம் தந்தையின் பெயருக்கு பணமும் அனுப்ப ஆரம்பித்தான். 

அன்று வெள்ளிக்கிழமை. முத்து பார்சல் கட்டிக் கொண்டிருக்கும் போது அவன் தற்செயலாக கல்லா இருந்த பக்கம் பார்த்தான். சப்ளையர் ஒருவன் கல்லாவில் இருந்து பணத்தை எடுத்து பான்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டான். கந்தசாமி அவசரத்தில் கல்லா பெட்டியை பூட்டாமல் ஏதோ வேலையாக சமையல் அறைக்குச் சென்றிருந்தார். அவர் திரும்பி வரும்போது முத்து சப்ளையர் கையைப் பிடித்து பின்புறமாக வளைத்து முறுக்கிக்கொண்டிருந்தான். 

  ‘’ ஐயா இவன் கல்லாவில் இருந்து பணத்தை எடுத்துட்டான். அதான் அவனை கையும் களவுமாக பிடித்து வைத்திருப்பதாகக் கூறினான். கந்தசாமி அந்த சப்ளையரிடம் கேட்டதற்கு ‘’’அதெல்லாம் இல்ல ஐயா’’ என அவரிடம் மறுத்துக் கூறினான். 

 ‘’ நீ எடுக்கலன்னு சொல்றே, நீ பணம் எடுத்ததை முத்து பார்த்ததாகச் சொல்றான். இதிலே எது உண்மைன்னு நான் போலீஸுக்குப் போன் பண்ணி தெரிந்துக்கறேன்னு சொல்லி போனை அவர் கையில் எடுத்தார். 

உடனே சப்ளையர் “ என்னை மன்னிச்சுடுசுங்க அய்யா’’ என்று அவர் காலில் விழுந்தான். அவன்போலீஸ் என்றதும் பணம் எடுத்ததை ஒப்புக் கொண்டான். 

றுநாள் காலை கணபதி மெஸ்ஸுக்குள் முத்து நுழைந்தவுடன் வழக்கம்போல் கந்தசாமியை கைகூப்பி வணங்கினான். அவர் புன்னகையுடன் அவனை தன் அருகில் அழைத்து ‘’முத்து இந்த கல்லா பெட்டி சாவி ஒரு செட் உன்கிட்ட இருக்கட்டும். நான் கல்லாவில் இல்லாதப்ப நீ பார்த்துக்கோ’’ என்று நம்பிக்கையுடன் கொடுத்தார். 

 ‘’அய்யா நான் இப்பத்தான் வந்திருக்கேன். என்னைவிட இங்க பெரியவங்க வேலையில்இருக்காங்க’’ என்று தயங்கினான். 

‘’முத்து மற்றவங்களைப் பற்றி எனக்கு கவலை இல்ல... நீ என்னைப் பொறுத்தவரை நேர்மையான உழைப்பாளி. அதனால்தான் நான் கல்லாவில் இல்லாதப்ப கல்லாவில் பணம் வாங்கிப் போடும் பொறுப்பை உன்கிட்ட நான்  கொடுக்கறேன். மறுக்காமல் வாங்கிக்கொள்’’ என்று சாவியைக்கொடுக்கிறார்.முத்துமறுப்புக் கூறாமல் வாங்கிக் கொண்டான். 

ஒருநாள் கந்தசாமியும் அம்சவள்ளியும் தனியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். முத்து அருகில் சென்று ‘’ஐயா கோடைகாலமாக இருப்பதால் மெஸ்ஸில் குடிதண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள்  வாங்கி வைக்கலாம். மெஸ்ஸுக்கு சாப்பிட வர்வங்க அவங்களுக்குத் தேவைன்னா வாங்கிச் செல்வாங்க. கணிசமான லாபம் அதன் மூலம் கிடைக்கும் ஐயா. இது என்னோட கருத்து’’ என்று கூறினான். கந்தசாமி இரவில் நன்கு யோசித்து முத்துகூறியபடி தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் வாங்கி விற்பனைக்கு வைத்து விட்டார். கந்தசாமி தன்னோட மனைவி அம்சவள்ளியிடம் முத்துவைப் பற்றி அடிக்கடிபெருமையாகக் கூறிக்கொண்டிருந்தார். 

••• ••• •••

ந்தசாமி அம்சவள்ளி இருவருக்கும் வயதாகி விட்டதால் உடல் தளர்ந்து விட்டது. தற்போது முத்துதான் பொறுப்பாக மெஸ்சை பார்த்துக்கொண்டான். கந்தசாமிக்கு தனது சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. அதனை அம்சவள்ளியும் ஒப்புக்கொண்டாள். முத்துவிடம் தங்கள் எண்ணத்தைக் கூறினார்கள். 

‘’ ஐயா நீங்க ஒண்ணும் கவலைப்படதீங்க. நீங்க என்னை உங்க மகனாக எண்ணிக்கொள்ளுங்கள்.  உங்க ரெண்டு பேரையும் கடைசிவரை நான்பார்த்துக் கொள்றேன்.’’ 

‘’ முத்து ரெம்ப சந்தோஷம். இந்தக் காலத்திலே பெற்ற பிள்ளைகளே வயதான அப்பா அம்மாவை கவனிக்காம விட்டுடறாங்க. ஆனா நீ இப்படி எங்களை பார்த்துக்கறேன்னு சொல்றதை. கேட்கிறப்போ எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு. நாங்க உன்னை எங்க மகனா நினைச்சு ஒண்ணு சொல்றோம். மறுக்காமல் நீ அதை கேட்டு ஏத்துக்கிடணும்.’’ 

‘’என்ன அய்யா சொல்லுங்க. கண்டிப்பா கேட்கிறேன்’’. 

‘’எங்களுக்கு உன்னையும் இந்த மெஸ்சையும் விட்டு போக மனசில்ல. இருந்தாலும் எங்களுக்கு சொந்த ஊருக்குப் போகணும்னு தோன்றிடுச்சு’’. 

‘’ அய்யா நீங்க தாராளமாக போயிட்டு வாங்க. நான் அதுவரைக்கும் மெஸ்சை பார்த்துக்கேறன்’’ 

‘’ முத்து நாங்க சொந்த ஊர்லே போய் இருக்க முடிவு பண்ணிட்டோம். மாதுங்காவுக்கு திரும்பி வரமாட்டோம். நாங்க ஆரம்பிச்ச இந்த மெஸ் தொடர்ந்து உன்மூலமா நடக்கட்டும்.என் பேர்லே போதிய பணம் பாங்குலே இருக்கு. அதுலே வரவட்டியே எங்களுக்குப் போதும் முத்து. எங்களைப்பற்றி நீ கவலைப்படாதே “ 

‘’ அய்யா நீங்க சொல்வதைக் கேட்டு எனக்கு ரெம்ப மனக்கஷ்டமா இருக்கு. நான் உங்களை என்னோட அப்பா அம்மாவைப்போல நல்லா பார்த்துக்கறேன்.’’ 

‘’ இல்ல முத்து . இந்த மெஸ் இருக்கும் இடம் எல்லாவற்றையும் உன் பேருக்கு மாத்திட்டேன். நீ எங்களைப்பற்றி ஒண்ணும் கவலைப்படாதே. ‘’ 

‘’ அய்யா கால் இல்லாத என் நிலையைப் பாருங்க. நான் எப்படி இந்த மெஸ்சை உங்களைப்போல் நடத்த முடியும். ‘’ 

‘’ முத்து உன்னால் கண்டிப்பாக முடியும். நான் நம்பறேன்.உன் உடல்லேதான் ஊனம். உன் மனசிலேயும் செயலேயும் எந்தவித ஊனமும் இல்ல முத்து. அதை நீ இங்கவந்த நாள்லேயிருந்துநாங்க இதுவரை பார்த்துட்டுத்தான்இருக்கோம். இந்தக் காலத்திலே கையும் காலும் உடல் நல்லா இருந்தாலும் ஒரு வேலையும் செய்யாமல் பூமிக்கு பாரமா எதுக்கும் பயன்படாமல் திரியிறாங்க பாரு. அவங்கதான் ஊனம் உள்ளவங்க. என்னைப் பொறுத்தவரை உன் மனசிலேயும் செயல்லேயும் எந்தவித ஊனமும் இல்ல முத்து. ‘’ 

கந்தசாமி இவ்வாறு முத்துவிடம் நம்பிக்கை ஏற்படுப்படும்படி கூறியவுடன் முத்து உணர்ச்சி மிகுதியில் என்ன பேசுவது என்பது தெரியாமல் தேம்பி தேம்பி அழுதான். கந்தசாமி அவன் அருகில் சென்று கண்ணீரைத் துடைத்து விட்டு முதுகை தட்டிக் கொடுத்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com