எசரோ

எசரோ

                                                                 

தி செம குஷியாய் இருந்தான். இன்று இரவு முதன் முதலாய் ஹாலிவுட் பாடகி எசரோவின் ரியாலிடி டான்ஸ் ஷோ!

செம கிக்காயிருக்கும்! இதற்கு முன் மியூசிக் சேனலில் பலமுறை பார்த்த ஞாபகம்... ஜொள்ளாய் வழிய கண்ணாடியில் பலமுறை பார்த்துக்கொண்டான். அழகுதான்டா ஆதி! பாடகி எசரோவின் படத்தை முகத்தருகில் வைத்து பார்க்க...செம ஜோடிதான்.

செல்ஃபோன் சிணுங்க...

“யாருடா சிவபூஜையில்?”

“லேன்ட்லைன் நம்பரிலிருந்து கால்”

இந்த நம்பர் யாருக்கும் தெரியாதே!

எடுத்து “ஹலோ”

“டேய் நான் நாணா”

“ஐயோ! பாஸ்... என்ன லேன்ட் லைனிலிருந்து கூப்பிடறீங்க?”

“அவசரம். நீ சனிக்கிழமை மாலை நான் கூப்பிட்டா எடுக்க மாட்டேனு எதிர் டாஸ்மாக்கிலிருந்து பேசறேன்”

“இப்ப மட்டும் பேசுவேனா?” ஃபோனை கட் செய்தான்,

மறுபடி கால்

“ஏன் பாஸ் நான் தான் ஃபோனைக்கட் பண்றேனே? சொரணை வேணாம்? உப்பு போட்டுத்தானே சாப்பிடறீங்க?”

“ஆமாம். கவர்மென்ட் உப்பு. எங்கேயிருக்கே?”

“உம் ஆகாசத்தில் பறந்துக்கிட்டிருக்கேன் டுபுக்கு! இப்ப நான் ஹாலிவுட் பாடகி எசரோவின் ரியாலிடி டான்ஸ் ஷோ வுக்கு போயிட்டிருக்கேன்! லல..லால்லா! ஜாலி மூடிலிருக்கேன்!”!

“நினைச்சேன். நியூஸ் கேட்கலையா?”

“ஏய்யா முதலிரவிலே கூட நியூஸ் தான் கேப்பியா?”

“முட்டாள். எசரோ செத்துட்டாடா! கொலை பண்ணிட்டாங்க”

“என்னது?” ஆடிப்போனான்...

“ஆமான்டா ஓட்டல் ரெட்க்ராஸுக்கு வா. நான் அங்கேதானிருக்கேன்” நாணா ஆர்டர் போட...

“ஸார் நான் இந்த ஷோவுக்காக 6000ரூபாய்க்கு கோட், ஷூட் எல்லாம் எடுத்தேன்” அழுதான்...

“க்விக். இங்கே வந்து அழு”

ஆட்டம் போடற எசரோவை பாக்கலாம்னு  பாத்தா ஆட்டம் க்ளோஸான எசரோவை பாக்கணும்னு விதி”

“வாடா முட்டாள் பயலே...”

உடனே, ஆதி தன் டூ வீலரில் பறந்தான்.

ரெட்க்ராஸ் ஓட்டலைச்சுற்றி ஒரே கூட்டம்... “தள்ளு தள்ளு” விலக்கிக்கொண்டு ஓடினான் ஆதி.

நாணா “சின்ன வயசு ! பாத்தியாடா”  என்று ஒப்பாரி வைக்க...

“ஷட்டப்! உன் பொண்டாட்டியா செத்துட்டா?”

“அப்படின்னா கூட தேவலையே! இவ அப்படியே நம்ம கலீக் ஸ்டெல்லா ஜாடை”

“ஓ! வீட்டிலே சொல்லி வாயிலே சூடு வைக்கச்சொல்றேன். எங்கே எசரோ?”

“பிணம்னு  கேளு. ரூம் நம்பர் 606”

லிஃப்டில் போக 

ரூம் நம்பர் 606

கதவைத் தட்டியதும் கான்ஸ்டபிள் திறந்து “வாங்க ஆதி ஸார்” என்றான்

உள்ளே போன ஆதி எசரோ பாடியைப்பாத்து கண் கலங்கி “மூடுங்க” என்றான்.

“யார் எசரோ கூட வந்தது?”

“யாருமில்லை. தனியா வந்திருக்கா”

“ஷோ  ஆர்கனைசர் யாரு?”

“இட்ஸ் மீ” என்றான் வெடவெடனு ஒரு இளைஞன்

“உங்க பேரு?”

“திருஞானம்”

பக்கென்று சிரித்தான் ஆதி.

“எசரோ எப்ப வந்தாங்க?”

“மதியம் ஒரு மணிக்கு”

“எப்ப செத்தாங்க?”

“தெரியலை... ஆனா பாடியை 5மணிக்குத்தான் பார்த்தோம். மேக்கப்உமன் பியா தான் முதலில் டெட்பாடியை பார்த்தாள். இதோ பியா”

பயந்தபடி வந்தவளை பார்க்க “நீ பாக்கும்போது கொஞ்சமாவது  உயிரிருந்ததா ? ஏதாவது சொன்னாங்களா?” ஆதி கேட்க,

“இல்லை ஸார் செத்திருந்தாங்க. லேசா நாற்றம் வேற! அலறியடிச்சு திருஞானம் ஸாரிடம் சொன்னேன்” 

“சரி. யார் யார், அவங்களை பார்த்தது?”

“பிஸினஸ் மேன் தங்கராஜ், நான்”

“குட்”

“தங்கராஜ் இருக்காரா?”

“யெஸ் ஸார்” என்ற தங்கராஜூக்கு வயது அறுபதிருக்கும்

“நீயெல்லாம்  ஏன்யா?” ஆதி கடுப்பாய் கேட்க

“திஸ் ஈஸ் த லிமிட். நான் எங்க கம்பெனி விளம்பர மாடல் விஷயமாய் பேச வந்தேன்” என்றார் தங்கராஜ்.

“ஓகே” என்ற ஆதி “கேமராவை ஓட விடுங்க”

“ஸார் கேமரா ஆஃப் ஆயிருக்கு”

“இன்ட்ரஸடிங்” என்ற ஆதி, “யார் ஆஃப் செய்தது?”

“தெரியலை”

“ஓகே”. என்ற ஆதி எசரோவின் பெட்டை தூக்கிப்பார்த்தான்

“நான் மார்க் பண்ற இடத்தை கிழித்து லேபுக்கு அனுப்பு” என்றான்.

கீழே இறங்கிய ஆதி மறுபடி மேலே வந்து” திருஞானம் எசரோவை வேறு யாராவது பாத்தாங்களா?” என்று கேட்க

“இல்லையே”

“கட்டாயம் ஒருத்தர் பாத்து பேசியிருக்கணும்.”

“எனக்கு தெரிஞ்சு யாருமில்லை”

“அப்படியா? இது யாரோட க்ளவுஸ்? பெட்டுக்கு கீழே கிடந்தது”

“ஸார் ரூம் சர்வீஸ் நாராயணன்.”

“அவர் பாத்திருக்கணுமே”

“ஆமாம் ! ஸார் சொல்ல மறந்துட்டேன்”

“மறந்துட்டீங்களா? மறைச்சிட்டீங்களா?”

“நான் ஏன் ஸார் மறைக்கணும்?” கோபமாய் கேட்க

“அதானே! ரூம் சர்வீஸ் நாராயணன் எங்கே?”

“அவர் டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டாரு”

“எப்ப?”

“2 மணிக்கு”

“சரி அவர் எப்படி?”

“நல்ல பையன். பி.ஈ. மெக் படிச்சவன். ஏகப்பட்ட நாலெட்ஜ்.. ஏழை பையன். வேலை கிடைக்கலை”

“கொஞ்சம் வித்யாசமா இருப்பானா?”

“ஆமாம் ஸார். விரக்தியாய் இருப்பான். அப்செட்”

“அவன் அட்ரஸ்?”

“இந்தாங்க” என்று நீட்டிய திருஞானத்தின் கை நடுங்கியது

காலையில் நாணாவிறகு ஃபோன் செய்தான் ஆதி.

“சொல்லுடா. ராத்திரி நல்லா தண்ணியடிசிட்டு கேஸைப்பத்தி கவலப்படாத தூங்கினியா?”

“ஆமாம்”

“சம்பளம் வாங்கறில்லே …வேலை செய்யணும்”

“விஷயம் தெரியாதா? பிஸினஸ் மேன் தங்கராஜை அரெஸ்ட் பண்ணிட்டேன்”.

“அவர் தான் கொலையாளியா?”

“இல்லை கொலை செஞ்சவன் நாராயணன்”

“என்ன உளறுறே?”

“பிஸினஸ் மேன் தங்கராஜின் மகன் மாறன் அமெரிக்காவில் வேலை. எசரோவோட இல்லீகல் காண்டாக்ட். எசரோ மாறனை ப்ளாக்மெயில் பண்ணி பணம் கறக்க, கடைசியா இங்கே வந்து எல்லா சொத்தையும் தன் வசம் கொண்டுவர மிரட்ட, பிஸினஸ் மேன் தங்கராஜ் கடுப்பாகி எசரோவை தூக்க ப்ளான் போட்டு நாராயணனை கையில் போட்டுக்கிட்டு எசரோவை முடிச்சிட்டார். கருவி ரூம் சர்வீஸ் நாராயணன் . அவன் கேமராவை ஆஃப் பண்ணி அழகா தங்கராஜ் அவர் கெமிகல் கம்பெனியிலிருந்து தந்த விஷ ஊசியை மூன்று டோஸ் ஏத்திட்டான். எசரோ தடுத்தபோது வாயைப்பொத்தி படுக்க வச்சு ஊசியை போட்டிருக்கான். மெத்தையோட கவரை கிழிச்ச துணியோட லேப் ரிபோர்ட் வந்திரிச்சு.”

“குட்... ரூம் சர்வீஸ் நாராயணன் ஏன் கொலை செய்யணும்? மோடிவ் இல்லையே!”

“நீங்க டியூப் லைட்டா? ரூம் சர்வீஸ் நாராயணன் பிஈ மெகானிகல்.எட்டு வருஷமா வேலை இல்லை. இப்ப இந்தக்கொலையை செஞ்சா அமெரிக்காவில் தங்கராஜ் கம்பெனியில் க்ரூப் ஹெட் வேலைனு டீல்” . ஆதி சொல்ல...

“எமன்டா நீ! உன்னை….! ..வாழ்க்கையில் முன்னேறி நாசமாப்போ!!” என்று நாணா பாராட்ட...

“என்ன புண்ணியம் வேலை செய்யறது நான். பேரு உனக்கு” என்று முனக...

“அதுக்கெல்லாம் மச்சம் வேணும்டா!” என்றான் நாணா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com