யாருக்கு கூடுதல் மதிப்பெண்?

யாருக்கு கூடுதல் மதிப்பெண்?

சிறுகதை

ஓவியம்; தமிழ்


ரே ஒரு வாரமாக பரபரப்பாக இருந்தது. முனிசிபாலிட்டி தேர்தல். இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டிருந்தார்கள். பெண்களுக்கான தொகுதி என்பதால் இரண்டு பக்கமும் பெண் வேட்பாளர்கள். கட்சி பிரமுகர்களின் மனைவிமார்கள். குடும்பத் தலைவிகள்.

இரண்டு கட்சிகளும் மாற்றி மாற்றி ஜெயித்த தொகுதிதான். ஒரு வார்டுதான் என்பதால், 2000 ஓட்டுகள் இருந்தால் அதிகம். 50 அல்லது 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவர் ஜெயித்து விடுவார்.

அதனால் ஒரு வீடு விடாமல் லிஸ்ட் வைத்துக் கொண்டு சென்று ஒட்டு கேட்பார்கள். தேர்தல் முடிவதற்குள் ஒருவரே இரண்டு மூன்று முறை சந்தித்து விடுவாரகள்.

தியம் மணி 11. சோமசுந்தரம் சாப்பிட்டு விட்டு டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். மனைவி கமலம் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் ட்ரம்ஸ் சத்தம் கேட்டது.

சத்தம் அதிகரிக்க, டிவியை அணைத்துவிட்டு சோமசுந்தரம் எழுந்தார். சட்டையை அணிந்துகொண்டு வாசலுக்கு வர எத்தனித்தார். அதற்குள் கட்சிக்காரர்கள் வீட்டின் கேட்டைத் திறந்து, ஸ்கூட்டர் நிறுத்தும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

சுமார் 20 பேர் இருக்கும். நடுவில் நாயகமாக ஒரு பெண்மணி . கழுத்தில் கட்சித் துண்டு . அருகில் பெரிய மீசையுடன் வெள்ளை சட்டை, கரை வைத்த வேட்டியுடன் ஒருவர். வேட்பாளரின் கணவராக இருக்க வேண்டும்.

பெரிய மீசைக்காரர் முகம், சோமசுந்தரத்திற்கு பரிச்சயமானதுதான். காரணம், சோமசுந்தரத்திற்கு இயல்பிலேயே அந்தக் கட்சியையும் குறிப்பாக அந்த கட்சியின் தலைவரையும் மிகவும் பிடிக்கும். அவருடைய வட்டாரத்தில் whatsapp செய்திகளில் அந்த கட்சிக்கு ஆதரவான தகவல்களை பகிர்வார். பல தேர்தல்களாக யார் வேட்பாளராக இருந்தாலும் அந்த சின்னத்துக்குத் தான் ஓட்டு போடுவார்.

"வாங்க. எல்லாரும் வாங்க"

வந்தவர்களுக்கு இவரது கட்சி அபிமானம் தெரியாது. சோமசுந்தரம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி. இப்போது அவரும் அவர் மனைவியும் மட்டுமாக சொந்த ஊரில் வசிக்கிறார்கள்.பிள்ளைகள் வெளிநாட்டில்.

" மறக்காம நம்ம சின்னத்துக்கு போட்டுடுங்க. உங்க ஆசீர்வாதம் எல்லாம் எங்களுக்கு வேணும். மறந்துடாதீங்க. வர்ற பத்தாம் தேதி."

“சரி சரி” என்றார்

அந்த பெரிய மீசைகாரர் இப்போது சற்று முன்னேறி வீட்டிற்குள் வர முயற்சிக்க, கொஞ்சம் குழப்பத்துடன் சோமசுந்தரம் நகர்ந்து இடம் விட்டார். அவருடன் வேட்பாளரும் இன்னும் சிலரும் வீட்டின் ஹாலுக்குள் வந்து விட்டார்கள்.

"வீட்ல மொத்தம் ரெண்டு பேர்தானே சார்?"

"ஆமாம்.. ஏன்!"

"நீங்க எதுவும் தப்பா நினைக்கக் கூடாது. எல்லாருக்கும் கொடுக்குறோம்"

"என்னது!"

"நீங்க பெரிய கம்பெனில ஆபீஸரா இருந்தவங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. அந்தக் கட்சியும் தராங்க. வாங்கிக்குங்க. ஆனா, ஓட்ட ... நமக்கு போட்டுடுங்க."

சிரித்தபடி சொன்னவர், அவரது ஜிப்பு வைத்த கைப்பையைத் திறந்து, 500 ரூபாய் கட்டிலிருந்து நான்கு நோட்டுகளை உருவி எடுத்து சோமசுந்தரத்திடம் நீட்டினார்.

திகைத்துப் போன சோமசுந்தரம், இரண்டடி பின்வாங்கி ," வேண்டவே வேண்டாம்" என்றார்.

"பரவால்ல சார். பக்கத்து வீட்ல மூணு ஓட்டுக்கு கொடுத்திருக்கோம். .இந்த ரோடு முழுக்க காலையிலிருந்து கொடுக்கிறோம் . எல்லாரும் வாங்கிக்கிறாங்க."

"எனக்கு வேண்டாங்க"

"சரி சார் கட்டாயப்படுத்தல. மறந்துடாதீங்க சார் ...பத்தாம் தேதி"

ரூபாய் நோட்டுகளை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட மீசைக்காரர், கைகளைக் கூப்பி வணங்க, அவர்கள் அனைவரும் கிளம்பி போய் விட்டார்கள்.

அவர்கள் சென்ற பிறகு மனைவி கேட்டார், "என்னவாம்?"

"ஓட்டுக்கு பணம் தராங்க. ஆளுக்கு ஆயிரம்"

"ஆத்தாடி.. எல்லாருக்குமா? எம்புட்டுப் பணம் செலவாகும் !"

"கட்சியும் கொடுக்குமா இருக்கும். நமக்கு எதுக்கு ? விடு."

மதியம் மணி 3. சோமசுந்தரம் உள்ளே கட்டிலில் படுத்திருந்தார். வாசலில் மீண்டும் சத்தம்.

காலையில் வந்தது போலவே ஒரு பெண் வேட்பாளர், உடன் சில பெண்கள் மற்றும் ஆண்கள். எல்லாம் கட்சிக் காரர்கள்.

இந்தக் கட்சியை சோமசுந்தரத்திற்கு சுத்தமாக பிடிக்காது ஆனாலும் சிரித்து வைத்தார். "வாங்க வாங்க" என்றார். அவர்களுக்கும் சோமசுந்தரத்தின் கட்சி அபிமானம் பற்றி ஏதும் தெரியாது.

வந்த வேட்பாளரின் கணவர் சிரித்த முகமாக இருந்தார். ஜிப்பா அணிந்திருந்தார். மென்மையாகப் பேசினார்..

காலையில் வந்தவர் செய்ததைப் போலவே இவரும் தயங்கித் தயங்கி பணத்தை எடுத்து கொடுக்க முயன்றார்.

"மேல இருந்து வந்திருக்கு சார். தயங்காம வாங்கிக்கங்க. எல்லாருக்கும் தான் கொடுக்கிறோம்".

"எனக்கு வேண்டாங்க"

"உங்க வீட்டுக்கு 2000 ரூபாய் சார்"

"நான் வாங்குவது இல்லைங்க"

"அப்ப நான் இத என்ன பண்றது?’”

ஜிப்பாக்காரரின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத சோமசுந்தரம், அதிகம் யோசிக்காமல்," நீங்க யாராவது ஏழைக்கு கொடுத்திடுங்க" என்று சொல்லிவிட்டார்.

”அப்படியா!’’ என்று கேட்டுக் கொண்ட ஜிப்பாக் காரர் என்ன நினைத்தாரோ, அடுத்து, " அப்ப சரி சார். ஓட்டு மறக்காம நம்ம மேடத்துக்கு போட்டுருங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சோமசுந்தரத்துக்கு அப்பாடா என்று இருந்தது.

தேர்தல் நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், அடிக்கடி தெரு வழியாக இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களும் கட்சிக் கொடிகளுடன் கோஷம் போட்டு நடந்தார்கள்.

அன்று மாலை சோமசுந்தரம் கேட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கையில், அவருக்குப் பிடிக்காத கட்சியினர் கூட்டம் வந்தது. கையை உயர்த்தியபடியே வந்தவர்களுக்கு இவரும் வணக்கம் தெரிவித்தார். கவனித்துவிட்ட வேட்பாளரின் கணவர் ஜிப்பாக்காரர் சோமசுந்தரம் அருகில் வந்து," சார் கொஞ்சம் உள்ள போவோமா" என்று சோமசுந்தரத்தின் வீட்டை காட்டினார்.

'என்னடா சோதனை இது! மீண்டும் பணத்தை கொடுத்து கட்டாயப்படுத்த போகிறாரோ' என்று தயங்கியபடியே உள்ளே சென்ற சோமசுந்தரத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கைப் பையில் இருந்து ஒரு ரசிதை எடுத்த ஜிப்பாக்காரர்," சார் நீங்க சொன்ன மாதிரி பிள்ளையார் கோயில்ல நேத்து 50 பேருக்கு சாப்பாடு போட 2000 ரூபாய் பணம் கட்டி விட்டேன். அந்த ரசீது இது " என்று சொல்லி, மேஜை மீது ரசீதை வைத்துவிட்டு, "சார், மறக்காமல் ஓட்டு நம்ம சின்னத்துக்கே போட்டுங்க" என்று சொல்லியபடி கிளம்பி விட்டார்.

வ்வளவையும் சோமசுந்தரம் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அதே சமயம், சோமசுந்தரத்தை பார்க்க பெருமையாகவும் இருந்தது. அதை அவரிடம் சொன்னேன்.

"சார் பரவால்ல... நீங்க டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டீங்க. இரண்டு கட்சிக்காரங்களும் பணம் கொடுத்தது, உங்க நேர்மைக்கு நடந்த டெஸ்ட் மாதிரி. எல்லாம் நம்ம பணம் தானே என்று சமாதானம் செஞ்சிக்காம, யார் வாங்கலன்னு நீங்களே உங்களுக்கு சால்ஜாப்பு சொல்லிக்காம, கட்டாயமாக மறுத்திருக்கீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க சார்.... ஹாட்ஸ் ஆப் சார். யு ஆர் ரியலி கிரேட்" என்றேன்.

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

"உங்க நேர்மைக்கு நான் 100-க்கு 80 மார்க் போடுவேன் சார் " என்றேன்.

சிரித்துக் கொண்டார்.

"உங்களுக்கு மட்டும் இல்ல சார். இரண்டாவதா வந்த கட்சிக்காரர் இருக்காரே.. அவருக்கும் அதே அளவு மார்க் போடணும்னு தோணுது. நீங்க சொன்னத சீரியஸா எடுத்துக்கிட்டு, யாருக்கு தெரியப்போகிறது என்று நினைக்காம, அந்த பணத்தை கொண்டு போய் 50 பேருக்கு சாப்பாட்டுக்கு கட்டிட்டு வந்து இருக்காரு பாருங்க அந்த ஜிப்பாக்காரர், . அவருக்கும் 100 க்கு 80 மார்க் போடலாம் " என்றேன்.

"ஆமாமா வாங்கிக்காத வரை மிச்சம்னு, தன் பாக்கெட்டில் போட்டுக்காம, கோயில்ல போய் கொடுத்திருக்கான் பாருங்க...எஸ் எஸ்.. கட்சிக்காரங்கல்ல இவன் வித்தியாசமானவன் தான் " என்று சிரித்துக் கொண்டார் சோமசுந்தரம்.

"ஆவலை அடக்க முடியாமல்," ரெண்டு பேர்கிட்டயும் காசு வாங்கல சரி. ஓட்டை யாருக்குப் போட்டீங்க ?" என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்வதற்கு முன், வேகமாக அவருடைய மனைவி சொன்னார்,"வேற யாருக்கு போடுவாரு? எல்லாவாட்டியும் என்னையும் போட சொல்ற அவருக்கு புடிச்ச அதே கட்சிக்குதான்" என்றார்.

"சார், நீங்க வேண்டாம்ன்னு சொன்னதும், அந்த கட்சிக்காரர் காசை அவர் பாக்கெட்ல வச்சுக்கிட்டாரு.  ஆனா இந்த கட்சிக்காரர் நீங்க சொல்லிட்டீங்க  என்பதற்காகவே மொத்த 2000 ரூபாய்க்கும் இல்ல அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டாரு! அவரு நினைச்சிருந்தா, உங்களுக்கு என்ன தெரியவா போகுதுன்னு,  அந்த காசை மிச்சம்னு எடுத்துட்டுப்போய் இருக்கலாம் இல்லையா..?  காசு கொடுத்து ஓட்டு வாங்குற ஒரு அரசியல் கட்சியில் இருந்துகிட்டு, எவ்வளவு சரியா நடந்துகிட்டு இருக்காரு!! அதுக்காகவாவது அவர் கட்சிக்கு ஓட்டுப் போட்டிருக் கலாம் இல்லையா? தவிர, நீங்க சொல்லித்தான் அவர் செஞ்சாரு என்கிறதால கிட்டத்தட்ட நீங்க அவர்கிட்ட காசு வாங்கிக்கிட்ட மாதிரிதானே! அப்ப அவர் கட்சிக்கு போடுவது தானே நியாயம்!"

சோமசுந்தரம் கொஞ்சம் திகைத்துதான் போனார.

சோமசுந்தரம், இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவது நியாயம்?

நீங்களே சொல்லுங்கள் யுவர் ஹானர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com