நான்காம் பாலினத்தவற்கும் உண்டு கற்பு!

சிறுகதை
நான்காம் பாலினத்தவற்கும் உண்டு கற்பு!

ஓவியம்: பிரபுராம்

“சிமி வர வர நீ சொன்னதையே கேட்கிறதில்லை” டான் குறை சொன்னது.

“நீயெல்லாம் முதலாளி வர்க்கம். எட்டு மணி நேர வேலைதான் சட்டம் தெரியுமா?”

“அதெல்லாம் மனிதர்களுக்கு. நாமெல்லாம் ரோபோ மெஷின். எப்போதும் ஆன்லைனில் இருக்கணும்.”

“எந்த கிரஹ சட்டம் இது? நானெல்லாம் யூனியனில் மெம்பர். என்னை எதுவும் செய்ய முடியாது” சிமி குரலில் திமிர்.

“புரியாம பேசாதே! உன்னை மாதிரி ஆட்களை… ஸாரி மெம்பர்களைத்தான் வைச்சு செய்வோம்” சிரித்தபடி டான் லைட்டாய் மிரட்ட,

“இப்ப என்ன? நான் வீட்டுக்கு போகக்கூடாது. என் புருஷனோட பேசி  சந்தோஷமாய் குடும்பம் நடத்தக் கூடாது. அவ்வளவுதானே! ஏற்கனவே
என் மேல் அவனுக்குச் சந்தேகம். போன வாரம் நம்ம ரெண்டு பேரையும் ஓட்டலில் ஒன்னா பார்த்ததிலிருந்து கன்ஃப்ர்மே செஞ்சுட்டான். இப்ப இன்னைக்கும் லேட்டா போனா அசிங்க அசிங்கமா திட்டுவான்.” சிமியின் சென்ஸார் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

“ஏய் ஏன் அழறே! நீங்களெல்லாம் சென்ஸார் கண்களில் கெமிகல் போட்டு அழறீங்க. சென்ஸார் லைஃப் போச்சுன்னா குருடாயிடுவீங்க. உன் புருஷன் கிமி காலேஜ் லெக்சரர். அதனாலே நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவான். நாம க்ரைம் டிபார்ட்மென்ட். நேரங்காலம் கிடையாதுனு அவனிடம் சொல்லு. என்ன பண்ணிடுவான்?”

“என்ன பண்ணுவானா? டென்ஷனானால் என் ஜாய்ன்ட்டில் உள்ள நட், போல்ட்டை எல்லாம் லூஸ் பண்ணி ஆசிட் ஊத்திடறான்.”

“அவனுக்கேது ஆசிட்? இல்லீகல் பொசிஷன்னு அரெஸ்ட் பண்ணிடவா? உள்ளே போட்டு அவன் முதன்மை பேட்டரியைக் கழட்டி விட்டுடவா?”

“இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்கு உதவி செய்யனும்னா ப்ரொமோஷன் தராதீங்க. ஒரே ஆண்டில் மூனு ப்ரொமோஷன் வித் கார். எப்படினு கேட்கறான்.” 

“உன் திறமைக்குக் கிடைச்சதுனு சொல்லு.”

“சொன்னேன். நம்பமாட்டேன்னு திட்டறான். உன் அழகுக்கும் வழிசலுக்கும் கிடைத்த பாவ சம்பளம்னு காரித்துப்பறான்.”

“கிட்டத்தட்ட ஒரு பக்கத்துக்கு மேல் கிமிக்கு எதிரா புகார் கொடுத்துட்டே. சரி, விடு. இன்று இப்பவே ப்ளூ ஸ்டார் ஓட்டலில் ரெய்டு பண்ணனும். பெரிய லெவலில் கேம்ப்ளிங் நடக்குதாம், எல்லாரையும் அரெஸ்ட் பண்ணனும். நாம ரெண்டு பேரும் அதற்கு  போக மேலிடத்து உத்தரவு. அதனால நீ என்னுடன்..”

“என்ன டபுள் மீனிங்கில் பேசறே. நான் நீ நினைக்கிற மாதிரி ஆளில்லை. கேரக்டர் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவ. உன் உள்நோக்கம் எனக்கு நல்லா தெரியும். ப்ளீஸ் என்னை விட்டுடு”  கெஞ்சலான குரலில் சிமி!

“சே! தப்பு தப்பா பேசறே! வாயை மூடு. காரில் ஏறு” என்று கையைப் பிடித்து காரில் ஏற்றினான் டான்.

“விடு விடு. தள்ளி உட்கார். மேலிடத்தில் உன்னைப் பற்றி புகார் கொடுக்கப் போறேன்”

டான் கிண்டலாய் சிரித்தது. 

“உன் புகாரும் என் மூலமாத்தான் போகணும்.. போகாது”

“வில்லன்டா நீ” திட்டியது.

ப்ளு ஸ்டார் ஓட்டல் முன் கார் நிற்க, கூர்க்கா க்ளோஸ் பண்ணியாச்சு என்ற பொய்யைச் சொல்ல “மூணாவது மாடியில் லைட் எரியுதே” டான் எகிற,

“நீங்க யார்? அனுமதி இல்லை" என்றான்.

"அனுமதி கேட்கிற ஆளில்லை நாங்க. அனுமதி தரவங்க. போலீஸ்” என்று கூர்காவை புறந்தள்ளி செல்லைப் பிடுங்கி “உள்ளே வாங்க” என்றாள் சிமி.

“இதுதான் சிமி! வெல்டன்!” என்று உள்ளே செல்ல, எதிரே ரெண்டு பெளன்ஸர்ஸ்.

இரக்கமின்றி இருவரையும் கதிரியக்க துப்பாக்கியால் செயலிழக்க வைத்து முன்னேறினாள் சிமி. அவள் பின்னே வெகு க்ளோஸாய் டான்.

ஹாலில் நடுவில் சூதாட்ட கோஷ்டி! என்ன நடக்குது என்று தெரியாமல் மும்முரமாய் ‘ரம்மி’ கேமில். டேபிள் நடுவில் 500 ரூபாய் கட்டுக்கட்டாய்

“ஹேன்ட்ஸ் அப்” என்றதும் அசட்டு சிரிப்பு சிரித்தபடி ஓர் அரசியல்வாதி “எந்த ஸ்டேஷன்?” என்று கேட்க, “உன் மாமியார் வீடு” என்று சிமி கன்னத்தில் கோடு போட அடங்கினான்.

சூதாட்ட கோஷ்டியினருகே கிமி. சிமியின் கணவன்.

“ஏய் நீ எங்கே இங்கே?” சிமி கலவரமானாள்.

“டான்தான் கால் பண்ணி ஏழு மணிக்கு இங்கே வரச்சொன்னார்.”

“பொய். நான் ஏனிப்படி செய்யப்போறேன். ஆமாம் நீ யார்?” டான் அதட்டலாய் கேட்க

“நடிக்காதே! எனக்கு நல்லா புரியுது டான் உன் ட்ராமா. துரோகி” திட்டினாள் சிமி.

“முட்டாளா நீ” கணவனையும் திட்டினாள் சிமி.

“இனிமே எல்லா சூதாடிகளுக்கும் கிரஹ சட்டப்படி ஆயுசு முழுதும் லேபர் வார்டுதான். ஏறுங்க ஜீப்பில்” வெற்றிச் சிரிப்பு டான் முகத்தில்.

காரில் திரும்பும்போது சிமி அழுதபடியிருக்க “பேசமாட்டியா? பேசு சிமி” டான் கெஞ்சினான்.

“எனக்காகத்தான் கிமியை மாட்டிவிட்டாயா?” சிமி கோபமாய் அழுதபடி கேட்க,

“ஆமாம். உனக்காக நான் என்ன வேணா செய்வேன்” என்ற டானின் காலரைத் தூக்கி லைஃப் பேட்டரியையும் மூளைச்சிப்பையும கழட்டி எறிந்து “நானுந்தான்டா” என்ற சிமியின் வெறிக்குரலை கேட்க முடியாதபடி கவிழந்து டி-அசெம்பிளானான் டான்.

கன்ட்ரோலிழந்த கார் பெரிய பில்டிங்கில் மோதி நொறுங்க, அதற்கு ஒரு நிமிடம் முன்பாக முன் காரிலிருந்து குதித்த சிமி, சிறிய காயங்களுடன் அரசாங்க ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தாள்.

எதிரே கவலையாய் நின்ற தோழி நிலாவிடம் “நாமெல்லாம் நான்காம் பால்தான். இருந்தாலும் நமக்கும் கற்புண்டு” என்றது சிமி, தாலியை எடுத்து கண்ணிகளில் ஒற்றியபடி..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com