ம்….ம்மா…..!

ம்….ம்மா…..!

ன்று காலையில் இருந்தே எனக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பதட்டச் சட்டை அணிந்து கொண்ட, மாற்றுப் பித்தான்கள் பொருத்திய குழந்தையின் மனநிலை போன்றதொரு குழப்பம். புயல்காற்று ஜன்னலின் திரைச்சீலையின் மேல் மோகம் கொண்டதைப் போல் வன்மையாய் இழுத்தது. 80'களின் மூன்றாந்தர வில்லனின் வக்கிர சிரிப்பினை இடியும் மின்னலும் நினைவூட்டியது. (இப்போதெல்லாம்தான் வில்லன்கள் சிரிப்பதே இல்லையோ..? இந்தக் கேள்விக்கு விடையைப் பிறகு சொல்கிறேன்)

அதிகாலை ஐந்து மணிக்கு தன் பேர்னஸ் கீரிமான சூரியனை வழித்தெடுத்து ஒப்பனைக்குத் தயாரானாள் வானப்பெண்..! அடுப்புத்தட்டின் மேல் எகிறிக் குதித்த குட்டி கரப்பான் பூச்சியொன்று என்னைப் பார்த்துத் திகைப்பாய் நின்று ‘என்னைக் கொன்று விடாதே...’ எனக் கெஞ்சுவதைப்போலப் பார்த்தது. சற்றே இடைவெளி விட்டு, ‘கேஸ் அடுப்பின் இணைப்பிற்கென இருந்த ஓட்டைக்குள் வந்து விடு’ என்று எச்சரிக்கும் தாய்க் கரப்பானின் மீசை அசைவது தெரிந்தது.

குழம்பிற்குக் கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலில் நீந்தி என் பக்கம் ஒரு திருட்டுப் பார்வையை வீசிய குட்டிக் கரப்பானை ‘போ’ என்றேன். புரிந்தாற்போல் வெங்காயத் தோலின் மீது ஏறி விழுந்து ஓட்டைக்குள் சென்று மறைந்தது. சளம்பிக் கொண்டு இருந்த சாதத்தின் நீர்க்குமிழி, விரல்களைப் பதம் பார்க்க மனத்தின் எரிச்சலைப் போல மெலிதான எரிச்சல் விரல்களிலும்..!

ஒழுங்கீனமான மாணவனை விரட்டும் ஆசிரியராய்த் தன் கூட்டில் இருந்த குருவியை வெளியில் தள்ளி, நேர ஒலி எழுப்பி மீண்டும் உள்ளிழுத்துக் கொண்டது சுவர்க் கடிகாரம்.

பாத்ரூமில் நீர் விழும் சப்தம், கூடவே சன்னமான ஹம்மிங் ஒலி.....! ‘நான் நாளைக்குப் போய்த்தான் தீருவேன்’ என்று எதிர்த்துப் பேசாத தரையை உதைத்துச் சொன்ன கார்த்திகா... பெரும் மலையைக் கூடப் புரட்டி விடலாம் போலிருக்கிறது ஆனால் டீன்ஏஜ் பெண்ணின் அம்மாவாக இருப்பது எத்தனை கடினம்..!

போகட்டுமா என்ற பர்மிஷன், போகிறேன் என்ற இன்பர்மேஷன்களாக மாறிவரும் இந்நாளில்... “என்னைக் கேக்காம எம் பொண்ணு செல்போன் பாஸ்வேர்டு கூட மாத்தமாட்டா” என்று 2K கிட்ஸ் மதராகப் பீற்றிக் கொண்டாலும் அவளின் பேட்டர்ன் லாக் தெரியாத மக்காகத்தானே இருக்கிறேன் நான்..!

நீளவாக்கில் ஆப்பிள் துண்டங்கள் டப்பாவை அடைத்துக் கொண்டன. லன்ச் பாக்ஸ் ரெடி, ‘அவதான் பர்கர், பீஸான்னு போறாளே... நீயேன் என்னை தினமும் போஸ்மார்ட்டம் செய்யிறே..?’ என்று சாயங்காலம் இலேசாக ஓரம் கறுத்து இள ரத்தச் சிவப்பு நிறம் பூசிக்கொண்ட, பாவமாய் விழிக்கும் இந்த ஆப்பிளின் ஒவ்வொரு துண்டுகளும்.

“அம்மா நாளைக்கு காலேஜ்லே பிரஷ்ஷர்ஸ் டே. இந்த டிரஸ்தான் போடப்போறேன், அயர்ன் பண்ணு” என்று அவள் கொண்டு வந்து காட்டிய உடையைப் பார்த்ததும் சிரமப்பட்டு முகச்சுழிப்பினைக் கட்டுப்படுத்தி, “வேற ஏதாவது நல்லதா போடக் கூடாதா..?” என்றேன்.

இடைதொடும் கூந்தல் தோள்தொடும் நிலைக்கு மாறியிருந்தது சில நாட்களாக. அதைக் கோதியபடியே, “ஏன்..? இந்த டிரஸ்க்கு என்ன..? நல்லாத்தானே இருக்கு....!”

“இல்லடா.… ஸ்லீவ் இல்லை, நெக் கூட லோவா இருக்கு. அப்பறம்...” என்று மகளின் முறைப்பைப் பார்த்து.… எச்சில் விழுங்கினேன். “அப்பா பார்த்தா திட்டுவாங்க. இது முட்டிக்கு மேல வேற இருக்கு.”

“அதான் பூட்ஸ் போடறேனே… காலேஜ்ல வந்து பாரு… நான் தேவலை. இதிலெல்லாம் கேள்வி கேட்காதம்மா.! இது அந்தக் காலம் இல்லை... பாவாடை தாவணி கட்டிக்கிட்டு, எண்ணெய் வச்சி படிய வாரிக்கிட்டு போக?!....” மகளின் வளர்ச்சியில் பூரித்த காலம் போய் சற்றே பயம் பீடித்துக் கொள்ள.… அவளோ அழுந்த சாயத்தைப் பூசினாள் தன் அதரங்களில்...!

போனவார பட்டிமன்றத்தில் அமுதா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி ஒருத்தி, “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதன்முதலில் கல்லூரியில் சேர அவர் பெண் என்பதே தடையாக இருந்தது. தனி வாகனம், பள்ளி மாணவர்கள் சென்றதும் தான் செல்ல வேண்டும். அழுத்தமான காட்டன் சேலை, அலங்காரமில்லா முகம், எண்ணெய் வைத்துப் படிய வாரிய தலை… அவர்களெல்லாம் சாதிக்கவில்லையா..?” அழுத்தமான அந்தப் பெண்ணின் குரல் தேவையேயில்லாமல் காதில் வந்து மோதியது எனக்கு!

‘அம்மா’ என்று கழுத்தைக் கட்டிக் கொஞ்சியவளின் கரங்கள், சமீபகாலமாய் மொபைல் போனின் தொடுதிரையினைக் கொஞ்சி வருகிறது.

“அம்மா, இந்த வீடீயோ பாரேன்..… இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ல் எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டே இரு.… என்று ஒரு புதிய படத்தின் கதாநாயகனைத் திட்டும் அம்மாவின் வீடியோ.… அப்படியே நீதாம்மா இது...?!” நமுட்டுச் சிரிப்புடன் கிண்டல் அடித்தாலும், அன்னையின் அன்பும் அக்கறையும் கூட கேலிக்கூத்தாகிப் போகிறதே என்று உறுத்தலுடன் நானும் சிரித்து வைத்தேன்.

அன்றைக்கு ஸ்கூலில்.… உருட்டிய கவளங்களை விழுங்கிய பள்ளிச் சீருடைப் பெண் இல்லை இவள், கான்பிரன்ஸ் காலில் அரட்டையுடன் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் தட்டைக் காலி செய்யும் இயந்திரங்களின் மாணவி.

‘பால்கனிச் சுவருக்கு கூட கேட்காத ரகசியக் குரலில் இத்தனை நேரம் யார்கூடப் பேசறா..?’ என்று நேரடிக் கேள்விக்கு ஏவுகணைப் பதில்களை சுமக்க முடியாமல், இதுதான் இப்படித்தான் என்று எதையாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்து கேள்விகளைத் தள்ளிப் போடும் மனநிலையில்தானே நீங்களும் இருக்கிறீர்கள்..?

“அட, என்ன கீர்த்தனா... இதெல்லாம் இப்போ வீட்டுக்கு வீடு நடக்கிறதுதானே..! நம்ம பிள்ளைகளை நாமதானே முதல்ல நம்பணும். ஆமா.… இந்தக் காலப் பிள்ளைங்க அப்படியிப்படித்தான் இருப்பாங்க....! அதுங்களை அதுங்க போக்குலதான் விட்டுப் பிடிக்கணும்.” தோழியின் தோள் தட்டிய ஆறுதல் வார்த்தைகள்.

“இப்போ என்னாச்சு..? நாளைக்கு காலேஜ் பார்ட்டின்னு சொல்றேன். என் பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க. என்னை மட்டும் வேண்டான்னு சொன்னா என்னம்மா அர்த்தம்? நான் போவேன்.” இதோ கிளம்பிக் கொண்டு இருக்கிறாள். பிடிக்காத ஆடை, பிடிக்காத இடம், பிடிக்காத செய்கைகள். பெண்ணோ பிள்ளையோ இப்போதெல்லாம் பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவதைத்தானே தனக்களித்துக் கொள்ளும் சுதந்திரமாக நினைக்கிறார்கள்..? மனதில் குமைச்சலோடு அவளைத் தடுக்கவும் முடியாமல், அவள் கிளம்பியதும்....

‘பிள்ளையை அடக்கத் தெரியலை.… அவ இஷ்டத்துக்கு ஆடறா’ என்ற வீட்டுப் பெரியவர்களின் குத்தல் பார்வைகளையும், ‘செல்லம் கொடுத்தே கெடுக்கிறே எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்று விட்டேற்றியாய்க் கடமையைத் தள்ளி வைக்கும் கணவரின் வார்த்தைகளையும் தாண்டி வலிக்கிறது. தன்னைப் பெற்றவர்களுக்கும், தான் பெற்ற பிள்ளைகளுக்கும் பயப்படும் ஒரே தலைமுறை நாமாக இருப்பதுதான்.

டைனிங்கில் மகள் விண்ட இட்லியை நெய் மிளகாய்ப் பொடியில் தோய்த்தபடியே.… “இன்னும் 30 மினிட்ஸ்ல பஸ்ஸ்டாப்பில்…” என்று யாரிடமோ உறுதியளித்தபடியே.... இதோ கிளம்பப் போகிறாள். நான் சொன்ன எதையும் கேட்காமல், பெற்றவள் கையறு நிலையில் நிற்கும் வலியை உணர்வது புரியாமல்?!

“பை.…” காற்றில் மிதந்த வார்த்தைகள் காதை நனைக்க எத்தனை நேரம் அமர்ந்திருந்தேனோ..? நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும். கதவு திறக்கும் சப்தம். கார்த்திகா புத்தகப் பையை வைத்துவிட்டு ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கண்களில் கண்ணீர்....!

“என்னடா என்னாச்சு..? ஏன் அழுவுறே..?” மனதிற்குள் கலவரத் துப்பாக்கிகள் ரத்தம் சிதற வைக்காமல் துப்பிய துண்டுகளின் அதிர்வுகள்.

“சாரிம்மா. நான்..… போகலை.…” தேம்பிக் கொண்டே சொன்னாள்.

“ஏன்..?!..”

“எதுவும் கேட்காதே..?!” கன்னத்தில் அவளின் எச்சில் ஈரம். “டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று போய்விட்டாள். அத்தனை சண்டைபோட்டு கிளம்பி போனவள் ஏன் திடீரென்று திரும்பினாள், என்ன நடந்திருக்கும் என்று எனக்குள் உதைப்பு. பாருங்களேன். நம் சொல்லை மீறினாலும் சரி, அப்படியே கேட்டாலும் சரி... கல்வித்திறனைச் சோதிக்கும் கேள்வித்தாளைப் போலத்தான் பதிலுக்கு காத்திருக்கிறோம் எப்போதும்....!

செல்போன் திரையில் ஒரு குறுஞ்செய்தி… “என்ன கார்த்தி அத்தனை சொல்லியும் வரமாட்டேன்னு சொல்றே..?! அதுவும் பஸ்ஸாண்டுக்கு வந்துட்டு திரும்பிட்டே, யாருக்குத் தெரியப் போகுது… காலேஜ்லே இருக்கேன்னு நினைப்பாங்க. சாயந்திரத்திற்குள்ளே வந்திடலாமே. அம்மா என்ன அங்கெல்லாம் வந்து பார்க்கப் போறாங்களா..? நல்லாத்தானே இருந்தே.…” முதல் செய்தி முடிந்து ஸ்கீரினில் டைப்பிங் என்ற வார்த்தைகளுக்குப் பக்கத்தில் புள்ளிகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

‘அய்யோ என்ன இது..? அப்போ இவ காலேஜ் போகலையா..? கடவுளே...’ அடுத்த செய்தி வரும் வரையில் காத்திருந்தேன். “போனவாரமும் இப்படித்தான்… அம்மா மேல பாசம் இருக்க வேண்டியதுதான். உன்னைக் கேட்டுத்தானே புக் பண்ணோம்…” மீண்டும்… புள்ளிகள் ஏறி இறங்கின..!

ஏதோ ஒரு காரணத்திற்காக இதை மகள் மறுத்திருக்கிறாள். ஏன்..? எதற்கு என்று அவளைக் கேட்கலாமா என்ற எண்ணத்தை உடனடியாக அழித்தேன் நான். அவளே சொல்லுவாள். அதுவரையில் காத்திருக்க வேண்டும்.

கைபேசியின் வெளிச்சத்தை இருட்டாக்கினேன். “கார்த்திகா, யாரோ மெசேஜ் பண்றாங்க.”

“அத்தனை முக்கியம் இல்லைம்மா..?! வைச்சிடுங்க, அப்பறம் பேசிக்கலாம். பசிக்குது... சாப்பாடு போட்டு ஊட்டி விடறீங்களா?” என்று அவள் கேட்க, எல்லாவற்றையும் மறந்து அடுக்களைக்குள் சென்றேன் நான்.

டிவியில்.....! ’செய்திகள் ஆயிரம்’ பகுதியில்… “புதுச்சேரியில் வினோபா நகரின் எல்லைப் பகுதியில் இறைச்சிக்காக விலங்குகள் வெட்டும் இடம் உள்ளது. அரசின் அனுமதி பெறாத இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் ஆடு, மாடுகள் வெட்டுவது வழக்கம். கடந்த 2 நாட்களாக கன்று ஒன்று வந்து ம்மா… ம்மா… என்று கத்தி அழுது கொண்டே இருந்தது. இணையத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நமது நிருபர் விசாரித்த போது, இரண்டு தினங்களுக்கு முன்பு இறைச்சிக்காக வெட்டப்பட்ட அதன் தாயை நினைத்து அந்த கன்றுக்குட்டி அடிக்கடி இங்கு வந்து அழுகிறது என்று கூறினார்கள்.” மேற்கொண்டு செய்தி வாசிப்பாளரின் குரல் வழிந்து கொண்டிருக்க,

அந்தக் கன்றின் வீடியோவும் காட்டப்பட்டது. கார்த்திகா, “ம்… மா... சாரிம்மா” என்று என்னை இடையோடு அணைத்துக் கொண்டாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com