பயணம்…

பயணம்…
Published on

ருக்மணிப் பாட்டி காலை முதல் அமைதியாகத் திருமலைத் தாத்தாவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் ஒரு தெளிவு. சாந்தம் குடிகொண்டிருந்தது.

நெற்றியில் பூசிய திருதீறு. கழுத்து வரை போர்த்திய கோடி வேட்டி. கண்களை மூடியபடித் தூங்குவதைப் போலக் கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் திருமலைத் தாத்தாவுக்கு வயது எண்பத்தி ஏழு! ருக்மணியின் கையால் ஒரு டம்ளர் பால் வாங்கிக் குடித்துப் படுத்தவர், காலையில் எழுந்திருக்கவே இல்லை.

பெரிய கிரிமினல் லாயர் ஶ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதனிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பல வருடங்கள் வேலை செய்ததில் திருமலைக்கு சட்டப்புத்தகங்களின் பக்கங்கள் அத்தனையும் அத்துப்படி. வாஞ்சியின் வாதப் பிரதிவாதங்களின் கூர்மைக்கு, திருமலை தரும் சரியான தரவுகளின் பங்கு கணிசமானது. ‘திருமலை சொன்னா எல்லாம் சரியாகத்தான் இருக்கும்; திரும்பவும் அதை சரிபார்க்கத் தேவையில்லை’ என்ற நம்பிக்கை வாஞ்சிக்கு. வழக்கு வியாஜ்ஜியங்களுடன் வருபவர்கள், திருமலையைப் பார்த்த பிறகே, அவரது அனுமதியுடன் வாஞ்சியைப் பார்த்த சம்பவங்களும் உண்டு!

வக்கீலிடம் வேலை என்றாலும், நேர்மையும், உண்மையும் நிறைந்தவர் திருமலை. சட்டங்களின் நுணுக்கமான சறுக்கல்களையும், ஓட்டைகளையும் தனது கட்சிக்காரருக்கு சாதகமாகத் திருப்பிவிடுவதில் வல்லவர். தொழில் தர்மம் மீறாத நாணயஸ்தர். பாரதியின் நெஞ்சுரத்தையும், நேர்மைத் திறத்தையும் தன்னுள்ளே கொண்டவர். கோபத்திலும் பாரதிக்கு சளைத்தவர் அல்ல திருமலை!

தனது இருபத்தி ஐந்தாவது வயதில், பதினைந்து வயதே ஆன பச்சை மண் ருக்மணியைத் திருமணம் செய்துகொண்டு, தனிக்குடித்தனம் வந்தவர்தான் திருமலை - எப்போதும் வழக்கு, கோர்ட், சட்டப் புத்தகம்தான். ‘கோபக்காரன்’ என்ற பெயர் இருந்தாலும், உள்ளத்தில் மென்மையானவர். வாழ்க்கை குறித்த சில உறுதியான அபிப்ராயங்கள் கொண்டவர். ருக்மணி தானே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் அதில் ஒன்று!

“இன்னிக்கு வெள்ளிக்கிழமை. சாயங்காலம் கோவிலுக்குப் போகலாமா?” ருக்மணியின் குரலில் தயக்கமிருந்தது.

திருமலை ஒரு முறை முறைத்தார். “அதுக்கென்ன? உனக்குத் தனியா கோவிலுக்குப் போகத் தெரியாதா? போய்ட்டு வா. இதுக்கெல்லாம் என்னை எதிர்பார்க்காதே”. குரலின் கடுமை பழக ருக்மணிக்கு சில காலம் ஆயிற்று.

“இன்னிக்கு ஒங்க ஜென்ம நட்சத்திரம். ஒரு பாயசம் வெச்சு சமைக்கிறேன். சாப்பிட்டுப் போங்கோ. சாயரட்ச, டவுன் வரைக்கும் போய், குத்து விளக்கு ஒண்ணு வாங்கிண்டு, அப்டியே காமாட்சி கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா?” மிகவும் சிரமப்பட்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள் ருக்மணி.

திருமலை தன் எதிரில் அழகான பொம்மை போல் நிற்கும் ருக்மணியைப் பார்த்தார். புன்னகையுடன்,”பெண் என்றால் வீட்டிலேயே அடங்கி, பயந்து இருக்கணும்னு அர்த்தம் இல்லே. உலகத்தை ஒரு நேரான பார்வைகொண்டு பார்க்கணும். தப்பைத் ‘தப்பு’ என்று சொல்கின்ற மன உறுதி வேண்டும். உரிமையை, உறுதியோட பற்றிக்கொள்ளும் திறமை வேண்டும். பாரதியின் புதுமைப் பெண்ணா இருக்கணும். ம்… இன்னிக்கு மத்யானம் வரேன், டவுனுக்குப் போகலாம்” என்றார். ‘சட்’டென முகம் மலர்ந்தாள் ருக்மணி! குஞ்சலம் வைத்து நீளமாகப் பின்னி, பூ வைத்துக்கொண்டாள். நெற்றியில் குங்குமம், கண்ணுக்கு மை, புதுப்புடவை - திருமலையுடன் தலை நிமிர்ந்து டவுனுக்குச் சென்று வந்தாள்! திருமலை கொடுத்த தைரியம், சுதந்திரம் எல்லாவற்றையும் அளவோடு ஆனால் அழுத்தமாக மனதில் ஏற்றிக்கொண்டாள்.

“பாட்டி” - குரல் கேட்டுத் தன் நினைவுக்கு வந்தாள் ருக்மணி.

ரமணன்தான், அடுத்த வீட்டுப் பையன். குழந்தை குட்டியில்லாத திருமலை ருக்மணி தம்பதியருக்கு எல்லாமும் ரமணன்தான். கடைக்குப் போவது, பேப்பர் வாங்குவது, காய்கறி, மளிகை… கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்.

“அம்மா காப்பி போட்டு வெச்சிருக்கா. வர்ரவாளுக்குக் கொடுக்கச் சொன்னா. நான் பார்த்துக்கறேன்” ருக்மணி அனிச்சையாகத் தலையசைத்தாள்.

அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள், நண்பர்கள் எனச் சிலர் வந்து போயினர். ‘வாரிசு இல்லாத திருமலைக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்போவது யாரு?  பலருக்கு மனதில் எழுந்த  இந்தக் கேள்விக்கு  ருகமணியிடம் பதில் இருந்தது. ஆனால் எதுவும் பேசாமல்  அமைதி காத்தாள். 

தனியாக ருக்மணி கடந்த இருபது வருடங்களாகத் திருமலையைப் பார்த்துக்கொண்டதுபோல யாரால் பார்த்துக்கொள்ள முடியும்?’ கேள்விகள் அவர்களுக்கு முன் காற்றில் சுற்றி வந்தன. ருக்மணியின் முகத்தில் எந்தவித சோகமும் இல்லை. ‘ருக்கு, வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளக் கற்றுகொண்டவர். வாஞ்சிநாதய்யருக்கு திடீரென வந்த இருதய நோய், அவரைப் படுக்கையில் போட, திருமலைக்கும் வாழ்வில் சரிவு ஏற்பட்டது. ஆனாலும் சொந்த வீடு, கொஞ்சம் நிலம் இருந்ததாலும், ருக்குவின் திட்டமிட்ட குடும்ப நிர்வாகத்தாலும், வாழ்க்கைச் சக்கரம் ஓடியது. ருக்மணியின் சாமர்த்தியம், அவள் காட்டிய பரிவு, எதிர்காலத் திட்டமிடல் எல்லாம் திருமலைக்கு வியப்பாக இருந்தது.

ஒரு பனிக்கால விடியற்காலை, வாஞ்சிநாதன் உயிரைவிட, திருமலை ஆடிப்போனார். எவ்வளவுதான் உறுதியான ஆண்பிள்ளையானாலும், எதிர்பாராத பின்னடைவுகளில், கலங்கிப் போவது சாத்தியமே. திருமலை கலங்கித்தான் போனார். அப்போது, ருக்மணிதான் தைரியம் கொடுத்து, டவுனில் வேறு வேலைக்குச் செல்லவும், எதையும் எதிர்கொள்ளும் மனதையும் வளர்த்தவள். திருமலையின் முன்கோபம் அவருக்கெதிராக இருந்த போதிலும், ருக்குவின் அமைதியும், அரவணைப்பும், சரியான அணுகுமுறையும் அவரை நல்ல நிலையில் நிறுத்தின.

நிலத்திலிருந்து வருகின்ற நெல், பணம், இவரது சிறிய வருமானம் எல்லாம் இருவருக்குப் போதுமானதாக இருந்தது. ஐம்பத்தி ஐந்து வயது வரை, திருமலை தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் இருந்தார். சில சமயங்களில், ருக்மணிக்குத் திருமலை, தன்னுடைய தினசரி கடமைகளை மறந்துவிடுவது போலத் தோன்றியது. தனக்குள் பேசிக்கொள்வதும், கூரையை வெறித்துப் பார்த்து அமர்ந்திருப்பதுவும் வித்தியாசமாக இருந்தது. முதுமை என்றுதான் முதலில் நினைத்தாள்.

‘ருக்கு இன்னிக்கு காலைல என்ன டிபன் செய்தே?’
‘இன்னிக்கு என்ன கிழமை?’
‘வாஞ்சி கோர்ட்டுக்குக் கிளம்பியிருப்பாரா?’
காலத்துடன் தொடர்பில்லாத கேள்விகள், மறதிகள்.

தினமும் வருகின்ற தபால்காரரை, ‘இவர் யார்?’ என்றபோதும், கடைக்குச் சென்றவர், வீடு திரும்ப வழி தெரியாமல் கோவில் வாசலில் நின்றிருந்தவரை, ரமணன் பார்த்து அழைத்து வந்தபோதும் ருக்மணி சிறிது பயந்துதான் போனாள். குடும்ப மருத்துவர் அனந்தராமன், ‘இது ஒருவகை மறதி நோய், டிமென்ஷியா. கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

ருக்மணிக்கு திருமலை ஒரு குழந்தை போலானார்.

காலையில் எழுந்தவுடன், பல் கூட தேய்க்காமல், சாப்பிட அமர்வார். குளிக்க சிரமப்படுவார். சில நாட்களில் குளித்து முடித்து உடை மாற்றியபின், மீண்டும் குளிக்க பாத்ரூம் செல்வார். உடை மாற்றிக்கொள்ள அடம் பிடிப்பார். தெருவில் செல்லும் முன்பின் தெரியாதவர்களிடம் சண்டைக்குச் செல்வார். நாராசமான கெட்ட வார்த்தைகள், சரளமாக வந்து விழும். ரமணனை சில சமயங்களில் ‘இவன் யார்?’ என்பதுபோலப் பார்ப்பார். ‘ருக்கு, காலையிலிருந்து நீ எனக்கு இன்னிக்கு சோறே போடலை’ என்று குற்றம் படிப்பார்! கதவைப் பூட்டி வைக்க மறந்துவிட்டால், கதவைத் திறந்து வெளியே போய்விடுவார். யாராவது பார்த்து, திருப்பி அழைத்து வந்தால் சரி, இல்லையென்றால் காணாமல் போய்விடுவதும், ஊர் முழுக்கத் தேடுவதும் ருக்மணிக்கு வாழ்க்கையின் சவால் நிறைந்த நேரங்கள்.

மறதி.. கற்ற அனைத்தையும் உடனுக்குடன் மறந்துவிடும் மறதி.. மனிதர், மிருகம், வானம், நிலா, காலை, மாலை எல்லாவற்றையும் நழுவ விடும் மறதி…

“வாஞ்சி மாதிரி யாரு இருக்கா இப்போ… நியாயம், தர்மம், நேர்மை எல்லாமே இப்போ போச்சு…’

அந்தக் காலத்தில் பார்த்த வழக்கு விபரங்கள், பெயர்கள், ஜெயித்தது, தோற்றது என எல்லாமே தெளிவான நினைவில்…. காலையில் தின்ற இட்லியும், சாம்பாரும் மறந்து போய், ‘ருக்கு, என்னை ஏண்டி பட்டினி போட்டுக் கொல்ற?’

ஈசிசேரில் சாய்ந்து படுத்திருக்கும் திருமலைக்கு சாதம் ஊட்டி, வாய் துடைத்து ஒரு குழந்தையைப் போல… கை பிடித்து, ஜாக்கிரதையாக கோவிலுக்குக் கூட்டிப் போவாள் ருக்மணி.. “என்ன பாட்டி, தாத்தாவுக்குப் புது டிரஸ்.. என்ன விசேஷம்? பிறந்த நாளா?”. புன்னகைப்பாள் ருக்மணி. “இல்லே, இன்னிக்குத் திருமண நாள்”, சொல்ல மாட்டாள்!

“ருக்கு, அந்தக் கோட்டை எடு..”
“ஒரு டம்ளர் தண்ணி குடு..”
“கோவிலுக்குத் தனியா போ.. தைரியம் வேண்டாமா…”. எல்லாம் குறைந்து ஒரு குழந்தையாய்த் திருமலையைப் பார்க்கப் பாவமாய் இருந்தது ருக்குவுக்கு.

“ருக்கு நாம வாழும்போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் நம்மால பிறருக்கு நன்மையா ஏதாவது செய்யணும்” என்பார் திருமலை அடிக்கடி. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல, “நமக்குப் பிறகு, இந்த வீட்டையும், நிலத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்துவிடுவோம்” என்பார். இன்று ஏதும் புரியாத ‘பரப்பிரம்மமாய்’ கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் திருமலையைப் பார்த்து கண்ணீர் விடுவாள் ருக்மணி.

ருக்மணி அழவில்லை. திருமலையைப் பார்த்தபடி,அமைதியே உருவாய் அமர்ந்திருந்தாள். “தைரியம் வேண்டாமா?”

வாசலில் ஒரு கார் வந்து நின்றது  அதிலிருந்து இறங்கியவரை ரமணன்  பாட்டியிடம் அழைத்து வந்தான்.  அவர் கொன்டுவந்த சில பேப்பர்களில் ருக்மணி கையெழுதிட்டார். காரின் பின்னே வந்த ஆம்பிலன்ஸிலிருந்து இறங்கிய  . இரண்டு வெள்ளை யூனிபார்ம் போட்ட அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் உள்ளே  வந்து, ஸ்ட்ரெட்சரில் திருமலையை தூக்கிச் சென்றனர்.. அரை மணி நேரத்தில் திருமலையின் பூத உடல் அரசு மருத்துவக் கல்லூருக்குச் சென்று விட்ட்து.  

“யாருக்காவது பயன்படணும்” திருமலையின் ஆசையை நிறைவேற்றிவிட்டாள் ருக்மணி - திருமலையின் உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்துவிட்டாள்.

ருக்மணி இப்போதெல்லாம் தனியாக அமர்ந்து, திருமலையை எண்ணியபடி காலத்தை ஓட்டுகிறாள் - அவளுக்கும் மறதி வரத் தொடங்கியது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com