பேரன்பு மனிதர்கள்

பேரன்பு மனிதர்கள்

ந்த மாத அப்பார்ட்மெண்ட் மீட்டிங் ஆரம்பத்திலேயே சூடுபிடிக்கத் துவங்கியது. விடுமுறை நாட்களில் மத்தியான நேரங்களில் சற்றே கண்ணயரலாம் என்று படுத்தால், சிறுவர் சிறுமிகளின் ஓவென்ற கூச்சலுடன் ஓடிப்பிடித்து விளையாடும் சத்தம், சிரிப்பொலி, ஷூக்கள் மற்றும் செருப்புகள் தடதடவென ஒலிக்க மாடிப்படி எங்கும் ஓடுவது தனக்கு தொந்தரவாக இருக்கிறது என்று இரண்டாம் மாடி விஸ்வநாதன் புகார் சொன்னார். என் மனைவி ஜானகிக்கு மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்து பாடாய் படுத்தும். அவளும் மேற்கூறிய பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதுமட்டுமல்ல, பல வீடுகளில் வயதானவர்கள், கைக்குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை தொந்திரவு செய்யாமல் அமைதியாக விளையாடலாமே என்று நான் சொன்னேன்.

“சத்தம் போடாம பிள்ளைகள் எப்படி விளையாடுவார்கள்..? அவர்கள் என்ன பொம்மைகளா.....?” என்று உஷா சீறிக் கொண்டு வந்தாள். அதிகமாக கத்தி சத்தம் போடுவதில் முதன்மைப் பங்கு வகிப்பது அவள் குழந்தை அல்லவா?

“ஆனாலும் கொஞ்சம் சத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ‘நாய்ஸ் பொல்யூஷன் எதற்கு? பிறரின் காதுகளைக் காயப்படுத்த நமக்கு உரிமையில்லை. இந்த விஷயத்தில் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லலாம்” என்று நான் கூறியதும், “ ராமன் சார் சொல்வது ரொம்ப சரி” என எனக்கு ஆதரவுக் கரம் நீட்டினாள் மனிஷா. அவள் நகரின் பிரபலமான ஒரு பள்ளியில் பிரைமரி டீச்சராக வேலை பார்க்கிறாள்.

“தற்போது பிள்ளை வளர்ப்பில் பெண்கள் மிகவும் அசட்டையாக இருக்கிறார்கள். அவர்களை கண்டிப்புடன் வளர்ப்பது கிடையாது. பள்ளியில் நாங்கள் மிகவும் அவஸ்தைப்படுகிறோம்” என்றாள் அவள்.

“அப்படி என்ன கஷ்டத்தை நீ அனுபவிக்கிறாய்..?”

- என்றாள் மரகதம் சற்றே குரோதத்துடன்.

அவளுக்கு வால்தனம் செய்யும் இரண்டு பேரப்பிள்ளைகள். அதை அவள் குறும்பு என்று செல்லமாகக் சொல்லுவாள்.

கீழே பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியிருக்கும் சிறுவர்களுடைய சைக்கிள்கள் பலவற்றை தடதடவென ஒரே நேரத்தில் கீழே சாய்த்துவிடுவர். மொட்டை மாடியில் விளையாடப் போனால், அங்கிருந்து கனமான பந்தை எறிந்து பக்கத்து வீடு, எதிர்வீட்டு ஜன்னல்களைப் பதம் பார்ப்பர். இந்த இரண்டு சிறுவர்களை பார்த்தாலே எங்களுக்கெல்லாம் சற்று அலர்ஜி. மின்தூக்கியின் கதவு மூடப் போகும் சமயம் எங்கிருந்தோ ஓடி வந்து சட்டென நுழைந்து, உள்ளே இருக்கும் நபர்களுக்கு பெருங்கிலி உண்டாக்குவதில் வல்லவர்கள்.

இப்போது மரகதத்தின் சூடான கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மனிஷாவிற்கு. “சில பேரன்ட்ஸ், பிள்ளைகளை ஏழு மணிக்குதான் எழுப்புகிறார்கள். அவர்கள் காலைக்கடன்களை முடிக்காமல், குளித்தும் குளிக்காமல், சாப்பிட்டும் சாப்பிடாமல், அவசர அவசரமா கிளம்பி ஸ்கூலுக்கு வருகிறார்கள். இங்கே கிளாஸ் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டூ பாத்ரூம் வருதுன்னு நிறைய குழந்தைகள் எழுந்து நிற்கும். பிள்ளைகளை முதல் பிரீயடே வெளியே விட்டா பிரின்ஸ்பல் எங்களத் திட்டுவாரு... இவங்கள பாத்ரூமுக்கு அனுப்பலைனா வகுப்பறையை நாறடித்து விடுவார்கள். எங்களுடைய நிலைமை ரொம்ப மோசம்”.

அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அவள் சொல்வது நியாயம் தானே...? அவளுக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் “பிள்ளைகளை இரவு சரியான நேரத்தில் தூங்க வைத்து, காலையில் ஆறு மணிக்கு எழுப்பினால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்” என்றேன். அதன் பின் அதையொட்டிய விவாதங்கள் நடந்தன.

கடந்த ஒரு மணி நேரமாக என்னை உறுத்திய விஷயம், ‘இந்த மீட்டிங்கிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்பது போல அமர்ந்திருந்த சபேசன் தான். அவர் தன் பேத்தியுடன் வழக்கம்போல் கத்திப் பேசிக்கொண்டிருந்தார். தன்னைச் சுற்றிலும் ஒரு முக்கியமான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவருடைய ஐந்து வயதுப் பேத்தி ‘தாத்தா, வா! வெளிய போலாம்’ என்ற கையை பிடித்து இழுப்பதும், இவர் வழக்கம்போல தன் வி.கே. ராமசாமி குரலில் “இரு பாப்பா... போலாம். மீட்டிங் முடியட்டும்” என்று இதோடு ஸ்ரீராமஜெயம் சொல்வதுபோல நூற்றியெட்டு முறை சொல்லிவிட்டார் .அந்தப் பிள்ளையும் தன் கேள்வியை விடவில்லை. இவரும் பதில் சொல்வதை நிறுத்தவில்லை. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“சே.. என்ன மனிதர் இவர்... சும்மாயிரு” என்று தன் பேத்தியிடம் ஒரு அதட்டல் போடக் கூடாது...? “ இந்த மகானுபாவர் எங்கள் பக்கத்து ப்ளாட்டிற்கு குடிவந்து ஒரு மாதம் தான் ஆகின்றன. ஆனால் பல வருடங்கள் அவர்களுடன் பழகிய அனுபவம் ஏற்பட்டுவிட்டது அதற்குள் எனக்கு.

தனது வீட்டை, இல்லை.... இல்லை..... பதினாறு வீடுகள் இருக்கும் இந்த மொத்த அப்பார்ட்மெண்ட்டையும் கலகலப்பாக வைத்துக்கொள்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டாற் போல் அவரும், அவரது மனைவியும் எந்நேரமும் வெண்கலக் குரலில் வீட்டு வாசலில் நின்று பேசுவார்கள். சகலத்தையும் அலசுவார்கள். அன்றைக்கு செய்யப்போகும் சமையலில் ஆரம்பித்து, காய்கறிக்காரனிடம் ஒரு ரூபாய்க்கு பேரம் பேசியது, வேலைக்காரி லேட்டாய் வருவது, எதிர் வீடு நாய் நள்ளிரவில் விடாமல் ஊளையிடுவது என அத்தனை விஷயங்களையும் வீட்டு முன்புற வராண்டாவில் நின்று கொண்டு தான் பேசுவார்கள். இலவச எப்.எம் ரேடியோ மாதிரி அனைத்து இல்லங்களிலும் இவர்களது பேச்சு ஒலிபரப்பாகும்.

சபேசனுக்கு ஒரு இடத்தில் கால் தங்காது. அப்பார்ட்மெண்ட்டின் கார்பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் நீள நடைபாதையில் தன் பேத்தியுடன் ரவுண்ட் அடித்துக் கொண்டே இருப்பார். இவர் வந்த பின்பு ஸ்டூலில் அமர்ந்து கொண்டே தூங்கும் பகல் ட்யூட்டி வாட்ச்மேன் ‘அலெர்ட் ஆறுமுகமா’கி விட்டான். அவனுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவன் எப்படி தூங்குவான்?

இவருடைய நான்கு வயதுப் பேத்திக்கு கோபம் வந்தால் கீழே விழுந்து உருண்டு புரண்டு பெருங்குரலில் அழுவாள். தான் கேட்டதைக் கொடுக்கும் வரை அவளது அலறல் தொடரும். தாத்தா, பாட்டி, அம்மா , அப்பா என குடும்பமாக அவளை சுற்றி நின்று சமாதானப்படுத்துவர்கள். ம்ஹூம். ஒன்றும் வேலைக்காகாது. அவள் கேட்டதைக் கொடுத்தால் மட்டுமே தன் அழுகையை நிறுத்துவாள். இந்த சம்பவம் ஒரு நாளில் பலமுறை நடக்கும்.

ஒரு நாள் மனம் பொறுக்காமல் அவரிடம், “சார், குழந்தை அழுது கேட்டால் எதுவும் கிடைத்து விடும் என்ற மனோபாவத்தை வளர்த்து கொண்டுவிடும். அழுகையை ஒரு ஆயுதமாக கையாளும் உத்திக்கு நாம் துணை போகக்கூடாது” என்றேன்.

“ என்ன செய்யலாம்ங்கிறீங்க..?”

“ அது கேட்பது நியாயமாக இருக்கும் பட்சத்தில் கொடுக்கலாம். இல்லையெனில் முடியாது என மறுக்கலாம். அழுகையை நிறுத்து என குழந்தையிடம் ஒரு அதட்டல் போடலாம்.” என்றதும் என்னை விரோதமாகப் பார்த்தார்.

“ விட்டா அடின்னு கூட சொல்வீங்க போல”

“ அடிக்க வேண்டாம். ஆனால் அதட்டலாம். இல்லை, அப்படி ஒரு பாவனையாவது செய்யலாம். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும் நல்லது. கண்டிப்பு இல்லாமல் பிள்ளை வளர்ப்பது சரியல்ல” என்றேன்.

“ அதை நாங்க பாத்துக்கிறோம். நீங்க ஒண்ணும் கவலைப்படத் தேவையில்லை.” என்று பட்டென சொல்லி விட்டு நகர்ந்தார். அதன் பின் என்னிடம் அவர் குடும்பமே பேசுவதை நிறுத்திவிட்டது.

என் மனைவி கூட “ எதுக்குங்க உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?” என்று என்னை கடிந்து கொண்டாள்.

“இல்லை ஜானு..... இந்தக்காலக் குழந்தைகள் ரொம்பப் பாவம். பெற்றோரின் தவறான வளர்ப்பு முறையால் அவஸ்தைப்படுகின்றனர். பாசத்திற்கும் செல்லம் கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் அல்லாடுகின்றனர் பெற்றோர். குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது, அல்லது செய்வது... அந்தக் குழந்தையும் கேட்டதெல்லாம் கிடைக்கும் என நம்பும். பின்னாட்களில் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி என வரும்போது மனம் உடைந்து போய் தற்கொலை முடிவை நாடுவது..... சக மனிதர்களிடம் அனுசரித்துப் போகாமல் பழகி, மணவாழ்வில் விவாகரத்தில் முடிவதற்கு காரணம் தவறான பிள்ளை வளர்ப்பு தானே..?” என்றேன் ஆதங்கத்துடன்.

“ஆமாங்க. இந்தக் காலத்து பெத்தவங்கள நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஏன் இப்படி பிள்ளை வளர்ப்பில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருக்காங்கன்னு எனக்கு புரியவே இல்லை. பிள்ளைகளுக்காக நிறைய பணம் செலவு பண்ண ரெடியா இருக்காங்க. கடன் வாங்கியாவது பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேத்தறாங்க. பெருமைக்காக நிறைய பீஸ் கட்டி பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கிறாங்க. பத்தாவது படிக்கறப்பவே டூ வீலர் வாங்கித்தராங்க. எல்லா வசதிகளும் செஞ்சுதராங்க. ஆனா அவங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லித்தர்றது இல்லை. நிறைய வீடுகளில் நான் பார்க்கிறேன். சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவிட்டுப் போற பிள்ளை கிட்ட, தட்டைக் கொண்டுபோய் ஸிங்க்கில் போடுன்னு கூட சொல்வது கிடையாது. சின்னச்சின்ன வீட்டு வேலைகளைக் கூட செய்யறதுக்கு பழக்குவது இல்லை. இதெல்லாம் ஆரோக்கியமான பழக்கவழக்கமில்லையே....”.

“அதுமட்டுமில்லை ஜானு. உன் இஷ்டம் போல இருனு விட்டுடறாங்க. உதாரணமா டிவிய அலற விடுறது. ரொம்ப சத்தமா வைக்காதே. பிறருக்கு இடைஞ்சல். நம்முடைய சந்தோஷமும் கொண்டாட்டமும் யாரையும் பாதிக்கக்கூடாதுனு சொல்லித்தர்றது பெத்தவங்க கடமை. அவங்க தப்பு செஞ்சா தண்டிக்க வேண்டாம். அட்லீஸ்ட் கண்டிக்கலாமே..? காட்டுச் செடி மாதிரி பிள்ளைகளை தன்னிச்சையாக வளரவிடுறது சரியா..? அளவான கண்டிப்புடன் அக்கறையுடன் வளர்த்தால் குழந்தைகள் பேரன்பு மனிதர்களாக உருமாறுவார்களே” என ஆதங்கத்துடன் சொல்லி முடித்தேன்.

எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு இரண்டு விதமான கேட்டுகள் உண்டு. பின்புற வாசல் கேட்டை ஒட்டி ஒரு ஒண்டுக்குடித்தனப் பகுதி இருந்தது இரண்டு மாதங்கள் முன்பு வரை.... நான்கு குடும்பங்கள்குடியிருந்தன. ரியல் எஸ்டேட் புண்ணியவான்களின் கண்ணில் பட்டு அது கை மாறி , அந்தக் குடும்பங்கள் காலி செய்துகொண்டு போக.... வீட்டின் புது உரிமையாளர் வீடுகளை இடித்து முன்புற வாசல் கேட்டைப் பூட்டி வைத்தார். இன்னும் ஒரு வருடம் கழித்து அங்கு வீடு கட்டும் பணியை அவர் ஆரம்பிக்கப் போவதாக எங்கள் வாட்ச்மேன் கூறினார்.

அதன் வாசலில் பெரிய கொய்யா மரம் ஒன்று இருக்கிறது. பச்சைப் பசெலேன்று நிறைய காய்கள் அதில் பிடித்திருந்தன. அணில்கள் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டு, தன் முன்னங்கால்களால் கொய்யாக்காய்களைப் பற்றியபடி கொறித்து தின்னும் காட்சி கொள்ளை அழகு. மும்பையில் இருந்து போன மாதம் வந்திருந்த என் பத்து வயதுப்பேரன் அதைப் பார்த்து சிலாகித்துப் போனான். மைனாக்கள், குருவிகள், சில பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் அந்த மரத்தில் வந்து அமர்ந்து சத்தமிடுவது கண்ணுக்கும் காதுக்கும் மிக இன்பமாக இருந்தது. நவநாகரீக நகர வாழ்க்கையில் இதெல்லாம் காணக்கிடைக்காத அற்புதங்கள் அல்லவா ...?எங்களுடைய அப்பார்ட்மெண்ட் கார் பார்க்கிங் ஏரியாவில் கூட ஒரு குருவி கூடு கட்டி இருந்தது. கொய்யா மரத்துக்கு தினமும் பறந்து சென்று அங்கிருந்து இரை எடுத்து வந்து தன் குஞ்சுக்கு ஊட்டும் காட்சியை என் பேரன் மிகவும் ரசித்தான்.

எப்போதாவது எங்கள் குடியிருப்பு பிள்ளைகள் அந்த மரத்தில் காய்கள் பறித்து தின்பதுண்டு. ஆனால் சபேசன் வந்த பின் அதை முழு நேரப் பணியாக்கிக்கொண்டார். அவர் வந்த இரண்டாவது நாளே, “அட, இந்த மரத்தில் இத்தனை காய்க இருக்கா...?” என அதிசயித்து, வாட்ச்மேனிடம் ஓட்டடைக்குச்சியை வாங்கி கருமமே கண்ணாக கொய்யாக் காய் பறிக்கத் தொடங்கினார். காலை மாலை மதியம் என மூன்று வேளையும் தவறாமல் அவரும் அவர் பேத்தியும் அந்த கொய்யா மரத்தடியில் தரிசனம் தந்து விடுவார்கள். அதன்பின், பாவம் அணில்களும் குருவிகளும் தவித்துத் தான் போயின. ஒரே வாரத்தில் மரத்தில் பாதிக்கும் மேல் காய்கள் மாயமாய் மறைந்தன.

எனக்கோ எரிச்சல். ‘’சே... என்ன மனிதர் இவர்..?மாதம் இருபதாயிரம் வாடகை தருகிறார். சொந்தமாக கார் வைத்திருக்கிறார். வாரம் இருமுறை பழமுதிர்சோலையில் பை நிறைய பழங்கள் வாங்கி வருகிறார். ஒரு கிலோ கொய்யாவே நாற்பதுக்கு கிடைக்கிறதே..? அதை வாங்கி சாப்பிடலாம் தானே...? மிஞ்சிப்போனால் இன்னும் ஒரு வருஷம் வரை இந்த மரம் வெட்டுப்படாமல் இருக்கும். அதுவரையாவது இந்த வாயில்லா ஜீவன்கள் உண்ணட்டும் என்று விடாமல் என்ன மனிதர் இவர்?’’ என எனக்குள் பொருமிக் கொள்வேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலைநேர நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்து நீளமான பெஞ்சில் அமர்ந்தேன். வழக்கம் போல பிள்ளைகள் ஓவென்ற சத்தத்துடன் ஓடி விளையாடிக்கொண்டும், மிதிவண்டி ஒட்டிக்கொண்டும் இருந்தனர்.

“தாத்தா..” என்ற குரல் கேட்டது. குனிந்து பார்த்தேன். சபேசனின் பேத்தி சிமி.

“என்னம்மா குழந்தே... ?” என்றேன்.

“எனக்கு கொய்யாப்பழம் வேணும். பறிச்சுத் தர்றீங்களா..?” என்றது.

கைநீட்டி அந்த சிறுமியை அள்ளி என் மடியில் வைத்துக் கொண்டேன். “உனக்கு கொய்யாப்பழம் பிடிக்குமா...?” என்றதும் தலையை ஆட்டியது.

“ ஆனா இந்த மரத்துல காய் தானே இருக்கு..? பழம் இல்லையே...? பழம்னா மஞ்சள் கலர்ல இருக்கணுமே..?”

அங்கே விளையாடிக்கொண்டிருந்த வாண்டு ஒன்று, “ஆமா. இது ரொம்பக் காய். டேஸ்ட்டாவே இருக்காது” என்றான்.

“நானும் கொஞ்சம் கடிச்சிட்டு கீழே போட்டுடுவேன். ஆனா எங்க தாத்தா தினமும் பறிச்சுத் தருவார். எனக்கு ஜாலியா இருக்கும்” என்றாள் சிமி.

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று ஒரு கணம் யோசித்தேன். “ டேய் கண்ணுகளா.... எல்லாரும் கொஞ்சம் இங்கே வாங்க..” என விளையாடிக் கொண்டிருந்தவர்களை அழைக்க , அங்கே என்னை சுற்றி வளைத்தது சிறுவர் சிறுமியரின் கும்பல்.

“உங்களுக்கு என்ன ஸ்னாக்ஸ் பிடிக்கும். சொல்லுங்க” என்றதும் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பமான தின்பண்டங்களை பட்டியல் இட்டனர். கேக், பிஸ்கட், ஐஸ்க்ரீம், ரஸ்க், சிப்ஸ் என ஏகப்பட்ட வகைகள்.

“சரி. உங்களுக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ்சை அணிலோ காக்கவோ வந்து எடுத்திட்டுப் போனா என்ன செய்வீங்க..?” என்றதும் வாண்டுகள் சிரிக்கத் தொடங்கின.

“எப்படித் தாத்தா அணில் வந்து எடுக்கும்? அது போய் ஐஸ்க்ரீம், பிஸ்கட் சாப்பிடுமா...?”

“அப்படி எடுத்திட்டுப் போனா உங்களுக்கு கோபம் வருமில்லை... ? ஆனா மனுஷங்க நாம மட்டும் அணில், மைனாவோட உணவை எடுத்து சாப்பிடலாமா.? தப்பில்லையா...?”

“ஓ.. இந்தக் கொய்யாக்காய் பறிக்கறத சொல்றீங்களா...?” என்றது ஒரு வளர்ந்த வாண்டு விவரமாக.

“ஆமா. ஏம்மா சிமி, குருவி காக்கா கிட்ட காசு இருக்கா..?” என்றதும் வெள்ளையாக சிரித்தாள். “நோ. அதுக கிட்ட எப்படி இருக்கும்.. ஆபிசில் போய் சம்பாதிச்சா தானே காசு கிடைக்கும் எங்க அப்பா, அம்மா மாதிரி?”

“கரெக்ட். நம்ப கிட்ட காசு இருக்கு. வேணும்ங்கறத கடையில காசு கொடுத்து வாங்கிக்கலாம். ஆனா பறவைகள் என்ன பண்ணும்?”

“அதுக்குத்தான் மரங்க இருக்கே. அதுல இருந்து எடுத்து சாப்பிட்டுக்கும்.’’ என ஒரு சிறுமி சொல்ல, “ஆனா கொய்யா மரத்துல நாம காய் பறிச்சு சாப்பிட்டா, பறவைகள் என்ன பண்ணும்..?’’ என்றேன்.

‘’ஐய்யய்யோ... .அதுக பாவம் பட்டினியால்ல இருக்கும்?’’ என சில பிள்ளைகள் கோரசாக கத்தினர்.

‘’இனி மேல் யாரும் காய் பறிக்க வேண்டாம். அந்த மரம் அணில், மைனாவுக்குத்தான் சொந்தம்” என்றான் ஒரு சிறுவன் கட்டளையிடுவது போல சொல்ல ‘’ஆமா.... ஆமா’’ என்று கத்தினர் மற்ற பிள்ளைகள்.

“உஷ்! சத்தம் போடக் கூடாது. அதோ அந்தக் கூட்டிலே இரண்டு குருவிக் குஞ்சுக இருக்கு. நீங்க கத்தினா அதுக பயந்துக்கும்” என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“குருவிக்கூடா...? எங்கே காட்டுங்க...”

அவர்களை அழைத்து போய் காட்டினேன். பிள்ளைகள் வியப்புடன் பார்த்தனர்.

“வாவ்! லவ்லி...!“ உதடுகள் குவித்து ரசித்தனர்.

“ஓ.கே.தாத்தா. இதைப் பத்தியெல்லாம் எங்ககிட்ட யாரும் சொன்னதில்லை... இனிமே நாங்க சத்தம் போடாம விளையாடுவோம்..” இப்படி சொன்னது வேறு யாருமில்லை. மரகதத்தின் செல்லப்பேரன்கள்தான்.

நான் மடியில் அமர்ந்திருக்கும் சிறுமியைப் பார்த்தேன். “ நானும் தாத்தாகிட்ட சொல்லி கொய்யாப்பழம் பறிக்கக்கூடாதுன்னு சொல்றேன்” என்றாள் பெரிய மனுஷி போல.

அந்தக் கள்ளமில்லாக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க மனம் லேசான உணர்வு. ‘பேரன்பு கொண்ட குட்டி மனிதர்களுக்கு சரியாய் வழிகாட்டினால் இந்த அகிலமே கருணைமயமாகி விடுமே... !’ என்ற ஆனந்தம் எழுந்தது என்னுள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com