“திடீர் சொந்தம்”

“திடீர் சொந்தம்”

ராமநாதன் பணத்தை எண்ணிக்கொண்டே வந்தார். அப்போது குளித்துவிட்டு உள்ளே வந்த மணிகண்டன், அவரைப் பார்த்து ‘ ஏன்பா பணம், என்னத்துக்கு’ என்றான்.

அப்படியே ஒருகணம் நின்றவர், “கௌசல்யாவுக்கு ரெண்டாயிரம் ரூபா பணம் வேணுமாம்பா... அவங்க அம்மாவோட திதி வருதாம். செலவு இருக்காம். மாசாமாசம் ஆயிரம் ரூபா பிடிச்சிக்கச் சொல்லிட்டா...” என்றார்.  

“அப்பா... என்கிட்டே முதல்லேயே கேட்டிருக்கலாமில்லே. ஒவ்வொரு மாசமும் ரொம்ப டைட்டாதான்பா போயிட்டிருக்கு.  அவளுக்கென்ன, நம்ம வீட்டைப் போல நாலு வீட்டில வேலை பண்றா. நம்ம வீடு இல்லேனா இன்னொரு வீடு. ஆனா நமக்கு சம்பளமும் பென்சனும்தானேப்பா” என்றான்.

“கோவிச்சுக்காதப்பா... அம்மாவோட திதிக்கு செலவு இருக்குன்னு சொன்னா. அதான் கொடுக்கலாமேனு...”  என்றார் தயக்கமாய்.

“ஒருவேளை ஆயிரம் ரூபாக் கூட போதுமா இருக்கும்பா. கேட்டுத்தான் பார்ப்போமேன்னுட்டு ரெண்டாயிரமா கேட்டிருப்பா... இதைப் போலவே மத்த மூணு வீட்டிலேயும் கேட்டு வாங்கினா எட்டாயிரம் ஆச்சே... அவளுக்கென்ன ராணிமாதிரி செலவு பண்ணுவா...” என்றான் மணிகண்டன்.

“இல்லேப்பா... அவளைப் பார்த்தா ஏமாத்தறமாதிரியும் தெரியலை. அதுவுமில்லாம நாம கொடுக்கற சம்பளம் ரெண்டாயிரத்துல மாசம் ஆயிரத்தை பிடிச்சிக்கிட்டா ரெண்டு மாசத்துல முடிஞ்சுடுமே...” என்றார்.

“வேலைக்காரிக்காக ஏம்பா இவ்ளோ பறிஞ்சு பேசறீங்க...” என்றான்.

“வேலைக்காரின்னு அவ்வளவு கேவலமா சொல்லக்கூடாதுப்பா...” என்றார். உடனே குறுக்கிட்டவன் “போதும்பா... நான் சின்ன குழந்தையா இருக்கும்போது அம்மா இறந்துட்டாங்க. வேலைக்காரம்மாதான் தன்னோட பொண்ணுக்கும் எனக்கும் தாய்ப்பால் ஊட்டினா. ஒரு பக்கம் அவளோட பொண்ணு பால்குடிக்கும், மறுபக்கம் நான் குடிப்பேன்... இந்தக் கதையை எவ்வளவு காலம்தான் சொல்லுவீங்க...? சரி, சரி... பணத்தைக் கொடுங்க போங்க. நீங்க தர்றதா  சொல்லிட்டு இப்போ நான் சொல்லி, நீங்க தரலைன்னா நல்லாயிருக்காது வேற...” என்றுவிட்டு நகர்ந்தவன், கொஞ்சம் திரும்பி புன்னகைத்து, ‘ஸாரிப்பா...’ என்றுவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டே நகர்ந்தான்.

தயங்கியபடியே பணத்தை மீண்டும் எண்ணியபடி புழக்கடைப் பக்கம் நடந்தார் ராமநாதன். கௌசல்யா பாத்திரங்களைக் கழுவிப் போட்டுவிட்டு, துணிகளை கொடியில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாள்.  ராமநாதனுக்கு திடீரென்று சந்தேகம், ‘ஒருவேளை மணிகண்டன் சொன்னது கௌசல்யா காதில் விழுந்திருக்குமோ’ என்று... அப்படி விழுந்திருந்தால் நாம் இவரிடம் பணத்தை ஏன் கேட்டோம் என்று நினைத்து வருந்துவாளோ. அவளுக்கும் காதும் கொஞ்சம் மந்தம்தான். மேலும் மணிகண்டனும் அப்படி ஒன்றும் சத்தம் போட்டும் சொல்லவில்லையே ‘ என்றும் நினைத்துக் கொண்டார்.

அவருக்கும் பென்ஷன் வருகிறது. அதிலிருந்துதான் இரண்டாயிரத்தை எடுத்துவந்தார்.  ஆனாலும் அப்பாவும் மகனும் இதுவரை பணத்தில் பிரிவினை பார்த்ததில்லை, இது என் பணம், அது உன் பணமென்று...!

மணிகண்டன் சொன்னதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.  இந்த வீட்டின் மேல் அடமானக்கடன் இருக்கிறது.  காரும் கடனில்தான் வாங்கியிருக்கிறான் மணிகண்டன்.  மாதா மாதம் ரெக்கரிங் டெபாசிட் வேறு போடுகிறான்.  அவனுக்கு கல்யாண வேலைகளும் ஆரம்பித்தாயிற்று. அதற்கும் செலவு இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ஒவ்வொருமாதமும் டைட்டாக போகிறது என்று அவன் சூசகமாய் சொன்னான், அது அவருக்கும் தெரியும். 

அதுமட்டுமல்லாமல், ராமநாதனுக்கும் கொஞ்சம் இளகிய மனசுதான். யாராவது இல்லையென்று கையேந்தினால் உடனே பணத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார். அதற்காகவும் சிலசமயம் அப்பாமேல் கோபப்பட்டிருக்கிறான் மணிகண்டன்.

பணத்தைக் கொண்டுபோய் கௌசல்யாவிடம் நீட்டினார். அதை வாங்கி கண்களில் ஒத்திக்கொண்டவள் தனது சேலை மடிப்பில் அதை மடித்து இடுப்பு மடிப்பில் செருகிக் கொண்டாள். நன்றியுடன் பார்த்து கைக்கூப்பினாள், புன்னகைத்தாள்.

கௌசல்யாவைப் பார்க்கும்போதெல்லாம் பழைய வேலைக்காரி சுப்புலட்சுமி ஞாபகம் சிலசமயம் வந்துவிடும்.  இருபத்திரண்டு வருடம் ஓடிவிட்டது.  கௌசல்யாவும் சுப்புலட்சுமியின் ஜாடையேதான்.

மனைவி ஜானகியம்மாள் இறந்தபோது மணிகண்டன் பால்குடிக்கும் குழந்தை. பிறந்து மூன்று மாதம்தான் ஆகியிருந்தது.  திடீரென்று காய்ச்சல் வந்தது. பத்து நாளில் இறந்து போனாள் ஜானகி. அந்த சமயம் ஊருக்குள் நிறையபேர் விஷக்காய்ச்சல் வந்து இறந்துவிட்டார்கள்.

கடையில் வாங்கும் பாலைக் குடிக்கவில்லை மணிகண்டன்.  தாய்ப்பாலுக்கு வழியில்லை. குழந்தை பாலுக்கு அழுகிறானே என்று மனமிறங்கி சுப்புலட்சுமிதான் மணிகண்டனுக்கும் தாய்ப்பால் கொடுத்தாள்.  அவளது மகள் ஒரு புறம் பால்குடிக்க இவன் மறுபுறம் குடிப்பான். அப்போது, அவளைப் பார்க்க பாவமாய் இருக்கும்.  கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் பால் குடித்திருப்பான். ராமநாதன்தான் மெல்ல மெல்ல புட்டிப்பால் கொடுத்து அவனுக்கு பழக்கப்படுத்திவிட்டார். நாளடைவில் அவனும் தாய்ப்பாலை மறந்தே போனான்.

அதற்குப் பிறகு பலவருடங்கள் வேலைசெய்தாள் சுப்புலட்சுமி. பிறகு தன் புருஷன் பஞ்சம்பிழைக்க கேரளாப் பக்கம் போகலாமென்று சொல்வதாக சொல்லிக்கொண்டு வேலையை விட்டு நின்றுவிட்டாள். அதற்குப் பிறகு  லட்சுமி என்று ஒரு அம்மாள் வந்தார்கள். அவர்களும் பத்து பன்னிரண்டு வருடங்கள் வேலை செய்து விட்டு நின்றுவிட்டார்கள்.  கொஞ்ச காலம் வேலைக்காரி இல்லாமல் தாங்களாகவே சமாளித்தும் கொண்டார்கள். பின்னர்தான் இந்த கௌசல்யா வந்து சேர்ந்தாள்.    

போன வருடம் ஒரு பஸ் ஆக்சிடெண்டில் அவளது அம்மா இறந்துவிட்டாள். பஸ் ஆக்சிடெண்ட்.  பஸ்ஸில் பயணித்த யாருமே பிழைக்கவில்லை, மலையடிவாரத்தில் பஸ் உருண்டு தீப்பிடித்துக் கொண்டதில் எல்லோரும் கருகிப் போனார்கள் என்று தெரிந்தது. கௌசல்யா அழுதழுது ஓய்ந்து போனாள். இப்போது ஒருவருடமே முடிகிறது.  அந்த திதிக்குத்தான் செலவு செய்ய பணம் கேட்டிருக்கிறாள் கௌசல்யா.

ன்று மணிகண்டன் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா தரையில் உட்கார்ந்து தட்டில் இட்லி சாப்பிட்டுக்  கொண்டிருந்தார்.   ராமநாதன் அருகில் இரும்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். மணிகண்டனைப் பார்த்தவுடன் ராமநாதன் ‘ மணிகண்டா, இந்த அம்மாவை யார்னு தெரியுதா, பார்...’ என்றார்.  இவர் எப்போது பார்த்தாலும் யாரையாவது கூப்பிட்டு உட்காரவைத்துக்கொள்வார். இதே இவருக்கு வேலையாகிப் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டே உள்ளேபோனான்.  பின்பு, திரும்பி, யாரப்பா அது என்பது போல அப்பாவைப் பார்த்தான்.

அப்போதுதான் நிமிர்ந்து மணிகண்டனைப் பார்த்தாள் அந்த பெரியம்மா. அவளது முகத்தில் லேசாய் மலர்ச்சி. இடது கையை உயர்த்தி ‘ தம்பி நல்லா இருக்கியாப்பா... ‘ என்றவள் உடனே கண்கலங்கினாள். ராமநாதன் ‘ தம்பி... இந்த அம்மா நம்ம வீட்டுல ஒருகாலத்துல வீட்டுவேலை செஞ்சவங்க... குடும்பத்தோட கேரளா போய்ட்டாங்கன்னு உன்கிட்டே சொன்னேனில்லே... அந்தம்மாதான் ‘ என்றார்.

சட்டென அவனுக்கு திகைப்பு.  ‘ அப்படியென்றால் எனக்கு பாலூட்டிய வேலைக்காரம்மாவா இவங்க ‘ என்ற கேள்வியுடன் அந்த அம்மாவைப் உற்று நோக்கினான்.  நரைத்த தலைமுடி. உள்விழுந்த கண்கள். இளைத்த உடல்.  பழைய சேலை, கிழிந்த ஜாக்கெட்.  அவளைப் பார்த்தவுடன் திடீரென்று நெஞ்சுக்குள் என்னவோ செய்தது மணிகண்டனுக்கு. திரும்பி வந்தான் அவளருகில்.

“பஸ்ஸ்டாண்டுல கையேந்திக்கிட்டு நின்னாங்கப்பா, நான்தான் அடையாளம் கண்டு, ஆட்டோவுல கூட்டிட்டு வந்தேன். பசிக்குதுன்னு சொல்லவும் வீட்டுல காலைல மிஞ்சிய இட்லி இருந்துச்சா.  எடுத்து போட்டு சாம்பாரை ஊத்திக் கொடுத்தேன். பாவம் பசி தாங்கலை போல. அதுக்குள்ளே  நீயும் வந்துட்டே...” என்றார்.

“தம்பி, பேர் என்ன” என்றாள்.

“பாட்டி என்று சொல்ல வாயெடுத்தவன் “அம்மா, என் பேரு மணிகண்டன்” என்றான்.

“எப்படி மளமளன்னு வளர்ந்திருக்கு தம்பி. ஐயா...ரொம்ப சந்தோசம்பா...உங்களையெல்லாம் பார்ப்போம்னு  நினைக்கவேயில்ல... கடவுளாப் பார்த்து இங்கே இழுத்திட்டு வந்திருக்கார்... அம்மா தவறினப்போ  தம்பிக்கு ஒரு வயசு இருக்குமா....’ அந்த பெரியம்மா லேசாய் கண்கலங்கினாள்.

அந்த நேரம் பார்த்து கௌசல்யா அங்கே வந்தாள்.

“அய்யா, நாளைக்கு எங்கம்மாவுக்கு திவசம். நாளைக்கு என்னால வரமுடியாது. அதான் இப்பவே எல்லா வேலையும் முடிச்சிட்டு போய்டலாம்னு...” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெரியம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்... “ஐயோ அம்மா, நீ உயிரோடத்தான் இருக்கியா...”என்று அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதாள். பஸ் உருண்டு விழுந்து தீ பிடிச்சு எல்லாரும் கருகிட்டாங்கனு கேள்விப்பட்டு, நீயும் அந்த பஸ்லே போனதால நீயும் கருகிப் போயிட்டேன்னு நினைச்சோம். கடவுளே, நீ உயிரோட கிடைச்சிட்டே. பாவி நான், நாளைக்கு உனக்கு திவசம் விட இருந்தேனே... அய்யாக்கிட்டேகூட ரெண்டாயிரம் கடன் வாங்கிட்டுப் போயிருந்தேன்...’ சொல்லிக்கொண்டு அம்மாவை இன்னும் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் கௌசல்யா.

அந்தப் பெரியம்மா சொன்னார்கள், ‘ ரோடு ஓர ஹோட்டல்ல சாப்பாட்டுக்கு பஸ் நின்னிச்சு. நான் சாப்பிட்டிட்டு வெளியே போயிட்டு வர்றதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு...அப்புறமாத்தான் நான்கூட கேள்விப்பட்டேன் அந்த பஸ்தான் தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சுன்னு....’ என்று மணிகண்டனுக்கு விபரம் புரிந்துபோனது. “அப்போ கௌசல்யா எனக்கு அக்கா...” என்று சிரித்தான்.  எல்லோரும் சிரித்தார்கள்.

கொஞ்சநேரத்தில் வீட்டுவேலைகளை முடித்துகொண்டு அம்மாவையும் கூட்டிக்கொண்டு கிளம்பினாள் கௌசல்யா. திடீரென்று நினைத்துக் கொண்டவளாய், “அய்யா... நீங்க கொடுத்த பணம் அப்படியே என்கிட்டேதான் இருக்கு... இந்தாங்க, இதை வாங்கிக்கங்க...” என்று திருப்பிக் கொடுத்தாள்.

குறுக்கிட்டான் மணிகண்டன், ‘அக்கா பரவாயில்லை, இதை எடுத்துக்கிட்டு போய் அம்மாவுக்கு ஒரு நல்ல சேலை வாங்கிக் கொடுங்க....’ என்று அவளை அனுப்பிவைத்தான்.

திடீர் சொந்தம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் ராமநாதனும், மணிகண்டனும் திளைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள்.         

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com