உதாரண புருஷர்

உதாரண புருஷர்

திர் தினசரியில் மூழ்கிப் போயிருந்தான்.

வாசலில் அம்மா நின்றிருந்ததைக்கூட கவனிக்கவில்லை.

"கதிர்... கதிர்..."அம்மா சத்தமாக குரல் கொடுத்தாள்.

தினசரியில் இருந்து தலை நிமிர்ந்து பார்த்தான் கதிர்.

"குளிக்கணும்! சேலை, பாவாடை எடுத்து வந்து போடுடா...!" குரலில் எரிச்சல் தெரிந்தது.

"என்னம்மா விஷயம்?" என்று கேட்டவாறே அம்மாவின் அலமாரியில் செட்டாக அடுக்கி வைத்திருந்த புடவை, பாவாடை, ஜாக்கெட் எடுத்து வந்தான்.

வாசலுக்கு தெற்குபுறம் தள்ளியிருந்த பாத்ரூம் ஹேங்கரில் துணியை தொங்க விட்டு வந்தான்.

"என்ன விஷயம்னு கேட்டேன்…பதில் காணலை?"என்று கதிர் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"அந்த டைலரு இறந்திட்டாரு… நீயும் ஒரு எட்டு குளிக்கறத்துக்கு முன்னாடி போயிட்டு வந்திடு…" பதிலை சலிப்புடன் சொன்னாள் அம்மா.

"மொட்டையா டைலர்ன்ன யாருக்குத் தெரியும்!"கோபமாக சொன்னான்.

"அதான்டா உன்னோட உதாரண புருஷர்… ஃபிட் மேன் டைலர்..! எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன்னு அடிக்கடி சொல்லுவியே, அவன் தான்... அனாதையாக செத்துட்டான்…" அம்மா கதிரின் பதிலை எதிர்பார்க்காமல் பாத்ரூம் நோக்கி போய்விட்டாள்.

கதிர் கவலையாக வந்து அமர்ந்தான். தினசரியில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

கதிருக்கு ஃபிட் மேன் டைலர்தான் ஆதர்ச நாயகன்.

முதன் முதலில் ஃபிட் மேன் டெய்லரை சந்தித்தது இன்னும் அவன் நினைவில் ஆழமாகப் பதிந்து இருந்தது.

••• ••• •••

றாம் வகுப்பு அட்மிஷன் போட டவுன் ஸ்கூலுக்கு கதிர் அப்பாவுடன் சென்றிருந்தான்.

அட்மிஷன் முடித்ததும் துணிக்கடைக்கு அழைத்து போனார் கதிரின் அப்பா.

யூனிஃபார்ம் துணி எடுத்துக்கொண்டு தைப்பதற்கு கொடுக்க.

ஃபிட் மேன் டைலரிடம் அழைத்து சென்றார்.

“ஃபிட் மேன் டெய்லர்ஸ்” என்ற ஃபோர்டு தாங்கிய பத்துக்கு பத்து அளவுல இருந்தது கடை.

கடை முன் சைக்கிளை நிறுத்தினார் கதிரின் அப்பா. கேரியரில் அமர்ந்திருந்த கதிர் குதித்து இறங்கினான்.

கதிர் இதுவரை டவுன் டெய்லர் கடை வந்தது இல்லை.

வீட்டருகே ஒரு தாத்தா இருக்கிறார். அவரிடம் போய் துணி அளவு கொடுத்தால் டிராயர் பாவாடைப் போல் தைத்து தருவார். சட்டை 'தொள தொள' வென்று முட்டிகால் வரை வந்து தொங்கும்.

கதிர் டிராயர் உள் சட்டையை துருத்திக் கொள்வான்.

ஆரம்பப் பள்ளி ஊரிலேயே இருந்தது. எல்லோரும் கதிர் போலத்தான் உடை அணிந்து வருவார்கள். அதனால் கதிருக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை.

ஆனால் ஆறாம் வகுப்பு டவுன் ஸ்கூலில் அட்மிஷன் போட்டதும் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்தான். ஒவ்வொருவரும் நேர்த்தியாக கச்சிதமாக யூனிஃபார்ம் போட்டு இருந்தனர்.

கதிர் அப்பாவிடம் அடம்பிடித்தான். அதன் விளைவுதான் இன்று ஃபிட் மேன் டைலரிடம் அழைத்து வந்தார்.

கதிருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.

மஞ்சள் பையில் இருந்து நீல நிற டிராயர் துணியையும், வெள்ளை சட்டை துணியையும் எடுத்து அப்பா நீட்ட, ஏதோ துணி வெட்டிக் கொண்டு இருந்த டைலர் "வாங்கண்ணே! தம்பிக்கு யூனிஃபார்மா? வேலையில் நீங்க வந்ததை கவனிக்கல…"என்ற ஃபிட் மேன் டைலர் அழகாக இருந்தார்.

கதிர் அவரை கூர்ந்து கவனித்தான். தங்கள் ஊர் டெண்ட் கொட்டாயில் இடைவேளையின் போது பாம்பே டையிங் விளம்பரம் போடுவார்கள்... அதில் நடிக்கும் ஹிந்தி நடிகர் போல் ஸ்மார்ட்டாக ஃபிட் மேன் டைலர் இருந்ததாக ஒப்பிட்டு பார்த்துக் கொண்டான்.

பார்த்ததும் அவரை பிடித்துவிட்டது கதிருக்கு.

மேசையின் ஓர் ஓரத்தில் கிரிக்கெட் கமெண்டரி ஹிந்தியில் ஓடிக்கொண்டிருந்தது.

வால்யூம் குறைத்தார் டைலர்.

தன்னுடைய மர மேசையில் துணியை விரித்துப் போட்டார். பின் கழுத்தில் தொங்க விட்டிருந்த டேப் எடுத்து துணியை அளந்தார்.

"ரெண்டு சட்டை, ரெண்டு டிராயர் வரும்ண்ணே!"என்று சொல்லிக் கொண்டே கதிரை அருகில் அழைத்து அளவெடுத்தார்.

தன்னுடைய லெட்ஜரை திறந்து கிடுகிடு வென அளவுகளை எழுதினார் ஃபிட் மேன் டைலர்.

கதிர் வாய் பிளந்துப் பார்த்தான்.

ஒவ்வொரு அளவாக எடுக்க, எடுக்க அவர் எழுதவில்லை.சட்டை, டிராயர் இரண்டும் சேர்த்து அளவெடுத்து மொத்தமாக நினைவில் வைத்ததை வரிசையாக எழுதிக் கொண்டார்.

சிறிய அட்டையில் சிறு துணியை கத்தரித்து,ஸ்டேபிள் அடித்துக் கொடுத்தார்.

"அண்ணா! ரெண்டு நாள்ல தந்திடறேன்.."என்று சொல்லி கொண்டே காஜா எடுத்துக் கொண்டு இருந்தவனிடம் துணியை தூக்கி போட்டார் ஃபிட் மேன் டைலர்.

"சரி வரேன்பா!"என்று சொல்லி கதிர் அப்பா புறப்பட்டார்.

"அப்பா!"குரல் கொடுத்தான் கதிர்.

"என்ன கதிர்?" அப்பா மெல்ல சைக்கிள் பெடல்களை மிதித்தவாறே கேட்டார்.

"அப்பா டைலர் உங்களுக்கு தெரிஞ்சவரா?"

"ஆமாம்பா. நம்ம ஊர் தம்பிதான்.

நமக்கு சொந்தம்தான். பேரு முகில். தொழில் கத்துக்க பெங்களூர் போனான். அஞ்சு வருஷம் கழிச்சு இப்பதான் ஊருக்கு வந்தான். வந்ததும் கடை திறந்திட்டான்… நல்ல கூட்டம் வருதாம்... கேள்வி பட்டேன்... ஞாயிற்றுக்கிழமை கூட கடைக்கு லீவு இல்லையாம்…! கடையில் எவ்வளவு துணி வாங்கி குவிச்சி வைச்சிருக்கான் பார்த்தீயா...?

அவன் கிட்ட துணி அளவு கொடுத்தா, பதினைந்து நாள் ஆகுமாம் துணி தைச்சுக் கொடுக்க... நாம சொந்தகாரங்கன்றதால உடனே தைத்து தரேன்னு ஒத்துகிட்டாப்ல..."

"அப்பா! இதே அளவு துணி நம்ம டைலர் தாத்தாக்கிட்ட கொடுத்து இருந்தா ஒரு செட்டு தான் தைத்து கொடுப்பாரு இல்லைப்பா..? ஆனா இவரு ரெண்டு செட் டிரஸ் வரும்னு சொல்றாரு..?"

"கதிர் அந்த தாத்தா பழங்காலத்து ஆளு. அப்படித்தான் தைப்பாரு... புதுத் துணி வரட்டும் பாரு... எப்படி இருக்கும்ன்னு..."

அப்பா சொல்லச் சொல்ல கனவில் விழுந்தான் கதிர்.

புது துணி தைத்து வந்தது போலவும் அதை உடுத்தியது போலவும்... எல்லோரும் அழகாக இருப்பதாக சொல்வது போன்று மயங்கிப் போயிருந்தான் கதிர். அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களும் தவித்தான்.

அப்பாவிடம் டவுனுக்கு போறீங்களா? டைலர் சித்தப்பாவை பார்த்தீங்களா? மூச்சுக்கு முன்னூறு முறை கேட்டான்.

அம்மாவிடம் ஃபிட் மேன் டைலர் போல் துணி அளந்து காட்டினான்.

"டேய் கதிர் முடியலடா! போதும்டா டைலர் புராணம்.."அம்மா அழுவாத குறையாக கெஞ்சினாள்.

துணி தைத்து வாங்கி வந்து விட்டார் அப்பா. ஆனால் கதிர் தூங்கி விட்டிருந்தான். அப்பா கதிரை எழுப்பச் சொன்னார். ஆனால் அம்மா தான் "எழுப்பாதீங்க! காலையில் எழுந்தா போட்டு பார்த்துப்பான்!"என்று சொல்லி விட்டாள்.

காலையில் கதிர் எழுந்ததும் மேசை மீதிருந்த மஞ்சள் பை பார்த்து ஓடிப் போய் எடுத்தான்.

அயர்ன் செய்யப்பட்டிருந்தது புது யூனிஃபார்ம். முகத்தருகே கொண்டு சென்று நுகர்ந்தான். வாசனை பிடித்து இருந்தது.

"ஏன்மா நைட்டே எழுப்பி துணி தைத்து வந்ததை சொல்லலை?"அம்மாவிடம் கோபித்துக் கொண்டான் கதிர்.

அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

வேகவேகமாக சென்று ஒன்றும் பாதியுமாக குளித்து வந்தான்.

"டேய்! புது துணிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சாமிப் படம் முன்னாடி வெச்சு கும்பிட்டுட்டு போடுடா…சாம்பார் கொதிக்குது இறக்கிட்டு வந்திடறேன்…"

அம்மா சொன்னது போல் செய்தான் கதிர்.

ஆசை ஆசையாக டிரஸ் எடுத்து அணிந்து கொண்டான்.

ஃபிட் மேன் டைலர் மிகக் கச்சிதமாக தைத்து இருந்தார்.

காலர் கழுத்தை இறுக்கி இருந்தது,சட்டையில் உள் பாக்கெட்,டிராயரின் நேர் பாக்கெட் என்று கதிரை அதிசயவைக்கும் அம்சத்தோடு நன்றாக தைத்து கொடுத்திருந்தார் ஃபிட் மேன் டைலர்.

அன்றிலிருந்து ஃபிட் மேன் டைலர் அவனுக்கு ஃபிட் ஆகிப் போயிருந்தார்.

பள்ளி செல்லும் வழியிலேயே டைலர் கடை இருந்ததால் முகிலைப் பார்ப்பான் சிநேகமாக.

கதிர் பார்க்கும் போது முகில் கண்ணும் கருத்துமாக துணி அளவெடுத்து கத்திரிக்கோலால் கட் செய்து கொண்டு இருப்பான்.

கதிரை கவனித்து விட்டால் சிநேகமாக சிரிப்பான்.

முகிலனுக்கு புதிதாக திருமணம் ஆனது.

திருமணம் ஆனதும் அவனை தனிக் குடித்தனம் வைத்து விட்டாள் அவன் அம்மா.

பக்கத்து தெருவில் குடியிருந்த முகிலன் கதிர் இருந்த தெருவில் நான்கு வீடுத் தள்ளி குடிவந்தான்.

முகிலனின் மனைவி அவனுக்கு பொருத்தமான ஜோடி இல்லை என கதிர் நினைத்தான்.

குண்டாக கருப்பாக இருந்தாள். கதிருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"என்ன ஒரு மனுஷன் அவருக்குப் போய்.."அம்மாவிடம் புலம்பினான்.

"டேய் அந்த பொண்ணு அவனோட மாமா பொண்ணு…அவங்க மாமா தான் கடை வைக்க எல்லா ஏற்பாடும் செய்தவர்.."

"ஓ…நன்றி கடனா?"நிறைய பழைய படத்தில் அப்படி தானே வரும் என அம்மாவிடம் கதிர் கேட்டான்.

அம்மாவும் "அப்படிதான்டா.. நன்றிக் கடன்தான்…"சொன்னாள்.

கதிர் அதன்பின் மறந்து போனான்.

நாளுக்கு நாள் கண்ணெதிரே முகிலனின் டெய்லர் கடை டவுனில் பிரபலமாகி இருந்தது.

முகிலனின் உதவிக்கு ஐந்து டைலர்கள். துணிகளை கட் பண்ணி கொடுப்பது மட்டும் முகிலன் வேலை.. பக்கத்தில் காலியாக இருந்த கடையும் வாடகைக்கு எடுத்து விஸ்தாரப்படுத்தி இருந்தான்.

ஹீரோ ஹோண்டா பைக் வாங்கினான் முகிலன்.

சில நேரம் கதிரையும் பள்ளி வரை கொண்டு வந்து விடுவான்.

தன் கண் முன் வளர்ச்சி அடைந்த முகிலன் உதாரண புருஷனாக மனதில் ஆழமாக பதிந்து போனான் கதிர்.

எந்த தொழில் செய்தாலும் நுட்பமாக செய்ய வேண்டும் என்று மனதில் முடிவு செய்து இருந்தான்.

கல்லூரி படிப்பு முடித்ததும் வேலையில் சேர்ந்தான் கதிர்.

அவன் செய்யும் வேலையில் நேர்த்தி இருந்ததில் ஆபிஸில் இருந்தவர்கள் மத்தியில் குறுகிய நாட்களில் ஃபேமஸ் ஆகிப் போனான்.

ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது அம்மாதான் சொன்னாள்.

"உன் டைலர் என்ன பண்ணான் தெரியுமா?"

சாப்பிட்டு கொண்டிருந்த கதிர் ஆர்வமாக அம்மாவின் பேச்சை கேட்டான்.

"வேற ஒரு பொண்ணோட தொடர்புல கட்டின பொண்டாட்டிய வீட்டை விட்டு துரத்திட்டான்.."

"தொழில் என்ன ஆச்சு?"

"கடையெல்லாம் இழுத்து மூடிட்டு அந்த புதுப் பொண்ணோட ஓடிட்டான். அவன் பொண்டாட்டி அவங்க அம்மா ஊருக்கே போயிட்டா! பாவம்... அவன் எல்லாம் நல்லா இருப்பானா?"அம்மா சாபமிட்டாள்.

அதன்பின் ஐந்தாண்டுகளில்

ஃபிட் மேன் டைலர் மறந்து போயிருந்தான் கதிர்.

கதிர் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ததன்

விளைவாக அடுத்தடுத்த பதவி உயர்வில் வளர்ந்தான்.

கதிருக்கு அத்தை பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அப்பாவின் ஆசைக்காக அவருடைய தங்கை பெண் வனஜாவை திருமணம் செய்து கொண்டான்.

வனஜா அழகாக இருந்தாலும்,கிராமத்து வாடை அதிகமிருந்தது.

அவளை நண்பர்கள் வீட்டு விழாவிற்கு அழைத்து செல்வான்

அங்கு அவள் செயல் பாட்டில் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து ஒரு வாரம் வரை சண்டை போடுவான்

அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்தது.கதிருக்கு பிடிக்காத

ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துவிடும்.

அதனால் தொடர் சண்டை வந்து விடும்.

கிராமத்து பட்டிக்காட்டை கட்டிவிட்டு என் உயிரை வாங்கறாங்க .என்று புலம்பி ஒரு கட்டத்தில் அவளை பிரிய வேண்டிய சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டான் கதிர்.

வனஜா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டாள்.

இப்போது தனித்துதான் சென்னையில் வேலை செய்து வருகிறான் கதிர்.

அடிக்கடி அம்மா முகிலனை வைத்து தான் திட்டுவாள்.

முகிலன் வேறு ஒரு பெண்ணை நம்பிப் போய் அவள் பணம் பிடுங்கிக் கொண்டு,வேறொருவனுடன் ஓடிப்போய் விட்டாள்.

முகிலனின் மனைவி வனஜாவும் மீண்டும் அவனுடன் குடித்தனம் செய்ய மறுத்து விட்டாள்.

தனிமரமாக நின்றான் முகிலன்.

மீண்டும் கடைத் திறந்தான்.

தொழிலில் போட்டி அதிகரித்து இருந்தது.

முன்னைப் போல் முகிலனால் தொழில் செய்ய முடியவில்லை.

நினைவுகள் கலைந்த போது அம்மா குளித்து விட்டு வந்து விட்டாள்.

"நேத்து சாப்பாடு அப்பாகிட்ட காசு வாங்கி தான் சாப்பிட்டானாம்..காலையில் உயிரோட இல்லை…எப்ப செத்தான்னு தெரியலை..

இன்னைக்கு அனாதை பொணமா கிடக்கிறான்…அங்க அழறத்துக்கு கூட ஆளில்லை."

அம்மா நிதர்சனத்தை சொன்னாள்.

கதிரின் மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

ஒரு முடிவுடன் கிளம்பினான்.

"எங்கடா கிளம்பிட்ட?"

"சாவுக்கு தான்மா! இனி ஃபிட் மேன் டைலரை தலை முழுகப் போறேன்...."அம்மாவிடம்

சொல்லி விட்டு நாலு வீடு தள்ளியிருந்த டைலர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினான்.

ஈ மொய்க்க ஒரே ஒரு மாலையுடன் சடலமாக கிடந்தார் முகிலன்.

நாலைந்து ஆட்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

பார்த்த மாத்திரத்தில் வீடு திரும்பினான் கதிர்.

"எவ்வளவு சம்பாதிச்சான்… இன்னைக்கு பொணத்தைத் தூக்க காசு இல்லை... உறவுமில்லை... ஆளுமில்லை... அவன்தான் ரோல் மாடல்னு சொல்லி வளர்ந்த…தொழில்ல இருக்கலாம் ரோல் மாடல்! ஆனா அவனோட மனவாழ்க்கையை ரோல் மாடலாக எடுத்துக்கிட்டு திரிஞ்சன்னா....இது மாதிரிதான் உனக்கு கடைசி காலமிருக்கும்.."அம்மா சொல்வது காதில் விழுந்தது.

குளித்து விட்டு வந்து சாப்பிடாமல் புறப்பட்டான்.

"எங்கடா சாப்பிடாம கிளம்பிட்ட?"

"விருந்துக்கு போறேன்மா!"

"எங்க?"

"என் மாமியார் வீட்டுக்கு!"என்று சொல்லி விட்டு

மனைவி வனஜாவை கூப்பிட புறப்பட்டான்.

'இப்பவாவது புத்தி வந்ததே!' என்று மனதிற்குள் சொல்லி விட்டு பெருமூச்சு விட்டாள் கதிரின்அம்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com