மரு பெயர்ச்சி

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

“பென்சன் பெர்முடாஸ்” என்ற குழுவில் அங்கத்தினராக இருந்தார் பரந்தாமன். பென்சன் வாங்குவோருக்கான குழு அது. அதில் பெருவாரியானவர்கள் பெர்முடாஸ் போட்டுக் கொண்டு ஸ்லீவ்லெஸ் போடும் மருமகளை திட்டிக் கொண்டிருப்பார்கள்.

அந்த குழுவின் ஆண்டு விழாவில் ஒரு மாறுவேடப் போட்டி வைத்தார்கள். ரவுடி வேடம் போட்டு ரவுசு விடலாம் என பரந்தாமன் முடிவெடுத்தார்.

மனைவியிடம் போனார்.

“செங்கமலம். ரவுடி வேஷம் எப்படி போடறது? நீ காஸ்ட்யூம் டிசைனரா இரேன்” என்றார்.

“ரவுடிக்குன்னு சில சாமுத்ரிகா  லட்சணம் இருக்கு. உங்க கிட்டே கத்தரிக்கா லட்சணம் கூட இல்லே. விட்டுடுங்க” என்றார் செங்கமலம்.

“போட்டிக்கு நான் பேர் கொடுத்திட்டேன். ப்ளீஸ்” என்று கெஞ்சினார் நாளைய ரவுடி.

“வயத்துல பெரிய கீறல் இருக்கணும். ரன்னர் இல்லாத ஜிப் மாதிரி ஒரு பெரிய கோடு இருக்கணும்”

“ஐயோ...ஜிப் வைச்ச ரவுடி வேணாம்”

“அப்போ பட்டன் வைச்சிக்கறீங்களா?”

“பட்டன், காஜான்னு டெய்லர் மாதிரி பேசறே நீ! சிம்பிளா ஏதாவது சொல்லேன்”

“கன்னத்துல மரு ஒட்டிக்குங்க. பி.எஸ்.வீரப்பா காலத்துலேந்தே ரவுடின்னா மரு தான்”

கூறிவிட்டு வெளியே போய் விட்டார் செங்கமலம்.

இப்போது மருவுக்கு எங்கே போவது? உடனடியாக மரு வளர்வது போல மரு புஷ்டி டானிக் ஏதாவது பழனி வைத்தியரிடம் கிடைக்குமா எனப் பார்த்தார். அப்படி எதுவும் இல்லை.

மருவை ஒட்டிக் கொள்வதே புத்திசாலித்தனம் எனப் புரிந்தது. கருப்பாக வட்டமாக உப்பலாக ஏதேனும் வேண்டும். கருப்பு நிற ஜெம்ஸ் மிட்டாய் ஒட்டலாம். ஆனால் யாரேனும் கன்னத்தில் முத்தமிட்டு அதை களவாட வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த திட்டத்தை கை விட்டார்.

டூல் பாக்ஸில் தேடியதில் ஒரு சிறிய கருப்பு பிளாஸ்டிக் வில்லை கிடைத்தது. ஸ்டாம்ப் ஒட்டும் பசை கொண்டு அதை கன்னத்தில் ஒட்டிக் கொண்டார்.

அதை ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டார்.

மாறு வேடப் போட்டியில் அவருக்கே முதல் பரிசு கிடைத்தது. பெர்முடாஸ் பக்கிரி என்ற விருதும் கொடுத்தார்கள்.

மருவுடன் வீட்டுக்குப் போனார்.

“என்ன இது அசிங்கம்? அந்த மருவை எடுங்க” என்றார் செங்கமலம்.

“சும்மாயிரு. அவார்ட் வாங்கின மரு இது. மரு வைத்த மணாளனே மங்கையின் பாக்கியம்” என்றார் பரந்தாமன்.

“கஷ்டப்பட்டு ஒட்டியிருக்கேன். ஒரு நாள் மட்டும் இருக்கட்டுமே”

“என்னமோ தொலைங்க. மறந்தும் மருவோட என் மூஞ்சீல முழிச்சிடாதீங்க”

நகைக்கடையிலிருந்து செங்கமலத்துக்கு போன் வந்தது.

“மேடம். நீங்க தங்க ராணி போட்டில கலந்துகிட்டீங்க இல்லே. அதுல உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு. பத்து பவுன் நகை”

“வாவ்” என்றார் அவர்.

ஏ.சி ஆன் செய்யப் போனார் மிஸ்டர் பரந்தாமன்.

“அது வேலை செய்யாது. ரெண்டு மாசமா ரிப்பேர்” என்றார் செங்கமலம்.

ஆன் செய்தவுடன் ஏ.சி ஓட ஆரம்பித்தது.

சற்று நேரத்தில் வேலைக்காரி செல்வி வந்தாள்.

“அம்மா..மூனாவது வீட்ல ஊருக்குப் போயிருக்காங்க. ஃப்ரீ டைம் இருக்கு. உங்க வீட்ல ஒட்டடை அடிச்சிடட்டுமா?” என்றாள்.

அடிப்பாவீ. செர்வண்ட் மெயிட் மேனுவலில் இல்லாத வேலை எல்லாம் செய்கிறேன் என்கிறாளே! என்ன ஆயிற்று இவளுக்கு?

“என்னங்க. எல்லாமே வித்தியாசமா, நமக்கு சாதகமா நடக்குது?”  என்றார் செங்கமலம்.

பரந்தாமன் யோசித்தார். திடீரெனக் கத்தினார்.

“புரிஞ்சு போச்சு. எல்லாம் மரு செஞ்ச மிராக்கிள். வலது கன்னத்துல மரு அடி எடுத்து வைச்ச வேளை”

அதன் பிறகு எல்லாமே அதிர்ஷ்டமாக நடந்தன. தினமும் பொங்கி வழியும் பால் கூட பாலடங்கு உத்தரவு போட்டது போல பாத்திரத்திலேயே அடங்கி இருந்தது.

எல்லாம் மூன்று நாட்கள் தான். மூன்றாம் நாள் கோந்து பிய்த்துக் கொண்டு ஒட்டிய மரு கீழே விழுந்தது.

மறுபடியும் ஏ.சி ரிப்பேர் ஆனது. வேலைக்காரி இரண்டு நாள் லீவு போட்டாள். பால் மறுபடியும் பொங்கி வழிந்தது.

“வேற வழியில்லே. நான் மறுபடியும் மருவை ஒட்டிக்கறேன்” என்று மருவை மைதா மாவு பசை போட்டு ஒட்டிக் கொண்டார் பரந்தாமன்.

மைதா மாவு பசைக்கு வாரண்டி கிடையாது என அவருக்குத் தெரியவில்லை.

அடுத்த நாள் பல் தேய்க்கும் போது மரு கழண்டு வாஷ் பேசின் ஓட்டையில் விழுந்து மர்கயா ஆனது.

மரு விழுந்த அன்று செங்கமலத்தின் காது திருகாணியும் எங்கோ விழுந்து தொலைந்து போனது.

“இதுக்கு ஒரே வழி தான். நிரந்தர மரு” என்ற பரந்தாமன் ஒரு பிளாஸ்டிக் சர்ஜனைத் தேடிப் போனார்.

எம். மருதநாயகம், பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெயர்ப் பலகை வரவேற்றது.

முன் அறையில் பிளாஸ்டிக் சேர்கள் இருந்தன. அவைகளில் ஒட்டு போடப்பட்டிருந்தது.

“நான் ப்ளாஸ்டிக் சர்ஜன். என் மூச்சு, காத்து எல்லாமே ப்ளாஸ்டிக் தான். நான் ப்ளாஸ்டிக்லயே பொறந்தவன்” என்றார் டாக்டர்.

அவருடைய அம்மாவின் கர்ப்பப்பை ஒரு Carry bag ஆக இருந்திருக்குமோ என்று தோன்றியது பரந்தாமனுக்கு.

“சரி. சொல்லுங்க. உங்களுக்கென்ன செய்யனும்?”

“எனக்கு ஒரு மரு ஒட்டனும்”

“அதுக்கு என் கிட்டே ஏன் வந்தீங்க?”

“டாக்டர். மரு ஒட்டனும்னா மருத்துவர் கிட்டே தானே போகனும். ஒரு சின்ன மரு ஒட்டினா போதும்”

“இவ்வளவு சின்ன வேலை எல்லாம் நான் செய்யறதில்லே”

“அதுக்காக மூஞ்சீல பெருசா விறட்டி ஒட்டிக்க முடியுமா  டாக்டர்? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே. மரு வைச்சிடுங்க”

டாக்டர் யோசித்தார்.

“சரி. செய்யறேன். மரு எங்கே ஒட்டனும்?”

“கன்னத்துல”

“எந்த இடத்துல வைக்கனும்?”

தன் செல்போனில் இருந்த போட்டோவைக் காட்டினார் பரந்தாமன்.

“இதே மாதிரி வேணுமா?”

“ஆமா. இது தான் லக்கி மரு. அதே இடத்துல இருக்கனும்”

“சரி. போட்டோவை எனக்கு வாட்ஸ் அப்ல அனுப்புங்க. ஆனா நிறைய செலவாகுமே”

“வாட்ஸ் அப்ல அனுப்பினா செலவாகாது டாக்டர்”

ஒரு வாரத்தில் பரந்தாமன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

ஆபரேஷன் முடிந்தது.

“உங்களுக்கு மரு ஒட்டியாச்சு. எருமை மாட்டுத் தோல்லேந்து செஞ்ச மரு. நீங்க நன்றி சொல்லனும்னா உங்களுக்கு தோல் கொடுத்த எருமைக்கு நன்றி சொல்லுங்க”

“எருமை மாடா?”

“ஆமா..எருமை தான் உங்களுக்கு தோலர். அந்த தோல் தான் மருவுக்கு மேட்ச் ஆகுது. உப்புத் தண்ணி என்ன...இனிமே சேத்துத் தண்ணி பட்டா கூட இந்த மருவுக்கு எதுவும் ஆகாது”

“அந்த எருமைக்கு நான் ஏதாவது செய்யனுமா டாக்டர்?”

“எருமை முதுகு தேய்ச்சுக்கறதுக்கு உங்க வீட்டு காம்பவுண்ட் சுவத்தை ஒதுக்கிக் கொடுத்தா போதும்”

“செய்யறேன் டாக்டர்”

“ஒரு வாரம் கழிச்சு தான் கட்டு அவுக்கனும். எருமை தோல் அவ்வளவு சீக்கிரம் ஒட்டாது. உங்களுக்கே தெரியும். எருமை ஈஸ் வெரி ஸ்லோ”

டிஸ்சார்ஜ் ஆகும் போது பணம் செலுத்தும் போது க்ரெடிட் கார்ட் சரியாக வேலை செய்யவில்லை.

வீட்டுக்கு போகும் வழியில் டாக்ஸி டயர் பஞ்சர் ஆனது.

பரந்தாமனுக்கு குழப்பமாக இருந்தது. மரு ஒட்டிய பிறகும் ஏன் இப்படி தப்புத் தப்பாக நடக்கிறது?

ஒரு வாரம் கழித்து செங்கமலம் வந்து கட்டை அவிழ்த்தார்.

சிறிது நேரம் பரந்தாமன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னங்க. எருமை எங்கேயோ உதைக்குதே?”

“எங்கே?”

“உங்க மூஞ்சில வலது பக்கம் தானே மரு வேணும்னு கேட்டிருந்தீங்க. இப்போ இடது பக்கம் இருக்கே”

இருவரும் டாக்டரைப் பார்க்க ஓடினார்கள்.

“டாக்டர். மருவை ராங் சைட்ல ஒட்டிட்டீங்க”

“நோ. நான் சரியா தான் ஒட்டியிருக்கேன்”

“மரு வலது பக்கம் வரணும்”

“வலது பக்கம் வரக்கூடாது” என்ற டாக்டர் வாட்ஸ் அப்பில் வந்திருந்த போட்டோவைக் காட்டினார்.

“பாருங்க. போட்டோல மரு இடது பக்கம் தான் இருக்கு”

“ஐயோ...டாக்டர்... அது செல்பி. இடதும் வலதும் மாறிதான் காட்டும்”

“நீங்க செல்பின்னு என்கிட்டே சொன்னீங்களா?”

“இப்போ என்ன செய்யறது? வைச்ச மருவை எடுக்க முடியுமா?”

“முடியாது”

“இடது பக்கம் மரு வைச்சதால எனக்கு எல்லாமே தப்புத் தப்பா நடக்குது. வீட்ல ஃபேன் ஸ்விட்ச் போட்டா கிரைண்டர் ஓடுது. கிரைண்டர்லேந்து காத்து வருமா சார். சொல்லுங்க”

“வராது. ஃபேன்லேந்து தோசை மாவும் வராது. ஆனா தப்பு உங்க மேலதான். நீங்க ஏன் செல்பி போட்டோவை காட்டினீங்க?”

“சரி டாக்டர்... வலது பக்கம் இன்னொரு மரு ஒட்ட வைச்சிடுங்க. ப்ளஸ் மைனஸ் சேர்ந்தா நியூட்ரல் ஆயிடும்”

“ஸாரி. அந்த எருமையை எர்ணாகுளத்துல ஒருத்தருக்கு வித்துட்டாங்க”  

தோலர் இப்படி துரோகம் செய்து விட்டதே! வெறுப்புடன் வீட்டுக்குப் போனார்கள் இருவரும்.

“வலது பக்கம் மரு இல்லேன்னா வீட்ல கெடுதல் நடக்க ஆரம்பிச்சுடும்” என்று புலம்ப ஆரம்பித்தார் பரந்தாமன்.

“நிம்மதியா படுங்க. காத்தால பாத்துக்கலாம்”

மறுநாள் காலை. கண் விழித்தார் பரந்தாமன். செங்கமலம் எதிரே வந்து நின்றார்.

அவர் வலது கன்னத்தில் மரு இருந்தது.

“ஸ்டிக்கர் பொட்டு ஒன்னு மேல ஒண்ணா வைச்சு மேல மை பூசிட்டேன். மருவும் வைப்பாள் பத்தினி” என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com