முதுமை என்னும் முழு நிலா!

முதுமை என்னும் முழு நிலா!

மறதிக்கு குட்பை!

பகுதி 2

அல்ஸைமர் டிமென்சியா

முதுமையில் மறதி ஏற்படுவது என்பது சாதாரண நிகழ்வுதான். என்றாலும் அது தீவிரமடையும்போது டிமென்சியா என்னும் நோயாக மாறலாம்.  இந்த நோய் 1906-ம் ஆண்டு  ஜெர்மனியின் மனோதத்துவப் பேராசிரியர், டாக்டர் அலோசிஸ் அல்சமையர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

முதுமையைத் தாக்கும் இந்தக் கொடிய நோய்க்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இது பாரம்பரியமாகவும் வர வாய்ப்புள்ளது.  முக்கியமாக 60 வயதுக்குள் இந்நோய் ஒருவரைத் தாக்கியிருந்தால் அவருடைய முன்னோர் யாருக்கேனும் இந் நோய் இருந்திருக்கலாம் அல்லது இளம் வயதில் அவருக்குத் தலையில் காயம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.

டிமென்சியா நோய் எவரையும் தாக்கலாம். ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன், ஆண்- பெண் என்று பேதமின்றி வயதானவர்களை இது தாக்கும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரெனால்டு ரீகன், பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி போன்றோரும் டிமென்சியா நோயாளிகளே.

அல்ஸைமர் டிமென்சியாவின் அறிகுறிகள்:-

டிமென்சியாவின் அறிகுறிகள் தாமதமாக வெளிப்படுவதால் அதை  எளிதில் கண்டுகொள்ள முடிவதில்லை.  இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும்.  இதை, கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்டுபிடித்து, இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று  சந்தேகப்பட்டு, அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போதுதான் டிமென்சியா பாதிப்புள்ளதா என தெரியவே வரும். 

டிமென்சியாவின் பத்து அறிகுறிகள்

1. மறதி - இந்நோயின் முதல் அறிகுறி, மறதியில்தான் ஆரம்பமாகிறது.  இவரது மறதிக்கு ஒரு தனித்தன்மை உண்டு.  முக்கியமாக அண்மைக்கால நினைவுகள் (Recent memory) பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த கால நினைவுகள் மட்டும் (Past memory) நிலைத்திருக்கும். 

2. ஒரு பொருளை எங்கோ வைத்து விட்டு வேறு எங்கோ தேடுவது.

3. நடை, உடை, பாவனைகளில் மாற்றம்.

4. பழகிய வேலைகள் செய்வதில் தடுமாற்றம்.

5. இடம், காலம் அறிவதில் சிரமம்.  உதாரணம்: டாக்டரின் கிளினிக்கை ஹோட்டல் என்பார். காலை - மாலை கால வித்தியாசம் தெரியாது.

6. பேசுவதில் சிரமம்.

7. முடிவெடுப்பதில் சிரமம்.

8. பகுத்தறியும் தன்மை குறைதல்.  உதாரணம்: இட்லியை பூரி என்பார். அதைத் தவறு என்று சொன்னாலும் திருத்திக் கொள்ளமாட்டார்.

9. அடிக்கடி மாறுபடும் மனோநிலை.

10. எதையும் ஆரம்பிக்கும்போது தயக்க நிலை.

இந்நோயின் தன்மையானது தீவிரமடைய அடைய, அன்றாட வேலைகள்  பாதிக்கப்படும்.  அதாவது அவர்  குளிப்பதற்கும், உடை உடுத்துவதற்கும்,  சாப்பிடுவதற்குமே மற்றவர் உதவி தேவைப்படும். 

சுருக்கமாகச் சொன்னால் மனதளவில் இறந்து, உடல் அளவில் வாழும் மனிதராக இருப்பார்.  இறுதியாக, உட்கொள்ளும் உணவும் குறைந்து உடல் இளைக்க ஆரம்பித்துவிடும்.  நடமாட்டம் குறைந்து, படுக்கைப் புண், நெஞ்சில் சளி போன்ற தொல்லைகள் ஏற்படும்.  டிமென்சியா ஆரம்பித்ததிலிருந்து சுமார் 7 - 10 ஆண்டுகளுக்குள் அவருடைய இறுதிப் பயணம் நடந்துவிடும்.  

நோயை எப்படிக்  கண்டறிவது?

டாக்டர், டிமென்சியா நோயாளியை முழுமையாகப் பரிசோதனை செய்து, இது  அல்ஸைமர் டிமென்சியாவா அல்லது வேறு காரணங்களால் வரும் டிமென்சியாவா என்று கண்டறிய

Mini Mental Status Examination, இரத்தப் பரிசோதனை, C.T. Scan, MRI Scan மற்றும் PET Brain Scan ஆகியவற்றை செய்வார்.

சிகிச்சை முறை

இந்நோயைப் பூரணமாகக் குணப்படுத்த கூடிய மருந்துகள் இன்னமும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அதன் வீரியத்தைக் குறைக்க சில மருந்துகள் உள்ளன.  இந்த மருந்துகள் நரம்பு மண்டலங்களை  (neuro protectives)  பாதுகாக்கும் தன்மை கொண்டவை.  இவற்றின் மூலம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம்.

வைட்டமின் E, C போன்ற மாத்திரைகள் (antioxidants)  .

வைட்டமின் B6, B12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற மாத்திரைகள் இரத்தத்திலுள்ள ஓமோசிஸ்டின் அளவைக் குறைத்து ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.

இரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய மாத்திரைகளும் சிறிது பயன் தரலாம்.

Ginkgobiloba என்ற தாவர சிகிச்சையும் ஒரு சிலருக்குப் பயன் அளிக்கும்.

மாத்திரைகள் உட்கொள்வதால் ஆரம்ப நிலையிலுள்ள டிமென்சியா நோயாளிகளுக்கு மறதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஆனால், ஒரு சில பின்னடைவுகளும்  ஏற்படலாம். எந்த மாத்திரையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் சரியான விகிதத்தில் சரியான நேரத்துக்கு உட்கொள்ள வேண்டியது அவசியம்.

நினைவாற்றலை அதிகரிக்க

உடல் பருமன் இருப்பின், எடையைக் குறைப்பது மிகவும் அவசியம்.

மனிதனுக்கு சுமார் 5 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.  இதை குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.

உடற்பயிற்சி: அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் ஓர் ஆய்வு செய்யப்பட்டது.   300 பேருக்கு தினசரி 6 மைல் தூரம் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் நடைப்பயிற்சி செய்பவர்களைவிட நடைப்பயிற்சி செய்யாதவர்களின் மூளையானது விரைவில் சுருங்கி விடுகிறது எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து  நரம்பியல் ஆய்வாளர் கிர்க் எரிக்சன் கூறியதாவது: முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்ஸைமர் மறதி நோய்,  டிமென்சியா ஆகியவைத் தடுக்கப்படுகின்றன. ஆகையால் தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரம் அல்லது  45 நிமிடம் -  ஒரு மணி  நேரம் நடைப்பயிற்சி மிக அவசியம். 

கால முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு நோயிருப்பின் அதற்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம்.

ஒரு சில மாத்திரைகளாலும் மறதி ஏற்படலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று அதிகப்படியான மாத்திரைகளைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முற்படலாம்.

அதிக மது, புகை மறதியைக் கொடுக்கும். அவற்றைக்  குறைப்பது அல்லது நிறுத்துவது நல்லது.

முதுமையின் எதிரி தனிமை. எப்பாடுபட்டேனும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உதாரணம்: ஏதாவது பொழுதுபோக்கு சங்கத்தில் உறுப்பினர் ஆவது மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர்  வீட்டுக்குச் செல்வது,  சமூக சேவை செய்வது.

மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.  உதாரணம்: தோட்டக்கலை, ஆன்மிகத்தில் ஈடுபடுவது,  வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடி மகிழ்வது.

தியானம் : தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது தியானப் பயிற்சி செய்து வர வேண்டும். ‘உறங்கிக் கிடக்கும் மூளையிலுள்ள திசுக்களை உசுப்பி விடும் சக்தி தியானத்துக்கு உண்டு’ என்று பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பி.ராமமூர்த்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராணாயாமம் செய்வதால் நினைவாற்றலைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்.

தினமும் மூளையைத் தூண்டக்கூடிய செயல் ஒன்றை தவறாமல் செய்ய வேண்டும்.

உதாரணம்:

- காலையில் திருக்குறள் ஒன்றைப் படித்துவிட்டு, அதை இரவில் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம். 

- ஒரு தாளில் பத்து பொருட்களின் பெயரை எழுதிவிட்டு சில மணி நேரம்  கழித்து அவற்றை நினைவுப் படுத்திப் பார்க்கலாம்.

- தினமும் சிறிது நேரம் கம்ப்யூட்டரை உபயோகித்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

-  சுடோகு, செஸ், கேரம், குறுக்கெழுத்துப் புதிர், வினாடி வினா போன்ற மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

மூளைக்கேற்ற சத்துணவு

பசலைக் கீரை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வெங்காயம்,  மீன், காஃபி, கிரீன் டீ, லவங்கம், பட்டை, முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ராஜ்மா, உலர் திராட்சை, முளைக்கட்டிய கோதுமை மற்றும் வல்லாரைக் கீரை.

இந்த உணவுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை  தினசரி நாம் உண்ணும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம்!

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் செப்டம்பர்  2012 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com