கல்லூரி கால அனுபவம்
புஷ்ஷ்ஷான காதல்..!!
ஒவ்வொரு சனிக்கிழமையும் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு தவறாது செல்லும் பழக்கம் எனக்குண்டு அப்போது அவனும் வரத் துவக்கிருந்தான்.. சனீஸ்வரனுக்கு அருகில் ஆஞ்சநேயர் வீற்றிருப்பார் என்பதால் அவன் சனீஸ்வரனை சுற்றுகையில் நான் ஆஞ்சநேயரை சுற்றுவேன்.. அவன் ஒன்பது கிரகங்களுக்கு முறைவைத்து ஒன்பது சுற்று சுற்றுவான் நான் வேறுவழியின்றி ஆஞ்சநேயருக்கு ஒன்பது முறை சுற்றுவேன் பிரகாரம் அருகே இருப்பதால் ஒவ்வொரு சுற்றிலும் எதிரெதிர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

என்னைப்போலவே அவனும் ஓரப்பார்வையில் பார்த்திருக்கூடும் தான். இப்படியே வாரங்கள் நகர சட்டென அவன் வருகை இல்லாது போனது. கடவுளுக்காக தொடங்கப்பட்ட என் கோவில் பிரவேசம் பின்னாளில் அவனால் நின்றுப்போனது.
நீண்டவருடத்திற்கு பின் அதே கோவில் தெருவில் அவனை மீண்டும் சந்தித்த போது ஒரு புன்னகையை உதிர்த்து "நான் பெங்களூர்ல வேலை பார்க்கிறேன்" என்றான்.
"இனி நீ என்ன செய்தால் என்ன கிராதகா' என மனதிற்குள் அவனை வஞ்சித்தப்படி "ஓ அப்டியா" என சொல்வதற்குள் கணவரின் அழைப்பு காதில் விழ "சரிங்க பார்க்கலாம்" என நகர்ந்தவள் அதன்பிறகு அவனைப் பார்க்கவே இல்லை.
- மதுரை சத்யா