குட்டிக் கதைகள்!
அவனும் நானும்!
நான் முதன்முதலில் அவனைப் பார்த்தது எங்கள் குடியிருப்பின் லிஃப்ட்டில்தான். துறுதுறுவென அவனது விழிகள் என்னை உடனே அவன்பால் ஈர்த்தன. என்னை அவன் கவனித்தும், பார்க்காததுபோல நின்றிருந்தான். அவ்வப்போது ஓரக்கண்ணால் என்னை நோட்டம் விட்டான். அதனை நான் கவனிக்கத் தவறவில்லை. அதன் பிறகு எங்களுக்குள் பல சந்திப்புகள். பல நெகிழ்ச்சியானத் தருணங்கள்.
இப்படி எங்கள் உறவு மலர, காதலர் தினமும் வந்தது. மற்ற தினங்களைப்போல அதுவும் ஒரு தினம்தான். எனக்கு அந்தத் தினத்தன்று பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்போ அல்லது நாட்டமோ இருந்தது இல்லை. ஆனால், அன்றைய தினத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியவன் அவனே. அன்று மாலை, நானும் எனது கணவரும் சேர்ந்து எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். ஓ! நான் சொல்ல மறந்தேவிட்டேன், எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நானும் எனது கணவரும் லயித்து அந்தப் பெட்டியைப் பார்த்தவேளை, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வீட்டின் கதவைத் திறந்தார் எனது கணவர். வாசலில் அவன் நின்றிருந்தான். எனது கணவரைப் பார்த்தும் பாராதது போல உரிமையாக வீட்டின் உள் நுழைந்து, சோஃபாவில் அமர்ந்திருந்த எனது அருகில் வந்து நின்றான். வந்தவன், அவன் கையில் இருந்த பன்னீர் ரோஜா ஒன்றை என்னிடம் கொடுத்தான். நான் நெகிழ்ந்து போனேன். அவன் கொடுத்த மலரை ஆசையாக வாங்கி என் தலையில் சூடிக்கொண்டேன். என் கணவரும் இந்த நிகழ்வை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஏய், எனக்கும் ஒரு ரோஜா குடுடா,” என்றார் என் கணவர் அவனிடம் கெஞ்சலாக. “முடியாது! ஆண்டிக்கு மட்டும்தான்,” என்று கூறியவன், வெட்கத்தின் மிகுதியால் வேகமாக எனது வீட்டிலிருந்து குதித்து வெளியேறினான்.

ஆம், என் மேல் அவ்வளவு பிரியம் வைத்தவன், எனது ஐந்து வயது மகளின் நண்பன். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். அவன் என் மேல் வைத்திருந்த மாசற்ற அன்பு காதலெனில், அவன் எனது மனதை கொள்ளைக் கொண்ட கண்ணன். அந்த
காதலர் தினம், என் வாழ்வில் மறக்க முடியாத ஓர் தினமாக மாறியது.
- மஞ்சுளா சுவாமிநாதன்
-----------------
“அறுபது நாள் ஆசை”
முகநூலில் கணக்கு தொடங்கியதும், ரேவதிக்கு நட்புக் கோரிக்கை குவிந்தது. ஒவ்வொருவராய் பார்த்து ஒப்புதல் கொடுத்தாள். அதில், ‘ஜகன்’ என்ற ஆண் நண்பரின் பதிவுகள் அவளைக் கவர்ந்தன.
சில நாட்களில், முகநூல் உள்பெட்டியில் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்த இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அறுபது நாட்கள் கடந்ததும், ஜகனை நேரில் காணத் துடித்து, விருப்பத்தை உள்பெட்டிக்கு அனுப்பினாள் ரேவதி.
“குறிப்பிட்ட தியேட்டர் வாசலில் நீலநிறக் கார் ஒன்றில் அமர்ந்திருப்பேன். நாளை வரவும்…” என பதில் வந்தது.
மறுநாள், தியேட்டர் அருகே சென்று, தூரத்திலிருந்து கவனித்தாள் ரேவதி. நீலநிறக் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவன், சுற்று முற்றும் பார்த்து ரேவதியைத் தேடினான். ஏறக்குறைய, அறுபது வயது கடந்த உருவத்துடன் ஜகனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அறுபத்தைந்து வயது ரேவதி, தன் அறுபது நாள் ஆசை நிராசையாகிவிட்ட விரக்தியில், சோகமாய் திரும்பினாள் தன் இல்லத்தை நோக்கி!
- பூபதி பெரியசாமி
-----------------
காதலாவது கத்திரிக்காயாவது!
ரோஜா தன் காதலன் மதனுடன் கடற்கரையில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிவிட்டு திரும்பி வரும் வழியில் காதலை ஏன் கத்திரிக்காயோடு ஒப்பிட்டுப் பேசுகின்றனர் என்று யோசித்துக்கொண்டே வீடு வந்தாள்.

மறுநாள் காலை அவள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. செல்லில் சிம் மாற்றப்பட்டது. வீட்டு லேண்ட் லைன் போன் சரண்டர் செய்யப்பட்டது. ரோஜாவின் அப்பா செல்வாக்கால் மதன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவனுக்குக் கொடுத்த செல்லைத் திருப்பி வாங்கிக்கொண்டு அவன் வடமாநிலத்துக் கிளைக்கு மாற்றப்பட்டான்.
ரோஜாவையும் மதனையும் பீச்சில் பார்த்த அவள் அப்பா அவர்கள் இருவருக்கும் இருந்த தொடர்பைக் கத்திரித்துவிட்டார்.
இப்போது புரிந்துகொண்டாள் காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் உள்ள தொடர்பை.
- ஹேமலதா சீனிவாசன், சென்னை
-----------------
கன்னத்தில் முத்தமிட்டேன்!
அன்று பிப்ரவரி 14. ‘காதலர் தினம்’ நான் கல்லூரி செல்ல வேண்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான். அப்போது அவன் மெதுவாக நடந்து வந்தான். அவனைக் கண்ட உடனே எனக்கு ஆச்சரியமாக இருந்தது!
கொள்ளை அழகாக இருந்தான்! கொஞ்ச வேண்டும் என்று எனக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் இடம் பொருள் ஏவல் கருதி அதை அடக்கிக்கொண்டேன்.
ஆனால், அவன் என்னைக் கண்டதும் உடனே கண்களை விரித்தான். பின்பு ஒரு கண்ணை மூடி லேசாக சிமிட்டிவிட்டு குறும்பாகச் சிரித்தான். அனைவரும் பார்ப்பது கண்டு அவன் அஞ்சவில்லை! எனக்கோ இப்படி ஒரு குறும்புக்காரனாக இருக்கிறானே என்று அனைவரும் பார்ப்பதை மறந்து விடுவிடுவென்று அவனிடம் சென்று கன்னத்தில் முத்தமிட்டு விட்டேன்!
அவனும் இதை எதிர்பார்க்கவில்லை. இப்போது அவன் வெட்கம் கொண்டு அவன் தாயின் இடுப்பைப் இறுகப் பிடித்துக் கொண்டான்.
- கீதா ராணி, பிரகாஷ், வெள்ளக்கோவில்
-----------------
மீண்டும் ஒரு காதல் கதை
பிப்ரவரி 14-ஆம் தேதியின் இரவு பத்து மணி. ஹரியின் நண்பர்கள் தம் மனதுக்குப் பிடித்த நங்கையரிடம் அன்று ப்ரொபோஸ் செய்த விவரங்களையும் வாங்கித் தந்த பரிசுகள் பற்றியும் ஆவலுடன் பகிர்ந்தனர்.
“டேய் ஹரி, நீ என்னடா பண்ணுன இன்னைக்கு?” சிவா கேட்க,
“சேர்ந்து வாழப் பிடிக்காம டைவர்சுக்கு அப்ளை பண்ணி, பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கிற மோனிஷ் அதிதியை மகாபலிபுரம் கூட்டிட்டுப் போனேன்.

இன்னைக்கு முழுக்க இரண்டு பேரும் மனசு விட்டு பேசினதுல, பிரிய வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க” என்றான் ஹரி.
"கிரேட்டா!” அவன் கைப்பற்றி குலுக்கிப் பாராட்டினர் நண்பர்கள்.
- அம்ருதா, ஈரோடு
-----------------
காதல் பரிசு!
'இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கௌரி கோயிலுக்குப் போவாள். ஒரு ரோஜாப் பூவை வாங்கி, இந்த மோதிரத்தையும் கொடுத்து விட வேண்டியதுதான்...' கிருஷ்ணன், பீரோவைத் திறந்து, மறைத்து வைத்திருந்த 'கேஜி' என்ற இனிஷியல் போட்ட மோதிரத்தை திருப்தியுடன் பார்த்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
சன்னிதியைச் சுற்றி வந்து குளத்து படியில் அமர்ந்த கௌரியிடம், ராஜாவுடன் சேர்த்து மோதிர டப்பாவை நீட்ட, "என்ன நடக்குது இங்கே?" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர் .
"ஒண்ணுமில்லைமா... இருபது வருடங்களுக்கு முன்னாடி, உங்கம்மாவை லவ் பண்ணினேன். விஷயம் தெரிந்து உங்க தாத்தா, பாட்டி உடனே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அடுத்தடுத்து நீயும், உன் தம்பியும் பிறந்திட்டீங்க. உங்க அம்மாவுக்கு இதுவரை காதலர் தினத்துக்கு ரகசியமா ஒண்ணுமே பரிசு கொடுத்ததில்லை. அதான்..." கிருஷ்ணன் வழிந்தார்.
"சஸ்பென்ஸ் போதும்... நீங்க வாங்கி வச்சிருந்ததை நாங்க பாத்துட்டோம்... அம்மாவுக்குப் போட்டு விடுங்க, அப்பா..." என பிள்ளைகள் இருவரும் கைத் தட்ட, கௌரியும் கிருஷ்ணனும் ரொம்பவே வெட்கப்பட்டார்கள்.
- சாந்தினி, மதுரை
-----------------
சிவா மனசுல யாரு?
சிவா மனசுல யாரு இருக்கான்னு, பிப்ரவரி 14ம் தேதி நம்ம கிளாஸ் குரூப்ல வாட்ஸ்அப் மெசேஜ் வருமாம். காலேஜ் கேன்டீனில்டீயை உறிஞ்சியவாறே சொன்னான் விஜய்… அப்படியா! ஆச்சர்யத்தில் மற்ற நால்வர் புருவங்களும் உயர்ந்தன.
சிவரஞ்சனிக்கு என் மேலேதான் பிரியம். நிறைய தடவை ஸ்கூட்டர்ல பின்னால உட்காரவச்சு கூட்டிட்டு வந்திருக்கா… கிரி காலரைத் தூக்கினான்.
அட போடா… போனவாரம் எங்க வீட்டுக்கு வந்தப்போ, அத்தைன்னு உரிமையா கூப்பிட்டு, உங்க பில்டர் காபிக்காகவே உங்க வீட்டுக்கு வந்துடலாம்ன்னு மறைமுகமாச் சொன்னா... அம்மாவுக்கும், அவளை ரொம்பப் புடிச்சுப்போச்சு. ஐயா ரூட் கிளியர்... துள்ளினான் சந்தோஷ்.
என் தங்கச்சியும்தான் சொன்னா, பியூட்டி பார்லர்ல சிவரஞ்சனி பிரியமா பேசுனாளாம். அண்ணா, உன்னை லவ் பண்ற மாதிரி தெரியுதுன்னா. அவ எனக்குத்தான் மாதவன் மார்தட்டினான்.
ஏண்டா, அடிச்சுக்கிறீங்க... இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணுவோமே. வினோத் முற்றுப்புள்ளி வைத்தான்.
அந்த நாளும் வந்தது. க்ரூப்பில், சிவரஞ்சனி அனுப்பிய மெசேஜ், "எனக்கு சுஜாதாவை ரொம்பப் பிடிக்கும்." அடிப்பாவி, உம் மனசுல எங்கள்ள யாருக்கு இடம் தந்திருக்கன்னு கேட்டா சுஜாதான்னு சொல்லி எங்களைப் புலம்ப வச்சுட்டியே...பொருமினர்.
அதே நேரம், அவள் மனசுல தனக்கு இடம் கொடுத்த மகிழ்ச்சியைக் கொண்டாட, பொக்கே வாங்கக் கிளம்பினான் கிளாஸ்மேட் ரங்கராஜன்...
- என்.கோமதி, நெல்லை