காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்!

காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்!

கவிதை!

மணவாளனாய் உன்னைக் கண்டேன் 

மாசிலா காதல் கொண்டேன் 

மாசியில் உன்னை மணந்தேன்

மஞ்சத்தில் என்னை தந்தேன் !

கேட்கும் வரங்கள் நீ தந்தாய் 

மழலைகள் இரண்டு தந்தாய்

வேதனை வரும் நாட்களிலும் 

வேலை மிகுந்த நாட்களிலும் 

வேர் போல் துணை நிற்பேன் 

வேறு என்ன நான் செய்வேன்!

- சௌமியா சுப்ரமணியன். சென்னை

**********************************

‘காதல் செய்வீர்’

ம்பரமாய் பார்வை...
பூவாய் புன்சிரிப்பு...
செல்லமாய் சிணுங்கல்..
சிலிர்ப்பாய் துள்ளல்...
குறும்பாய் பண்ணும் வேடிக்கை...
மனசெல்லாம் மத்தாப்பு...
தளர்ந்திடும் இறுக்கம்..
அத்தனையும் சங்கமிக்கும்
அன்பு பொங்கும் காதலில்
ஆதலினால்...
காதல் செய்வீர்...
முதுமையிலும் தவறாது...
- என். கோமதி, நெல்லை

**********************************
கேசாதிபாத வர்ணனை!

கண்ணாளா... 

என் கனவுலக நாயகரே என் கணவரே 

கரு நிற முடியுடன் அழகான தலை 

பிறைச் சந்திரன் போன்ற முன் நெற்றி 

திராட்சைப்பழம் போல கண் விழிகள் 

கூரிய மெல்லிய மூக்கு 

சிகரெட் பழக்கம் இல்லாததால் சிவந்த உதடுகள் 

உயரத்தைக் காட்டும் அழகான கழுத்து 

அகன்ற மார்பில் கருகருவென முடி 

ஒட்டிய வயிறு அதனை தாங்கி அழகிய இடுப்பு 

இரண்டு கைகளை மறைக்கும் கருத்த முடிகள் 

என்.சி.சி. மாணவர் என்பதை 

உணர்த்தும் வலுவானக் கால்கள் பார்த்து 

உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான

கேசாதிபாத வர்ணனை கவிதை  மலர்ந்ததே! 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**********************************

எச்சரிக்கை! 

ஓ... இளநெஞ்சங்களே! 

காதல் கடலில்

இறங்கும் முன்னே

கண நேரம் சிந்திப்பீர்! 

சாதித் திமிங்கிலமும், 

பண முதலைகளும்

சமயம் பார்த்து

காத்துக் கிடக்கின்றன

உங்களை 'கபளீகரம்' செய்ய! 

- வேலூர் மூ. மோகன்

**********************************

எது காதல் ?
ஆசை வார்த்தைகளைப்
பேசுவது மட்டுமல்ல
அன்பைப் பகிர்ந்து
கொள்வது தான் காதல்..!
ஊரை விட்டு ஓடிப் போக
நினைப்பதை விட
உறவுகளுடன் ஒற்றுமையாய்
வாழ்வதே காதல்..!
இடையில் பிரிவு என்பதை
எண்ணாமல்
இல்லறத்தில் இறுதி வரை
இணைந்திருப்பதே காதல் ..!

- என்.உஷாதேவி, மதுரை

**********************************

காதல்

காதலுக்கு கண் இல்லை 

சாதி மதம் ஏதும் இல்லை

அந்தஸ்து பேதம் கிடையாது

அழகும், அறிவும் தேவையில்லை

வயதும் பார்ப்பதில்லை

பாட்டி, தாத்தாவுக்கும் காதல் உண்டு

பாசம் என்று அதற்கு பெயரும் உண்டு!

- எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

 **********************************

காதலியும் கடல் அலையும்.

காதலை ப்ரபோஸ் செய்ய

'காத்திரு வருவேன்' என்றாள் 

காத்திருந்தேன் கடற்கரையில்

வீட்டில் சம்மதிக்கா விடில்

விபரீதம் ஆகுமென்றாள் 

விளையாட்டென்றெண்ணி

வழிமேல் விழி வைத்தேன் 

அவ்வேளை ஆங்கருகே

சுற்றி நின்றதொரு சிறு கூட்டம் 

அங்கே என்னவளின் உயிரற்ற உடல்… அடிப்பாவி... உயிர் என்ன  கடல் அலையா? மீண்டும் மீண்டும் வருவதற்கு...

- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

**********************************

சங்கமிக்கும் காதல்

அன்பு என்னும் கூட்டினிலே, 

ஒரு இதயம் கொண்ட ஆணும், பெண்ணும், 

இன்ப நதியில் குளித்து, 

இரவு மழையில் நனைந்து, 

காதலின் கதகதப்பை கார் இருள் மறைக்க, 

தேக்கி வைத்த காதல் எல்லாம் தேனாய் இனிக்கும், 

நெஞ்சு குழியை முத்தமிட ஒரு பிஞ்சு

சேய் பிறந்தது, 

பாசம் ஒன்றே, பாலம் இங்கே

வாழ்வின் வாசம் இன்னும் மாறவில்லை, 

வாழ்க்கை ஓடம், இன்பமாய்

 மிதக்க, 

இருவரும் போடும் துடுப்பு தான் நம்மின் இதய துடிப்பு, 

- வி. கலைமதிசிவகுரு,  நாகர்கோவில்

**********************************

நீ நினைப்பதெல்லாம் 

என் செயலில்.

மனதின் காதலை மவுனமாய் மொழிபெயர்க்கிறேன்.

விழி ஒளியில் 

கண்டு கொள் காதலை

வார்த்தைகள் அர்த்தமற்றவை.

உன் நினைவுகளை மறக்கிறேன்

எனசொல்லிக் கொண்டே

அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சட்டென ஒரு புள்ளியில் 

காணாமல் போய் விடுகிறாய்

நினைப்பதும் இழப்பதுமாய்

நான் மட்டுமே 

ஆடிக் கொண்டிருக்கிறேன்

காதல் கண்ணாமூச்சி.

- மகாலட்சுமி சுப்பிரமணியன்,  காரைக்கால்

**********************************

ஆதலினால் காதல் செய்வீர்!

ஆசை, அன்பு, பற்று, பாசம்,  நேசம்,  நட்பு  என காதலுக்கு

அர்த்தங்கள், அடுக்கடுக்காய், அகராதியில் காணக் கிடைத்ததால்,

ஆஹா! "சுவாரஸ்யமானது (தான்) காதல்” என்றுணர்ந்தேன்!

அதைப் பற்றிக் கவிதை புனையவும் துணிந்தேன்!!!

அண்ணல் காந்தி 'அஹிம்சை ' மீது கொண்டது  சத்தியக் காதல்!

அப்துல் கலாம் மாணவர்கள் மீது வைத்தது நம்பிக்கைக் காதல்!!

ஆதி சங்கரருக்கோ  அத்வைதத் தத்துவம் மீது காதல்!!!

தேசத்தின் மீது வைக்கும் நேசத்தின் பெயரும் காதல்!

பாசத்தில் ஊறித் திளைக்கும் உறவுகளின் அன்பும் காதல்!!

உயிர்கள் அனைத்தையும் உலகோர் நேசித்தால் அது உன்னதக் காதல்!!!

பயிர்கள் வாடினால் மனம் வாடுவது வள்ளலாரின் காதல்!

பல வண்ண மலர்களைத் தேடிச் செல்வது வண்டின் காதல்!!

பசித்த வயிற்றுக்கு உணவு அளிப்பது பண்பாட்டுக் காதல்!!!

 அவ்வையாரும் அதியமானும்  கொண்டது  நட்புக்  காதல்!

ஆண்டாள் நாச்சியார் அரங்கன் மீது கொண்டது தெய்வீகக் காதல்!!

இறைவன் மீது அடியார்கள் கொள்வது பக்திப் பரவசக் காதல்!!

 மழலைப் பருவத்தில் வரும் பொம்மைகள் மேல் காதல் !

மாணவப் பருவத்தில் வருவது விளையாட்டுக் காதல்!!

கல்லூரிக் காலங்களில் வருவது, கவர்ச்சிக் காதல்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் உண்மைக் காதல்!!!

 இத்தனை காதல்கள் இவ்வுலகில் இருக்கையில்,

இனக் கவர்ச்சிக் காதலுக்காக

அவரவர் விரும்பும் செயலை,  செய்யத் தயங்குவது ஏனோ?

வீணே உயிர் விடுவதும் ஏனோ?

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

அக்காதலில் வெல்வீர் உலகத்தீரே!

- பி. லலிதா, திருச்சி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com