வெண்ட்ரிலோக்விஸ்ட் கமல்!

வெண்ட்ரிலோக்விஸ்ட் கமல்!

மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து கறுப்பு வெள்ளை காலத்திலேயே தன் தனித்தன்மையான கேரக்டர் வார்ப்புகளின் மூலம் முத்திரை பதித்த பல படங்களை இயக்கியவர் கே. பாலசந்தர். தம் படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்திய கே. பாலசந்தர், தாம் இயக்கிய படங்களில் கமல்ஹாசனின் பங்களிப்பை இங்கே வியந்து கூறுகிறார்.  

ஒரு நாள், “உங்க டைரக்ஷன்ல நடிக்கணும்னு துடிக்கறான் சார் ஒரு பையன்!” என்று ஜெமினி கணேசன் கமலை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது,  ‘இன்னும் பால் மணம் மாறாத முகமாக இருக்கிறதே!’ என்று எனக்குத் தோன்றினாலும் அந்த முகத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கவர்ச்சி இருப்பதை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

“உரிய நேரம் வரும்போது நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன்; ஆனால் அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது!” என்று அன்றைக்குப் பதில் சொன்னேன்.

எனக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் காரணமாக கட்டாயம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியானது. அதன்பிறகு நான் இயக்கிய படம்தான் ‘அரங்கேற்றம்’. அதில்தான் கமல் ஒரு வாலிபனாக ஒரு முக்கியமான கேரக்டரில் அறிமுகம் செய்யப்பட்டார். ஷூட்டிங்கின்போது, சின்னச் சின்ன ஷாட்களில்கூட கமலிடம் ஒரு தனித்தன்மை, யதார்த்தத்தை நான் கவனித்தேன். கமலுக்குள் ஒரு சினிமா வெறி இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு தடவை நான் சொல்லாத ஒன்றைத் தானே செய்துகாட்டியது என்னை மிகவும் கவர்ந்தது.

அப்போதே நான் அனந்துவிடம், “இந்தப் பையனிடம் ஒரு ஸ்பார்க் இருக்கு. இவன் நல்லா முன்னுக்கு வருவான் பாரு!” என்று சொன்ன போது, அவரும் அதை முழுமையாக ஆமோதித்தார்.

மொத்தம் 34 நாட்கள் படப்பிடிப்பு. கமலுக்கு சம்பளமாக 500 ரூபாய்க்கு செக் கொடுக்கப்பட்டது. என்னைத் தனிமையில் சந்தித்த கமல், “சார்! 34 நாள் ஒர்க். இதைவிட அதிகச் சம்பளத்துக்கான தகுதி எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன்!” என்றார் நாசூக்காக.

“இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லோருக்குமே இன்னும் அதிகமான சம்பளத்துக்கான தகுதி இருக்கு. ஆனால், இந்தப் படம் ஒரு சோதனை முயற்சி.  இதுக்குக் கடுமையான விமர்சனங்கள் வரும். இந்தப் படம் நல்லாப் போனா, நீ இதைவிட நூறு மடங்கு வாங்கப்போறே! இதை ஏத்துக்கோ!” என்றேன். (அன்றைய காலகட்டத்தில் ஆயிரம் மடங்குன்னு சொல்ல எனக்குத் தெரியலை!) என் வாக்குப் பலித்தது.

பின்குறிப்பு:-

கல்கி 14-12-2014  இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com