தண்ணீரே உணவு, தண்ணீரே வாழ்க்கை!

அக்டோபர் – 16 உலக உணவு தினம்!
தண்ணீரே உணவு, தண்ணீரே வாழ்க்கை!

ஏன் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்?

லக உணவு தினம் அக்டோபர் 16 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் தண்ணீரே உணவு, தண்ணீரே வாழ்க்கை (water is life, water is food) என்று அமைத்திருக்கிறார்கள். நம் உடலுக்கு தண்ணீரின் தேவை மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் உள்ளது இயற்கையின் கொடையான தண்ணீர் பூமியின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருப்பதைப் போல  நமது உடலில் 50 சதவீதம் தண்ணீரே நிரம்பி இருக்கிறது. ஏன் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்குகிறது இந்தப் பதிவு.

1.  நம் உடலில் நீரேற்றத்தை சரியாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது: சரியாக தண்ணீர் பருகாமல் இருந்தால் நம் உடலில் நீர் இழப்பு உண்டாகி, களைப்பு, கவனக்குறைவு எரிச்சல் போன்ற உபாதைகளை உருவாக்கும். மூளை முதல்  கிட்னி வரை உள்ள  உறுப்புகள் தண்ணீர் குறைவாக குடித்தால் சரியாக வேலை செய்யாது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது.

2. சத்துக்களை உறிஞ்சுவது: தண்ணீர் உடலின் விட்டமின்கள், மினரல்களைக் கரைக்கிறது. நமது உடலுக்கு தேவையான சத்துக்களை சமமாக பரப்புவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது

 3. ஜீரணத்திற்கு வகை செய்கிறது: நாம் உண்ணும் உணவை ஜீரணிப்பதற்கு தண்ணீர் உதவுகிறது. பற்களில் கிருமிகள் தங்காமல் இருக்கவும் வழி வகை செய்கிறது. குறைவான தண்ணீர் எடுத்துக் கொண்டால் நம் எச்சில் சுரப்பதற்கு தடையாக முடியும். வாய் உலர்ந்து போகும்.

4. சீரான வெப்பம்: உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு தண்ணீர் மிகவும் உதவுகிறது. வெயில் காலங்களில் நமது உடல் இயக்கம் நன்றாக அமைய கூடுதல் தண்ணீர் அவசியம்.

 5.  சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது: தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும்  தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது.

 6. கழிவுகள் வெளியேற்றம்: உடலின் கழிவுகளான வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுவதற்கு தண்ணீர் தேவை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் அது மலச்சிக்கலில்  முடியும்.

 7. சரியான எடையை தக்கவைத்தல்: நன்றாக தண்ணீர் குடிப்பவருக்கு உடலில்  எடை கூடாது. உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதற்கும் நமது உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கும் இடை இழப்பைத் தவிர்ப்பதற்கும் தண்ணீர் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com