தண்ணீர், தண்ணீர், தண்ணீர்!

தண்ணீர், தண்ணீர், தண்ணீர்!

லக வள நிறுவனம், உலக நாடுகளுள் 25 நாடுகள், மிகவும் மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கிச் செல்வதாக, அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலகின் மொத்த ஜனத் தொகையில் நான்கில் ஒரு பகுதி இந்த நாடுகளில் வசிக்கின்றனர். உலக ஜனத்தொகையில் இரண்டில் ஒரு பகுதி மக்கள், சுமார் 4 பில்லியன், வருடத்தில் ஒரு மாதமாவது போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த மிகவும் மோசமான தண்ணீர் தட்டுப்பாடானது, உணவுத் தட்டுப்பாடு, வேலை, எரிசக்தி என்று பல வகையிலும், மக்களைப் பாதிக்கிறது. மக்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள், கனிவகைகள் பயிரிட, கால்நடைகள் பராமரிக்க, மின்சார உற்பத்தி, மனிதனின் உடல் நலம் பேண, சமத்துவ சமுதாயத்தை வளர்க்க, சுற்றுச் சூழல் பாதுகாக்க என்று எல்லாவற்றிற்கும் தண்ணீர் தேவை. தண்ணீரின் முக்கியத்துவத்தைக் குறிக்க திருவள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என்றார்.

சரியான நீர் மேலாண்மை இல்லாத நிலை, மக்கள்தொகை பெருக்கம், மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் ஒருபுறம், பொருளாதார வளர்ச்சி மறுபுறம் என்று இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்று அச்சப்படுகிறார்கள் வல்லுனர்கள்.

1960 வருடத்தைக் காட்டிலும், தண்ணீரின் தேவை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்களை நாம் முன்னரே பார்த்தோம். நீர்நிலைகளை மேம்படுத்தத் தேவையான முதலீடுகள் செய்யாதது, தண்ணீரின் உபயோகத்தை கட்டுப்படுத்த வழிவகைகள் இல்லாத நிலைமை, காலத்தில் பெய்யாத பருவ மழை, அதிகமான மழை பெய்யும் இடத்தில் சேமிக்காமல் மழைத் தண்ணீர் கடலில் கலக்கும் நிலை, நிலத்தடி நீரை அதிக அளவு செலவு செய்தல், மழை நீர் சேமிப்பில் போதிய கவனம் இல்லாத நிலை ஆகியவை தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணங்கள்.

ஒரு நாடு அதற்கு கிடைக்கின்ற தண்ணீர் அளவில், 80 சதவிகதத்திற்கு மேல் உபயோகிக்கும் நிலையில் இருந்தால், அந்த நாடு மோசமான தண்ணீர் தட்டுப்பாடை சந்திக்கும் நாடாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகள், வடஆப்ரிக்கா, தென்ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, பிரிட்டன், இரான், இந்தியா ஆகிய 25 நாடுகள் இதில் உள்ளன. 8 பில்லியன் என்றிருக்கும் உலக மக்கள்தொகை 2050ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது தண்ணீரின் தேவை 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் நிலைமை இன்னும் மோசமடையலாம்.

தண்ணீர் தட்டுப்பாட்டினால், ஒரு நாட்டின் ஜிடிபி பாதிக்கப்படலாம். அனல் மின்நிலையத்தை குளிர்விக்க தண்ணீர் தேவை. அது போதுமான அளவில் இல்லையென்றால், அனல்மின்நிலையம் தற்காலிகமாக செயல்படாது. 2017 முதல் 2021 வரை தண்ணீர் இல்லாமல் அனல் மின்நிலையம் மூடப்பட்ட வகையில் 8.2 டெராவாட் ஹவர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்த மின்சாரம் 15 இலட்சம் வீடுகளுக்கு, ஐந்து வருடம் பயன்பாட்டிற்கு வரும்.

வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளின் உள்கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பதால் அங்கு பாதிப்புகள் குறைவு. அவர்களின் தண்ணீர் தேவையும் குறைந்து வருகின்றது.

இந்தியாவில் வளர்ந்து வரும் தண்ணீர் தட்டுப்பாடை எதிர்கொள்ள, மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ஜல்சக்தி அமைச்சகம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் நோக்கங்கள், சர்வதேச மற்றும் மாநிலங்களின் இடையே ஏற்படும் நீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காணுதல், நதிகளை சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் வசதி, தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் விரயத்தை தடுப்பது ஆகியவை.

தண்ணீர் வீணாவதை தடுப்போம்.  நீர் வளம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com