பக்கவாதம் ஏற்பட காரணமாக இருக்கும் 10 விஷயங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி.?

அக்டோபர் 29- உலக பக்கவாத நோய் தினம்!
பக்கவாதம் ஏற்பட  காரணமாக இருக்கும் 10 விஷயங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி.?

மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டுள்ளதோ, அதைப் பொறுத்தே உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி எனப் பாதிப்பைப் பொறுத்து அந்தப் பகுதி செயல் இழக்கும். இதைப் பக்கவாதம் என்கிறார்கள்.

பக்கவாதம் ஏற்பட 10 காரணங்கள் இருப்பதாகச் சொல்லப் பட்டாலும்,அதிகப்படியான இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் காரணமாகவே "ஸ்ட்ரோக்" வருகிறது. அதிக உடல் எடையைக் கொண்டவர்களுக்குப் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம். இதனை சிகாகோவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர் .அதனால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்.

பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. உடற்பயிற்சி தினமும் செய்யாமை. தினமும் உடற்பயிற்சி சிறிது நேரம் செய்வது நல்லது.முடியாதவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். அதுவும், கடினம் என்றால், அட்லீஸ்ட் வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டும் பயிற்சி போன்றவைகள் செய்வதால் பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதுடன் உங்கள் வாழ் நாளையும் அதிகரிப்பதாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆய்வு தெரிவிக்கிறது.

உடலுழைப்பு இல்லா வாழ்க்கை முறை பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புயை இருமடங்கு அதிகரிப்பதாக நார்வே பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையை மாற்றுங்கள். உட்கார்ந்துக் கொண்டு இருப்பதை விட, நின்று கொண்டு இருப்பது கூட ஒரு உடல் உழைப்புதான். மனிதன் சாதாரணமாக 6 மணிநேரம் நிற்பதால்,  ஒரு நாளில் 45 கலோரி உடலில் எரிக்கப்படுகிறது, என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அதிகப்படியான மன அழுத்தம் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை சிதைத்து பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை 36 சதவீதம் அதிகரிப்பதாக ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தத்தைத் தவிர்க்க தனிமையில் இருப்பதை தவிர்த்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவழித்து அன்றாடம் சிரித்து மகிழ, 40 சதவீதம் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கிறார்கள்.

கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்தைக் குறைவாக எடுத்துக் கொள்ளவது நரம்புகள், தசைகள் மற்றும் இதய செயல்பாடுகளைப் பாதிக்கிறது. இதுவே, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்கிறார்கள். இதனை தவிர்க்க வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

சோடியம் (உப்பு) அதிகம் எடுத்துக் கொள்ளவது.தினசரி 6 கிராம் உப்பிற்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது, என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி ”ஸ்ட்ரோக்” ஆபத்தை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் தினமும் 5 கிராம் உப்பிற்கு குறைவாகச் சாப்பிடுவதும் கெடுதல் தான் என்கிறார்கள்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமை. அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் ஆய்வின் ஆலோசனை படி ஒரு மனிதன் ஆணாக இருந்தால் நாளொன்றுக்கு 150 கலோரிகளுக்கு மேலாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள கூடாது. அதாவது, 38 கிராம் அல்லது 9 டீஸ்பூன் அளவு. பெண்ணாக இருந்தால் 100 கலோரிகள், அதாவது 25 கிராம் அல்லது 6 டீஸ்பூன் அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள கூடாது.

தூக்கக் குறைபாடு பக்கவாதம் வர ஒரு முக்கிய காரணம். இரவில் வழக்கமான நேரத்தில் படுக்கச் செல்லுங்கள். அடிக்கடி தூக்கநேரத்தை  மாற்றம் செய்தால் பக்கவாதம் வர வாய்ப்புண்டு என்கிறார்கள் நாட்டர்டாம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை சச்சரவுகளைத் தவிருங்கள். உங்கள் வீட்டில் மனைவி மற்றும் மக்களுடன் அன்பு பாராட்டி வந்தாலே பக்கவாத நோய் ஆபத்து குறையும் என்பதை இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

தினசரி 2 மணிநேரத்தை விட அதிகமாக மொபைல் அல்லது டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுபவர் களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் அதிகரிக்கிறது. தற்போது இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.எனவே அதன் பயன்பாட்டை குறையுங்கள்.

 "ஸ்ட்ரோக்".இந்த நோய் ஆபத்திலிருந்து தப்பிக்க வெள்ளை நிற காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் டச்சு ஆய்வாளர்கள். வெள்ளை நிற வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள், வெள்ளரி, காலிபிளவர் மற்றும் காளான் போன்ற உணவுகள் ஸ்ட்ரோக் ஆபத்திலிருந்து 52 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பக்கவாத நோயிலிருந்து தப்பிக்க ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 400 கிராம் காய்கறியும், கீரையும், 300 கிராம் பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று பால்டிமோரில் நடந்த உணவு ஆரோக்கிய மாநாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒருவருக்குப் பக்கவாதம் வருமா! வராதா! என்பதை ஒரு 20 நிமிட பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்கிறார்கள். டயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். யோகாவில் "விராபத்ராசனம் (வாரியர் 3)" என்ற நிலையில் ஒருவரால் 20 நிமிடம் நிற்க முடிந்தால் அவருக்குப் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு.

எந்த ஒரு சிக்கலையும் வருமுன் காப்பது சிறந்தது. அதனால், இந்தப் பத்து முறைகளைச் சரியாக மனதில் எடுத்துக் கொண்டு, பக்கவாதம் ஏற்படுவதில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com