தென்னை உற்பத்திக்காக அரசு என்ன செய்கிறது? செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தில் தென்னை பற்றிய ஒரு பார்வை!

தென்னை உற்பத்திக்காக அரசு என்ன செய்கிறது? செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தில் தென்னை பற்றிய ஒரு பார்வை!

செப்டம்பர் 2 உலக தென்னை தினம்!

தென்னை பல்வேறு சிறப்புகளை கொண்ட மரவகையாகும்.

இதில் இருந்து கிடைக்கும் இளநீரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது.

தேங்காய் எண்ணெய்க்கே உரிய தனி சுவையும், தனி நறுமணமும்  உணவு தயாரிப்புக்கு  பயன்பட காரணமாகிறது, மேலும் அழகுப்பொருட்கள் தயாரிப்பிலும் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக கொலஸ்டிரால் இல்லாத காரணத்தினால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெர்ஜின் தேங்காய் எண்ணெயில், தாய்ப் பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்களும் உடல் எதிர்ப்பு சக்தியும் உள்ளது என்பதால் அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் முதன்மையானதாக தேங்காய் எண்ணெய் கருதப்படுகிறது. 

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட தென்னை மரத்தினுடைய தற்போதைய நிலை குறித்து அறிவதற்கு உலக தென்னை தினத்தை விட சிறந்த நாள் இருக்க முடியாது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமே தென்னையை பற்றி மக்கள் உரையாடவும், தென்னையினுடைய முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும், தென்னையினுடைய தேவையை உணர்ந்துகொள்ளவும் மற்றும் விவசாயிகளினுடைய தேவையைப் புரிந்துகொள்ளவுமே. 

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தி நிறுவனங்களினுடைய நட்பமைப்பின் மாநில செயலாளர் பி. செல்லதுரை கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. நேர்காணலில் இருந்து...

பி. செல்லதுரை
பி. செல்லதுரை
Q

இந்தியாவின் தற்போதைய தென்னை உற்பத்தி திறன் குறித்து?

A

இந்தியாவில் தென்னை உற்பத்தி என்பது 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 4.5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 175 மரங்கள் வளரும். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு இயற்கை சூழல் பாதுகாக்கப்படும். அதே நேரம் தென்னையானது உணவு தேவைக்கு முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டுமல்லாது அந்த உணவுகள் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.

Q

தென்னைக்கும் இயற்கைக்குமான உறவு?

A

பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் என்ற மிகப்பெரிய சிக்கலானது உலகில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. ஆனால் அதனுடைய தாக்கம் இந்தியாவில் மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் தென்னை மரங்கள் தான். தென்னை மரங்களே இயற்கை சூழலை பேணிப் பாதுகாக்கின்றன. ஆனால் தற்போது இந்திய அரசு தென்னைக்கான முக்கியத்துவத்தை குறைத்து வருவதால் சுற்றச்சூழலுக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இருக்கக்கூடிய மரங்களும் நோய் தாக்குதலுக்கு  உள்ளாகின்றன. இதனால் மரத்தின் 15 இலைகள் மட்டுமே வளர்கின்றன. 36 இலைகள் வளர்ந்தால்தான் மரம் மிக ஆரோக்கியத்தோடு இருப்பதாகும். அப்படி உள்ள மரங்களால்தான் இயற்கைக்கு போதுமான தன்னுடைய பங்களிப்பை செலுத்த முடியும்.

கஜா புயலில் தென்னை மரங்கள் பெருமளவில் சாய்ந்ததால் தற்போது வரை அதனுடைய பாதிப்பு தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் காணப்படுகிறது.

Q

எந்த வகையில் அரசு புறக்கணிக்கிறது ?

A

ஒன்றிய அரசு தென்னை வளர்ச்சி வாரியத்தை அமைத்திருக்கிறது. ஆனால் அதற்கு தற்போது தலைவர் இல்லை. 2011ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது தென்னையினுடைய முக்கியத்துவம் உணர்ந்து தென்னை வாரியம் அமைத்தார். ஆனால் அந்த வாரியம் பிறகு கைவிடப்பட்டது. சலுகைகள், சிறப்பு திட்டங்கள் எதுவும் அளிக்கப்படாமல் பல வகைகளில் அரசால் தென்னை சாகுபடி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து உடலுக்கு கேடை விளைவிக்கும் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், மருத்துவ குணமிக்க தேங்காய் எண்ணெயை உணவு எண்ணெய்யாகவே சேர்க்கப்படவில்லை. மேலும் தோட்டக்கலை பயிர்களின் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு பொது பயிராக பட்டியல்  இடப்பட்டிருக்கிறது. மூங்கில் உற்பத்திக்கு ஆயிரம் கோடி ஒதுக்கும் அரசு, தென்னை உற்பத்திக்கு 200 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறது.

Q

தேங்காய் எண்ணெயின் சிறப்பு என்ன?

A

தமிழ்நாட்டினுடைய அண்டை மாநிலமான கேரளா மனிதர்களுடைய ஆயுட்காலம், ஆரோக்கியம், அழகு, அறிவு என்று எல்லாவற்றிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அந்த மாநிலத்தில் உணவு எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுத்தப்படுவதே. தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது மட்டுமல்ல; உடலை வலுவேற்றக்கூடியது. தேங்காய் எண்ணெய் ஒரு புனித பொருள்.

Q

தென்னையில் இருந்து எவ்வளவு வருமானம் ஈட்ட  முடியும்

A

தென்னை என்பது முழுக்க முழுக்க பயன்படக்கூடிய மரம். தென்னை மரத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுமே ஒவ்வொரு வகையான பயனை தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது. தென்னை மரம் வருமானத்திற்கான மரம். ஒருமுறை நட்டால் பல ஆண்டுகள் பயன் தரும். அதிக கவனிப்பும் தேவையில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதனால் தென்னை உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு உள்ளார்கள்.

படம் : பி.செல்லதுரை

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com