நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதால் என்ன பயன்?

நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதால் என்ன பயன்?

மீபத்தில் ஒரு பிரபல கம்பெனியின் பேரிச்சம்பழத்தை வாங்கினேன்.  நிறைவு தேதி வரும் முன்பே புழுக்கள் கூடு கட்டி கீழே எறியும் சூழல் வந்தது. நண்பரிடம் “இதை நுகர்வோர் நீதிமன்றத்தில் தந்து நியாயம் கேட்கலாமா?” என ஆலோசனை கேட்டேன். அவரோ “இதற்காக வழக்குத் தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால் உங்கள் நேரம் பணம் மற்றும் அலைச்சலால் மனம் பாதிக்கப்படும்” என்றார். நானும் பின் வாங்கினேன்.

நான் மட்டுமல்ல எத்தனையோ பேர் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். பணம் கொடுத்து பொருள் வாங்கும் நம்மால் தவறுகளை திருத்தவே அல்லது தட்டிக் கேட்கவே முடியாதா?

ஏன் முடியாது? ஒரே ஒரு பிஸ்கட் குறைந்ததற்கு நீதி மன்றம்  நாடி, பிரபலமான அந்த பிஸ்கட் கம்பெனி மீது வழக்குத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் கழித்து தவறு நிரூபிக்கப்பட்டு நஷ்ட ஈடாக ஒரு லட்சத்தைப் பெற்றுள்ளார் சென்னையை சேர்ந்த ஒருவர்.

இந்த செய்தியை படித்ததிலிருந்து இனி இது போன்ற விஷயங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவது நல்லது எனும் விழிப்புணர்வு வந்துள்ளது.

நுகர்வோர் சட்டம் குறித்த தகவல்கள் மற்றும் இது போன்ற வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய சேலத்தைச் சேர்ந்த கன்ஸ்யூமர் ரைட்ஸ் மூவ்மென்ட் மற்றும் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் நிறுவனர் ஜே.எம்.பூபதி அவர்களை சந்தித்து என் சந்தேகங்களை முன் வைத்தேன். நமது கேள்விகளும்  அவரின் பதில்களும்...

ஜே.எம்.பூபதி
ஜே.எம்.பூபதி
Q

எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது எந்த நுகர்வோர் சட்டம்?

A

ந்தியாவில் நுகர்வோர்களுக்கான சட்டம் 1983 ல் கொண்டுவரப்பட்டது. அதன் பின் 2019ல் புதிய நுகர்வோர் சட்டங்கள் புதிய வடிவத்தில் மேலும் பல சிறப்பம் சங்களுடன் கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Q

யாரெல்லாம் இதனால் பயன்பெறலாம்? சட்டம் தரும் உரிமைகள் என்ன?

A

ரு ரூபாய் தந்து ஒரு பொருள் வாங்குபவர் முதல் ஒரு கோடி ரூபாய் தந்து வாங்குபவர் வரை அனைவருமே நுகர்வோர்கள்தான். தவறுகள் கண்டால் அதற்கு தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றத்தை அனைவருமே நாடி பயன்பெறலாம். நுகர்வோர் சேவை என்பது பொருளை மட்டும் உள்ளடக்கியது அல்ல. பணம் தந்து பெறும் மின்சாரம், தொலைபேசி, ரயில்வே, பேருந்து போன்ற மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த சட்டத்துக்குள் வரும்.

நுகர்வோர்களுக்கு பல்வேறு உரிமைகளை சட்டம் தருகிறது .ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அதைப்பற்றி கேள்வி கேட்கும் உரிமை, அதன் தரம் பற்றி அறியும் உரிமை நுகர்வோர் கல்விக்கான உரிமை, உயிர் உடமை பாதுகாப்புக்கான உரிமை உள்பட பல்வேறு உரிமைகளை வழங்குகிறது நுகர்வோருக்கான சட்டம்.

Q

நுகர்வோர் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள்  என்ன?

A

முதலில் ஒரு பொருளை வாங்கும்போது அது உபயோக்கிக்க உகந்ததா, காலாவதி ஆக இன்னும் உரிய காலம் இருக்கிறதா என்பதை எல்லாம் கவனிக்கும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வேண்டும். காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி இல்லாத பொருளை தவிர்ப்பதும், ஒரு பொருள் வாங்கியதற்கான சான்றான பில்லைக் கண்டிப்பாக வாங்குவதும் அதை சில மாதங்களுக்கு பத்திரப்படுத்தி வைப்பதும் நம் கடமை. மளிகைக் கடை என்றாலும் ஒரு சீட்டில் அன்றைய தேதியுடன் கடைக்காரரிடம் எழுதி வாங்குவது நல்லது. பொருளின் கீழே கண்களுக்குத் தெரியாமல் சிறிய எழுத்துகளில் எழுதியுள்ளவற்றைக் கவனிக்க வேண்டும். அதன் உட்பொருள்கள் என்ன என்பதை அறியவேண்டும்.

Q

நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால் நேரமும் பணமும் வீண் எனும் தவறான கருத்து நிலவுகிறதே?

A

நிச்சயம் இது சரியான கருத்து அல்ல. நிரூபிக்கப் பட்டாலும் ஒரு வழக்கு ஏன் நீண்ட காலம் எடுக்கிறது என்பதற்கு நீதிமன்ற நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி பாதிக்கப்படும் நுகர்வோருக்கு அவர் வழக்குத் தொடர்ந்தால் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கி நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். நியாயம் இருக்கும் பட்சத்தில் உரிய இழப்பீடு மற்றும் வழக்குக்கான செலவும் கூட வரும் வாய்ப்புண்டு. ஆனால் சில பொதுவான சட்ட சிக்கல்கள் அனைத்திருக்கும் பொருந்தும் அல்லவா? இதனால் சிலரின் தவறான கண்ணோட்டத்திற்கு இது காரணமாக இருக்கலாம்.

Q

நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவதால் என்ன பயன்?

A

பிஸ்கட் செய்திக்கு இப்போது வருவோம். ஒரு சிறிய தவறுக்கு அந்த பிஸ்கட் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் நஷ்டம் என்றால் அந்த வாடிக்கையாளரின் விழிப்புணர்வுக்கும் தட்டிக்கேட்ட அந்த தைரியத்துக்கும் ஒரு லட்சம் லாபம் என்றுதானே கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றும் நிறுவனங்களுக்கு இது போன்ற வழக்குகளால் தான் இன்னும் கவனமும் விழிப்புணர்வும் அதிகம் ஏற்படும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய வேண்டும் என்று எண்ணம் எழும் அல்லவா? ஆகவே எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையற்ற செயலை பார்த்தால் உடனே பொது நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் சான்றுகள் என்பது இங்கு முக்கியம் என்பதையும் நுகர்வோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Q

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடர என்ன தேவை?

A

பிஸ்கட்டுக்கு நஷ்ட ஈடு பெற்ற அந்த வாடிக்கையாளரைப் போல் கையில் வைத்திருக்கும் சான்றுடன் பொறுமையும் துணிவும் இது போன்ற வழக்குகளுக்கு மிகவும் முக்கியம். தவறு என்று எங்களிடம் வருபவர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கூறும்போதே அங்கு பலவீனம் வந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் அந்தத் தவறு மறைக்கப்படுகிறது. இதுதான் இன்று நிகழ்கிறது. இதற்கான துணிவை நாம்தான் பெறவேண்டும்.

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எங்களைப் போன்ற அமைப்புகள் பக்கபலமாக இருக்கவே விரும்புகிறது. மக்கள்தான் இந்த சட்டத்தைப் பற்றி அறிந்து தவறுகள் நடந்தால், நிவாரணம் தேடி வர முன்வரவேண்டும்.

விழிப்புடன் வாழ்வோம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com