அமெரிக்க அரசு முடங்குமா?

அமெரிக்க அரசு முடங்குமா?

செப்டம்பர் மாத இறுதியில் பரவலாக கேட்கப்பட்ட கேள்வி அமெரிக்க அரசு முடங்குமா என்பதே. அரசு முடங்குவது என்றால் ‘அமெரிக்க அரசு பணிநிறுத்தம்’ செய்யுமா,. எத்தனை நாள் இந்த முடக்கம் நீட்டிக்கும் என்பது. ‘அரசு பணி நிறுத்தம்’ அறிவிக்கப்பட்டால், அரசு பணியாளர்கள் சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்வார்கள். முக்கியாமான பணியாளர்கள், செனட் மற்றும் பிரதிநிதி சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், அங்கு பணி புரிவோர்க்கு விலக்கு உண்டு. பாஸ்போர்ட் சேவைகள், விசா வழங்குவது நிறுத்தப்படும்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி, அரசு பணிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுப்பாடு அமெரிக்க காங்கிரஸின் பொறுப்பு. இதற்கான நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குப் பின் குடியரசுத் தலைவரின் கையெழுத்துடன் அந்த மசோதா சட்டமாகும்.

ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு மசோதா, ஏதேனும் ஒரு சபையில் நிறைவேற்றப் படவில்லை என்றாலும், இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றாலும் ‘அரசு பணி நிறுத்தம்’ ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இரு சபையைச் சேர்ந்தவர்கள் கலந்து பேசி, ஒரு முடிவிற்கு வந்து, குறிப்பிட்ட காலம் வரை நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்வார்கள். இந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் இசைந்தாற் போல நிதி ஒதுக்கீடு மசோதாவில் மாறுதல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்படும்.

இந்த வருடத்திற்கு செப்டம்பர் மாத இறுதிவரை நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் இருந்தது. மாதக் கடைசி நாள் இரவு பன்னிரெண்டு மணிக்குள் மசோதா சட்டமாகா விட்டால் அரசுப் பணி முடங்கும் அபாயம் இருந்தது. புதிய நிதி மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தாலும், பிரதிநிதிகள் சபையில் இழுபறி ஏற்பட்டது. இதற்கு காரணம் உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தியின் முயற்சியால், சமரசம் ஏற்பட்டு, அரசுப் பணிகள் நவம்பர் 15 வரை தடங்கலின்றி இயங்க நிதி ஒதுக்கீட்டிற்கு  ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்ட உக்ரைன் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் இல்லை. இதனால், சமரசத்திற்கு பாடுபட்டு, அரசு முடங்குவதை தவிர்த்த, சபாநாயகர் மெக்கார்த்தி, அவருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தில், 216/210 என்ற வாக்கெடுப்பில் பதவி இழந்தார்.

கூடுதல் தகவல் :

1981ஆம் வருடம் முதல் 2023 வரை, பத்து தடவை “அரசு பணி நிறுத்தம்” நடந்துள்ளது. 1981ஆம் வருடம் நவ்ம்பர் 20ஆம் தேதி ஆரம்பித்த பணி நிறுத்தம், மூன்று நாட்கள் நீடித்தது. 2,41,000 அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். பொதுவாக இந்த முடங்கல், ஒரு வாரத்திற்குள் முடிந்து விடும்.

ஆனால், பில் க்ளிண்டன் அதிபராக இருந்த போது, டிசம்பர்15, 1995 அறிவிக்கப்பட்ட “பணி நிறுத்தம்” மூன்று வாரங்கள் நீடித்தது. பாஸ்போர்ட் சேவை முடங்கியதால், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

2013ஆம் வருடம், அதிபர் பாரக் ஓபாமா கொண்டு வந்த மருத்துவ காப்புச் சட்டத்தினால், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால் நிதி ஒதுக்கீடு மசோதா ஒப்புதலில் சிக்கல் ஏற்பட, 18 நாட்கள் அரசுப்பணிகள் முடங்கின.

2018ஆம் வருடம், அதிபர் டோனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையே சுவர் எழுப்ப நிதி கேட்டார். ஜனநாயகக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை. நிதி மசோதா ஒப்புதலில் பிரச்சனை ஏற்பட, 36 நாட்கள், அரசு அலுவலர்கள் வேலையின்றி, சம்பளமின்றி இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com