மகளிர் உரிமைத் தொகை திட்டம்... மகிழ்ச்சியா? மயக்கமா?

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால், தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆனது, 2௦23 செப்டெம்பர் 15ஆம் தேதியன்று காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட வரையறை தகுதிக்கு உட்பட்ட குடும்பப் பெண்களுக்கு, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” என்கிற பெயரில் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்ற தொடர் திட்டம் அது.
கடந்த இரண்டு மாதங்களாகவே அதற்கான படிவங்கள் பூர்த்தி செய்து, பெண்களிடம் இருந்து பெறப்பட்டன. ஆய்வுகள் அடிப்படையில் அதன் படிவங்கள் மூலமாகப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்கள், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்ப் பெற்றுக் கொள்ள தேர்வாகினர்.
இதற்கென பெறப்பட்ட படிவங்களில் சான்றுகள், தகுதி அல்லாதவைகள் என்று சுமார் அறுபதாயிரம் படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தில் பயன் அடைய வேண்டிய தகுதி நிரூபனம் மற்றும் தேவைப்படும் சான்றுகள் அளித்து, இப்போது நிராகரிக்கப்பட்டவர்களே மீண்டும் படிவங்கள் பூர்த்தி செய்து ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் செப்டெம்பர் பதினைந்தாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதுமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலமாக ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்கள், முதல் மாதத் தொகையாக ஒவ்வொரு பெண்களும் ஆயிரம் ரூபாய்ப் பெற்றுக் கொண்டுள்ளனர். அதனை அந்தந்தப் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது தமிழக அரசு.

இந்த இடத்தில் தான் இதன் பயனாளிகள் பெண்களில் பலரிடம் பெரும் மகிழ்ச்சியும், பலரிடம் மனத் தடையும் மயக்கமும் தோன்றியுள்ளது. ஆயிரம் ரூபாய்ப் பணம் பெற்றுக் கொண்ட பெண், அதனை வைத்துத் தான் தனது மகனுக்கு மருந்து மாத்திரை வாங்கி வந்துள்ளதாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்.
சில பெண்கள் அந்தத் தொகையின் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை விரித்துக் காட்டி, விழிகள் மலர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சில பெண்கள் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் தந்தது உண்மை. ஆனால், அடுத்த நிமிடமே என் பெயரில் வங்கிக் கணக்கில் இவ்வளவு தொகை உடனடியாகப் பிடித்தம் செய்து கொண்டார்கள் என்று சமூக வலைத் தளங்களில் கூக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
அது வேறொன்றுமில்லை. குறிப்பிட்ட பயனாளியின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ஏற்கனவே எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டிய மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல் இருந்ததே முதல் காரணம். அதுபோல கூக்குரல் தந்தவர்களில் அவரவர் கணக்கு வைத்திருந்த வங்கியின் அளவுகோல் விதிகளின்படி, இப்போது ஏற்றப்பட்ட ஆயிரம் ரூபாயில் வங்கியே பிடித்தம் செய்து கொண்டு விட்டது.
இதற்கு வங்கிகள் மீது நாம் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்திட முடியாது. காரணம், ஒரு வங்கியில் ஒரு நபர் கணக்குத் தொடங்கும் போதே கரென்ட் அக்கவுன்ட் எனில் இந்தத் தொகை, சேவிங்ஸ் அக்கவுன்ட் எனில் இந்தத் தொகை உங்கள் கணக்கில் எப்போதும் மினிமம் பேலன்ஸ் ஆக இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லப்படுகிறது. இந்த விதிகள் அடங்கிய படிவங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டே வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.

மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கான தண்டனைக் கட்டணம், சேவைக் கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்ற பிடித்தங்களும் இவைகளில் அடங்கியுள்ளன. மாதாமாதம் இது தொடருமா என்றால். ஆம் தொடரும். சரி. இதனைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?
இப்போது பிடித்தம் செய்ததுக்கு ஆளான பெண்கள் மட்டும் என்றல்ல, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் ஒவ்வொருவரும், தங்களது வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொகையினை எப்போதும் இருப்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். வங்கியில் அவர்களது கணக்கிலான மினிமம் பேலன்ஸ் இல்லாத போதும அல்லது மினிமம் பேலன்ஸ் குறைவாக இருக்கின்ற போதும், இந்தப் பிடித்தம் என்பது ஒவ்வொரு மாதமும் தொடரத்தான் செய்யும்.
தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக ஒரு அறிவிப்பு தந்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் பயனாளிகளானப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச தொகையினை செலுத்தி தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.
சரி. ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் எனப்படும் ஜன்தன் அக்க்கவுன்ட்டில் சேரலாம் என்றால், அந்தக் கணக்கிலே நகைக் கடன் ஏதும் பெற முடியாது. குறிப்பிட்ட தொகைக்கு மேலே அதில் பணம் போடவும் இயலாது எடுக்கவும் இயலாது. ஒரு பயனாளிக்கு அதில் நிறைய செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்ளன. ஆக, வங்கியில் சாதாரணமான சேவிங்ஸ் அக்கவுன்ட் எனப்படும் சேமிப்புக் கணக்கு மட்டும் தான் ஆகச் சிறந்தது.

வங்கிகளில் கரென்ட் அக்கவுன்ட் மற்றும் சேவிங்ஸ் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களில், மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்கள் கணக்கில் இருந்து மட்டும், ஒரு ஆண்டில் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகத் தண்டனைக் கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எப்படி வசூலிக்கின்றார்கள்? அவரவர் வீடு தேடிச் சென்றா? இல்லை. இதற்கென வங்கி நிர்வாகம் காத்திருக்கிறது. குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வரும்போது, விதிகளின்படி தண்டனைக் கட்டணம் வசூலித்து தங்களது உரிமையினை நிலைநாட்டி விடுகின்றன வங்கிகள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளில் ஒவ்வொரு பெண்களும், தங்களின் சேமிப்புக் கணக்குக்கான வங்கிகளை நாடிச் செல்ல வேண்டும். தங்கள் வங்கியின் சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மினிமம் பேலன்ஸ் தொகை என்பது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். வேறுபடும். இந்தப் பெண்கள் தங்கள் பெயரிலான வங்கிக் கணக்கில், அந்த மினிமம் பேலன்ஸ் தொகையினை நிரந்தரமாக எப்போதும் அவர்களது வங்கிக் கணக்கில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பெண்ணும், அந்தத் தொகையினை முழுமையாக அனுபவிக்க முடியும்.