Dr.Lakshmi Vijayakumar
Dr.Lakshmi Vijayakumar

“தற்கொலை தடுப்பு நமது பொறுப்பு!”-சிநேஹா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்!

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள் – செப்டம்பர் 10

ற்கொலை உணர்வால் பாதிக்கப்படும் நபர்களிடம் மனம்விட்டு பேசி, அவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, முறையாக ஆலோசனைகளை வழங்கி, அந்த எண்ணத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் (1986) தன்னார்வலர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சேவை ஆற்றி வருகிறார்கள்.

 ‘சிநேஹா’ தற்கொலை தடுப்பு மையமானது
மனோதத்துவ நிபுணர் டாக்டர். லக்ஷ்மி விஜயகுமார்
அவர்களால் தொடங்கப்பட்டது. ‘தற்கொலை தடுப்பு’ என்ற உன்னத நோக்கத்தை அறிமுகப்படுத்தி அப்பணியில் முன்னோடியாகத் திகழ்பவர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார். இவரது தலைமையில் மிகப் பெரிய சேவை ஆற்றி வருகிறது ‘சிநேஹா’ (+91 44 2464 0050  +91 44 2464 0060) .

செப் 10 உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள். இதன் தொடர்பாக டாக்டர் லட்சுமி விஜயகுமார் அவர்களை கல்கி ஆன்லைன் சார்பாக சந்தித்தோம். அந்த பிரத்யேக பேட்டி பல வெளிச்சங்களைக் காட்டியது. பல விஷயங்களை புரிய வைத்தது. இனி...

Q

மனிதப் பிறவி இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அப்படிப்பட்ட மனிதன் தனது உயிரை மாய்த்துக் கொள்வது எந்தளவுக்கு சரியாக இருக்கும்?  ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை அவருக்கு உள்ளதா?

A

ரு மனிதன் தற்கொலை செய்துக்கொள்வது என்பது சரியா, தவறா என்பதற்கு பதில் இல்லை. ஏனென்றால் தற்கொலைகள் ஆண்டாண்டு காலமாக பல்லாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக நியாண்டர்தால் காலத்திலேயே தற்கொலை செய்துகொண்டதற்கான சான்றுகள் உள்ளது. பூமியில் உள்ள வேறு எந்த உயிரினமும் தற்கொலைச் செய்துகொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், தன்னுடைய ஆறாம் அறிவைக் கொண்டு சிந்திக்ககூடிய ஆற்றல் மனிதனுக்கு இருப்பதனால், பிரச்னைகளை அவன் அசைப் போடுவதனால் அவனுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி?

ஒருவர் தற்கொலை செய்துக்கொள்கிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. மரபணு, மனநலன், சமூகம், பண்பாடு மற்றும் கலாசாரம் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதுபோன்ற எல்லாவிதமான காரணங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் சேர்ந்துதான் தற்கொலைக்கான எண்ணம் தோன்றி அச்சம்பவமும் நடக்கிறது. 

மரபணு காரணமாக தற்கொலைச் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. செரட்டோனின் ஹார்மோன் குறைவாக உள்ளவர்களுக்கும்,  மனஅழுத்தமோ, மனசிதைவு நோய் அல்லது மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம்  அதிகரிக்கிறது.

மேலும், ஒருவித மனக்கிளர்ச்சியினால், உணர்ச்சிவசப்பட்டு, பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகம். பண கஷ்டம், கடன் தொல்லை போன்ற பொருளாதார பிரச்னையில் உள்ளவர்கள் மற்றும் குடும்ப உறவில் பிரச்னை உள்ளவர்கள் என எல்லா பிரச்னைகளும் சேரும்போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மேலோங்குகிறது.

பொதுவாக செய்திதாள்களில் தேர்வில் தோல்வி அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை என செய்திகள் வரும். ஆனால், உண்மையில் தற்கொலை செய்துகொள்வதற்கு இப்படி ஒரு காரணம் மட்டுமே இருக்காது. பலவிதமான காரணங்கள் சேர்த்து அழுத்தும்போதுதான் தற்கொலைகள் நடைபெறுகின்றன.

Q

ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்பாக சட்டம் சொல்வது என்ன? தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றமெனில் அது தொடர்பாக நடைபெற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா?

A

ற்கொலை செய்துகொள்வது சட்டப்படி குற்றமில்லை. அதாவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

‘தற்கொலை முயற்சி’ என்பது இந்திய தண்டனைச் சட்டம் 309 பிரிவின்படி குற்றம் என்று இருந்தது. இதன்படி, ஒன்றரை வருட சிறைதண்டனை மற்றும் 1,500 ரூபாய் செலுத்தவேண்டும் என்றிருந்தது. ஆனால், இந்தியாவில் கொண்டுவரப்பட்ட Mental Health Bill 2017ன் படி, தற்கொலை முயற்சி செய்பவர்களை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் 309 பிரிவு இருந்தாலும், அவர்கள் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தினால்தான் தற்கொலை செய்கிறார்கள்; அதனால், அந்த மனஅழுத்தத்தை சரிசெய்ய என்ன வழி என்பதை கண்டுப்பிடித்து அதற்கான முயற்சியில் அரசு ஈடுபடவேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதாவது, தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் மீண்டும் ஒரு நார்மலான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என Mental Health Bill 2017-ல் கூறப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் யாராவது ஒருவர் ஈடுபட்டால் இதனை உடனே அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் அவசியமாகிறது.

தற்கொலை முயற்சி எப்போது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கேட்டால், ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ளும்போது அது ஒரு அரசு ஊழியரின் பணியை பாதித்தாலோ, அவர்கள் வேலை செய்யமுடியாமல் தொந்திரவு கொடுத்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும். உதாரணத்திற்கு கலெக்டர் ஆபிஸ் முன்பு ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற நிகழ்வுகளை கூறலாம். இதுபோல் அரசு அலுவலகங்கள் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுப்படும் நபர்கள் மீது IPC 309 சட்டத்தினை பயன்படுத்த தற்போது வாய்ப்புள்ளது.

தற்கொலைகளை தடுப்பதற்காக புது சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் IPC 309 சட்டத்தினையே எடுத்துவிட்டு, தற்கொலை முயற்சி தண்டிக்ககூடியது இல்லை என ஆகிவிடும்.

Support
Support
Q

ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரைச் சுற்றியுள்ளவர்கள் தெரிந்துக்கொள்வதற்கான அறிகுறிகள் என்ன?

A

ஒரு நபர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளார் என்பதினை அவரை சுற்றியுள்ளவர்கள் நிச்சயமாக அறிய முடியும்... சரியாக புரிந்துகொண்டால்! பொதுவாக மனதத்துவவியல் துறையில் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என கூறுவோம். தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்கள் 80 சதவீதம் பேர் தங்களுடன் இருப்பவர்களிடம் பிரச்னைகளை பகிர்கிறார்கள். இதுபோன்ற எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் ''எனக்கு வாழபிடிக்கவில்லை", "தூக்கத்திலேயே செத்துபோயிடணும்", "எங்கேயாவது ஓடிபோயிடலாம் என தோன்றுகிறது", இதுபோன்ற வார்த்தைகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி கூறுபவர்களிடம் நாம் பொதுவாக என்ன செய்வோம்? அட்வைஸ் செய்யத் தொடங்கிவிடுவோம். “ஏன் அப்படி சொல்றீங்க. உங்களைவிட எவ்வளவு பேர் மோசமாக இருக்கிறார்கள் என பாருங்கள், அவர்களை பார்த்து நீங்க நல்லா இருப்பதாக நினைத்து சந்தோஷப்படுங்கள்; அல்லது ஒரு பத்து நாள் ஆபிஸ்கு லீவ் போட்டு எங்கேயாவது சுற்றிப்பார்த்துவிட்டு வாங்க” என்போம். எதனால் அவர்களுக்கு இதுபோன்ற எண்ணம் உருவாகியுள்ளது? என பாதிக்கப்பட்டுள்ள நபரின் உணர்ச்சிகளை புரிந்துக்கொள்வதற்கு நாம் முயற்சி செய்வது கிடையாது. அதுதான் ரொம்ப வருந்தத்தக்கது. அதற்காகதான்
சிநேஹா (+91 44 2464 0050  +91 44 2464 0060 )  தொண்டு நிறுவனத்தையே தொடங்கினோம்.

பொதுவாக தற்கொலைக்கு மூன்றுவிதமான பண்புகள் உள்ளன. 

முதலாவது: IMPULSIVE அந்த நொடியில் எடுக்கும் திடீர் முடிவு. அந்த சூழ்நிலையை தாங்கிக்கொள்ளமுடியாமல் அடுத்த நொடியில் தற்கொலையில் ஈடுப்பட்டுவிடுவார்கள்.

இரண்டாவது: உதவி கேட்கும் கூக்குரல். ஒருவர், ‘எனக்கு வாழப்பிடிக்கவில்லை சாகவேண்டும், ஏதாவது செய்யுங்கள்’ என்று உதவி கேட்கும் குரல். ஆனால், இந்தக் குரலை நாம் பெரும்பாலும் கேட்பதில்லை. கேட்டாலும், சரியான முறையில் உதவ நமக்குத் தெரிவதில்லை.

மூன்றாவது: சாகலாமா... வேண்டாமா... என்ற உணர்ச்சியில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலை. சில சமயம் சாகலாம் போல் இருக்கும்; சில சமயம் அந்த எண்ணம் வராமல் இருக்கும். இருதலை கொள்ளிப்போல. இதுபோன்ற நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் மனவோட்டத்தை கண்டறிந்து அவர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்டு, அவருக்கு உதவும் முயற்சியில் இறங்கினால் 80 சதவீதமான தற்கொலைகளை தடுத்து நிறுத்தமுடியும். இதனை எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்றால் நான் முன்பே சொன்னதுபோல், தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களே அதனை சொல்லுவார்கள்.

மேலும், இதுபோன்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லா விஷயத்திலும் பின்வாங்கிக்கொண்டு இருப்பார்கள். முன்பு, தங்களை நன்றாக அழகுப்படுத்திக்கொண்டிருந்தவர்கள்  அதில் அக்கறை செலுத்தாமல் இருப்பார்கள். சரியாக சாப்பிடமாட்டார்கள். ஒருசிலர் திடீரென இன்சூரன்ஸ் எடுப்பார்கள். சிலர் திடீரென உயில் எழுதி வைப்பார்கள்.  

மேலும் தங்களுக்கு நெருக்கமானவர்களை  அடிக்கடி நேரில் சந்தித்துவிட்டு வருவார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் மற்றவர்களுக்கு தானமாக அல்லது பரிசாக கொடுத்துவிடுவார்கள். சரியாக தூங்கமாட்டார்கள். Behavioral symptoms இருக்கும். என்ன ஆனாலும் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு அறிகுறி தென்படும். இதுபோன்ற மாற்றங்களை அவர்களின் அருகில் உள்ளவர்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்கமுடியும்.

Q

வசதிப்படைத்தவர்களும், வறுமை நிலையில் உள்ளவர்களும் தற்கொலைச் செய்துகொள்வதை பார்க்க முடிகிறதே? அந்த ஸ்பார்க் MOMENTஐ கடந்து செல்வது எப்படி?

A

மனோதத்துவவியல் துறையில் தற்கொலை என்பதை ஒரு Democratic Action என சொல்வோம். ஏனென்றால், தற்கொலை என்ற எண்ணம் ஒருவர் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு பார்க்காது. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளது. தற்கொலை என்பது ஒரு ஸ்ட்ராங் உணர்வு.  நீண்ட காலமாக ஒருவர் தற்கொலை என்ற எண்ணத்தில் உழன்றுக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் அந்த நீண்டகால எண்ணத்திற்கு அவரது உடல் ஒத்துழைக்காது. பொதுவாக Acute தற்கொலை எண்ணம் என்பது ஒருவார காலத்தில் இருந்து இரண்டுவார காலம். அந்த
2,3 வாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இதை Tunnel Vision என்போம். உயிரோடு இருக்ககூடாது.. என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். முன்பு சொன்னதுபோல் வேறு எதிலும் ஒரு பிடிப்பு இருக்காது. உணர்ச்சிகள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்.

இது போன்ற சூழ்நிலையில், ஒன்று தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிவந்துவிடலாம். அல்லது தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிவருவதற்கான மனநல சிகிச்சை முயற்சிக்கு சென்றுவிடலாம். தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு மேலோங்கியுள்ள உணர்ச்சிகளை தங்களுடைய எண்ணத்தை புரிந்துக்கொள்கிறவர்களிடம் மனம்விட்டு பேசிவிடலாம். எந்தவிதமான பிரச்னையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் மனநிலை என்பது மூன்று விதமாகப் பார்க்கலாம்.

முதலாவது Loneliness குடும்பம், நண்பர்கள் என அனைவரும் இருந்தாலும் தனியாக இருப்பதுபோன்ற உணர்வு மேலோங்கி இருக்கும்.

இரண்டாவது Helplessness என்னால் எதுவும் செய்யமுடியாது என்ற மனப்பான்மை.

மூன்றாவது Hopelessness அதாவது எதுவுமே நன்றாக நடக்காது என்ற எண்ணம்.

எந்தவித பிரச்னையாக இருந்தாலும், கடைசியாக தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை இந்த மூன்றும்தான் மேலோங்கச் செய்கிறது.  

சிநேஹா தற்கொலை தடுப்பு மையத்தில் நாங்கள் எப்போதும் சொல்வது என்னவென்றால் ‘தற்கொலை என்பது தற்காலிக பிரச்சனைக்காக எடுக்கப்படும் நிரந்திர முடிவு.’ (Permanent Solution for a Temporary Problem) அந்தச் சமயத்தில் நாம் வெளியே வந்துவிட்டோம் என்றால், பெரும்பாலான தற்கொலைகள் ஏற்படாமல் போகும்.

முதலில் நம்முடைய பிரச்சனையை மற்றவர்களிடம் பேச முயற்சிக்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு யாரும் இல்லையென்றால், சிநேஹா போன்ற அமைப்புகளை தொடர்புகொள்ளலாம் (+91 44 2464 0050  +91 44 2464 0060 ). அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம்.

Q

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் என குழுவாக தற்கொலை செய்துகொள்வதை தடைச்செய்ய சமூகத்தின் பங்கு என்ன? சட்டத்தின் பங்கு என்ன? மற்றும் அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?

A

தற்கொலையை தடுத்து நிறுத்துவது என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பொறுப்பு மட்டுமல்ல. தனிநபர் முதல் அரசு, சமூதாயம் என அனைத்து தரப்பில் இருந்தும் ஒன்றிணைந்து தடுக்கப்படவேண்டிய விஷயம். உலகளவில் இந்தியாவில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடைபெறுகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். கடந்த இரண்டு வருடங்களாக கடும் உழைப்பை செலுத்தி National Suicide Prevention Strategy ஒன்றினை ஏற்படுத்தினோம். பரிந்துரை செய்தோம். ஆனால், அதனை இன்றுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

பொதுவாக எங்கள் strategyயை மூன்றாக பிரிப்போம்.

ஒன்று Universal strategy அதாவது எல்லாருக்குமானது. ஒருவருக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறதோ இல்லையோ யார் வேண்டுமானாலும் இந்த Universal Strategy படித்து விழிப்புணர்வு பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நம்முடைய நாட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்வார்கள். அதனால் அதிகப்படியான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை தடைச் செய்வது என்பது பொதுவாக, எல்லோருக்குமான Universal Strategy  ஆகும். சமீபத்தில் கேரளாவில் எண்டோசல்பான் பூச்சி கொல்லியை தடை செய்தார்கள். அந்த எண்டோசல்பானை தடை செய்ததன் விளைவாக அங்கு தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசு செயற்கை சாணி கரைச்சல் பவுடரை பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்துள்ளது.

Universal strategy என்பதற்கு மற்றொரு உதாரணம்... பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பது குடும்ப பிரச்சனைகள். 30 சதவீத தற்கொலைகள் மது மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படுகிறது. எங்கெல்லாம் மது மற்றும் போதைகள் கண்காணித்து தடுத்து நிறுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தற்கொலை எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மூன்றாவது Universal strategy ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை கையாளும் விதம் சம்பந்தப்பட்டது. உதாரணத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொண்ட செய்தியை பூதாகரமாக்கினார்கள். இது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதில், அந்த நடிகரின் தற்கொலையை ஊடகங்கள் கையாண்ட விதத்தினால் நாட்டில் 20 சதவீதமான தற்கொலைகள் அந்த காலகட்டத்தில் அதிகரித்து இருந்ததை கண்டறியமுடிந்தது.

அதேபோல் அந்த சமயத்தில் 28 சதவீதம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது எப்படி என இணையத்தில் தேடியிருந்தனர். இதனால், ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை விறுவிறுப்பாகவோ அல்லது தங்களுடைய TRP ரேட்டிங்கிற்காகவோ  பெரிதுப்படுத்தக்கூடாது. இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட செய்திகளினால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இதன்காரணமாக ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை மிக கவனமாக கையாளவேண்டியது அவசியமாகிறது. 

தற்கொலை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான  நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளோம். நான் உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன். 2019ம் ஆண்டில், Press Council of India அமைப்பு, மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான செய்திகளை முக்கியச் செய்தியாக (Headlines news) கொண்டு வரக்கூடாது; தற்கொலை தொடர்பான செய்திகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் இடம்பெற்றால் அத்துடன் தற்கொலை தடுப்புக்கான உதவி மையங்களின் தொலைபேசி எண்களை வெளியிடவேண்டும்; தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் படங்களை வெளியிடக்கூடாது; அந்த தற்கொலை முயற்சி குறித்து வரிக்கு வரி விரிவாக எழுதக்கூடாது என பல வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. ஆனால், அவை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதுதான் இன்று பெரும் கேள்வியாக உள்ளது.

குறிப்பாக யூடியூப் சேனல்கள்தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சுத்தமாக கடைப்பிடிப்பது இல்லை. யூடியூபில் ஒருவர் பற்றிய ஆபாசமான தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டாலோ, ஒருவர் குறித்த தனிப்பட்ட விவரங்களை யூட்யூபில் வெளியிட்டுவிடுவேன் என்ற மிரட்டல் காரணமாகவோ, பல தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதனை கட்டுப்படுத்தவோ அல்லது அதனை நெறிமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. இவை மூன்றும் Universal Strategiesக்கான உதாரணங்கள்.  அதன்பிறகு Selective strategies உள்ளது.

Selective Strategies என்பது யாரெல்லாம் அதிகளவு தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கிறார்களோ (High Risk People) அவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழுங்குவது.  மனநலம் குன்றியவர்கள், Domestic Violence போன்ற குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் நபர்கள் மற்றும் ஏற்கனவே தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்தவர்கள் ஆகியோர் High Risk People என்போம். அவர்களுக்கு தனித்தனியான சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும்.

அடுத்தது Indicated Intervention என்போம்.. அதாவது ஒருவருக்கு ஏற்கனவே தற்கொலை எண்ணம் வந்துவிட்டது. அவரை அந்த எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் Health System என்பதை ஏற்படுத்துவது. இப்படியாக அனைத்து அம்சங்களையும் அலசி, ஆராய்ந்து ஆழமாக  National Suicide Prevention Strategy வகுத்துள்ளோம். அதனை அரசு அமல்படுத்த காத்துக்கொண்டு இருக்கிறோம்.

Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை (10.9.23) காண்போம்...

இந்த நேர்த்திமிகு நேர்காணலின் காணொளியைக் கண்டு பயன்பெற...

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com