இந்தப் படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை

இந்தப் படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
Published on

அண்ணாத்தே வந்த பாதை – 4

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

"நான் பெங்களூரில் வசித்தபோது, ஒரு நாள் நான் ஒரு பாறையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்; அதில் ஸ்ரீ ராகவேந்திரரின் உருவம் என் கண்களுக்குத் தெரிந்தது. அப்போது, "நீ சென்னைக்குப் புறப்பட்டுப் போ!" என்று ஒரு குரல் என்னுடைய காதுகளில் ஒலிப்பதுபோல உணர்ந்தேன். பாறையில் இருந்த ஸ்ரீ ராகவேந்திரரின் உருவம்  எனக்கு ஆசி கூறுவதுபோல இருந்தது. அதன் பிறகுதான் நான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தேன்.  என் குருநாதர் கே.பி.சாரின் மூலமாக திரையுலகில் அறிமுகமானேன்.
ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் கிடைத்ததால்தான் எனக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமைந்திருக்கிறது" என்று ரஜினி சொல்லுவார்.

இப்படி மகான் ஸ்ரீ ராகவேந்திரர் மீது அளவில்லாத பக்திக் கொண்ட ரஜினி ஒரு நாள்  "ராகவேந்திரர் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும்; அந்தப் படத்தில் அந்த மகானின் கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்க வேண்டும்" என்று சொன்னபோது,
"ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மீது கொண்ட பக்திக் காரணமாக ஓர்  ஆர்வத்தில் சொல்லுகிறார்" என்றுதான் நினைத்தேன். "சரி! பார்க்கலாம்" என்று கூறி மழுப்பினேன்.

சில வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் ரஜினி, "நான் தொண்ணூற்று ஒன்பது படங்கள் நடித்து விட்டேன்; என்னுடைய நூறாவது படம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
அது ஸ்ரீ ராகவேந்திரருடைய வாழ்க்கையாக இருக்குமானால், அதைவிட மகத்தான பேறு எனக்கு வேறு இருக்க முடியாது. அந்தப் படத்தை கே.பி. சார் எடுக்க வேண்டும்; நீங்கள்தான் இயக்க வேண்டும்"என்றார். எனக்கு ரஜினியின் ஆர்வம் நன்றாகப் புரிந்தது. ஆனால், எனக்குள்ளே ஒரு தயக்கமும் இருந்தது. அது குறித்து ரஜினியிடம் நான் வெளிப்படையாகவே சொன்னேன்.

எனது தயக்கத்துக்கான காரணங்கள் மூன்று. முதலாவது, ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற ஒரு அமைதியே உருவான மகானாக ரஜினி நடித்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இரண்டாவதாக, ஒரு ஆன்மிகவாதியின்
வாழ்க்கை சரித்திரத்தைப் படமாக எடுத்தால் அது வர்த்தக ரீதியில் வெற்றி பெறுமா? மூன்றாவது, தனிப்பட்ட முறையில் உண்டான தயக்கம். "இப்படிப்பட்ட ஒரு படத்தை என்னால் இயக்க முடியுமா?" என்பதுதான் அது. காரணம், நான் நிறைய  சமூகக் கதைகளைப் படமாக எடுத்திருக்கிறேன் என்றாலும், புராணக் கதைகளை எடுத்தது இல்லை. அது மட்டுமில்லாமல், நான் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே, "என்னால் இந்தப் படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என்று சொல்லிவிட்டேன். அப்படியா என்று கேட்டுக்கொண்டு, மேலே எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்று விட்டார் ரஜினி.

ஆனால், ரஜினி சும்மா இருக்கவில்லை; அடுத்து கவிதாலயா அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தர் சாரை  சந்தித்து இருக்கிறார். அவரிடம், தன்னுடைய நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திரரது வாழ்க்கையாக இருக்க வேண்டும்; அந்தப் படத்தில் தான் அந்த மகானின் பாத்திரத்தில் நடிக்க வேண்டும்; அதை கவிதாலயா நிறுவனம் தயாரிக்க வேண்டும்" என்ற தன் விருப்பத்தை சொல்லிவிட்டு, " எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தை இயக்குவதற்கு தயங்குகிறார். அவரிடம் நீங்கள்தான் பேசி அவரை  எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  இதெல்லாம் முதலில் எனக்குத் தெரியாது. கவிதாலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்து, நான் பாலச்சந்தர் சாரைப் போய் பார்த்தபோதுதான் தெரிய வந்தது.

"ஸ்ரீ ராகவேந்திரர் சரித்திரத்தை, ரஜினியின் நூறாவது படமாக கவிதாலயா தயாரிக்கப் போகிறது. அதை நீங்கள்தான் இயக்க வேண்டும்" என்று பாலச்சந்தர் சொல்ல, நான் மறுபடியும் என்னுடைய தயக்கத்தைச் சொன்னேன். அவர் விடவில்லை. "ரஜினி, ஸ்ரீ ராகவேந்திரர் மீது கொண்ட பக்தி அளவில்லாதது,. அவருடைய பாத்திரத்தில் ரஜினி நடிக்கிறபோது, அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நடிப்பார், அதனால், அது ரஜினி படங்களிலேயே மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். அதனால், ரஜினி ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு நல்லதொரு வரவேற்பு இருக்கும். அடுத்து, "கமர்ஷியலாக படம் வெற்றி பெறுமா" என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தயவு செய்து அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். காரணம், "ரஜினியின் சென்டிமென்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துதான் நான் இந்தப் படத்தை எடுக்கிறேனே தவிர, இதன் மூலமாக  லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. கவிதாலயா  பேனரில் அந்தப் படத்தை  எடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். எனவே, உங்களது இரண்டாவது தயக்கமும் அவசியமில்லாதது" என்றார்.

"அதெல்லாம் சரிதான் சார்! எனக்கு புராணப்படங்கள் இயக்கிய அனுபவமில்லை; நான் சுயமரியாதை குடும்பத்திலிருந்து  வந்தவன் என்பதால், ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி படம் எடுத்தால் அது சரியாக இருக்குமா?" என்றவுடன், அவர், "நீங்கள் கமர்ஷியலாக பல வெற்றிப் படங்களைத் தந்த ஒரு இயக்குனர் மட்டுமில்லை… நாவல்களையும், நாடகங்களையும் சினிமாவாக எடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டு. நீங்கள் எப்போதுமே, ஒரு சிறு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள்ளே பணியாற்றியவர் இல்லை. எனவே, "உங்களால் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்க முடியும்" என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திர மகானைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன்" என்றார். நான் எனது ஒப்புதலைத் தெரிவித்தேன்.

அடுத்து, நான் செய்த காரியம் தமிழ்ப் பட உலகில் மிக அதிக அளவில், மிகவும் அற்புதமான முறையில் புராணப்படங்களை வழங்கிய
ஏ.பி. நாகராஜன் அவர்கள் இயக்கிய அத்தனை புராணப் படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அதன் மூலமாக புராணக் கதைகளை, திரையில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று ஏ.பி.என். கடைபிடித்த திரை இலக்கணம் எனக்குப் புரிந்தது. என்னால், 'ஸ்ரீ ராகவேந்திரரது வாழ்க்கையைப் படமாக எடுக்க முடியும்' என்ற தன்னம்பிக்கை எனக்கு  ஏற்பட்டது. அடுத்து, அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் பல புத்தகங்களைப் படித்து, அவரைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். படத்தின் கதை, திரைக்கதை எழுதும் பொறுப்பை,  திரையுலகின் மூத்த எழுத்தாளரான ஏ.எல். நாராயணனிடம் ஒப்படைத்தோம். அவர், மிக நல்ல முறையில் ஸ்கிரிப்ட் எழுதி முடித்தார். படத்தின் பூஜை, மந்திராலயத்தில் இருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலத்தில்தான் நடந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமானது.

 முதல் நாள் படப்பிடிப்பு, ரஜினி செட்டுக்குள்ளே  நுழைந்தார்.
ஸ்ரீ ராகவேந்திரர் மேக்-அப்பில் முகத்தில் சாந்தம் ததும்பியது. படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஸ்ரீ ராகவேந்திர மகான் ரஜினி நடந்து வருவது போன்ற காட்சி. ரஜினி முயற்சித்தாலும், நடையில் இருந்த வேகத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்புறம் என்ன நடந்தது?

(அடுத்த வாரம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com