உலகிலேயே மிக உயரமான அதிகார நந்தி

உலகிலேயே மிக உயரமான அதிகார நந்தி
Published on

கே.­என்.ராமகிருஷ்ணன்

லகிலேயே மிக உயரமான நந்தி எனப் பெயர் பெறப் போகும் அதிகார  நந்தி சிலை ஒன்றை ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் வடிவமைத்து அச்சிலை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த பிரம்மாண்ட சிலை சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் ராஜலிங்கேஸ்வரர் கோயிலின் முன் அமைக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள வெள்ளாளகுண்டம்
ராஜலிங்கேஸ்வரர் கோயிலின் தலைவர் அருட்குரு ஶ்ரீராஜவேல் சுவாமிகள் அருட்கொடையால் ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் இந்தப் பிரம்மாண்டமான சிலையை வடிவமைத்து வருகிறார்.

இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் ஶ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான பத்துமலை தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா வேண்டுகோளுக்கிணங்க பத்துமலையில் எழுப்பிய உலகிலேயே மிக உயரமுள்ள முருகன் சிலையை (140 அடி உயரத்தில்) வடிவமைத்துக் கொடுத்து, அது உலகப்புகழ் பெற்றதாகவும் இன்றும் மலேசியாவில்
டூரிஸ்ட்கள் பார்க்கும் ஒரு முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது. (அந்தக் கட்டுரை கல்கியில் பெரிய அளவில் வெளியானது.)

தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழப்பாடியில் புத்திரகவுண்டம் பாளையம் முத்துமலை கோயில் தலைவர் என்.ஶ்ரீதரின்
வேண்டுகோளுக்கிணங்க அவருடைய சொந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக மலேசிய முருகன் சிலையைவிட உயரமாக 146 அடியில் இங்கே சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது குடமுழுக்குக்காகக் காத்திருக்கிறது.

தற்போது வாழப்பாடியை அடுத்துள்ள வெள்ளாளகுண்டம்
ராஜலிங்கேஸ்வரர் கோயில் தலைவர் அருட்குரு ஶ்ரீராஜவேல் சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உலகிலேயே மிக உயரமான நந்தி ஒன்று வடிவமைத்து எழும்பி வருகிறது.

இந்த நந்தியை வடிவமைப்பதற்கு முன்பாக நம் நாட்டிலுள்ள 1250 நந்திகளைத் தேர்வு செய்து ஒவ்வொன்றிலும் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து கோயில் தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நந்தி வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதனுடைய உயரம் 45 அடிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்பாக மிக உயர நந்தியாகக் கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள நந்தியின் உயரம் 31 அடிகளே. இந்த நந்திக்கான சிறப்புப் பூஜை வருகிற 2022ம் வருடம் பிப்ரவரி 27ந் தேதி என நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது.  இதை அதிகார நந்தி எனவும் குறிப்பிடுவர்.ஸ்தபதி திருவாரூர் தியாகராஜனிடம் பேசும்போது,


"இதுபோல் மேலும் மேலும் அரிய வகை சிலைகளை வடிக்கும் செயல்களை என் முன்னோர்களின் ஆசியுடன் தொடர்ந்து செய்யவே நான் ஆசைபடுகிறேன். ஆண்டவன் சித்தத்தால் எல்லாம் நல்லபடியாக நடைப்பெறுகிறது" என்றார்.

சேலம், வாழப்பாடி மிக விரைவில் மிக உயர முருகன் சிலையாலும்,
இந்த மிக உயர நந்திச் சிலையாலும் உலக டூரிஸ்ட்டுகளின் சிறப்புமிகு இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கடவுள் முருகன் மற்றும் சிவன் சன்னிதிகள் இதன்மூலம் உலகறிந்த ஒன்றாக மாறும் என்பதும் நிச்சயமே.

வழித்தடம்: வாழப்பாடி, சென்னை – சேலம் ஹைவே மேட்டுப்பட்டி டோல்கேட்டிலிருந்து தெற்கில் மங்களபுரம் போகும் வழியில் இந்த 'வெள்ளாளகுண்டம்' என்கிற சிறிய கிராமம் உள்ளது. இங்கு மலை சார்ந்த பகுதிகளின் ஏரிக்கரையின் பக்கம் இந்த நந்தி சிலை திருப்பணி நடைபெற்று வருகிறது.  இது பக்தர்களுக்கு ஒரு முக்கிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.  இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மக்களுடைய குறைகள், தோஷங்கள் நீங்கிவிடுவதாக இங்கு வரும் பக்தர்களின் பேச்சுகளில் தெரிகிறது.  சிவனருள் பெறவே இங்கு வருகிறார்கள். இதை, தான் கண்கூடாகப் பார்த்ததாக ஸ்தபதியும் அவருடைய குழுவினரும் சொன்னார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com