பிரம்மனை உணர்வதுதான் பிரம்மச்சரியம்

பிரம்மனை உணர்வதுதான் பிரம்மச்சரியம்
Published on

பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம் என்பது இந்திரியக் கட்டுப்பாடு மட்டும் அல்ல. இப்படி நினைத்துக் கொள்வதால்தான் அதைப் பற்றிய தவறான கருத்தும், குழப்பமும் ஏற்படுகின்றன. பிரம்மனை உணர்வதுதான் பிரம்மச்சரியம். நமது மனம் இறைவன் பால் திரும்பு வதற்கு அந்த உணர்வை விரும்பி அதில் ஈடுபடும் முழுமையான வேகம் தேவை. சிற்றின்பத்தை நாடி அதற்கு உதவும் போகப் பொருட்களைத் தேடுவதிலேயே தனது முயற்சியைச் செலவிடும் ஒருவருக்கு இந்த உணர்வும் வேகமும் எப்படிக் கிடைக்கும்?

நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக (தொழிலதிபராக) விளங்க நினைக்கிறீர்கள். நாலைந்து வியாபார வழிகளில் முயற்சி செய்கிறீர்கள். ஆனால், அவற்றிலும் பிரமாதமான வியாபார வழி ஒன்று உங்களுக்குத் தெரிய வருகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த மற்ற வழிகளையெல்லாம் மெல்ல மெல்ல முடக்கிச் சுருட்டி விட்டு புதுமையான வழியில் மட்டும் எல்லா முதலீடுகளையும் செலுத்திப் பாடுபடுவீர்கள் அல்லவா? அதுபோல நாம் வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க வெவ்வேறு புலன்களும் உணர்வுகளும் பயன்படுகின்றன. ஆனால், நிறைவான இன்பம், இறைவனிடம் வைக்கும் பற்றில்தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள்.

அப்போது அந்த மற்ற புலன்நுகர்விலிருந்து உங்களை விடுபடச் செய்துகொண் டால்தானே இறை உணர்வில் ஈடுபட முடியும்? இப்படிச் செய்வதே பிரம்மச்சரியம் எனப்படுவது.

நம்முடைய உடல் பெறக்கூடிய எல்லா இன்பங்களுக்கும் உச்சமாக அமைவது சிற்றின்பம். அதனால் அதைக் கட்டுப்படுத்தினால் மனம் மற்ற இன்பங்களில் லயிப்பது நின்றுவிடும். இதனால்தான் பிரம்மச்சரியம் என்றாலே சிற்றின்பத்தை விலக்குவது என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இப்படி ஒரு புலன் உணர்வை அடக்கி நிறுத்திவிடுவது மட்டும் பிரம்மச்சரியம் ஆகிவிடாது. அந்த கவனமும் ஈடுபாடும் இறைவன் பால் திரும்ப வேண்டும். அப்போதுதான் ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட முடியும்.

முனிவர்களும், மகான்களும் கூட இல்லறத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய கவனம் சிற்றின்பத்தின்பால் செல்லவில்லை. அவர்கள் இறைவ னையே எண்ணி இறை உணர்வுடன் வாழ்ந்தார்கள். அதனால் தானே தாம்பத்ய மும் கூட அவர்களுக்கு அதற்குரிய வழியாகவே மாறிவிட்டது.

இறை உணர்வு என்பது நம்மை முன்னேறச் செய்யும் ராஜப்பாதை. அதன் வழியே சென்று முன்னேறுவது நாம் நமது வாகனத்தைச் செலுத்தும் சாமர்த்தியத்திலும் கட்டுப்பாட்டிலும் தான் இருக்கிறது.

- சுவாமி சின்மயானந்தர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com