விதூஷகன்

விதூஷகன்
Published on

ஒரு வாரத்துக்கு முன் சென்னையில் விடியற்காலை பாண்டி பஜாரில் ‘ஹாட் சிப்ஸ்’ காபியுடன் நடைப்பயிற்சி சென்றபோது அங்கே புதிதாக போடப்பட்ட நடைமேடைகளில் இரவில் குடித்துவிட்டு சுயநினைவு இழந்து ஆங்காங்கே படுத்திருப்பவர்களைப் பார்த்தபோது ’விதூஷகன்’ என்ற கல்கியின் கதை நினைவுக்கு வந்தது.

‘விதூஷகன்’ என்ற வார்த்தை இன்று புழக்கத்தில் இல்லை. ஏன் விதூஷகன்களே இல்லை. ‘விதூஷகன்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கில வார்த்தையைத் தேடியபோது ஜெஸ்டர்(Jester) என்று சொல் கிடைத்தது.

சிறுவயதில் "அமர் சித்ர கதா" காமிக் புத்தகத்தில் "Gopal the Jester" என்ற கதை உடனே ஞாபகத்துக்கு வந்தது. அரசவையில் வேலைக்கு இருக்கும் புத்திசாலியான கோமாளி என்று வைத்துக்கொள்ளலாம். தெனாலிராமன்கூட ஒரு விதத்தில் விதூஷகன் தான். சிறுவயதில் சர்க்கஸில் ‘பபூன்’ கோமாளிகளைப் பார்த்திருக்கிறேன். என் மகன் சர்க்கஸே பார்த்ததில்லை!  ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் க்ளவுன் கதாபாத்திரம், பாலச்சந்தர் படத்தில் அதிகப்பிரசங்கி கதாபாத்திரம் இந்த வகைதான்.

பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் தெருக் கூத்தில் ராமாயணமோ, மஹாபாரதமோ விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் வரும்.

கல்கி கதையில் வரும் விதூஷகனால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் அவனும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே கதை.

கல்கி கதையில் வரும் விதூஷகன் சின்னுமுதலி ‘சத்திரப்பட்டி’ என்ற கிராமத்தில் இருப்பவன். எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனுடைய நடை உடை பாவனை, பட்லர் ஆங்கிலம், வாய்க்கு வந்தபடி பாடலுடன், சர்க்கஸ் கோமாளி மாதிரி அவன் செய்யும் செய்கையால் அவன் மிகப் பிரபலம். தேங்காய் மூடி கச்சேரி செய்யும் பாகவதர் மாதிரி இவன் செய்யும் வேலைக்குத் தேங்காய், வாழைப்பழம், முறுக்கு போன்றவைதான் கிடைக்கிறது. மனைவியும், பிள்ளையும் செய்யும் நெசவுத் தொழிலில் குடும்பம் பிழைக்கிறது. இவனுடைய குடிப்பழக்கத்தால் இவனின் குடும்பம் கஷ்டப்படுகிறது.

மேடை நாடகங்களில் நாம் பார்க்கும் கோமாளிகளும், சினிமாவில் காமெடி என்ற பெயரில் அடிவாங்குபவர்களும் அவர்கள் வீட்டில் அதைப் பார்த்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்… சில சமயம் யோசித்ததுண்டு. முதல் முதலில் விதூஷகனின் மனைவி இவன் செய்யும் கூத்தைப் பார்க்கிறாள். கல்கி அதை இப்படி விவரிக்கிறார்.

"கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசிங்கமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமாயிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்."

இக்கதை கல்கி 1930ல் ’விமோசனம்’ இதழில் எழுதியது  ராஜாஜியை ஆசிரியராகவும், கல்கி துணை ஆசிரியராகவும் கொண்டு மது விலக்கு பிரசாரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை 'விமோசனம்'. உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது சிறைக்குச் சென்றுவிடப் பத்திரிகை, பத்து இதழ்களோடு நின்றுவிட்டது. இந்தக் கதைக்கு 92 வயசு. ஆனால், நேற்று எழுதியது போல ஃப்ரெஷாக இருக்கிறது!

கடைசியில்  "அவன் கால் ஒற்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும்" என்ற எழுத்தைப் படிக்கும்போது சென்னை பிளாட்பாரங்கள் நினைவுக்கு வந்தது.

இச்சிறுகதை இணையத்தில் தேடினால் கிடைக்கும். தேடிப் படித்துப் பாருங்கள்.

என் பங்கிற்கு இந்த வாரம் 100 வார்த்தை விழிப்புணர்வு’ கதை விழிப்புணர்வு சினிமா வில்லன் அறிமுகக் காட்சி.

அவனைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டு இருக்கிறது. தலை மட்டும் வெளியே தெரிகிறது.  முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொள்ள முடியாதபடி முகத்தில் பயந்த கண்களுடன் அவன் வில்லனிடம் கெஞ்சுகிறான்.

“ஐயா விட்டுடுங்க... புள்ளகுட்டியெல்லாம் இருக்கு... எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்று பிழைத்துக்கொள்கிறேன்...” இத்யாதி. வில்லனின் அடியாட்கள் உயிருடன் தகனம் செய்ய அவன் மீது பெட்ரோல் ஊற்றுகிறார்கள்.

ஈனக் குரலில் “ஐயாயாயா” என்று கெஞ்சுகிறான். பின்னணியில் இசை அதற்கு ஏற்றார்போல்.  பெட்ரோல் அபிஷேகம் செய்யப்பட்டு காலி குடுவை தூக்கி வீசப்படுகிறது. 

ஜீப்பிலிருந்து வில்லன் எண்டரி. 

மெதுவாகச் சுருட்டை வாயில் வைத்துப் பற்றவைக்கும் கேப்பில்  “என்னிடம் வம்பு வைத்துக்கொள்பவர்களுக்கு இதுதான் கதி”

‘கப் கப்..”  புகை... சுருட்டு நுணியில் நெருப்பு ஒளிர்கிறது. கிளோசப் ஷாட்.

எப்போது சுருட்டு துண்டு வீசப்படும் என்று எல்லோரும் காத்திருக்க.

ஃபிரேம் ஓரத்தில் ”புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடானது. புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்... ” என்ற  விழிப்புணர்வு வாசகங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com