வாசிக்கலைன்னா உயிரோடவே இருக்க மாட்டேன்

75 வயதில் ஓர் உயிர்ப்பு மிக்க வாசகர்
வாசிக்கலைன்னா உயிரோடவே இருக்க மாட்டேன்

- கா.சு.வேலாயுதன்

கோவையின் ஆர்.எஸ்.புரம். அமைதி பொங்கும் மேற்கு பொன்னுரங்கம் வீதி. அதைவிட அமைதியாய் வடக்குப் பார்த்து ஒரு பங்களா வீடு. பசேல் மரங்கள். பூத்துக்குலுங்கும் பூஞ்செடிகள். போர்டிகோ ஒரு வெளிநாட்டுக் கார்கள் இரண்டு. கேட்டருகே செக்யூரிட்டி, அனுமதி பெற்று உள்ளே போய் காலிங் பெல் அழுத்தினால் சற்று நேரத்தில் அவரே கதவைத் திறந்தார்.  அவர் பெயர் சுப்பிரமணியன். அளவான வளர்த்தி. சிவப்பு நிறம். முன் பக்க வழுக்கை. இடது, வலது, பின் தலையின் வெண் முடி அவர் வயதைக் கணிக்க வைத்தது. 

கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கிய மொழிபெயர்ப்புகளுக்கான விருதுகள் விழாவில்தான் சுப்பிரமணியனை பார்த்தோம். அந்த மொழி பெயர்ப்பு விருதுக்கு புரவலர் என்ற முறையில் அவர் பேசும்போது அனைவரையும் கவர்ந்து விட்டார்.

‘‘எனக்கு வாசிப்பதுதான் சுவாசம். வாசிக்கலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இதுவரைக்கும் வாசிச்ச புத்தகங்கள் பத்தாயிரமோ, பதினைஞ்சாயிரமோ எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு வேலையே வாசிக்கிறதுதான். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து வாசிச்சிட்டே இருக்கேன். வாசிச்சிட்டே இருந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்கன்னு கேட்பீங்க. அது வேணும்ங்கிற அளவுக்கு என் அப்பா சம்பாதிச்சு வச்சுட்டுப் போயிருக்கார். என் குழந்தைகள் படிச்சு முடிச்சு கல்யாணமாகி வெளிநாடுகள்ல இருக்காங்க. உலகம்பூரா சுத்தறேன். வாசிக்கறதுலதான் உலகளாவிய சுகம் கிடைக்குது. அது என்னை நல்லவனா வச்சிருக்கு. நல்லது செய்யத் தூண்டுது. “பொன்னியின் செல்வன்” தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலயும் படிச்சிருக்கேன். அதுக்கப்புறம் கல்கியோட அத்தனை நூல்களையும் படிச்சிட்டேன். அகிலனோடது படிக்காத நூல்கள் இருந்தால் ஆச்சர்யம். ஜெயகாந்தன் புத்தகங்கள் நான் படிக்கலைன்னா, அவர் அதை எழுதலைன்னு அர்த்தம்!’’ என்றெல்லாம் ஒருவர் இப்படி யதார்த்தமாக பேசினால் விட்டு விடலாமா? சில நாட்கள் கழித்து அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவர் வீட்டில் அவரை சந்தித்தோம்.  

சுப்பிரமணியன் முகமலர்ச்சியுடன் வரவேற்றபோது அவர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் இடுப்பளவு ஒரு  மேஜை. அதன் மேலே, கீழே, நடுவில் டிராயரில் எல்லாம் புத்தகங்கள். அதற்கு மேலே பிரேமிட்ட வெங்கடாசலபதி அலர்மேலுமங்கை படங்கள். அடுத்தது ஒரு வரவேற்பறை. அங்கேயும் ஒரு நீளமான ஸ்டூலின் மீது புத்தகங்கள். அந்த அறை மூலையில் நீளமான அலமாரி. அதிலும் புத்தகங்கள்தான். அடுத்து ஒரு டேபிள் அங்கேயும் புத்தகங்கள். ‘‘இவ்வளவு புத்தகங்களா?’ என்று கேட்டதுதான் தாமதம், ‘இதென்ன பெரிசு?’ என அடுத்த அறைக்கு அழைத்துப் போனார். பூஜை அறை, அடுத்ததாக இருந்த படுக்கை அறை, மேல்தளத்தில் உள்ள ஹால், படுக்கை அறை எங்கும்  மூலைக்கு மூலை அலமாரிகள், மேஜை டிராயர்கள். எல்லாவற்றிலும் புத்தகங்கள்தான்.

அடுத்தாக ஒரு நூலகம், அதுவும் பெரிய அறை. ஆங்கில எழுத்து எல் வடிவில் எட்டுக்கு பதினாறு நீள உயர அகலத்தில் இரண்டு புத்தக அலமாரிகள். அவற்றின் அடுத்தடுத்த ரேக்குகளில் இரண்டு வரிசைகளில் புத்தகங்கள், எல்லாமே, ஆங்கில தமிழ் நூல்கள். அதிகமாய் கதைப் புத்தகங்கள். ஓஹென்றி, லியோ டால்ஸ்டாய், தஸ்தாயேவஸ்கி என ஆரம்பித்து ஆபிரகாம்லிங்கன், ரொனால்டு ரீகன், ஜார்ஜ்புஷ் என அமெரிக்க ஜனாதிபதிகள், கோர்ப்பச்சேவ், லெனின், ஸ்டாலின், புடீன் உள்ளிட்ட ரஷ்ய அதிபர்கள் என விரிந்து நம்ம ஊர் ஜெயகாந்தன், கல்கி, புதுமைப்பித்தன், அகிலன் இப்படி தமிழ் எழுத்தாளர்களின் நூல்களாய் அடுக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.

‘இத்தனையும் நீங்கள் படித்த நூல்களா?’ என்று கேட்டால், ‘அதிகபட்சமாய் படிச்சிட்டேன். இன்னமும் படிக்க வேண்டியிருக்கு. அத்தனையும் படிக்கறதுக்கு எனக்கு இன்னும் ரெண்டு ஆயுள் வேணும் தருவீங்களா?’ என குழந்தை சிரிப்புடன் கேட்கிறார்.

அதே சமயம், ‘‘இப்ப இங்கே இருக்கிற புத்தகங்கள்தான் பத்தாயிரத்துக்கும் மேல இருக்கும். இதே அளவு நூல்களை நிறைய நூலகங்களுக்கும், கல்விக்கூடங்களுக்கும் நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்ன்னு  கொடுத்துட்டேன்!” என்கிறார்.

நமக்கு தன் வீடு முழுக்க புத்தகங்களைக் காட்டிவிட்டு அமர்ந்தவர், ‘‘நான் தமிழ் நூல்கள் படிக்க ஆரம்பிச்சதே என் 60-வது வயதில்தான்!’’ என்று வியப்பை மேலும் கூட்டினார்.

இப்போது சுப்பிரமணியனுக்கு வயது 75 ஆகிறது. ஆக, பதினைந்து வருடங்களில் பல்லாயிரக்கணக்கான நூல்களை வாசித்துத் தள்ளியிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது?

‘‘சென்னையில்தான் என் இளம்பருவம். சாந்தோம் கான்வென்ட் மைலாப்பூர், குட் செப்பர்டு ஸ்கூல் நுங்கம்பாக்கம், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் சேத்துப்பட்டுல படிச்சேன். அப்ப பியுசி. இன்ஜினியரிங் மணிபால் போய் மூணு மாசம்தான் படிச்சேன். பிடிக்கலை. வந்துட்டேன். அழகப்பா காலேஜ் காரைக்குடியில் பி.காம்., படிச்சேன். நான் படிச்சது எல்லாம் இங்கிலீஷ் மீடியம் என்பதால் ஆங்கில நூல்களாக வாசித்தேன். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில ஜார்ஜ் டிக்கன்ஸன் கதை எல்லாம் ஒரு போர்ஷனா வரும். அந்த பாடம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. பரீட்சையிலயும் பெரிசா மார்க் ஸ்கோர் பண்ணமாட்டேன்.

அதுவே டிக்கன்ஸ் பெரிய நூல்களை உடனுக்குடனே படிச்சிருவேன். அவரோட ஆலிவர் ட்விஸ்ட்டுன்னும், டேல் ஆப் டூ சிட்டீஸ்’ன்னும் இரண்டு கதைகள் பிரம்மாண்டமானது. அது எல்லாம் கதையா படிச்சா எனக்கு ஆர்வம் பீறிட்டுக்கும். அதனால அதை வெளியில  வாங்கி வாங்கி புத்தகமாகப் ஆரம்பிச்சேன்.

அப்ப எல்லாம் சின்னப்பையன். புஸ்தகம் வாங்கக் காசிருக்காது. லைப்ரரி போய் படிப்பேன். அங்கே  ஜார்ஜ் டிக்கன்ஸனுடைய அனைத்து நூல்களையும் கரைச்சுக் குடிச்சிருக்கேன். டிக்கன்ஸனை எல்லோராலும் படிச்சுப் புரிஞ்சுக்க முடியாது. அதைவிட ஷேக்ஸ்பியர். அவர் கதை நாடக பாணியில் இருக்கும். அதனால புடிக்காது. அதுவே கதையா வரும். உடனே வாங்கிப் படிச்சிடுவேன். புரியாம புத்தக எண்ணிக்கைக்காக படிக்கிற ஆள் கிடையாது. புரிஞ்சு ரசிச்சுப் படிப்பேன். அப்படி படிச்ச நூல்கள் கணக்கே இல்லை. ஒரு ஆசிரியர் நூல் புடிச்சிருச்சின்னா, அவரோட நூல்கள் எல்லாம் வாங்கிப் படிச்சிருவேன். அந்த மாதிரி குழந்தைகள் இலக்கியம் நிறைய வாசிச்சிருக்கேன். அட்வன்சர், மிஸ்டரி எல்லாம் படித்தேன். அகதா கிறிஸ்டி நூத்தம்பதுக்கு புத்தகங்களுக்கு மேல எழுதியிருக்காங்க. அதை எல்லாம் படிச்சுட்டேன். மர்மநூல்கள்தான் எழுதுவாங்க. அவரோட பயகிராபியும் படிச்சிருக்கேன். பிஜிஓடோஸ் ஹாஸ்யமா எழுதுவார். அவரையும் முழுசா படிச்சுட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு மூணு ஆசிரியர்கள் நூலை வாசிப்பேன். அமெரிக்க ஜனாதிபதிகள் முப்பத்தாறு பேரோட வாழ்க்கை வரலாறு படிச்சிருப்பேன்!” என்று ஆங்கில எழுத்தாளர்களோட பெயர்களாக சொல்லிக்கொண்டு போனவர் கடைசியாக தமிழ் கதை உலகத்திற்கு வந்த விதத்தை விளக்கினார்.

‘‘60 வயசுக்குள்ள ஆங்கில நூல்கள் எல்லாம் படிச்சதுல, அந்த நூல்கள் மேலேயே ஒரு சலிப்புத் தட்டியது. அப்புறம்தான் பிறமொழி நூல்கள் படிச்சா என்னன்னு தோணுச்சு. நமக்கு ஆங்கிலத்தை விட்டா தெரிஞ்ச மொழி தமிழ். அதுல கதை, கட்டுரை வாசிச்சதில்லை. எங்கிருந்து எப்படித்தொடங்கிறதுன்னு தெரியலை. எனக்குக் குழந்தைக் கவிஞர் செல்லகணபதி நெருக்கம்… அவர்கிட்டத்தான் கேட்டேன். ‘கல்கியில் ஆரம்பி’ன்னு சொன்னவர் அப்படியே அகிலன். ந.பார்த்தசாரதி, சாண்டில்யன் படிங்க. அப்புறம் நீங்களே உள்ளே வந்துடுவீங்கன்னு சொன்னார். “பொன்னியின் செல்வன்” பெரிசா இருந்தது. அதனால முதல்ல “சிவகாமி சபதம்” வாசிச்சேன். ஒரே மூச்சுல வாசிச்சு முடிச்சுட்டேன். இரண்டாயிரம்… மூவாயிரம் பக்கங்கள் வாசிக்கிற வேகத்தை கல்கியின் நூல்கள்தான் தந்தது. அப்பப்ப டிக்ஷனரியும் பார்த்துக்குவேன். இப்படி கல்கியோட நூல்கள் அத்தனையும் வாசிச்சுட்டேன். அதேபோல நா.பா. ஜெயகாந்தன், சுஜாதா, லட்சுமி, புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, லட்சுமி, பாலகுமாரன், ரமணிச்சந்திரன்!’’ என பெரிய பட்டியலையே சொன்னார்.

இவ்வளவு புத்தகங்களை வாசித்தவருக்கு கதை, கவிதை எழுதும் எண்ணமோ, எழுத்தாளர் ஆகும் எண்ணமோ வரவே இல்லையா? என்று கேட்டால்…

 உதடு பிதுக்கி சிரிக்கிறார். என் வேலை வாசிப்பு மட்டுமே. படிச்சி ரசிப்பதில்தான் எனக்கு ஆர்வம். எழுதறதுல இஷ்டம் இல்லை. இருந்தாலும் அப்பா மேல இருந்த பாசத்தில் “அன்பின் பெருமழை அப்பச்சி” என்று ஒரே ஒரு புத்தகம் சமீபத்தில்தான் எழுதினேன்!’’ என்று சொல்லி அந்தப் புத்தகப் பிரதி ஒன்றையும் நம்மிடம் அளித்தார்.

எல்லாம் சரி. இந்த வாசிப்பினால் உங்களுக்கு கிடைத்தது என்ன? என்று கேட்டோம். என் செயல்பாடுகள் எல்லாமே புத்தகம் படித்ததால் வந்தது. நல்லது அதில் எடுத்துக்கறேன். கெட்டதைத் தெரிஞ்சுக்கிறேன்!’’ என்கிறார்.

 தொழில் பற்றிக் கேட்டால், பெரிதாக அதைப் பற்றி பேசுவதில்லை. ஸ்டாக் எக்சேஞ்சில் பங்கு வர்த்தம் செய்வேன். அதுவும் வாங்கி வைப்பதோடு சரி, ரப்பர் எஸ்டேட் குடும்பத்திற்கு உண்டு. வருவாய் வருகிறது. ஒருமுறை காரைக்குடியில் நடந்த பள்ளி விழா ஒன்றில் இவர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் பேச, இவர் வேண்டுகோளை முன்னிட்டு தனது “இலக்கியச் சிந்தனை” அமைப்பில் இவரையும் ஒரு ட்ரஸ்டியாகவும் இணைத்துக் கொண்டனராம் ப.சிதம்பரமும் அவர் சகோதரர் ப.லட்சுமணனும்.

 “புத்தகங்களோடு இல்லாத நேரம் என்று ஒன்று உண்டா” என்று கேட்டால் ”ஏன் இல்லாமல்… பேரக்குழந்தைகளுடன் விளையாடும் நேரம் மட்டும். அதை அப்படியே அவர்களுடனே ஸ்பெண்ட் பண்ணுவேன்!’’ என்று சொல்லி விடைகொடுத்தார். வழியனுப்ப வந்தவர் கையோடு ஒரு புத்தகத்தையும் வைத்திருந்தார்.

அதன் தலைப்பு: ANDREW MORTON- THE QUEEN

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com