இது இரண்டு நூற்றாண்டுகளின் கதை

இது இரண்டு நூற்றாண்டுகளின் கதை
Published on

- கா. சு.வேலாயுதன்

ராகுல் கருத்தூன்றிக் கேட்ட இலங்கைத் தமிழர் பிரச்னை

வெறும் பாதயாத்திரையாக இல்லாமல், ஆங்காங்கே தங்கி மக்களின் குறைகளையும் கூர்ந்து கேட்டு, சாதுர்யமாக ஆறுதல்படுத்தும் ராகுல்காந்தியின் தன்மை தெய்வீகமானது!’ என்று புளகாங்கிதப்பட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர்வாசிகள். குறிப்பாக இங்கே வசிக்கும் சுமார் 12 ஆயிரம் புலம்பெயர்ந்த இலங்கை மலையகத் தமிழர்களின் உணர்ச்சிப் பிரவாகத்திற்கு அளவேயில்லை எனலாம்... சரி என்னதான் நடந்தது...?‘

‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனப்படும் தேசந்தழுவிய அளவில் மக்கள் ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இந்த பாத யாத்திரையை அவர் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியவர், நேரே கேரளாவிற்குள் நுழைந்து விட்டார்.

அந்த வகையில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து, மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். அங்கிருந்து நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வந்தார். அதாவது கேரளத்தின் எல்லையான ‘வைகடுவை’ என்ற ஊரின் வழியே தமிழக எல்லையான நாடுகாணிக்குள் நுழைந்த அவர், அங்கிருந்து பயணப்பட்டு கடந்த 29ம் தேதி இங்கே கோழிப்பாலம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

இங்கிருந்து மாலை 4 மணிக்கு பாதயாத்திரை புறப்பட்டவர் ஏழு கிலோமீட்டர் பயணித்து கூடலூர் டவுனை அடைந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

கேரளாவிலேயே 20 நாட்கள் பாதயாத்திரை செய்த ராகுல் தமிழகப்பகுதியில் கன்னியாகுமரி பகுதியில் ஒரு நாள் மட்டுமே. எனவே, தமிழகத்தைத் “தொட்டும் தொடாமல்... பட்டும் படாமல் ராகுல் சென்று விட்டார்” என்ற வருத்தம் தமிழக காங்கிரஸ்காரர்களுக்கும், கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கும் இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக கூடலூர் ராகுல் வந்ததும் மக்கள் வெள்ளம் குவிந்து விட்டது.

அங்கு, தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து கூறினர். கோழிப்பாலத்தில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கிருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அவருடன் பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், எம்.பி.க்கள் ஜோதிமணி, ஜெயகுமார், எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை உட்பட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்துக்கொண்டனர். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் பங்கேற்று, ராகுல்காந்தியை வாழ்த்தி வரவேற்றனர்.

போதாக்குறைக்கு தமிழகமெங்குமிருந்து காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரும் தம் படைபலத்துடன் வந்திறங்கி விட்டனர். கிட்டத்தட்ட இங்கே கூடிய கூட்டம் மட்டும் 40 ஆயிரம் பேர் தாண்டும் என்கிறார்கள் உளவுத்துறையினர்.

இந்த கூட்டம் நடப்பதற்கு முன்பு தான் தங்கிய கலைக்கல்லூரி விடுதியில் கூடலூர் பிரச்னைகளைப் பற்றிக் கேட்டறிய நகரின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் ராகுல். விவசாயம், காடுகள், சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் துறைவாரியாக பிரிக்கப்பட்டு, அதில் ஒரே ஒரு நபர் மட்டும் ராகுலை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சண்முகம் என்பவர் இங்குள்ள நிலம் சம்பந்தமாக ராகுலை சந்தித்தார். கூடலூர் செக்ஷன் 17 நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் நிறைய (சுமார் 70 ஆயிரம் ஏக்கர்) தனியார் எஸ்டேட் கையில் உள்ளது. அவற்றில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் பட்டா கொடுத்து விட்டு, மீதி அனைத்தையும் அரசு காடாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால், மாறி மாறி வரும் ஆளுங்கட்சியினர் செய்யும் தகிடுத்தத்தங்களால் அது நிறைவேறாமலேயே உள்ளது. இதனால் பொதுமக்கள் “புலிகள் காப்பகம்” என்ற பெயரில் வனத்துறையினரால் விரட்டி அடிக்கப்படும் நிலையும் உள்ளது. அதைப்பற்றி சண்முகம் பேசினார். மேலும் இருவர் இங்குள்ள வணிகர்கள் பிரச்சனை, தேயிலைக்கு விலையில்லாதது குறித்த பிரச்சனையை ராகுலிடம் பேசினர்.

இதற்கெல்லாம் ஹைலைட்டாக வி.டி.எம்.எஸ்.செல்வராஜ் என்பவரை அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார் ராகுல். தான் சந்தித்தவர்களில் அதிக நேரம் கருத்தூன்றி கேட்டது இவர் சொன்ன விஷயத்தைத்தான்.  செல்வராஜ் தொழிலாளர்கள், விவசாயிகள் சங்கத்தலைவர். தவிர இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். எம்.எஸ்.செல்வராஜ் ராகுல் பேசியது எல்லாமே கூடலூரில் வசிக்கும் மலையகத் தமிழர்களுக்கான பிரச்சனை.

அது இரண்டு நூற்றாண்டுகளின் கதை.

தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த பழங்குடியின, தலித் மக்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இலங்கை தலைமன்னார் சென்றவர்களுக்கு, பல்வேறு சோதனைகள் காத்திருந்தன.

தலைமன்னாரிலிருந்து கண்டி சென்ற பலர், செல்லும் வழியில் வன விலங்குகள், நச்சுப் பாம்புகளால் உயிரிழந்தனர். கடும் குளிர், மழையிலும் மிகுந்த சிரமப்பட்டு, தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கினர். இவர்களது குடும்பங்கள் பெருகிய நிலையில், ஒரு கட்டத்தில் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர்கள் மாறினர். இதனால் உள்நாட்டுக் கலவரங்கள், இன மோதல்கள் ஏற்பட்டன. பலரின் உயிர், உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அவர்கள் இலங்கையிலேயே நிரந்தரமாக வாழும் வகையில் குடியுரிமை வழங்கி, பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், அரசியல் காரணமாக 1964-ல் ஸ்ரீமாவோ-சாஸ்திரி, 1974-ல் இந்திரா-ஸ்ரீமாவோ ஆகியோர் மேற்கொண்ட ஒப்பந்தங்களால், 6 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவில் குடியேற்றப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் பிறந்து, வளர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிம்மதியாக வாழ முடியவில்லை என்கின்றனர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் வம்சாவளித் தமிழர்கள். அவர்களைப் பற்றித்தான் ராகுலிடம் பேசியிருக்கிறார் செல்வராஜ். அப்படி என்ன பேசினார். அவரிடமே கேட்டோம்.

‘‘சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற பலரின் வாரிசுகள் தமிழகத்தில் குடி அமர்த்தப்பட்டபோது, பலருக்கும் இங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துவர வில்லை. இதனால் பலர் இறந்தனர். பின்னர், இலங்கையைப் போன்ற தட்பவெப்ப நிலை கொண்ட, நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை மலைப் பகுதிகளுக்கு அவர்கள் குடியேறினர். மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் நிலம், வேலை, வீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், உறுதியளித்தபடி உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை. அவர்கள் சாதாரண கீற்றுக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் (டேன்டீ), தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளியினருக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் கூலிகளாக மட்டுமே மலையகத் தமிழகர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், பலர் கொத்தடிமைகளைப்போல நடத்தப்பட்டனர்.

இதேபோல, மத்திய அரசின் உள்துறை செயலகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி, மலையகத் தமிழர்களுக்கு தொழிற் கடன், வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. அந்த வங்கியும் முதலாளிகளுக்கு கடன் வழங்கியதே தவிர, தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தவில்லை.

ஏறத்தாழ 40 வருடங்களாக காபி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களை, குதிரை லாயம் போன்ற குடியிருப்புகளில் தங்கவைத்து, ஓய்வு பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியே அனுப்பும் நிலையே நீடிக்கிறது. மேலும், நிலப்பட்டாவும் தரவில்லை. இதனால், இவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் சுமார் இருபது லட்சம் பேர் தென்னிந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தில் ஆறு லட்சம் பேர் வரை உள்ளனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், உதகை பகுதிகளில் மட்டும் சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கின்றனர்.  அவர்கள்தான் மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிப்பவர்களாகவும் உள்ளனர். என்றாலும், “அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம்” என்ற நிலையில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.

இன்றைக்கு படிப்படியாக இவர்களுக்காக தொடங்கப்பட்ட “அரசு தேயிலைத் தோட்டக்கழகம் ”நடத்தும் டேன்டீ மூடப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் எஸ்டேட் நிர்வாகக்குளறுபடிகள்தான். ஆனால், அதில் பாதிக்கப்படுவதோ இந்த மலையகத் தமிழர்கள்தான். அதனால்தான் இந்த டேன்டீக்காக அன்றைக்கு 5500 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலங்களை மலையகத் தமிழர் குடும்பங்களுக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்து தாருங்கள். விவசாயம் செய்தாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கேட்கிறோம். எந்த ஒரு அரசியல்வாதியும் செவி மடுப்பதாகவும் இல்லை.

இதையெல்லாம் ராகுல்காந்திதான் முதன் முறையாகக் கருத்தூன்றி கேட்ட தலைவர் ஆவார். ரொம்ப பொறுமையாக இதை எல்லாம் தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு போனீர்களா எனக்கேட்டார். கொண்டு போனோம். திரும்பவும் கொண்டு போகிறோம் என்று சொன்னோம். அவரும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சொல்வதாக குறிப்பிட்டார். எனக்கு ஏற்கனவே ராகுலிடம் அறிமுகம் உண்டு. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வேறு பல நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்துப் பேசியுள்ளேன்.

அதேபோல் 2006-ல் கொண்டு வரப்பட்ட பழங்குடிகளுக்கான வனஉரிமைச்சட்டம் காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அதுகுறித்து நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதையும் ராகுலிடம் அளிக்க அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளேன். அதெல்லாம் சொன்னதும் என்னைப் புரிந்து கொண்டார். எங்கள் மக்களின் நிலையையும் அறிந்து கொண்டார்!’’

என்று மனங்கனிய தெரிவித்த செல்வராஜ், ‘‘எத்தனையோ தலைவர்களிடம் இந்த முறையீட்டை வைத்து விட்டோம். யாருமே இதைக் கேட்டதேயில்லை. பொறுமையாக கருத்தூன்றிக் கேட்ட முதல் தலைவரே ராகுல்தான். அதுவே ஏழை எளிய மக்களின் மீதான அவரின் அக்கறையை அபாரமாக நமக்குத் தெரிவிக்கிறது!’’ என்று நெகிழ்ந்தார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com