
வாங்க வி.ஆர்.கே. சார் எப்படியிருக்கீங்க ?
சற்றே நடுத்தர உயரம். பளிச்சென்ற எவரையும் கவரும் முகம். தங்க பிரேம் கண்ணாடி. அரைக்கை சட்டை டை அணிந்திருந்த அந்த மனிதரை புன்னகையுடன் வரவேற்றார் மஹாலட்சுமி, தமிழ் நாட்டில் விற்பனையில் முதல் நிலையிலிருக்கும் பெண்கள் இதழான மலர் பத்திரிகையின் ஆசிரியர்.
வி.ஆர்.கே. என்று எல்லோராலும் அறியப்பட்டிருக்கும் வி.ஆர்.கிருஷணன் நகரின் ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தின் அதிபர். அவ்வப்போது அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தன் தொழில் ரீதியாக வருபவர்.
“ஒரு 10 நிமிடம் இதைப்படியுங்கள்” என்று ஒரு கவரைக்கொடுத்தார்.
“உங்கள் பெயருக்கு வந்த கடிதம் என்னை ஏன்?” என்று மஹாலட்சுமி கேள்வியை முடிக்கும் முன் “ஆம் எனக்கு வந்தது தான். ஆனால் நீங்கள் படிக்க வேண்டும்”
படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே “என்ன சார் இது? உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் கோபத்துடன் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தை கொண்டு வந்து என்னைப் படிக்கச் சொல்லுகிறீர்கள்” என்றார் மஹாலட்சுமி.
“மேடம் பீளிஸ் முழுவதையும் படியுங்கள். பின்னர் பேசலாம்”.
கடிதத்தை எழுதியவர் வி.ஆர்.கே.யின் மனைவி காயத்திரி. நீங்களும் உங்கள் அம்மாவும் என்னைத் துளிக்கூட மதிப்பதில்லை. நம் குழந்தைகளும் , என்னை மதிப்பதில்லை. அவரவர் தேவைக்கு மிஷின் போல என்னைப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள். உங்களுக்கு உங்கள் பிஸினஸ், ரோட்ரிகிளப் ரவுண்ட் டேபிள் எல்லாம் முக்கியம். எல்லாவற்றிற்கு நேரம் இருக்கிறது. ஆனால் என்னுடன் பேச என் உடல் நிலை பற்றி கேட்க மட்டும் உங்களுக்கு நேரமே இல்லை. என்னை ஒரு ராணியாக நடத்தவிட்டாலும் சக மனுஷியாகவது நடத்துங்கள் என்று பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உள்ள குமுறல்கள் எரிமலையாக வெடித்திருந்த அந்தக் கடிதத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள், தேதி வாரியாக எழுத்தில் காட்சிகளாக விவரிக்கப்பட்டு 10 பக்கத்தில் ஓர் ஆவணமாக விரிந்தது.
முழுக் கடிதத்தையும் படித்து அதிர்ந்து போன மஹாலட்சுமி “என்ன சார் இது? இப்படி எழுதியிருக்காங்க?” சரி இப்போ எதற்கு இதை என்னிடம் கொடுத்துப் படிக்க சொல்லுகிறீர்கள்?
“நீங்கள் இதை மலர் பத்திரிகையில் வெளியிட வேண்டும்”
என்னது? இதைப் பத்திரிகையில் போடணுமா?
“சார் இது உங்க குடும்ப விஷயம். உங்களுக்கு உங்கள் மனைவி எழுதியிருக்கும் கடிதம். நாங்க எதுக்கு இதை பிரசுரிக்க வேண்டும்?
“மலர்” தமிழ் நாட்டில் பல பெண்கள் படிக்கும் பத்திரிகை. என் மனைவியைப்போன்ற நிலையிலிருக்கும் பல பெண்களின் குரலாக இது ஒலித்தால் என்னைப்போல மனைவியை சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ளத்தெரியாத கணவர்களுக்கும் ஒரு செய்தியாகயிருக்குமில்லையா?” என்கிறார் வி. ஆர் .கே.
கண்மூடி சற்று யோசிக்கிறார். மஹாலட்சுமி. பெண்கள் பத்திரிகை என்றால் சமயல் குறிப்புகள், கோலம் என்ற நிலையிலிருந்து பெண்களின் பிரச்னைகளை, நம்பிக்கை தரும்கட்டுரைகள், பிரச்னைகளை உளவியல் ரீதியாக அணுகும் முறையில் மலர் பத்திரிகையை மாற்றி கதை, கட்டுரைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து சர்குலேஷனை உயர்த்திக்காட்டியவர் அவர். வி.ஆர்.கே சொல்லும் கோணத்திலும் இதில் ஒரு பார்வை இருக்கிறது. அது வாசகர்களை கவரும் என்று எண்ணுகிறார்.
“வி.ஆர்.கே. சார். உங்கள் துணிவையும் பெரிய மனத்தையும் பாராட்டுகிறேன். ஆனால், இதை பிரசுரிக்கும் முன் உங்கள் மனைவியை நான் சந்தித்துப் பேச வேண்டும் அவரது அனுமதி எழுத்து மூலமாக வேண்டும்” என்கிறார்.
“நல்லது மேடம் அவரை அழைத்துக்கொண்டுவரகிறேன்.” என்று சொல்லி கிளம்புகிறார் வி.ஆர்.கே.
மஹாலட்மியிடம் சொல்லிவிட்டாரே தவிர அவருக்கு உள்ளூர உதைப்புதான். நான்கு நாட்கள் முன்பு இந்த கடிதத்தை தலையணையின் மீது எடுத்துப் படித்ததிலிருந்து மனைவியுடன் அவர் இது பற்றி பேசவே இல்லை. கடிதத்தைப் படித்தவுடன் நாம் இப்பிடியா இருந்திருக்கிறோம்? சே... என்று தன்னை தாழ்வாக உணர்ந்ததுடன் எழுந்த மற்றொரு எண்ணம் என் காயத்திரி இப்படி உணர்வுகளை அழகாக கோர்வையாக எழுதக்கூடியவளா? இதுநாள்வரை நமக்கு தெரியவே இல்லையே... என்பது தான். அந்த வியப்புதான் அவரை மஹாலட்சுமியிடம் கொண்டுவந்து நிறுத்தி இன்று பேசச் செய்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * *
“என்ன மனுஷன் ? லெட்டரைப் பார்த்தப்புறமும் அதுபற்றி ஒரு வார்த்தை வாய் திறக்காமல் ஏதோ ஒன்றுமே நடக்காதமாதிரி நடந்து கொள்கிறார்? என்று மனதுக்குள் காயத்திரி பொருமிக் கொண்டிருந்தாலும் தன் கணவருடன் கடிதம் பற்றி எதுவும் கேட்கவில்லை.
அந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று காயத்திரி நீ தவறாமல் படிக்கும் ‘மலர்’ பத்திரிகையின் ஆசிரியரைப் சாயங்காலம் பார்க்க போகிறோம் ரெடியாக இரு” என்று சொன்ன தன் கணவரை ஆச்சரியமாகப் பார்த்த காயத்திரி “எதற்கு நான்? எனக்கு அவா கிட்டேயெல்லாம் பேசத் தெரியாது. அடுத்த வாரம் வரலஷ்மி பூஜை.... நிறைய வேலையிருக்கிறது. நான் வரவில்லை...” என்றார்.
“இல்லை இந்த ஆசிரியர் எளிதாக எல்லோருடனும் பழக கூடியவர். வந்து பார்த்தால் புரிந்து கொள்வாய்” என்று சொன்ன தன் கணவனை குழப்பத்துடன் பார்த்தாள் கணவனின் பேச்சை மறுக்கத்தெரியாத காயத்திரி.
சனிக்கிழமை மலர் அலுவலகத்தில் ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவுடனேயே ஏதோ நீண்டநாள் பழகியவரைப்போல “வாங்க காயத்திரி எப்படியிருக்கிங்க? என்று மஹாலட்சுமி வரவேற்றதில் ஆச்சரியப்பட்டுப்போனார் காயத்திரி . அந்த பத்திரிகையாசிரியர் காயத்திரியின் மனதில் மிக உயர்ந்த இடத்திலிருக்கும் அறிவுஜீவி.
“உங்கள் கடிதம் பார்த்தேன்”
“என்ன கடிதம்? நான் மலருக்கு கடிதம் ஒன்றும் எழுதவில்லையே”?
இல்லை... நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதிய கடிதம். அதை அவர் என்னிடம் காட்டினார். அதைத்தான் சொல்லுகிறேன். உங்கள் கணவர் மிக உயர்ந்த மனிதர். நீங்கள் கோபமாக எழுதியிருந்தாலும் அதில் நியாமிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.
அப்போதுதான் லஷ்மிக்கு உரைத்தது. தான் எழுதிய கடிதத்தை மனுஷன் இவரிடம் காட்டியிருக்கிறார். அது சம்பந்தமாக இவர் தன்னிடம் பேசப்போகிறார் என்று.
“உங்கள் கணவர் அதை நம் மலர் பத்திரிகையில் பிரசுரிக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் மேலும் ...” என்று பேச ஆரம்பித்தவுடேனேயே வி.ஆர்.கே. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்... எனக்கு ஒரு கால் வருகிறது. என்று அறையைவிட்டு வெளியேறினார்.
“உங்கள் கணவர் உங்களைப் போன்ற நிலையில் இருக்கும் பலரின் குரலாக இருக்கும் என நினைக்கிறார்” என்று மஹாலட்சுமி சொன்னதைக்கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்த காயத்திரிக்கு அழுகையே வந்துவிட்டது. தவறை உணர்ந்து அதை தன்னிடம் பேசாமல் இப்படிப் பொது வெளியில் வெளியிட முன்வந்திருக்கும் தன் கணவரின் பெருந்தன்மையான செயல் அவர் மீது கொண்டிருந்த எண்ணங்களை உடைத்தது. அவர் மீது ஒருவிதமான பெருமைகூட எழுந்தது.
“ மேடம் உங்களிடம் இந்த கடிதம் கொடுத்தது. அதை பிரசுரிக்க கேட்டது எதுவுமே எனக்குத் தெரியாது. இங்கு கூட்டி வரும்போது கூடச்சொல்லவில்லை. கடிதம் நான் என் கணவருக்கு எழுதியது. எழுதப்பட்ட கடிதங்கள் பெறப்பட்டவரின் உடமை என்று போன மாத இதழில் கேள்வி - பதிலில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே? அவரிடமே கேளுங்கள் அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.”
பளிச்சென்ற இந்த தெளிவான பதிலை எதிர்பார்க்காத ஆசிரியர் மஹாலட்சுமி “அப்படியில்லை. இந்த கடிதத்தை அப்படியே வெளியிட முடியாது. சில வார்த்தைகளை, வாக்கியங்களை மாற்றவேண்டும். மேலும் அது உங்கள் பெயரில் வெளியாகப்போவதால் உங்கள் அனுமதி வேண்டும்”
“சாரி மேடம் என்பெயரில் போடாதீர்கள். அது எனக்கு ஆபத்தாக முடியும். என் மாமியாரும் கல்லூரி போகும் மகளும் உங்கள் மலரின் வாசகர்கள்” என்று லட்சுமி சொல்லிக்கொண்டிருந்த போது வி.ஆர்.கே. அறையின் உள்ளே நுழைகிறார்.
“சார்... உங்கள் மனைவி அழகாக எழுதுவது மட்டுமில்லை. நன்றாகவும் பேசுகிறார்” என்று பேச ஆரம்பிக்கிறார் மஹாலட்சுமி. அந்தக் கடிதத்தை எப்படி இரண்டு பகுதிகளாக வெளியிடுவது என்றும், அதை ‘ராணி’ என்ற புனைப் பெயரில் ராணி சந்தித்த ஒருவரின் கதையாக வெளியிடுவது என்றும் முடிவாகிறது. அந்த மாத இதழிலேயே அடுத்த இதழில் ‘மனந்திறந்து பேசும் ஒரு இல்லத்தரசியின் கதை ’ ஆரம்பம் என்ற மினித் தொடர் அறிவிப்பும் வருகிறது.
மினித்தொடருக்கு பிரமாதமான வரவேற்பு. நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன், என் கணவரைப் படிக்கச் சொன்னேன்.... போன்று ஏகப்பட்ட கடிதங்கள். எழுத்தின் நடைக்குப் பாராட்டுகள். தொடர்ந்து ராணி சிறுகதை, கட்டுரைகள், கணவருடன் சென்ற பயணக்கட்டுரை. உளவியல் குறிப்புகள் என எழுதிக்குவிக்கிறார். தமிழகத்தின் எல்லா பத்திரிகைகளும் அவர் எழுத்தை கேட்டு வாங்கி பிரசுரிக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒரு முகமாகிவிடுகிறார் ராணி.
அன்று ஞாயிறு. காலை 11 மணி தூர்தர்ஷனில் பெண் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் மங்கையர் சோலை நிகழ்ச்சி. தொகுப்பாளார் விஜய், எழுத்துலக நட்சத்திரமான ராணியை வரவேற்கிறார். நேர்காணல் தொடர்கிறது.
“எப்போது எப்படி எழுத ஆரம்பித்தீர்கள்?”
என் மகள் கல்லூரிக்கும் மகன் வேலைக்கும் போகும் கட்டத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். அந்த வயதிலும் என்னால் எழுதமுடியும் என்பதைக்கண்டுபிடித்தவர் என் கணவர். அவர் தந்த ஊக்கத்தால்தான் எழுத ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து எழுதுகிறேன்.
ஏன்? ‘ராணி’ என்ற பெயரில் எழுதுகிறீர்கள்?
என் கணவரும் குடும்பத்தினரும் என்னை ஒரு ராணிபோல மதித்து நடத்தினார்கள். அது எனக்குப்பிடித்திருந்தது. அதனால் அந்தப்பெயர்.
நிகழ்ச்சியைப்பார்த்துக் கொண்டிருந்த வி.ஆர்.கே. விழியோரங்களில் நீர் துளித்தது.