திக்கற்றவர்க்கு தெய்வமே துணை

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை
Published on

"அம்மா..ஐநூறு ரூபா கடனா கிடைக்குமா? அடுத்த மாசம் சம்பளத்துல பிடிச்சிக்கறீங்களா?"  என தயங்கியவாறு கேட்டாள் பொன்னி.

"என்ன பொன்னி நீ ஏற்கனவே வாங்கின ஐயாயிரமே இன்னுமும் போய்கிட்டிருக்கு. எப்ப பாரு கடன் கேட்டா எப்படி? நாங்களும் மாச சம்பளகாரங்க தானே , எங்களுக்கு மட்டும் என்ன பணம் மரத்துலையா காய்க்கிறது? " என கேட்டார் விஜயாம்மாள்.

"இல்லைம்மா, தீபாவளி வேற வருதே. அதான் பசங்களுக்கு ஏதாவது வாங்கணும்"..என இழுத்தவளை மறித்து,

"எனக்கும் நிறைய செலவிருக்கு பொன்னி, புரிஞ்சிக்க" என பொன்னியின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்ந்தார் விஜயா.

பொன்னிக்கு ஒரே கவலையாக இருந்தது. ‘வேலை செய்யும் எல்லா வீடுகளிலும் கடன் பாக்கி இருக்கிறது.  பிடித்தம் போக சம்பளப் பணமோ கைக்கும் வாய்க்குமே போதவில்லை. இதில் தீபாவளியாவது ஒன்றாவது’ என ஆற்றாமையாக வெடித்தது மனது. பெரியவர்களுக்கு என்ன சமாதானம் வேண்டுமானாலும் சொல்லலாம். குழந்தைகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது? என மனது துடித்தது. பெரியவன் லோகேஷிற்காவது எதாவது சொன்னால் புரியும். சின்னதுக்கு ஏதும் புரியாதே...என மனம் கனத்து போனது.

வேகவேகமாக பத்து பாத்திரங்களை கழுவி கூடையில் கவிழ்த்து கொண்டே யோசித்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. ‘அந்த வக்கீல் வீட்டு அம்மாவிடம் கேட்டுப்பாக்கலாமா?’ என்ற யோசனையை அவளே துடைந்தெறிந்தாள். ஏற்கனவே செல்வத்தின் மருத்துவ செலவுக்காக பத்தாயிரம் வாங்கியிருக்கிறாள். அதையே  இன்னும் கழித்தபாடில்லை. யோசிக்க யோசிக்க ஆயாசமாக இருந்தது.  தலையை வலிக்க "ம்மா...காபி இருந்தா ஒரு டம்ளர் குடுங்களேன்"...என கேட்டு வாங்கி குடித்ததில் சற்று தலைபாரம் குறைந்திருந்தது. பக்கெட் தண்ணீரில் மாப்பை நனைத்து தரையை சுறுசுறுப்பாக துடைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.

குடிசையினுள் நுழையும் போதே வாசலை கவனித்தாள். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஷும், மகேஷும் பொன்னியை கண்டதும் ஓடி வந்தனர்.

"ம்மா!....பட்டாசு வாங்கிட்டு வந்தியா?" என ஆர்வமாக கூடையை துழவியது சின்னது.

"தீபாவளிக்கு இன்னும் மூணு நாளு இருக்கு...அதுக்குள்ள வாங்கலாம்டா, இப்ப இந்த பழைய சோத்தை தின்னுட்டு போய் விளையாடுங்க" என விரட்டியடித்தாள் குழந்தைகளை.

சின்னது சரி என சமாதானமடைய, பெரியவன் லோகேஷோ நம்பாமல் ஒரு பார்வையைப் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்ப விளையாட ஓடியது மனதை என்னவோ செய்தது பொன்னிக்கு. இயலாமையில் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். "நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன்"... என மனதை சமாதானப்படுத்தினாலும் மனது சமாதானமாகாமல் ஓலமிட்டது மறுபுறம்.

செல்வம் வேலைக்கு சென்ற காலத்தில் ஏதோ ஓரளவுக்கு பிழைப்பு ஓடியது. செல்வம் ஒரு விபத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானதில் குடும்ப வண்டி ஆட்டம் கண்டது. பொன்னி வேலை செய்யும் வீடுகளில் வாங்கிய கடன்கள் செல்வத்தின் மருத்துவ செலவுகளுக்கே போதவில்லை.

நினைவுகளை ஒதுக்கி குடிசைக்குள் நுழைந்தாள்.

"வந்துட்டியா பொன்னி" என கட்டிலிலிருந்து கஷ்டப்பட்டு  திரும்பி பார்த்தான் செல்வம்.

"ம்...சொல்லுய்யா"..என கூடையை அருகிலிருந்த சேரில் வைத்துவிட்டு, வேலை செய்த வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாதத்தை தட்டில் போட்டு அவனிடம் நீட்டினாள்.

சாதத்தைப் பிசைத்துக்கொண்டே , "தீபாவளி செலவுக்கு ஏதாவது தேறுச்சா பொன்னி" என தயங்கிவாறு கேட்டான் செல்வம்.

"இல்லைய்யா, நானும் எல்லா இடத்திலும் கேட்டு பாத்துட்டேன். எங்கேயும் கிடைக்கலை,என்ன பண்ணப்போறேன்னே தெரியலை" என உதட்டை பிதுக்கியவளை இயலாமையுடன் பார்த்தான்.

"நா வேற உங்களுக்கு பாரமா கெடக்கேன். நல்லாயிருந்தாலாவது நாலு காசு சம்பாதிச்சு பொழைக்கலாம். அதுவும் அந்த கடவுளுக்கு பொறுக்கலை" என கலங்கியவனை சமாதானப்படுத்தினாள் பொன்னி.

"ஏன்யா!..இப்படியெல்லாம் பேசற, நீ நல்லாயிருந்த காலத்துல என்னைய ராணி மாதிரி வைச்சிருந்தல்ல. இப்ப உனக்கு முடியலை. நான் செய்யறேன்"...என ஆறுதலாக தோளை தொட்டாள்.

"நாம எப்படியோ பொறுத்துக்குவோம் பொன்னி..பசங்களை நினைச்சாதான் கஷ்டமாயிருக்கு"

"ஆமாய்யா...எனக்கும் அதே கவலை தான். தீபாவளிக்கு வேலை செய்யுற வீட்ல தர்ற புடவையை கூட வேணாம்னுட்டேன். அதை பசங்களுக்கு துணி எடுக்க காசாக குடுக்க சொல்லிட்டேன். எப்படியோ இரண்டு பேருக்கும் துணி எடுத்திடலாம். இவனுங்க பட்டாசு வேணுங்குறானுங்க அதுக்கு தான் என்ன பண்றதுன்னு புரியலை"

"அவனுங்க என்ன பண்ணுவாங்க பொன்னி. ஊர்ல எல்லா பசங்களும் வெடிக்குறப்ப இதுங்களுக்கும் அந்த ஆசை வர்றது சகஜம் தானே..சின்ன கொழந்தைக பொன்னி".

"புரியதுய்யா , ஆனா ஏழை பாழைகளுக்கு நாளும், கெழமையும் ஏன் வருதுன்னு கவலைபட வேண்டியிருக்குதே . நம் பொழைப்பே பொசுங்கி கெடக்கு. இதுல பட்டாசு வேறயா என அலுப்பாயிருக்குய்யா, பார்ப்போம் இன்னும் மூணு நாள் இருக்கே" என பெருமூச்செறிந்தாள்.

பொன்னி பல இடங்களில் கேட்டும் பணம் கிடைத்தப்பாடில்லை. நாளை விடிந்தால் தீபாவளி. குழந்தைகள் எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாக தினமும் கேட்டு செல்வது வேறு மனதை குடைந்தது. பண்டிகை நாட்களில் எல்லா வீடுகளிலுமே  வேலைகளும் அதிகமாக இருந்தது. அதுவும் பொன்னியை அதிகபட்ச சோர்வாக்கியது. ‘பணம் இருப்பவர்களுக்குதான் பண்டிகை’ என்று தோன்றியது. இடையிடையே ஆங்காங்கே கேட்ட பட்டாசு சத்தம் வேறு எரிச்சலை கிளப்பியது பொன்னிக்கு.

எல்லா வீடுகளிலும் அலுப்புடன் வேலைகளை முடித்து விட்டு "அப்பாடா" என கிளம்பும் நேரத்தில் வக்கீல் வீட்டம்மா, பொன்னி நம்ம எதிர்த்த வீட்டு ருக்மணி டீச்சர் வீட்ல அவங்க பொண்ணுக்கு தலைதீபாவளிக்கு பலகாரம் செய்யறாங்க. கூடமாட ஒத்தாசைக்கு ஆள் வேணும்னு கேட்டாங்க போறியா" என கேட்டவரிடம் யோசனையுடன் தலையை ஆட்டி வைத்தாள்.

பொன்னிக்கு உடம்பு அடித்துப் போட்டது மாதிரி இருந்தது. “இருந்தாலும் நாலு காசு கிடைத்தால், நாளைக்கு புள்ளைக்கு கறி சோறாக்கி  போடலாமே முடிந்தால் பட்டாசு வாங்கி தரலாமே” என்று மனது அடித்துக்கொண்டது.

மிகுந்த சோர்வுடன் ருக்மணி டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தாள். டீச்சர் நல்ல மாதிரியாக இருந்தார், போனதுமே பொன்னியின் முகவாட்டத்தை கவனித்து காபி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பிறகே அவரது வேலைகளை தொடர்ந்தார்.

வேலை ஒன்றும் அவ்வளவா இல்லை. பலகாரம் செய்த பாத்திரங்களைக் கழுவி வைப்பது மட்டும் தான், இருந்தாலும் ஏமாற்றமாக இருந்தது பொன்னிக்கு.

இங்க பாரு ருக்கு "டீவியில் பட்டாசு வெடிக்க தடை, குறிப்பிட்ட நேரம் மட்டுமே வெடிக்கணுமாம்"  புலம்பிக்கொண்டிருந்தார் ருக்குவின் கணவர்..

பாத்திரங்களை துலக்கிக்கொண்டிருந்த பொன்னிக்கும் கேட்டது. "க்கும் பட்டாசு வெடிக்கவே கூடாதுன்னு தடை விதிச்சா நல்லாயிருக்கும்ல"...என மனது  சுயநலமாக நினைத்தை நினைத்து வெட்கப்பட்டாள் பொன்னி. வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு கைகளை துடைத்துகொண்டு வெளியே வந்தாள், உடலே அடித்துப் போட்டது போல் அலுப்பாக இருந்தது பொன்னிக்கு.

•••••• ••••••

டீச்சர் தங்கமானவர். இந்த சிறிய வேலைக்கே விலை உயர்ந்த புடவை ஒன்றை வைத்து நூறு ரூபாய் பணத்தையும் வைத்துக் கொடுத்தார்.

"வேணாம்மா"..என வாங்க தயங்கியவளை கட்டிக்கோ என கைகளில் திணித்தாள்.

"அதுக்கில்லைம்மா...புள்ளைகளுக்கு கூட துணி எடுத்துட்டேன். என் புருஷன் பாவம் அதுக்கு ஒரு வேஷ்டி கூட வாங்க முடியலை...நான் மட்டும் இதை எப்படி கட்டுவேன்...அதான் ஏதாவது காசாவே குடுத்திருங்கம்மா"...என தயங்கியபடி சொல்லியவளை மறுத்து,

"ஒரு நிமிஷம் இரு"...என உள்ளே ஓடிப்போய் யாருக்கோ வாங்கி வைத்திருந்த வேஷ்டி சட்டையை தட்டில் புடவையோடு வைத்துக்கொடுத்தார் ருக்மணி.

"ருக்மணி டீச்சருக்கு பெரிய மனசு"...என நினைத்தவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். கூடவே பலகாரத்தையும் தாராளமாக கவரில் போட்டு பிள்ளைகளுக்கு குடு...என தந்தவளை கண்கலங்க கை கூப்பி வணங்கி விட்டு கிளம்பினாள்.

ஆனாலும் பட்டாசுக்கு என்ன செய்வது என மனது கவலைபட்டது. டீச்சர் கொடுத்த நூறு ரூபாயில் இந்த தீபாவளிக்காவது கோழிக்கறி ஆக்கிப் போடணும் என மனதுக்குள் ஆறுதல் பட்டுக்கொண்டாள். ‘செல்வத்துக்கு கறி ஆக்கிப்போட்டால் நாலு கவளம் சோறு ஜாஸ்தியா உள்ளே போகுமே’ என மனது குதுகலித்தது.  செல்வம் வேலைக்கு போன காலத்தில் ஆட்டுக்கறியே வாங்கி போட்டிருக்கிறாள். ‘இப்ப ஆட்டுக்கறி விற்கும் விலையில், அதையெல்லாம் நினைத்துதான் பார்க்க முடியும்’ என மனதை சமாதானப்படுத்தி கொண்டாள்.

எதிரில் முத்துமாரி அவள் மகளுடன் வந்துக் கொண்டிருந்தாள். கணவனை இழந்தவள். கூலி வேலைக்கு சென்று மகளை படிக்க வைக்கிறாள். பாவம்  நம்மைவிட கஷ்ட ஜீவனம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் பொன்னி .

"என்ன பொன்னிக்கா இவ்ளோ நேரம்?" என முத்துமாரி கேட்க..

"ஒரு வீட்டில் திடீர்னு வரச்சொல்லிட்டாங்க. அதான் முடிச்சிட்டு கிளம்ப லேட்டாச்சு மாரி."

"ம்...சரிக்கா என கிளம்பியவளை "இரு மாரி"...என டீச்சர் கொடுத்த பலகாரங்களில் பாதியை பிரித்து அவளிடம் கொடுத்தாள்.

"ஏனக்கா!...புள்ளைகளுக்கு எடுத்திட்டுப் போயேன்"...என வாங்கத் தயங்கியவளின் கையில் திணித்து, "பாப்பாக்கு குடு" என்றவளை நன்றியுடன் பார்த்தாள் முத்துமாரி.

குடிசைக்குள் நுழையும் போதே பசங்களை தேடினாள் பொன்னி . பிள்ளைகள் தெருவில் எதையோ பற்ற வைத்து கொண்டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது. பணக்கார வீடுகளில் வெடிக்காமல் நமத்து போய் வீசி எறிந்த பட்டாசுகளைப் பொறுக்கி வந்து பிரித்து கொட்டி பற்ற வைத்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் நிலை, பொன்னியின்  மனதை  வாட்டியது. ஏழை குழந்தைகளும் சட்டென ஏமாற்றங்களை பழகிக் கொள்கிறார்கள் என தோன்றியது.

ச்சே!...என அலுத்த மனதை அடக்கி உள்ளே போனவள் செல்வத்திடம் வேஷ்டி சட்டையை கொடுத்தாள்.

"சட்டென முகம் மலர்ந்தவன், ஏது பொன்னி இது என ஆசையாக வாங்கி தடவிப் பார்த்தவன், அடுத்த நிமிடம் எனக்கு எதுக்கு இதெல்லாம் பசங்களுக்கு வாங்குறது தானே"..என கடிந்துக்கொண்டான்.

"டீச்சரம்மா கொடுத்தாங்க...வைச்சிக்க" என சொல்லி உள்ளே சென்றவளின் மனம் குளிர்ந்தது. நெடுநாளைக்குப் பிறகு செல்வத்தின் முகத்தில் தோன்றிய அந்த ஒரு நிமிட மலர்ச்சி, அவள் மனதையும் சட்டென குளிர்வித்தது. இது...இது கிடைத்ததற்கே கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என மாடத்திலிருந்த விளக்கினை ஏற்றி ஒரு நிமிடம் கண்களை மூடி மனமுருகி நின்றாள்.

"வாசலில் அத்தே"...என குரல் கொடுத்தபடி உள்ளே நுழைத்தாள் முத்துமாரியின் மகள் மஞ்சு.

"அம்மா தரச்சொன்னாங்க, வேலை செய்யற பாக்டரியில் அம்மாக்கு குடுத்தாங்களாம். அண்ணாக்களுக்கு குடுங்க"..என ஒரு பையை அவளிடம் கொடுத்து விட்டு ஓடியே போனது.

பையை திறந்தவள் அதிர்ந்தாள் .. அதில்  இருந்த  பட்டாசுகள் அவளை பார்த்து சிரித்தது. அப்பொது தான் முத்துமாரி பட்டாசு கம்பெனியில் வேலை செய்வது ஞாபகம் வந்தது . அதற்குள் கையிலிருந்த பையை பிடுங்கி கொண்டு  பெரிசும், சின்னதும் "ஹோ" வென ஆரவாரமாய் கத்தியபடி வெளியே  ஓடிபோனதுகள்.

எங்கோ தூரத்தில் யாரோ வெடித்த பட்டாசு சத்தம் , இப்போது பொன்னியின் காதுகளில் சங்கீதமாய் ஒலித்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com