வித்தியாசமான கதையுடன் களமாடியிருக்கிறார்.

வித்தியாசமான கதையுடன் களமாடியிருக்கிறார்.
Published on

சர்தார் சினிமா விமர்சனம்

நீரின்றி அமையாது உலகு’ என்ற கருத்தைக் கையிலெடுத்து, Blue Gold  என்னும் தண்ணீரின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தண்ணீர்  வணிகத்துக்கு எதிரான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குநர் மித்திரன். ‘இரும்புத் திரை’, ‘ஹீரோ’ போன்ற படங்களில் கவனம் ஈர்த்தவர் இப்போதும் வித்தியாசமான கதையுடன் களமாடியிருக்கிறார். ‘One India – One pipe line’ என்ற விபரீதத் திட்டத்தின் ஆபத்துக்களை விவரித்திருக்கிறார்.

தேசபக்தி மிகுந்த உளவாளியான (அப்பா) கார்த்தி, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரையே சுட்டுக்கொன்றுவிட்டு, பங்களாதேஷின் சிட்டகாங் நகரின் சிறையில் 32 வருடங்களாக அடைபட்டிருக்கிறார். 8 பாஸ்போர்ட் வைத்திருக்கும் அவரை – 24 மொழிகள் பேசும் அவரை- 600 முறை விசாரித்தும் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லையாம்!

(மகன்) கார்த்தி காவல்துறை ஆய்வாளர். அவருக்கு தேசத் துரோகியின் மகன் என்ற நிழல் தம் மீது படிவது பிடிப்பதில்லை. எனவே அதை மடைமாற்றம் செய்யத் தமது கடமைகளை விளம்பரப்படுத்தி, எப்போதும் விளம்பர வெளிச்சத்திலேயே இருக்கிறார். (நாலு பேருக்கு நன்மை செஞ்சாலும் அது 40,000 பேருக்குத் தெரியணும் என்பது அவரது பாலிஸி.)

அப்பாவின் மீது சுமத்தப்பட்ட பழி எப்படி ஏற்பட்டது? அது நீங்கியதா என்பதே மிச்சக் கதை.

சும்மா சொல்லக் கூடாது… அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் பார்ப்பதுபோன்ற அனுபவத்தைப் படத்தின் பிற்பகுதிக் காட்சிகள் ஊட்டுகின்றன. ஆனால் ஒன்று… ஜேம்ஸ்பாண்ட் ஒரு போதும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கமாட்டார். இவ்வளவு நீளமான கிளைமேக்ஸ் காட்சிகளிலும் தோன்றமாட்டார். சரி… அதை விடுங்கள்.

அப்பா கார்த்தியைப் பார்த்தால், இளைஞர் ஒருவருக்கு மாறுவேடப் போட்டியில் முதியவர் வேடம் போட்டதைப் போலத்தான் இருக்கிறது. அவர் தோன்றும் விதவிதமான பல கெட்டப்புகளும் அப்படித்தான் இருக்கின்றன.

வாட்டர் வாரியராக வரும் சமீரா பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகையை எங்கோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று யோசித்தால், அட… நம்ம லைலா! அவருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் மிக்க பாத்திர வடிவமைப்புச் செய்திருக்கலாம்.

லைலாவின் மகனாக வரும் சிறுவனின் நடிப்பைப் பாராட்டியே ஆகலாம். ஆனால் மிகுந்த செயற்கைத்தனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது அந்தப் பாத்திரம்.

சண்டைக் காட்சிகள் மிக உக்கிரமாக இருக்கின்றன. என்னதான் அதி புத்திசாலியும் பராக்கிரமும் பொருந்திய உளவாளியாக இருந்தாலும், அந்நிய நாடுகளில் புகுந்து ரகசியத் தகவல்களைக் கிளப்பிக்கொண்டு வருவதெல்லாம் லாஜிக் துவாரங்கள். அல்ல, அல்ல… லாஜிக் பள்ளங்கள்!

மகன் கார்த்தியின் காதலியாக வரும் ராஷி கன்னா ஏதாவது செய்வார் எனக் காத்திருக்கிறோம். படம்தான் முடிகிறதே தவிர அவர் ஒன்றும் பெரிதாய்ச் சாதித்துவிடவில்லை. அப்பா கார்த்திக்கு ஜோடியாக இருக்கும் ரஜியா விஜயனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணிக் குரல் கிராமத்துக்குப் பொருந்தாமல் அபஸ்வரமாய்க் காதில் இடிக்கிறது.

பின்னணி இசை ஓக்கே. பாடல்கள் படத்துக்கான வேகத் தடைகள். அவற்றைக்  கத்தரித்திருந்தால் நெடு நேரம் படம் பார்த்த அலுப்புக் குறைந்திருக்கும். ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு துல்லியம்.

ஆரம்பத்தில் பல்வேறு இடங்களிலும் உளவாளிகள் நிரம்பியிருப்பதாகக் காண்பிக்கிறார்கள். அடுத்த காட்சியில் இருந்து அப்படி யாரும் துப்புத் தருவதில்லை.

“யூ ட்யூபராக ஒரு ஈமெயில் ஐடி இருந்தால் போதும்” என்று வாழைப்பழத்தில் அவ்வப்போது ஊசி ஏற்றுகிறார்கள். “பெஸண்ட் பீச்சில் தர்மயுத்தம்” போன்ற மனதில் பதிந்த சம்பவங்களையும் தொட்டுச் செல்கிறார்கள்.

“ரவுடி பொய் சொல்லலாம்; ஆனா ரவுடின்னே பொய் சொல்லக்கூடாது” என்ற இடம் பலே!

’ஒன்ஸ் எ ஸ்பை ஈஸ் ஆல்வேய்ஸ் எ ஸ்பை’ என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்: படத்திலேயே வரும் வசனம் போல  - It is an uncomfortable truth; but a convenient lie”

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com