பொன்னியின் செல்வன் திரைப்படம்  சூப்பரா? சொதப்பலா?

பொன்னியின் செல்வன் சினிமா விமர்சனம்
பொன்னியின் செல்வன் திரைப்படம்  சூப்பரா? சொதப்பலா?
Published on

வ்வளவுதான் முயன்றாலும் மிக உன்னதமான பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படத்துக்குள் சுருக்குவதென்பது மிகச் சவாலான விஷயம்தான். கல்கியின் பாத்திரப் படைப்புகள், உரையாடல்கள், நிகழ்விடங்கள், கதை மாந்தரின் உணர்வுக் கொந்தளிப்புகள், மென்மையான மன வெளிப்பாடுகள்,    விவரணைகள் போன்ற அனைத்தையும் சிலமணி நேரத் திரைப்படத்தில் தொகுத்து வழங்குவது மிகவும் நுட்பமான செயல்பாடுதான். அதை திரைப்பட இலக்கணத்துக்குகேற்ப  பிழையின்றி நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

தமிழில் வரலாற்றுத் திரைப்படங்கள் வெளியாவது எப்போதாவதுதான் நடக்கும். இப்போது அது சாத்தியமாயிருக்கிறது.

அச்சில் வாசித்தவர்களுக்கு அவ்வப்போது சில காட்சிகள் நெருக்கமாக இருக்கும். வாசிக்காதவர்களுக்கு வேறு விதமான புது அனுபவத்தை இந்தத் திரைப்படம் கொடுக்கும்.

தமது வழக்கமான பாணியில் இருந்து விலகி, கூடுதல் சிரத்தையுடன் படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இயக்கத்துக்கும், பட நகர்வுக்கும் ஜெயமோகனின் வசனங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. ஆனால், உரையாடல்கள் சில சமயம் செந்தமிழிலும், சில சமயம் பேச்சு வழக்கிலும் திடீரென மாறிக்கொள்கிறது. ஒரே உரையாடலில் இரு வகைத் தமிழும் கலந்து வருகின்றன. உதாரணத்துக்கு, “நான் சொல்வதைத்தான் நீ செய்யவேண்டும்; அப்பத்தான் அங்கு போய்ச்சேர முடியும்”.

பாத்திரத் தேர்வு கன ஜோர். ‘ஜெயம் ரவியா பொன்னியின் செல்வன்?’ என அங்கலாய்த்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அசத்தியிருக்கிறார் ரவி. பாத்திரங்கள் பல இருந்தாலும் குழப்பம் இன்றி அவர்களை அறிமுகப்படுத்தி, கதைக்குள் நம்மை லாவகமாக இழுத்துச்சென்று விடுகிறார்கள்.

பாடல்கள், இசை, பின்னணி ஆகியனவும் சிறப்பே!

அரண்மனை, கோட்டை கொத்தளங்களில் கலை இயக்குநரின் தனி முத்திரை பளிச்சிடுகிறது.

கிருஷ்ணர், கம்சர் அந்தரத்தில் பறந்து சண்டையிடும் காட்சிகள், ‘இது மணி சார் இயக்கம்’ என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

திரிஷாவின் நடிப்பு அபாரம். மிடுக்கான அரச குலப் பெண்ணை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். கொஞ்ச நேரமே தோன்றினாலும் பிரகாஷ் ராஜ், ரகுமான் போன்றோரின் நடிப்பும் மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.

சரத்குமாரின் கம்பீரம், ஐஸ்வர்யா ராயின் வஞ்சகம் கலந்த அமைதி, விக்ரமின் ஆவேசம், கார்த்தியின் துறுதுறுப்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆழ்வார்கடியான் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணத் தோன்றுகிறது.

பாகுபலியை ஒப்பிடாமல் இருந்தால், போர்க்களக் காட்சிகளை ரசிக்கலாம். பாய் மரக் கப்பல் மற்றும் போர்க் கப்பல் காட்சிகள் செவ்வனே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆரம்ப சண்டைக் காட்சியும் அசத்தல் ரகம்தான். அதே போல ஜெயம் ரவி, கார்த்தி அறிமுகச் சண்டைக் காட்சியும் பலே!

சந்தடி சாக்கில் பொன்னியின் செல்வன் பெயர்க் காரணத்தையும் தொட்டுச் செல்கிறார்கள். அடுத்த பாகத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் முதல் பாகம் நிறைவடைகிறது.

மொத்தத்தில்: பொன்னியின் செல்வன் = நிச்சயமாக சொதப்பல் இல்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com