டாக்டர் மாதவன்

டாக்டர் மாதவன்

- மஹேஷ்

வெளியே தெருவைப்பார்த்தபடி மூன்று கடைகள். மூன்று கடைகளுக்கும் பொதுவாக கூரை வேய்ந்த ஒரு வாசல் பகுதி. 7 அல்லது 8 அடி அகலம் இருக்கலாம். கடைகளுக்குப் பின்னால் இருந்த 2 வீடுகளில் கடைசி வீட்டில் எங்கள் குடித்தனம். ஒரு சனிக்கிழமை காலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, ஒரு கடைக்குள் சாமான்களுடன் ஆட்கள் வருவதும் போவதுமாக ஜரூராக இருந்தது. சிலர் கடைக்கு மேலே போர்டு ஒன்றை மாட்டிக்கொண்டிருந்தனர். ஒருவர் கீழே நின்றபடி பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

சுமாரான உயரம். கொஞ்சம் ஹிப்பி போல நிறைய தலைமுடி. பெரிய கிருதா. ஹேண்டில்பார் மீசை. நாய்க்காது காலர் சட்டையுடனும், பெல்பாட்டம் பேண்டுடனும் நின்றிருந்தார். 30 வயதுக்குள் இருக்கலாம். போர்டைப் பார்த்துக்கொண்டே பின்னால் நடந்தவர் ஏதோ தடுக்கி சட்டெனெ விழுந்துவிட்டார். ஓடிப்போய் கைகொடுத்துத் தூக்கிவிட்டேன். கைத்தாங்கலாக கூரைக்குள்ளே அழைத்து வந்து படியில் உட்கார வைத்தேன்.

“ஆ.. வளரெ நன்னி. மிடுக்கன். பேரு?” என்றார்.

‘பேரு’ மட்டும் புரிந்தது. சொன்னேன்.

“ஆ... ஞான் மாதவன். டோக்டர். கோட்டக்கல் ஆர்ய வைத்ய சால. ஸ்தலம் மாறி.... இங்ங ட்ரான்ஸ்ஃபர்... க்ளினிக்...” என்று துண்டு துண்டாகப் பேசினார். மலையாளியான அவருக்கு தமிழ் கொஞ்சம் தகராறு. நமக்கோ தமி’ழும்’ தகராறு. டாக்டர் மாறுதலாகி வந்திருக்கிறார் என்ற அளவில் புரிந்துகொண்டு கொஞ்சம் வெட்கத்துடன் வீட்டுக்கு ஓடிவிட்டேன்.

‘பள்ளி மாணவனான எனக்கும் ஆயுர்வேத டாக்டரான அவருக்கும் அதன்பிறகு சில வருடங்கள் மிக நெருக்கமாகக் கழியும்’ என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

அந்த கிளினிக் 3 பகுதியாக இருந்தது. வெளிப்பக்கம் டிஸ்பென்சரி. அலமாரிகளில் பலவிதமான கஷாயம், தைலம், பொடி என்று மருந்துப் புட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அடுத்து சிறிய டாக்டர் அறையில் மேசை நாற்காலி பெஞ்ச். அதை அடுத்து இன்னொரு சிறிய அறையில் சமையலுக்கு அடுப்பு, பாத்திரம்.

இரவு 8 மணிக்கு மேல் முன்புறம் கதவை அடைத்துவிட்டு சமையல் செய்வார். பெரும்பாலும் பப்படம் பொரிப்பார். அந்த வாசனை பிடித்து பின்புறக் கதவில் எட்டிப்பார்த்தபோது உள்ளே அழைத்தார். இரண்டு பப்படங்களும் கொஞ்சம் பலாப்பழ சிப்ஸும் கொடுத்தார். நமக்குத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆயிற்றே. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் அதிகமானது.

அப்போது எனக்கு பள்ளியில் ஒருவேளைதான். அம்மா நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை. பள்ளிவிட்டு வர மாலையாகும் என்பதால் வீட்டில் பையை வைத்துவிட்டு கிளினிக்குக்கு வந்துவிடுவேன். அவரே டாக்டர்; அவரே கம்பவுண்டர்; அவரே நர்ஸ் என்று தைலம் பூசி கட்டுகளும் போட்டுவிடுவார். கூட்டமான நாட்களில் பாவமாக இருக்கும்.

“டாக்டர்... நான் சும்மாதானே வெளியில் உக்காந்திருக்கேன். நான் வேணா மருந்து குடுக்கறேன்”

“ஆ... அது ஷெரி. மலையாளம் வாசிக்கணுமே...” என்று சிரித்தார்.

“நீங்க சொல்லிக்குடுங்க. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்”

என்ன தோன்றியதோ... 10 செகண்ட் வெறித்துப் பார்த்தவர் சிரித்தபடியே ‘சரி’ என்றார்.

மறுநாளே பாடம் ஆரம்பமாயிற்று. அனா, ஆவன்னா என்று துவங்கி 2 நாள் போனதுமே, அவ்வப்போது நான் சில எழுத்துகளை தமிழ் எழுத்துகளோடு ஒப்பிட்டுப் பேச, அவர் சட்டெனக் கேட்டார்.

“ஆ... கொள்ளாம். நீ எனிக்கு தமிழ் படிச்சு கொடு. நான் உனக்கு மலையாளம். ஷெரியா?”

அதன்பிறகு நெருக்கம் இன்னமும் அதிகமானது. மருந்துப் புட்டியின் மேலே இருக்கும் பெயர்களை முதலில் படம் பார்த்துக் கதை சொல்வது போல மொத்தமாகப் படிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக எழுதப் பழகிவிட்டேன். எனக்காகவே அவர் சீட்டில் பெரிய எழுத்துகளில் அழகாக எழுதித் தருவார். நானும் ஒரு தேர்ந்த கம்பவுண்டர் போல எடுத்துக்கொடுத்தேன். சில அரிஷ்டங்களை புட்டியின் மூடியைத் திறக்கும்போதே ஒரு இனிமையான திராட்சை அல்லது தேனின் மணம் வரும். 5 மிலி 10 மிலி என்று அளவைக் கோப்பைகளில் கொஞ்சம்போல ஊற்றி குடித்தும்விடுவேன். அதை ஒருநாள் பார்த்துவிட்டு மிகவும் கடிந்துகொண்டார். அதெல்லாம் முறைப்படி நாடி பார்க்காமல் குடித்தால் விபரீதம் ஆகிவிடும் என்று எச்சரித்தார்.

அவரும் பள்ளிப்பையன் போல ‘தினத்தந்தி’, ‘மாலை முரசு’ இரண்டும் படிக்க ஆரம்பித்தார். எனக்கு ‘மலையாள மனோரம’ மற்றும் ‘மாத்ரு பூமி’. பார்வையாளர் வந்து போகும் இடைவெளியில் படித்தும் எழுதியும் 3,4 மாதங்களில் இருவருமே நன்றாகவே பழகிவிட்டோம். பள்ளியில் நண்பர்களிடம் பெருமை பீற்றல் பேச எனக்கு நல்ல வாய்ப்பு. எல்லோர் பெயர்களையும் மலையாளத்தில் எழுதிக்கொடுப்பேன். வரும் கிராமத்து மக்களிடம் இன்னும் கொஞ்சம் புரிதலோடு பேச அவருக்கும் நன்மை. நல்ல பெயரும் வாங்கிவிட்டார்.

சில இரவு நேரங்களில் மேலே மொட்டை மாடிக்கு அழைத்துப் போவார். ஒரு புட்டியில் மிதமான சூட்டில் சீரக வள்ளமும், பலா சிப்ஸ், நேந்திரம் சிப்ஸ், பப்படம் என்று தீனிகளும் கொண்டுவந்து நொறுக்கியபடியே நிறைய கேரள செய்திகள் சொல்வார். அதிலும் குருவாயூர் கேசவன் யானை, திருச்சூர் பூரம், கேலிகட் கடற்கரைகள் என்று பலவிதமான செய்திகள். அதிலும் அவர் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதே ஒரு அழகு. ஜெயச்சந்திரனின் விசிறி. பல பாடல்களும் நன்றாகப் பாடுவார். இன்றைய நாட்கள் போல ஒளிமாசு இல்லாத நாட்கள் அவை. பரந்த வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தபடி படுத்திருப்போம்.

“ஆ... அதா ஸ்கோர்பியன்... கண்டாச்சா? பாத்தியா?”

“தேளா? எங்க?” என்று அலறியபடி எழுந்தேன்.

“ஆ... ஞான் சொன்னது கோன்ஸ்டல்லேஷன். அதா... அந்த ஸ்டோர்.. நாளு.. அதோடுகூட தொட்டடுத்து 4 நாளுகளும்... பின்னே அங்ஙனே அங்ஙனே அதொக்கெ சேர்ந்நு ஸ்கோர்பியன் போல காணல்லெ..”

“எதுவுமே எனக்குத் தெரியலயே.. எந்த ஸ்டார்?”

அன்றிலிருந்து விண்மீன் கூட்டங்கள், அவற்றின் பெயர்கள் என்று ஆரம்பித்து, வீட்டில் வாங்கும் ஹிண்டு செய்தித்தாளில் ‘ஸ்கை டுனைட்’ பகுதியில் காண்பித்திருக்கும் அனைத்து விண்மீன்களையும் காட்டி அது தொடர்பான எகிப்திய நம்பிக்கைகள், கேரள நம்பிக்கைகள் என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்.

ஓரையன் தொகுப்பு போலவே அமைந்திருக்கும் எகிப்தியா கீசா பிரமிடுகளைப் பற்றி அவர் அவ்வளவு சிலாகித்துப் பேசியபோது அப்போது புகைபோல மட்டுமே புரிந்தது. பின்னாளில் அது குறித்து நானே தேடிப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.

‘நாளு’ என்று துவங்கிய அது பிறகு இன்னும் பாதை மாறி, திருவாங்கூர் மஹாராஜாக்களான சித்திரத் திருநாள், பரணித் திருநாள் ஸ்வாதித் திருநாள் என்று நீண்டு அவர்கள் பற்றிய செய்திகள், சமஸ்கிருத கீர்த்தனைகள் என்று அவருக்குத் தெரியாத செய்தியே இல்லை என்பது போலத் தோன்றும். அதிலும் அனிஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பற்றிப் பேசும்போது கொளச்சல் போர் வீரன் என்று பெரிதும் சிலாகிப்பார். அந்நாளைய விக்கிபீடியா அவர்.

பிறகு நாங்கள் அங்கிருந்து வீடு மாறி ஊருக்குக் கொஞ்சம் வெளியே இருந்த குடியிருப்புக்குப் போய்விட்டாலும் அவ்வப்போது போய்வந்துகொண்டுதான் இருந்தேன். இருந்தாலும் நாள்பட நாள்பட பாலிடெக்னிக், படிப்பு, என்று மாறிப்போனது. அவரும் மாற்றலாகிப் போய்விட்டார். அவர் போன பிறகு ‘ஒரு நல்ல நண்பரைப் பிரிந்துவிட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டேன்.

சில வருடங்கள் போயின. அப்பா அப்போது கோவையில் மாற்றலாகி இருந்ததால் வங்கிக்கு அருகிலேயே ஒரு விடுதியில் தங்கியிருந்தார். வார இறுதிகளில் மட்டும் உடுமலை வருவார். நானும் சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தேன்.

1991 மே மாதம். மின்சாரம் இல்லாததால் விடுதியில் இருந்த பலருடன் நாங்களும் மொட்டை மாடியில் படுத்திருந்தோம். இரவு 10 மணி இருக்கலாம். அந்த கும்மிருட்டில் வானில் ஒரு நட்சத்திரம் பெரிய ஒளிரும் வாலுடன் சர்ர்ரெனப் பாய்ந்து விழுந்து மறைந்தது. கிட்டத்தட்ட அனைவருமே பார்த்துவிட்டு எழுந்து உட்கார்ந்தனர்.

“அப்பா... இந்த மாதிரி நட்சத்திரம் விழுந்தா ராஜாவுக்கு ஆபத்துன்னு டாக்டர் மாதவன் ஒரு தடவ சொன்னார்ப்பா”

“ஆமாமா... சிலர் அந்த மாதிரி சொல்வாங்க” என்றார் அங்கிருந்த மற்றொருவர்.

அடுத்த அரைமணி நேரத்தில் கீழே பிரதான சாலையில் ஒரே கூச்சல். அமர்க்களம். விடுதி மேலாளர் மூச்சு வாங்க மேலே ஒடிவந்தார்.

“குண்டு வெடிச்சு ராஜீவ் காந்தி படுகொலையாம். மெயின் கேட்டைப் பூட்டிட்டேன். எல்லாரும் அவங்கவங்க ரூமுக்குப் போயிடுங்க. ம்ம்.. சீக்கிரம்” என்று சொல்லிவிட்டு ஓடினார்.

(தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com