என் முதல் விமானப் பயணம் இதுதான்

அத்தியாயம் 2
என் முதல் விமானப் பயணம் இதுதான்
Published on

VT – DXG என்ற பதிவெண் கொண்ட அந்த எங்கள் ஆவ்ரோ விமானம் காலையில் தான் இங்கிருந்து கொச்சிக்குச் சென்றிருந்தது. ஹேப்பி லேண்டிங்க்ஸ் என்று சொன்ன எனக்கு இன் முகத்துடன் கை அசைத்துச் சென்ற கேப்டன் K L ரெட்டியையும் படிக்கட்டை எடுத்தவுடன் ஸீ யூ பை பை என்று கதவைச் சாத்திய அழகான ஏர்ஹோஸ்டஸ்  பரிமளா ராவையும் நினைத்துக் கொண்டே பதட்டத்துடன் நின்றிருந்த எனக்கு அந்த விமானம் மதுரையில் இறங்கும்போது மழையில் மலை மேல் மோதி விட்டது என்ற துயரச்செய்தியும் சில நிமிடங்களில் டவர் R T இல் தெளிவாகக் கேட்டது.

IC 503 என்ற எண்ணுடன் சென்னையிலிருந்து 9.12.1971 அன்று அதிகாலை புறப்பட்டு பெங்களூர் வழியாகக் கோவை வந்து கொச்சிக்குச் சென்றிருந்த அந்த விமானம் வழக்கம் போல கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து IC 502 என்ற எண்ணுடன் மதுரை வழியாக சென்னைக்குச் செல்லும்போது மதுரையை நோக்கி இறங்க ஆரம்பித்ததும் கம்பம் பக்கத்தில் மேகமலையில் தேயிலைத் தோட்டப் பகுதியில் பனிமூட்டம் மழை காரணமாக 5200 அடி உயரத்தில் பகல் 12:25 மணிக்கு மோதி விழுந்ததில் 2 பைலட்டுகள் 2 ஹோஸ்டஸ்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 10 பயணிகள் காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டனர். இந்த மோசமான விபத்து நடந்து கொஞ்ச நாள் வரை இதைப் பற்றியே கோவையில் நாங்கள் எல்லோரும் வருத்தமாக பேசிக்கொண்டிருந்தோம். 

சில தினங்களில் எங்கள் விமானத்தில் வழக்கமாகச் செல்லும் நடிகை ராகினியின் கணவர் ‘தம்பி’ என்ற தொழிலதிபர் என்னிடம் தன் பிளைமத் படகுக்காரின் சாவியைக் கையில் கொடுத்து விட்டு பெங்களூர் சென்றார். பாலக்காட்டிலிருந்து தானே காரோட்டி வரும் அவர் என் ஸீனியர் நைனன் என்பவரிடம் தான் சாவியை எப்போதும் கொடுத்துச் செல்வார். நைனனும் அந்தக் காரை அவர் திரும்பி வரும் வரை ஜாலியாக ஓட்டி விட்டு அவர் பிஸினஸ் விஷயமாக ஊரெல்லாம் சுற்றி விட்டு ஒரு வாரம் பத்து நாட்களில் திரும்பி வரும்போது ஏர்போர்ட் கொண்டுவந்து விடுவார். பெட்ரோல் குடிக்கும் அந்தக்காருக்கு கோவையில் இருந்த தம்பி அவர்களின் பெட்ரோல் பங்கிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக் கொள்வார். அன்று நைனன் எனக்கு போன் செய்து காரை நீயே ஓட்டி வந்து வைத்துக்கொள். நான் காலையில் வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னதால் ஃபியட் காரைத் தவிர வேறு  ஓட்டியிராத கார் பைத்தியமான நான் ஏர்போர்ட்டில் இருந்து சந்தோஷமாக அந்தப் பெரிய பிளைமத் காரை ஓட்டிக்கொண்டு நான் எங்கள் ஆஃபீசுக்கு வந்து நிறுத்தினேன். 

உள்ளே போனதும் இன்னொரு சந்தோஷச் செய்தி எனக்குக் காத்திருந்தது. இரண்டு நாளில் நான் எங்கள் ஹைதராபாத் ட்ரெயினிங் சென்டருக்குப் போக வேண்டும். இதில் என்ன சந்தோஷம் என்று கேட்கிறீர்களா ? என் முதல் விமானப் பயணம் இதுதான். கோவையில் இருந்து சென்னை வரை எங்கள் சிறிய ஆவ்ரோ விமானத்திலும் சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு புதிய போயிங் ஜெட் விமானத்திலும் போகப் போகிறோம் என்ற சந்தோஷம் பொங்க, நான் நின்றிருந்தபோது முதல் விமானப் பயணத்துக்கு  டிக்கெட் எழுத வேண்டும் என்றால் எல்லோருக்கும் ஒரு பார்ட்டி கொடுக்க வேண்டும் என்பது வழக்கம் அதை இன்றே வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் சொன்னார்கள். முதல் மாதம் சம்பளத்தை சமீபத்தில் தான் வாங்கி இருந்த நான் எவ்வளவு செலவாகுமோ என்னவோ என்று டென்ஷனாகிவிட்டேன். 

மாலையில் பெரிய நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி ஆரம்பித்தது. அப்போதெல்லாம் சிறிய ஓட்டல்களில் பார் அனுமதி கிடையாது என்பதால் இங்கே என்றார்கள். எக்கச்சக்கமாக செலவாகிவிடும் போல் இருந்தது. கொடுப்பதற்கு பணம் இருக்காதே என்ன செய்வது என்று தயக்கத்துடன் என் சீனியர் நைனனை அணுகி என் கஷ்டத்தைச் சொல்லலாம் என்றால் அவர் சந்தோஷமாக கையில் கோப்பையுடன் என் முதுகில் தட்டி என்ஜாய் மை பாய் என்று சொல்லி என் பேச்சைக் காதில் வாங்காமல் போய்விட்டார். என் முதல் விமானப் பயணம் நிறைய செலவு வைத்து விடுமோ என்ற கவலையுடன் நான் பார்ட்டியில் மனம் ஒட்டாமல் ஒரு பக்கம் போய் சோர்வாக அமர்ந்து விட்டேன்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com