மகாலட்சுமியை வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

மகாலட்சுமியை வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

ஆதிசங்கரரின் வரலாறு - 2

கேரள நாட்டில் ‘ஆல்வாய்’ என்ற நகரத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் சூர்னா, பூர்னா, ஆல்வாய், பெரியாறு என்ற பெயர்களையுடைய ஆற்றின் கரையில் ‘காலடி’ எனும் கிராமம் இருந்தது.

இந்த கிராமத்தில் மிகவும் பக்திமானாக சிவகுரு, ஆர்யாம்பா தம்பதிகள் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் தங்கள் வாழ்வை ஆன்மீகத் துறையை ஆழமாக கற்பதிலும், அதற்கான விரதங்களை ஏற்று நடத்துவதிலும் ஈடுபட்டு வந்தனர்.

பலருக்கும், பலவாறு உதவி செய்து கொண்டு பிறருக்காகவே வாழ்ந்து வந்தனர்.

நீண்ட காலம் இறைவன் அவர்களுக்கு புத்திர பாக்கியத்தை அளிக்கவில்லை.

“உலகம் அனைத்திற்கும் வேண்டியதைத் தந்து அருளும் சிவபெருமானை சரணடைந்து பிரார்த்திப்போம்” என தம்பதிகள் இருவரும் புறப்பட்டு பக்கத்தில் உள்ள சிவத்தலமான திருச்சூருக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு மாதக் கணக்கில் தங்கியிருந்து... அங்கு ஓடிய நதியில் நீராடி கோயிலுக்குச் சென்று தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்லி வணங்கி வந்தனர். அக்கோயில் நகரத்தின் நடுவில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருந்தது. அந்த குன்றுக்கு "விருஷாசலம்" என்று பெயர். ‘விருஷம்’ என்பது தெய்வீகமான காளையைக் குறிக்கும்.

அந்த ஊருக்கு பிரசித்தமானப் பெயர் 'திருச்சிவப்பேரூர்" என்பதாகும். அதுவே நாளடைவில் மருவி திருச்சூர் என்றானது.

சிவகுருவும், ஆர்யாம்பாவும் இந்த ஊரில் சில காலம் தங்கியிருந்தனர்.

ஒருநாள் சிவன் இவர்கள் கனவில் ஒரு வயதான கிழவனாகத் தோன்றினார். இருவரிடமும் ஒரு கேள்வி கேட்டார்.

"உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன். உங்களுக்கு எந்த விதமான சந்ததி வேண்டும்? நீண்ட ஆயுளும், அறியாமையும் கொண்ட பல மக்கள் வேண்டுமா? அல்லது குறுகிய ஆயுளும்... அரிய பேரறிவும் கொண்ட ஒரே மகன் போதுமா?" என்று கேட்டார்...

இருவரும் அதற்கான முடிவை அவரிடமே விட்டனர்.

சிவபெருமான், "நான் உங்களுக்கு ஒரு மகனாகப் பிறப்பேன். நீங்கள் இப்போது காலடிக்குச் செல்லுங்கள்" என்றார்.

இருவரும் மகிழ்ச்சியுடன் காலடிக்கு வந்தனர். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஏழை, எளியவர்களுக்கு தான...தர்மங்களும்...மக்களுக்கு அறுசுவை உணவும் அளித்து... அவர்கள் உண்டது போக எஞ்சியிருந்ததை உண்டு வந்தனர்.

ஒருநாள் கனவின் மூலம் ஆர்யாம்பாவின் உடலில் ஒரு ஒளி புகுந்தது.

உரிய காலத்தில் அவள் கருவுற்றாள். அவள் முகத்தில் ஒரு புதுப் பொலிவு தோன்றியது. ஜோதிகளுக்கு எல்லாம் அருட்பெரும் ஜோதியான சிவபெருமான் அவளை தன் அன்னையாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

தெய்வீக அவதாரத்துக்கு என்று தேர்ந்தெடுத்த நேரம் மிகவும் மங்களகரமான அறிகுறிகளைப் பெற்றுத் திகழ்ந்தது.

வைகாசி மாதத்தின் (ஏப்ரல்-மே) வளர்பிறையில் ஐந்தாம் நாள் ..புனர்வசு நட்சத்திரம் கூடிய நல்ல நாளில் அவதரித்தார்.

சங்கரர் பிறந்த பொழுது இயற்கை அழகு மிகவும் சிறப்பாக இருந்தது. பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துகளால் மரம், செடி, கொடிகள் புன்னகை செய்தன. வானம், மாசு-மருவில்லாது விளங்கியது. பறவைகளும், விலங்குகளும் ஒன்றுபட்டு சகோதரப் பாசம் கொண்டு விளங்கின.

அறிஞர்கள் கருத்துப்படி சங்கரர் காலம் கிபி 700. இதற்கும் முற்பட்ட காலம் என்று கூற முடியாவிட்டாலும் ஏழாம் நூற்றாண்டு என்பதே பொருந்தும்.

காலடி கிராமத்து மக்கள்..சிவகுருவின் வீட்டில் பிறந்த குழந்தையைப் பார்த்து… சிவபெருமானின் அவதாரம் என்றே நினைத்தார்கள்.

சிவகுரு, சோதிடர்களை அழைத்து பிறந்த குழந்தைக்கு ஜாதகத்தை கணிக்குமாறு சொன்னார்.

சோதிடர்கள், "இந்தக் குழந்தை எல்லாவிதத்திலும் குறையே இல்லாத நிறையுடையது" என்றனர். அவர்கள் சொன்னது இக்குழந்தை பூர்ணமானது என்பது.

‘பூர்ணம்’ எனும் சொல் ஈஸ்வரனையேக் குறிக்கும்.

குழந்தை பிறந்த பதினோராம் நாள் பெயர் வைக்கும் சடங்கு. குழந்தைக்கு ‘சங்கரன்’ என்று பெயரிட்டார்கள்.

சங்கரரின்  வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகள் ஒரு வடமொழிச் செய்யுளில் பின்வருமாறு கூறப்பட்டு இருக்கிறது.

எட்டாவது வயதில் அவர் நான்கு வேதங்களையும் கற்று முடித்தார். பன்னிரண்டாம் வயதில் சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றறிந்தார். பதினாறு வயதில் ‘பாஷ்யம்’ என்ற விரிவுரையை எழுதி முடித்தார். முப்பத்திரண்டு வயதில் உலக வாழ்வைத் துறந்தார்.

சங்கரர் ஒரு அற்புதக் குழந்தை. மிக இளம் வயதிலேயே அவருக்கு நுண்ணறிவும், பெருந்தன்மையான பண்பும், ஏராளமான விஷயங்களை வாங்கித் தேக்கிக் கொள்ளும் அறிவும் இருந்தது.

இளம் வயதிலேயே, பிராகிருத மொழி, மாகதி மொழி, சமஸ்கிருதம் ஆகியவற்றை நன்கு பயின்றிருந்தார்.

"மாதவீய சங்கர விஜயம்" தரும் விவரப்படி அவர் ஒரு வயதிலேயே மலையாள மொழியையும், சமஸ்கிருத நெடுங்கணக்கையும் கற்றாராம்.

இரண்டாவது வயதில் புத்தகங்களை படிக்கும் ஆற்றல் பெற்றார். மூன்றாவது வயதில் காவியங்களையும், புராணங்களையும் படித்தார் என்றும், தன் உள்ளுணர்வால் தானாகவே அவற்றின் பல பகுதிகளையும் புரிந்து கொண்டார் என்றும் தெரிகிறது.

சங்கரருக்கு பூணூல் அணிவிக்கும் "உபநயனம்" எனும் சடங்கு நடைபெறும் முன்னரே சிவகுரு காலமாகிவிட்டார் என்பர். (ஆனால் "சித்விலாச சங்கர விஜயம்" எனும் நூலும், "குருரத்னமாலிகா" எனும் நூலும் சிவகுருவே சங்கரருக்கு உபநயனம் செய்து வைத்தார் என்கிறது)

ஆர்யாம்பாவிற்கு சங்கரர் ஆறுதல் கூறினார்... சங்கரருக்கு உபநயனம் முடிந்து ..ஐந்தாவது வயதில் வேதம் படிக்க குருகுலம் சென்றார்.

மிகக் குறைந்த வயதிலேயே வேதம்.. அதன் அங்கமான ஆறு கலைகள்.. பிற சாத்திரங்கள் என அனைத்தையும் கற்று முடித்தார்.

அவர் குருகுலத்தில் இருந்தபோது சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி குருவிற்கு பணிவிடைகள் செய்து வந்தார். பிக்ஷைக்கு சென்று சேகரித்த பொருட்களை குருவிடம் சமர்ப்பித்தார். ஒரு நல்ல  பிரம்மச்சாரியாய் வாழ்ந்தார்.

ஒருநாள்… துவாதசி அன்று வழக்கம் போல பிக்ஷைக்குக் கிளம்பினார். ஒரு வீட்டின் வாசலில் நின்றார். அந்த வீட்டில் ஒரு ஏழை பெண்மணி வசித்து வந்தாள். அவள் வீட்டில் பிக்ஷைக்குக் கொடுக்க எந்த உணவுப் பொருளும் இல்லை. தன் வீட்டுக்கு பிக்ஷை என்று வந்த சிறுவனுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே..! என வருந்தினாள். அப்போது… அவளிடம் ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டுமே இருந்தது. அதை சங்கரனிடம் கொடுத்தாள்..

நெல்லிக்கனியைக் கண்ட சங்கரர் மனம் மகிழ்ந்தார். அந்த பெண்ணின் வறுமையை உணர்ந்து.. அதைப் போக்க எண்ணி.. மகாலட்சுமியை எண்ணி துதிக்க ஆரம்பித்தார். சங்கரர் தன் துதியை முடிக்கும் தருவாயில் மகாலட்சுமி தோன்றி ஏழைப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிந்தாள். இவ்வாறு தோன்றிய இந்த துதி ‘கனகதாரா சோஸ்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதுவே சங்கரர் இயற்றிய முதல் கவிதை. "பொன் பொழிய வேண்டி துதி" என்பதுதான் கனகதாரா சோஸ்திரம் என்பதற்கான பொருள்.

சங்கரர் செய்த முதலாவது தொண்டு செயல் ஒரு குடும்பத்தின் வறுமையைப் போக்கியதே ஆகும்.

ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

 (தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com