ராஜராஜ சோழன் இந்துவா?... கிறிஸ்துவரா?...

ராஜராஜ சோழன்  இந்துவா?... கிறிஸ்துவரா?...
Published on

? ராஜராஜ சோழன் இந்துவா?...கிறிஸ்துவரா?...என்ற விவாதம் இப்போது தமிழகத்தில் விவாதப் பொருள் ஆகி உள்ளது!!  ஏன்?....

- K.R.G. ஶ்ரீராம், பெங்களூரு.

 ! மீடியாவில் விளம்பரம் பெறத் துடிக்கும் அரசியல்வாதிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இது.ராஜராஜன் இந்துதான். ஆனால், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜன்தான் என்று ஆராய்ந்து தரவுகளுடன் சொன்னவர் ஒரு  ஐரோப்பிய கிறிஸ்தவர்.

ஐ மேக்ஸ் திரையில் அப்படி என்ன விசேஷம்?

- கே. ரமேஷ், பள்ளிப்பாளையம்

imax என்றாலே image maximum (இமேஜ் மேக்ஸிமம்) தான். காட்சியின் தரம் ( visual quality), அளவு (size), ஒலியின் தரம் (audio quality) இவைகளை பல மடங்கு அதிகப்படியாக கொண்டதே இந்த தொழில்நுட்பம். இந்த ஐமேக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட காட்சிகளை திரையிடுவதற்காகவே பிரத்யேகமான புரொஜெக்டர்களும் பிரம்மாண்ட திரையரங்குகளும் இருக்கின்றது. பிரம்மாண்ட திரையரங்கு என்றால், அதன் திரையே மூன்றடுக்கு மாடி வீடு அளவுக்கு வானுயர்ந்து காணப்படும். இதன் உயரம் 16 மீட்டரும், அகலம் 22 மீட்டரும் இருக்கும். இதன் மூலமாக இதுவரை நாம் கண்டிராத அற்புதமான காட்சி விருந்து கிடைக்கும். ஒரு யானையை திரையில் கண்டால் கூட அதன் ஒவ்வொரு பாகங்களின் நுணுக்கங்களுடன் அப்படியே நேரில் பார்ப்பது போல் நம்மை மிரட்டிச்சென்றுவிடும். திரையில் இருந்து ஒரு விநாடி கூட நம் கண்ணை எடுக்கமுடியாத வகையில் அதன் காட்சிகள் நம்மை ஆட்கொண்டுவிடும். அதேபோல் ஆடியோவும் மிகத் துல்லியமாகயிருக்கும். ஆனால், ஐமேக்ஸ் தியேட்டர்களில் இந்த சாதனங்களின் தொழில்நுட்ப வசதிகளை சரியாக கையாளத்தெரியாத டெக்னீஷியன்கள் இருந்தால்  சூப்பராக சொதப்புவார்கள்.  

 ? “ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி...

- ச. இராமதாசு சடையாண்டி,ரங்கநாதபுரம்

! “காலத்தின் கட்டாயம்” என்ற  வார்த்தைகளுடன்  கட்சி  உடையப் போவதின் அடையாளம். 

? இனிமேல் இந்தியாவில் தாஜ்மஹாலைப் பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோயில் வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை 'பொன்னியின் செல்வன்' படம் ஏற்படுத்துவதாக' படத்தில்  பெரிய பழுவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் கூறியுள்ளது பற்றி?

- ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! “பொன்னியன் செல்வன்” பார்த்த வெளிநாட்டவர் அப்படி வர  வாய்ப்பில்லை. படத்தில் பெரிய கோயில் இல்லை. படத்தில்  அவர் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ளார், வசனங்களின் உச்சரிப்பைத்தான் சொதப்பியிருக்கிறார் ( ழ, ல, ள, ச) என்று நினைத்தோம்...  “அவர்  படத்தை பார்க்கவே இல்லை” என்று இப்போதுதான் தெரிகிறது.

? ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு கிடைத்த இந்த பிரம்மாண்ட  வெற்றி எதைக் காட்டுகிறது.

- நெல்லை கண்ணன், மதுரை

! கோடிகளில் செலவழித்து படம் எடுத்து அதை  கோடிகள் செலவழித்து மார்க்கெட்டிங் செய்தால்  நிச்சயம் பல மடங்கு இலாபம் ஈட்டலாம்.

? முதல்வாின் துணைவியாா் திருமதி துா்க்கா, மயிலாப்பூாில் உள்ள பாபா கோவிலுக்கு  சென்று சாமி தாிசணம் செய்துள்ளாரே?   

- புவனா நாகராஜன், செம்பனார் கோவில்

! அவர் முதல்வர் மனைவியாகும் முன்னரே அவர் தமிழகத்தின் பல கோயில்களுக்கும் செல்பவர். அதனால் பாபா கோயில் சென்றதில்  ஆச்சரியம் எதுவுமில்லை. 

? மெய் ஞானம் விஞ்ஞானம்  என்ன வித்தியாசம்?

- எஸ்.மனோன்மணி, கோவை

! ‘விஞ்ஞானம்’ என்பது அறிவியலை ஆராய்ந்து சொல்லப்பட்ட சித்தாந்தம். ‘மெய்ஞானம்’ என்பது மனம் சார்ந்தது. உணர்ந்து தான் அறியமுடியும்.  விஞ்ஞானத்தை சற்று முயற்சிசெய்தால் புரிந்து கொள்ளலாம். மெய் ஞானத்தைப் புரிந்து கொள்ள தனி திறன் வேண்டும். அது எல்லோருக்கும் இருக்காது.

 ? யுகம் என்பது என்ன ?

-சண்முக சுந்திரம், பாளையாங்கோட்டை

! இந்து நம்பிக்கைகளின்படி பூமியின் வாழ்வு நான்கு யுகங்கள். இப்போது  நடப்பது கலியுகம். கி.மு. 3102 ஆண்டு கிருஷணர் சொர்க்கத்துக்கு புறப்பட்டபோது தொடங்கி இன்னும் தொடர்கிறது. இப்போது   ‘கலி முத்திவிட்டது’ என்று சொல்பவர்களை நம்பாதீர்கள்.  அது  இன்னும் 432000 ஆண்டுகள் நீடிக்கும் என்று பல பஞ்சாங்கள்சொல்வது  அவர்களுக்குத் தெரியாது.  

 ? கூட்டு குடும்பங்கள்  ஒழிந்தற்கு காரணம் என்ன?

- மா. ஈஸ்வர்,  ஈரோடு

! மனிதனின்  தன்னலம் மிகுந்த பேராசை.  தன் மனைவி குழந்தைகளுடன் மட்டும் சின்ன வீட்டிலாவது தனியாக வசிப்பதை விரும்பும் சின்ன மனங்கொண்ட  இன்றைய  தலைமுறையினர்.

? உண்மையிலேயே  ஜோதிடர்கள் சொல்வது போல் பரிகாரங்கள் செய்தால்  செல்வம் சேர்ந்துவிடுமா?

-வண்ணை கணேசன், சென்னை

! சேர்ந்துவிடும் -  ஜோசியர்களுக்கு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com