இப்படி இந்தியாவில் நடக்குமா ?

படம்: ஸ்ரீதர்
படம்: ஸ்ரீதர்
Published on

ங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து நடந்த கட்சி தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியினருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், வெற்றி பெற்ற லிஸ் டிரஸ் கட்சி தலைவராகவும் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றார். இங்கிலாந்து சட்டத்தின்படி, கட்சித் தலைவராக இருப்பவரே அங்கு பிரதமராக பதவியில் இருக்க முடியும்.

ஆனால் இங்கிலாதின் 56 வது பிரதமர் லிஸ் டிரஸ் 50 வது நாள் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இங்கிலாந்தின் மிக குறைந்தநாள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையுடன் பதவி விலகினார். இதற்கு முன் இதேபோல 1827இல் பதவியில் இருந்த ஜார்ஜ் கேனிங் 119 நாட்கள் மட்டுமே நாட்டின் பிரதமராக இருந்தார்.

 தொடர்ந்து நடந்த உட்கட்சி தேர்தலில் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

ஏன் இந்த அதிரடி திருப்பங்கள் ?

டிரஸ் ஆட்சி நிர்வாகத்தில் ஆரம்பம் முதலே குழப்பம் ஏற்பட்டது.

லிஸ் டிரஸ் ஆதரவுடன், நிதியமைச்சர் குவாசி குவார்டெங் தனது மூன்றாவது வாரத்தில் 45 பில்லியன் பவுண்டுகள் அளவிலான வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார், அதை அவர்கள் "மினி-பட்ஜெட்" என்று அழைத்தனர். ஆனால், இது பெரும் பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. அது "சரியான செயல்" என்று அந்த நேரத்தில் டிரஸ் வலியுறுத்தியபோதிலும், கட்சியில் பல எம்.பி.க்கள் இதை எதிர்த்தனர்.

பல கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள், லிஸ் டிரஸ் பதவி விலகுமாறு பொது வெளியில் அறிக்கைகள் கொடுத்தனர்.  அமைச்சரவையில் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து தனது மினி பட்ஜெட்டில் வரி சலுகைகளை அறிவித்து குளறுபடி ஏற்படுத்திய நிதியமைச்சர் க்வாசி க்வாடெங்கை பதவி நீக்கி விட்டு, புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட்டை நியமித்தார். இவர் கட்சி தேர்தலில் டிஸ்பிரஸ்ஸின்  எதிர்ப்பாளார். ஆனாலும் உதவுவார் என்ற நம்பிக்கையில் அமைச்சரவையில் சேர்த்துகொண்டார்.

ஆனால் நினைத்தபடி அவர் உதவ வில்லை. தொடர்ந்து உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயல்லா பிரேவர்மேன் பிர்தமரைச் சந்தித்தார்.   நாட்டின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரேவர்மேன் பதவியை ராஜினாமா செய்தார். டிரஸ்சின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மேலும் சில அமைச்சர்களும், அரசின் உயர் பதவிகளை வகிப்பவர்களும் அடுத்தடுத்து பதவி விலகப் போவதாக தகவல் வெளியானது.

 இந்தச் சூழலில், பிரதமர் லிஸ் டிரஸ்க்கு பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

லண்டனில் பிரதமர் அலுவலகம் வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் “ சர்வதேச நாடுகளில் நிலவும் நிலையற்ற தன்மை, பொருளாதார பாதிப்புகளுக்கு இடையே பிரதமராக பொறுப்பேற்றேன். மக்களும், தொழிலதிபர்களும் எப்படி வரி செலுத்தப் போகிறோம் என்பது தெரியாமல் கவலை அடைந்தனர். உக்ரைன் மீதான புடினின் போர் ஐரோப்பிய கண்டத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் மந்தநிலை நீடித்தது. இவற்றை எல்லாம் மாற்றுவேன் என்று கூறி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரானேன். மின்சாரம், கேஸ் மற்றும் தேசிய ஆயுள் காப்பீடுகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டது.

குறைந்த வரி, அதிக பொருளாதார வளர்ச்சி என்னும் நோக்கத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த சூழலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்து கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றேனோ அவற்றை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, பதவியில் இருந்து விலகுவதாக மன்னர் சார்லஸ் இடம் தெரிவித்துள்ளேன் என்றார்.  

இதுபோல்   இப்படி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகிய பிரதமர்கள் வெகு சிலரே. இந்தியாவில் கனவில்கூட கானமுடியாத காட்சி. 

புதிய பிரதமர் ரிஷி சுனக்

இவர் இந்திய வம்சாவளியில் வந்தவர். ரிஷி சுனக்கின் தாத்தா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராம்தாஸ் சுனக். இவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிளார்க்காக பணியாற்றினார். பின்னர், 1935ம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவுக்கு சென்றார். 1937ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த சுஹாக் ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் யஷ்வீர் சுனக். இவரது மனைவி உஷா  சுனக். இவர்கள் 1960ம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். உஷா ஒரு மருந்தாளுனர். யஷ்வீர் மருத்துவர்.

இவர்களுக்கு 1980ம் ஆண்டு மே 12ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர்தான் ரிஷி சுனக். ரிஷி சுனக் உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம், முதுநிலை வர்த்தக மேலாண்மையை படித்தார். ஸ்டான்போர்டு பல்கலையில் படிக்கும் போதுதான் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை சந்தித்தார்.  நட்பு காதலாகி அது திருமணத்தில் முடிந்தது.  இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

அரசியல் பிர்வேசம்

நிதி ஆலோசகர் , நிர்வாக இயக்குனர் என்று கார்ப்ரேட் வட்டத்தில் சுழண்டு கொண்டிருந்த இவர், அரசியல் ஈர்த்தது. 2015ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அப்போது, அவரது கையில் பகவத் கீதை புத்தகத்தை வைத்திருந்தார்.

படிப்படியாக வளர்ந்த அவர் அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிப் பெற்று, தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சரவையில் இளநிலை அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் இளநிலை  அமைச்சராக பணியாற்றினார். 2020ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார். கொரோனா காலத்தில் நிதியமைச்சராக இருந்து பொருளாதாரத்தை திறம்பட கவனித்ததால் அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனால், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போது, இவரை பிரதமர் பதவிக்கான போட்டி வரை கொண்டு சென்றது. பிரதமருக்கான தேர்தலில் நின்றார். முதலில் ரிஷி சுனக்கிற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், இறுதியில் மங்கியது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது. ஆனால், இரண்டே மாதங்களில் மீண்டும் பிரதமர் பதவி கைக்கூடி வந்திருக்கிறது.

இந்த முறை போட்டி இருந்த போதிலும், பெரும்பான்மை எம்பி.க்களின் ஆதரவு சுனக்குக்கே இருந்ததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுனக்கின் வெற்றி உலக வரலாற்றில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகள் இங்கிலாந்தில் வரலாற்றில் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை தற்போது இந்தியரான சுனக் ஆளப் போவது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவின் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இருக்கிறார். இதுபோல், இன்னும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் அரசியல் பதவிகளில் கோலோச்சி வருகின்றனர்.

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்தின் சோதனையான காலத்தில் பிரதமராகியிருக்கும் ரிஷிக்கு கட்சியிலும். ஆட்சியிலும் அவர் முன் இருக்கும் சவால்கள் பல. கட்சியில் பெரும்பானை ஓட்டுக்கல் பெற்றிருந்தாலும் சீனியர்கள் ஆதரவு இல்லை.

இவர் மீது “தான் மீண்டும் கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகும் கனவை நிறைவேற்றி கொள்ளவே, லிஸ் டிரஸ்ஸின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளில் அவருக்கு உதவவில்லை“ என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.

அவருடைய பலம் மீடியாவின் ஆதரவு. மக்களின் நம்பிக்கை.

ரிஷிகள் என்பவர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக நம் புராணங்கள் பேசுகின்றன. இந்த ரிஷிக்கு இங்கிலாந்தின் இன்றைய நிலையை சமாளிக்க அத்தகைய வலிமை இருக்கிறதா?

“நம்ம ஊர் மாப்பிள்ளை என்ன செய்யப்போகிறார்” என்று இந்தியா மட்டுமில்லை, உலகமே எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com