இசை மழையும் தமிழ்த் தென்றலும்!

அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள் விழா
இசை மழையும் 
தமிழ்த் தென்றலும்!
Published on

- ஆர்.வி.எஸ்.                            

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...” என்பது கவிஞர் கண்ணதாசனின் மிக அழகான பாடல் வரிகளுள் ஒன்று. அந்த நளினமான வர்ணனையை நினைவூட்டுகிறார்போல, “இசைமழையில் நனைந்து தமிழ்த்தென்றலில் குளிர வந்துள்ள ரசிகர்களையும் குளிர்விக்க வந்துள்ள கலைஞர்களையும்” கொண்டாடி வரவேற்றனர் விழா குழுவினர். தமிழும் இசையும் கைகோர்த்த இந்த இனிய சேர்க்கை வேறு எங்கே...? கல்கி விழாவில்தான்!

அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள் விழா செப்டெம்பர் 9ம் தேதி  நடைபெற்றது.

1996ம் வருடத்திலிருந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை இளம் கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.  ஒவ்வொரு வருடமும் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் வித்வான்கள் அசாத்திய திறமை உடையவர்களாகவும் சாஸ்திரிய சங்கீதத்திற்கு  மரியாதை தருபவராகவும் இருப்பது, அறக்கட்டளை தேர்வுக்குழுவினரின் துலாக்கோல் அணுகுமுறையைக் காட்டுகிறது.

வாய்ப்பாட்டு கலைஞரான  ஐஷ்வர்யா வித்யா ரகுநாத்திற்கும், கடம் வித்வான் சந்திரசேகர ஷர்மாவுக்கும்  இந்த வருடத்திய கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது.

ராக சுதா அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு குரல் வல்லுநர் மற்றும் மேடை நாடக நிபுணர் பி.ஸி. ராமகிருஷ்ணா தலைமை வகித்தார்.

இறை வணக்கம் பாலக்காடு சகோதரிகள்  சௌமியா,  ஸ்வேதா இருவரும் பாடினார்கள்.

“இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மட்டுமின்றி நாட்டின்
முன்னேற்றத்திற்கும் உலக நன்மைக்கும் பிரார்த்திப்போம்” என்ற அறிவிப்புடன் அவர்களைப் பாட அழைத்தது, அமரர் கல்கியின் தேச நல நோக்கை எதிரொலித்தது.

கரஹரப்ரியாவில் “சரஸ்வதி அன்னையே... எந்நேரமும் சரணடைந்தேன் உன்னையே...” என்ற பாபநாசம் சிவன் பாடலை  அற்புதமாக சகோதரிகள் பாட, அமர்க்களமாக விழா ஆரம்பித்தது.  சௌமியாவும், ஸ்வேதாவும்  பாலக்காடு மணி ஐயரின் கொள்ளுப் பெயர்த்திகள் என்பது கூடுதல் விசேஷம். தங்கள் தாத்தா பாலக்காடு ராஜாராமிடம் இசை பயின்று வருகிறார்கள்.

அறங்காவலர்களாக பொறுப்பிலிருக்கும் அமரர் கல்கியின் பெயர்த்திகள் கல்கி குழும இதழ்களின் அசிரியர் லக்ஷ்மி நடராஜனும் (CEO, KALKI GROUP)    சீதா ரவியும் (மேநாள் ஆசிரியர் கல்கி) விழாவை முன்னின்று நடத்தினார்கள்.

லக்ஷ்மி நடராஜனின் வரவேற்புரை அமரர் கல்கியின் புகழ் பாடியது.

“ஐம்பந்தைந்து வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்து ஒரு நூற்றாண்டு சாதனையை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு மூன்று முறை சிறை சென்றவர். சிறந்த மேடைப் பேச்சாளர். மிகச் சிறந்த பத்திரிகையாசிரியர்.பேச்சாளர்= பேச்சின் ஊடே வரும் ஜரிகை இழை போன்ற நகைச்சுவையால் கேட்போரைக் கட்டிப் போடத் தெரிந்தவர்” என்றார்.

செய்தி வாசிப்பாளர், 50 ஆண்டுகால நாடக நடிகர், கோயில்மணி ஓசை போன்ற குரலோன் என்று பி.ஸி. ராமகிருஷ்ணாவின் பன்முகத் தன்மையை புகழ்ந்து அவரை தலைமையேற்க வரவேற்றார் லக்ஷ்மி நடராஜன். மேலும் கல்வியில் சிறந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை பொருளாதார உதவிகளை அளித்து வருவதையும் குறிப்பிட்டுப் பேசி இவ்வருடம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப்பட இருப்பதைத் தெரிவித்தார்.

அடுத்து விருதுப் பத்திரத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறங்காவலர்களுள் ஒருவரான எஸ். சந்திரமௌலி  வாசிக்க, திரு. பி.ஸி. ராமகிருஷ்ணா அதை விருதாளர்களிடம் வழங்கி பெருமைப்படுத்தினார்.

விருதுப் பத்திரத்தில் எழுதியிருந்த வாசகங்கள் நயமான தமிழில் கலைஞர்களின் வித்வத்தை பறைசாற்றின.

பி.ஸி. ராமகிருஷ்ணா
பி.ஸி. ராமகிருஷ்ணா

விருதுகள் வழங்கிய பின்னர் சிறப்புரை ஆற்றினார் பி.ஸி. ராமகிருஷ்ணா. கேட்பவர்களை ஈர்க்கும் கணீர்க் குரலில் சரளமான தமிழில் பேசினார். பதினெட்டு வருஷங்கள் மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயரிடம் வாத்தியம் பயின்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இளம் வயதில், கல்கத்தாவில் வசித்தபோது இவர் வீட்டில் வந்து தங்கிய பாலக்காடு மணி அய்யர், இவரது ஆற்றலைக் கண்டிறிந்து, தமது வாத்தியத்திலேயே முதல் பாடத்தைத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக் கொண்டு, விடுமுறை நாட்களில் குருகுலவாசமும் செய்திருக்கிறார். மியூசிக் அகாதமியில் பிற்பகல் கச்சேரி ஒன்றில் அரங்கேற்றமும் ஆகியிருக்கிறது.

“ஆனால் ஐம்பது ரூபாய்தான் ஒரு கச்சேரிக்கு கொடுப்பார்கள்... அதைக் கொண்டு எப்படி ஜீவனம் நடத்துவது என்று பயந்து நான் அதைத் தொழிலாக மேற்கொள்ளாமல் விட்டுவிட்டேன்...” என்றார் ராமகிருஷ்ணா.

ஆனால், இன்று நிலைமை வேறு... “விருது பெறும் ஐஷ்வர்யா, பயோடெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று முன்னணி நிறுவனத்தில் பணியில் இருந்தவர். அதை விட்டுவிட்டு சங்கீதத்தை முழு நேரத் தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கடம் வித்வான் சந்திரசேகர சர்மாவும் அவ்வாறே தாள வாத்தியத்தை முழு நேரத் தொழிலாக மேற்கொண்டுள்ளார்” என்றும் சுட்டிக் காட்டினார். விருது பெறும் கலைஞர்கள் தங்கள் நல்வாய்ப்புகளை முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வாழ்த்தினார்.

“அமரர் கல்கி அவர்களின் சங்கீத கட்டுரைகளும் விமர்சனங்களும் பிற்காலத்தில் சுப்புடுவிற்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கலாம்” என்றும் பேசினார். விருதாளர்கள் மேன்மேலும் புகழ்பெற பாராட்டினார்.

“கல்கிதான் எனது மானசீக குரு” என்று இசை விமர்சகர் சுப்புடு பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை  சீதா ரவி பின்னர் பேசும்போது
உறுதிப்படுத்தினார்கள்.

இந்த விருதினால் கௌரவிக்கப்பட்ட ஐஷ்வர்யா வித்யா ரகுநாத் மற்றும் சந்திரசேகர ஷர்மா இருவரும் மிகவும் பெருமையோடும் உள்ளன்போடும் ஏற்புரை வழங்கி தங்களது குருமார்களுக்கு நமஸ்காரங்களைத் தெரிவித்து, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கும் தங்கள் நன்றிகளை உரித்தாக்கினார்கள். விருது பெற்ற  இரண்டு கலைஞர்களின் குரு வித்வான் ஆர்.கே ஶ்ரீராம்குமார் கெளரவிக்கபட்டார்.

இதன் பின்னர்  ஐஷ்வர்யா வித்யா ரகுநாத் பாட, சந்திரசேகர ஷர்மா கடம் வாசிக்க, சாய் ரக்ஷித் வயலின் இசைக்க, டெல்லி சாய்ராம் மிருதங்கம் வாசிக்க வெகு விமரிசையாக   இசைக் கச்சேரி நடந்து ராக சுதா அரங்கம் இசை வெள்ளத்தில் மிதந்தது.

விருது வாங்கிய சந்தோஷத்தில் முதல் பாடலாக ஆனந்த பைரவியில் ‘பாஹி ஸ்ரீ கிரிராஜ சுதேவை’ ஆரம்பித்தார்  ஐஷ்வர்யா. சிறிது நேரத்தில் வயலின் - கடம் - மிருதங்கம் என்று எல்லா பக்க வாத்தியங்களும் பக்காவாக அணி சேர ஸ்வர பிரஸ்தாபங்களில் இசை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தார்.

அடுத்த உருப்படியாக மென்மை கொஞ்சும் பேகடாவில் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். பின்னர் தியாகைய்யரின் ‘நீவேர குல தனமு’ கீர்த்தனையைப் பாடினார். ‘நீயே என் குலம், செல்வம், நீயே எப்போதும் என் ஜீவனம்’ என்ற பொருளில் தியாகைய்யர் ‘மாதவா மாதவா’ என்று உருகிய பாடல். ராகத்திற்கு தகுந்தாற்போலவும் தியாகைய்யரின் பக்தியைக் காட்டும் வகையிலும் உணர்ந்து பாடினார் ஐஸ்வர்யா. மிகவும் அற்புதமாக  சங்கதிகள் சுலபமாகவும் தாராளமாகவும் வந்து விழுந்தன. தியாகராஜ வர ஹ்ருதய நிவேஷ என்ற இடத்தில் நிரவில் பிரமாதமாக அமைந்தது.

பூர்விகல்யாணியில் திருவாரூர் ராமஸ்வாமி பிள்ளையின் எக்காலத்திலும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வீணாபேரி,  கம்பீரமான காம்போதியில் விஸ்தாரமாக ஆலாபனை செய்து ஆரம்பித்த பாபநாசம் சிவனின் ஆடும் தெய்வம் நீ அருள்வாயும் , திருவொற்றியூர் தியாகராஜன் என்ற கனம் கிருஷ்ணய்யரின் அடாணா ராக பாடலும், அமரர் கல்கியின் ரசமான ராகமாலிகாவாக செங்கனி வாயில் ஒரு வேங்குழல் பாடலும் (சிவகாமியின் சபதத்தில் வரும் கீதம்) ஒரு நிறைவான கச்சேரி அனுபவத்தை அளித்தன. சாய் ரக்ஷித்தின் வயலின் மென் வருடலாக ஒவ்வொரு பாடலையும் இதமாக அனுபவிக்கும்படி செய்தது.

கச்சேரி முழுவதிலுமே கடம் வாசிப்புக்கு சம இடம் அளித்தபடியிருந்தார் மிருதங்கக் கலைஞர் சாய்ராம். விருது பெற்ற சக கலைஞரைக் கொண்டாடும் விதமாக அவர் கண்காட்ட, தனியாவர்த்தனத்தில் பல ஜாலங்கள் செய்தார் சந்திரசேகர ஷர்மா. டெல்லி சாய்ராமும் உற்சாகத்துடன் புதுக் கற்பனைகள் வாசித்தார். இருவரும் தனித்தனியே வாசித்துக்கொண்டே வர, சாய்ராம் சிரித்தபடி ஷர்மாவைப் பார்க்க, ஷர்மா தமக்கெதிரே இருந்த ஒலிபெருக்கியைச் சற்று நகர்த்திவிட்டு, மூன்று முறை கடத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்து, அன்று அனைவர் மனத்திலும் பொங்கிய உற்சாகத்தைக் கரைபுரண்டு ஓடச் செய்தார்!

இந்த முழு நிகழ்ச்சியையும் நேரில் வர இயலாதவர்களுக்காக வெப்காஸ்ட் செய்த பரிவாதினியின் இசைத் தொண்டினை கல்கி குழுமம் நெஞ்சாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது!

பின் குறிப்பு: இந்த நிகழ்ச்சியை
https://www.youtube.com/watch?v=EMSBFF-esFk என்ற சுட்டியில் கண்டு மகிழலாம்.

 படங்கள்: ஸ்ரீஹரி

 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com