குன்றென நிமிர்ந்து...

குன்றென நிமிர்ந்து...
Published on

- வித்யா சுப்ரமணியம்

மாமா ! நீங்க......

போலாமா? அவர் எழுந்தார்.

அது....

“பணம் நான் தரேன்மா. உன்னோட மொத்த நகைகளையுமே நா அடமானமா வாங்கிக்கொண்டு பணம் தரேன். அதை நீங்க இங்க இருக்கும்வரை வீட்டுச்செலவுக்காக எங்கிட்டயே கொடுத்துட்டு நிம்மதியா இரு சரியா?”

மைதிலி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டாள்.

“அவனுக்கு பொறுப்பும் ரோஷமும் வரணும்னுதான் மாதச்செலவுக்கு அவனிடம் பணம் கேட்டேன். அவன் தரவில்லையென்றால் குற்றம் என்னோடதுதான். நான்தான் அவனை சரியா வளர்க்கவில்லை. நியாயமா என்னைத்தான் நான் தண்டிச்சுக்கணும். என்ன செய்ய அஞ்சு விரலும் ஒரே மாதிரியாகவா இருக்கு? சரி கார்ல ஏறு, மத்ததை வீட்டுக்குப் போய் பேசிக்குவோம்” அவர் கதவைத் திறக்க அவள் ஏறிக்கொண்டாள்.

***************************

ஒரு வாரம் கழித்து ஆனந்தனிடம் பேசினார் அப்பா.

“படம் எப்டி போயிட்ருக்கு?”

“நல்லா வருதுப்பா. இதுவும் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும்.

“நல்லது. ஆனா செலவு நிறைய ஆகுது போல?”

“பின்னே..? பெரிய பட்ஜெட் படம்னா செலவாகத்தானே செய்யும்?”

”அதுசரி. ஆனா செலவோட செலவா இந்த வீட்டுச்செலவுக்கும் நீ ஒப்புக்கொண்டபடி பணத்தைத் தரலாமே”

“ஒன்றாம் தேதியானா செலவுக்கு பணம் கொடுக்க நான் என்ன அரசாங்க உத்யோகமா பார்க்கறேன்? படம் ரிலீஸாகட்டும் மொத்தமா தரேன். நான் ஒண்ணும் உங்களை ஏமாத்திடமாட்டேன்”

“இதுவும் கடனா?”

“ஏன்? அவனவன் ஒரு சின்ன டீக்கடையிலயே அக்கவுண்ட் வெச்சுக்கிட்டு தினம் டீ குடிக்கறானாம்”

“இது டீக்கடையும் இல்ல, லாட்ஜுமில்ல. இதோ பார் ஆனந்த். நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உனக்குன்னு வீடும் மற்ற சொத்துக்களும் பிரிச்சு கொடுத்தாச்சு. இனி நீயாச்சு. உன் குடும்பமாச்சு. நீ தனியா போவதுதான் எல்லார்க்கும் நல்லதுன்னு நினைக்கறேன்.  இன்னும் ஒரு மாதம் டைம் தரேன். அதுக்குள்ள, ரெடியாகிக்க”

அவன் அப்பாவையே பார்த்தான்.

*** *** *** ***  

ரு நல்லநாள் பார்த்து அந்த வீட்டிற்கு கிருஹப்பிரவேசம் செய்தார்கள். ஒரு திரைப்பட செட்டைப்போல வீட்டை அலங்கரித்திருந்தான் ஆனந்தன். கட்டிடம் முழுவதும் சீரியல் விளக்குகள் மின்னின. திரைத்துறை பிரபலங்கள் அனைவரையும் அழைத்திருந்தான். காலையிலிருந்தே கார்களின் அணிவகுப்பு. வீடியோ கேமரா ஒன்றுவிடாமல் அனைத்தையும் படம் பிடித்தது.

பணமில்லை பணமில்லையென்று புலம்பிக்கொண்டு எதற்கு இத்தனை ஆடம்பரமான கிருஹப்பிரவேச விழா? என்று நினைத்தாள் மைதிலி. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? இத்தனை பணம் இருப்பவன் ஒப்புக்கொண்டபடி அப்பாவுக்கு மாதச்செலவுக்குக் கொடுத்திருக்கலாமே. அவளது தன்மானத்திற்கு இழுக்கு வரவேண்டாமென்றுதான் அவர் அவனைத் தனியே அனுப்பினாலாவது பொறுப்பு வருமென்று அன்று அவனிடம் கண்டிப்பாகப் பேசி தனியே போகச் சொன்னாரென்று அவள் புரிந்துகொண்டாள்.

அவர் அப்படிச் சொல்லிவிட்டாரென்று அன்றிரவு அப்படி கோபப்பட்டான்!

“காட்றேன். நா யாருன்னு அவருக்குக் காட்டறேன். இந்த உலகமே என்னைப் புகழும் காலம் வரும். அப்பறம் பார் இவங்க எல்லாம் என் பின்னாடி குழைஞ்சுக்கிட்டு ஓடி வராங்களா இல்லையான்னு” என்று பொருமித்தள்ளினான்.  ரோஷம் பொத்துக்கொண்டு வர மூன்றே வாரத்தில் வீட்டைப் புதுப்பித்து கிருஹப்பிரவேசத்திற்கும் நாள் குறித்தான். இத்தனை செலவுகளுக்கும் பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது புதிர். இது குறித்து யாரும் அவனிடம் கேட்கவுமில்லை. கேட்டாலும் பதில் வரப்போவதில்லை. அவனது வரவு செலவு அனைத்தும் இராணுவ ரகசியம் போலதான்.

முக்கியமான செலவுகளை அவன் மறந்துவிடக்கூடாதென்று மைதிலி நினைவூட்டினாள். “எல்லார்க்கும் புடைவை வேஷ்டி வாங்கணும். அதை மறந்துடாதீங்க”

“எல்லார்க்கும்னா?”

“எல்லார்க்கும்தான். உங்கப்பா, அண்ணன், அண்ணிகள், எங்கம்மா அப்பா, அக்கா, மாமா எல்லோருக்கும்தான்”

“ம்.ம். நீயே வாங்கிடு. யார் வேணாம்னாங்க?”

“சரி பணம் கொடுங்க. நானே வாங்கிடறேன்”

“தவணையில் ஜவுளி கொடுக்கும் கடைகள் எத்தனையோ இருக்கே. அங்க எங்கயாவது வாங்கிக்க. மாசா மாசம் திருப்பிக் கொடுத்துடலாம்”

“கடனிலா?”

“ஏன் என்ன தப்பு? இவ்ளோ செலவு செய்யறேனே, இதெல்லாமும் கடன்தான்”

“எனக்கு கடன் வாங்கிப் பழக்கமில்லை”

“பழக்கிக்கொள் சினிமாக்காரனையும் கடனையும் பிரிக்கமுடியாது”

“சொந்தங்களுக்கு ஜவுளி வாங்கிக் கொடுப்பது சந்தோஷமா செய்யவேண்டிய மரியாதை. அதைக்கூடக் கடனில் வாங்கிடுன்னு சொல்ல எப்டி மனசு வருது உங்களுக்கு?”

“சரி வேணாம். நீ வெச்சிருக்கல்ல நிறைய நகை நட்டு எல்லாம்? அதை அடமானம் வையி. இல்ல எல்லாத்தையும் வித்து ஜவுளி வாங்கு”

“எனக்குப் புரியல. உங்க சினிமாக்காரங்க முன்னாடி வேஷம் போட சினிமா செட் மாதிரி வீட்டை அலங்கரிக்கறீங்க. ஆனா சொந்த பந்தங்களுக்கு செய்யமட்டும் ஏன் மூக்கால அழணும்?”

“அது அப்டித்தான். நான் தொழில் செய்யும் இடத்தில் பந்தாவா காட்டிக்கிட்டாதான் மரியாதை”

“உங்க கொள்ளுத்தாத்தா இதே தொழிலில்தானே இருந்தார். அவர் தன் சொந்த உழைப்பில் சம்பாதிச்ச சொத்துதான் இந்த வீடு. நியாயமா இதுக்கு கிருஹப்பிரவேசமே தேவையில்லை. உங்க உழைப்பில் வீடு கட்டி கிருஹப்பிரவேசம் செய்வதுதான் மரியாதைன்னு உங்களுக்கு யாரும் சொல்லலையா?”

அவன் கரம் மீண்டும் அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது. பிறகென்ன நினைத்தானோ, பீரோ திறந்து ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டொன்றை எடுத்து அவள் முகத்தில் வீசி எறிந்தான். “போ போய் உன் இஷ்டம்போல எல்லார்க்கும் ஜவுளி வாங்கிக்கொடு” என்றவன் படாரென கதவை சார்த்திக் கொண்டு வெளியில் சென்றான். அவன் சினிமாக்காரர்கள் முன்பு மரியாதை தேடியலைய, அவளோ உறவுகளிடம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றாள். அதற்காக புருஷனிடம் அடி வாங்கியதை அவள் பொருட்படுத்தவில்லை.

அவள் வாங்கிக்கொடுத்த அழகான பட்டுப்புடவை, பட்டு வேட்டிகளில் அத்தனை பேரும் உற்சாகமாக வளைய வந்ததையும், வந்தவர்களை மலர்ந்த முகத்துடன் உபசரித்ததையும் ரசித்துப் பார்த்தாள் அவள். கூட்டுக் குடும்பத்தையும் நல்ல உறவுகளையும் பிரிந்து தனியே வருவதை அவள் விரும்பவில்லை. எனினும், புருஷனின் குணம் காரணமாக இனி அங்கே இருப்பது சரியல்ல என்று தோன்றவேதான் மனதைத் தேற்றிக்கொண்டு தனிக்குடித்தனத்திற்குத் தயாரானாள்.

“என்ன மைதிலி, முகம் வெளுத்திருக்கு! ஏதானம் விசேஷமா?” அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்தபடி கேட்டது உறவொன்று. மைதிலி வெட்கத்தோடு புன்னகைத்தாள்.

“அடுத்தது பிள்ளையாப் பிறக்கட்டும்” வாழ்த்திவிட்டு நகர்ந்தது உறவு.

கிருஹப்பிரவேசத்திற்குப் பணமாகக் கொடுப்பதற்கு பதில் மாமனாரும் அண்ணிகளும் ஆளுயர ஃப்ரிஜ், விலை உயர்ந்த கிரைண்டர், மிக்சி, பீரோக்கள், அலங்கார சோபா செட்டுகள் அழகிய ஊஞ்சல் என்று வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பார்த்து பார்த்து அன்போடு வாங்கிக் கொடுத்தனர்.

கிருஹப்பிரவேசம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. புகுந்த வீட்டினர் இரண்டுநாள் அங்கேயே தங்கியிருந்து பொருட்களையெல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொடுத்தனர்.

“தனியா வந்துட்டாலும் அதுவும் எப்பவும் உன் வீடுதான் மைதிலி. அடிக்கடி வந்துட்டு போ. சரியா? இரண்டாவது பிரசவம் நம்ம வீட்டுலதான் நடக்கணும். நாங்கல்லாம் இருக்கோம். அம்மா அப்பாவை சிரமப்படுத்த வேண்டாம். நாங்க ஆனந்திடம் சொல்லிடறோம், ஒருமாசம் முந்தியே அங்க வந்துடு. நாங்க நல்லபடியா பாத்துக்கறோம் என்ன?” அண்ணிகளின் அன்பில் நெகிழ்ந்தாள் அவள்.

எல்லோரும் கிளம்பிச்சென்றதும் வீடு வெறிச்சிட்டது. “பெரிமா நானும் வரேன்” என்று அழுத மாயாக்குட்டியை விட்டுச்செல்ல முடியாமல், “சரி குழந்தை ரெண்டுநாள் எங்களோட இருக்கட்டும். அப்புறமா கொண்டு வந்து விடறேன்” என்றபடி அவளையும் அழைத்துச் சென்றுவிட்டனர்.

காலையில் டிபன் கூட சாப்பிடாமல் சென்றுவிட்ட ஆனந்தன் எப்போது வருவானோ தெரியாது. யாருமே இல்லாத ஒரு உலகத்தில் இருப்பதுபோல, அந்தப் பெரிய வீட்டின் அமைதி அவளை பயமுறுத்தியது.

நள்ளிரவில் வந்தான் ஆனந்தன். நன்கு குடித்திருந்தான்.

*** *** *** *** 

வெற்றி என்பது கூட மனிதர்களுக்கு போதையை ஏற்படுத்தும் ஒன்றுதான். ஆனந்தனின் நேரம் நன்றாக இருந்தது. அவனது இரண்டாவது படமும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகள் அவனை போதை கொள்ள வைத்தன. கால்கள் பூமியில் பதியாமல் மேலெழும்பி பறந்தன. மனசு மிதந்தது. பெரும் வெற்றிகளைக் கண்ட மன்னாதி மன்னர்களின் கிரீடங்களைப் பலரும் அவனது தலையில் ஏற்றினார்கள். ஏற்றி வைத்தவர்களே எப்போது வேண்டுமானாலும் அதைக் கழற்றி எடுத்துச் செல்வார்கள் என்பது புரியாமல் அடுத்த படத்திற்கு இன்னும் அகலக்கால் வைக்கத் திட்டம் தீட்டினான். மன்னாதி மன்னர்களுக்கும் வீழ்ச்சியுண்டு என்பதை அவன் எண்ணிப் பார்க்க முனையவில்லை. அதற்கெல்லாம் நேரமுமில்லை. அவனைச் சுற்றிலும்! உச்சத்தில் ஒலித்துக்கொண்டிருந்த ஜால்ரா சப்தங்களினூடே அவன் சாமியாடிக்கொண்டிருந்தான்.

எந்நேரமும் வீட்டுவாசலில் காத்திருப்போரின் கூட்டம் அதிகரித்தது. பத்திரிகைக்காரர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் திரைப்படத்துறை சார்ந்தவர்களும், ஃபைனான்சியர்களும் வந்து போன வண்ணமிருந்தனர். வீட்டை கவனிக்கவோ மகளைக் கொஞ்சவோ, மனைவியிடம் பேசவோ எதற்கும் நேரமில்லை. வீட்டுச்செலவுக்கு அவள் பணம் கேட்டால் பீரோ திறந்து பணக்கட்டுகளை அலட்சியமாகத் தூக்கியெறிந்தான். வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதுமா என்ன?

எல்லா பத்திரிகைகளின் அட்டையிலும் அவன் சிரித்தான். தொலைக்காட்சிகளில் உள்ளே அலட்டலும், வெளியே பணிவுமாகப் பேசினான். வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கு அவளையும் அழைத்துச் சென்றான். அவனோடு சேர்ந்து அவளும் அரிதாரம் பூசி பொய்யாய் சிரித்தாள். படுக்கையறையில் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டும் அதே வாய், பொதுவெளியில் பெண்களைப் புகழ்ந்தது. பெண்களை வணங்கியது. பெண்ணை மதிப்பவனாய்க் காட்டிக்கொண்டது.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைகள் எடுக்கப்பட்டு அடுத்த படத்திற்கான டிஸ்கஷன்கள் நடந்தது. வீட்டிற்கு அவன் வருவதே குறைந்தது. அவனது அடுத்த படம் குறித்து பத்திரிகைகளில் வரும் பெட்டிச்செய்திகள் அவளை பயமுறுத்தியது. திரைப்படத்துறை என்பது வெற்றியும் தோல்வியும் மாறி மாறிவரும் ஒரு சூதாட்டக்களம் போன்றது. அதை எதிர்கொள்ள மனவலிமையும் பணபலமும் வேண்டும். இவனிடம் முன்னோர் வழியாக கிடைத்த கொஞ்சம் சொத்துக்கள் மட்டுமே உள்ளது. அதுவும் இப்போது அடமானத்தில். தோல்வி ஏற்பட்டால் சமாளிக்கும் திறனுள்ளதா என்று தெரியாது. அதேநேரம் போதுமென்ற மனமுமில்லை. போதை தலைக்கேறிக் கிடக்கிறது. அவள் பெருமூச்சுவிட்டாள். அடுத்த படம் வெளியாவதற்கு சிலதினங்களுக்கு முன்பு அவள் ரிஷியைப் பிரசவித்தாள்.

குழந்தையைப் பார்க்க வரக்கூட நேரமில்லை அவனுக்கு. அண்ணிகள் தாய் மாதிரி அவளைப் பார்த்துக்கொண்டார்கள்.

மூன்றாவது படம் வெளியான அன்று அவளோடு அம்மாவும் அப்பாவும் மட்டுமிருக்க, மற்றவர்கள் சிறப்புக்காட்சி காணச்சென்றிருந்தார்கள்.

“படம் எப்டியிருந்துச்சு அண்ணி” என்று அவள் கேட்க, அண்ணி நல்லார்க்கு என்றாள். அவளது மழுப்பல் சிரிப்பு வேறொன்றைச் சொல்லாமல் சொல்லிற்று.

முதல்நாள் வந்த ரிப்போர்ட்கள் படம் சுமார்தான் என்றன. வெளியான இரண்டாவது வாரமே படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது. வீட்டைச்சுற்றி ஊர்ந்து கொண்டிருந்த கட்டெறும்புகள் ஒன்றையும் இப்போது காணோம். பெருத்த நஷ்டம். படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் ஒவ்வொருவராக கழுத்தை நெறிக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com