
“இந்த முறையாவது நாம் ஐந்து பேரும் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும்” என்றான் ராமச்சந்த்ரா.
‘ஆமாம். நாம் நான்கு பேரும் ஏதோ விதமாக சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், சங்கரம் மட்டும் வருவதில்லை. எத்தனை ஆண்டுகள் ஆயிற்று அவனைப் பார்த்து” என்றான் முகுந்த்.
“ஒரு போனாவது செய்யலாம் என்றால் அவன் நம்பர்கூட நம்மிடம் இல்லை” என்றான் ராமசந்த்ரா.
அவர்கள் நால்வரும் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திப்பதாக பேசிக்கொண்டு அதன்படி சந்தித்துக் கொண்டார்கள்.
“உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. சங்கரத்தின் போன் நம்பர் கிடைத்து விட்டது” என்றான் ரமேஷ்.
அனைவரும் மகிழ்ந்தனர்.
“அவனுக்கு போன் செய்து பேசினாயா?” என்று கேட்டான் சரத்.
“பேசினேன்”
“எப்படி இருகிறான்?”
“அவன் கிராமத்திலேயே கோவில் குருக்களாக இருக்கிறானாம்” என்றான் ரமேஷ்.
“நாம் இங்கு வந்திருப்பதாகச் சொல்லி அவனையும் வரச் சொன்னாயா?” என்று கேட்டான் சரத்.
“சொன்னேன். என்னால் எப்படி முடியும்டா? வருவது கஷ்டம் என்றான்” ரமேஷ் வருத்ததோடு பதிலளித்தான்.
“நாம் நால்வரும் நன்றாக செட்டில் ஆகி விட்டோம். சொந்த வீடு கட்டிக் கொண்டோம். நன்றாக சம்பாதிக்கிறோம். பாவம். சங்கரத்தின் வாழ்க்கையே வீணாகி விட்டது. படிப்பும் இல்லை. வாழ்க்கையில் ஸ்திரப்படவும் இல்லை. எப்படி இருக்கிறானோ என்னவோ? ரொம்ப நல்லவன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நம் அனைவரிலும் அவன் தான் இன்டெலிஜென்ட். அதிர்ஷ்டம் இல்லை அவனுக்கு” என்று கவலையோடு கூறினான் ராமச்சந்த்ரா.
அனைவரும் பாரமாக பெருமூச்செறிந்தார்கள்.
அவர்கள் ஐந்து பேரும் குண்டூரில் ஒன்றாக இன்டர் படித்தார்கள். அப்போதுதான் சங்கரத்தின் தந்தை மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து பலமாக காயமடைந்தார். அதனால் பெரிய மகனான சங்கரம் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களின் கிராமத்திற்குச் சென்று விட்டான். மீண்டும் திரும்பி வரவில்லை.
மீதி நான்கு பேரும் பெரிய படிப்பு படித்து வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டார்கள். ராமச்சந்திரா ஜெர்மனியிலும், முகுந்தும், சரத்தும் அமெரிக்காவிலும் உள்ளார்கள். ரமேஷ் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான். எப்போதாவது இந்தியாவிற்கு வந்து செல்வார்கள். வேனிற்காலத்தில் நடக்கும் திருமணம் போன்ற பண்டிகைகளுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வந்து செல்வார்கள். அனைவரும் ஹைதராபாத் வாசிகளானதால் மூன்று, நான்கு முறை சந்திப்பது வழக்கம். ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சந்தோஷமாக மாலையில் பேசிக் கொண்டே உணவு உண்பார்கள். இம்முறை கூட அவ்வாறே சந்தித்தார்கள்.
நான்கு பேரும் சேர்ந்து இருக்கும்போது சங்கரம் இல்லாத குறை தெளிவாகத் தெரியும். எத்தனை ஆண்டுகள் ஆயிற்று அவனைப் பார்த்து என்று வருந்துவார்கள்.
“அவனுக்கு வருவதற்கு இயலவில்லை. அங்கு அவன் நிலைமை என்னவோ! பொருளாதாரம் எப்படி இருக்கிறதோ! அதை கூற முடியாமல்தான் வர இயலவில்லை என்று கூறுகிறானோ என்னவோ” என்ற தன் ஐயத்தை வெளியிட்டான் ரமேஷ்.
“எனக்கு ஒரு ஐடியா வருகிறது..அவனுக்கு வர இயலாவிட்டால் என்ன? நாம் போய் அவனைப் பார்த்து விட்டு வருவோம்” என்றான் முகுந்த்.
“எப்படிச் செல்வது? நம்மால் முடியுமா?” என்று மூவருமே சந்தேகித்தார்கள்.
“போய்ப் பாரத்துவிட்டு வருவது என்று முதலில் முடிவெடுப்போம். அத்தனை தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். இந்தச் சின்ன ப்ரோக்ராம் போட முடியாதா என்ன? ராத்திரி கிளம்பினால் நாளை மறுநாள் திரும்பி வந்து விடலாம். எத்தனை நாள் ஆச்சு அவனைப் பார்த்து...” என்றான் முகுந்த்.
முதலில் கொஞ்சம் தயங்கினாலும் போக வேண்டும் என்று தோன்றியது அவர்களுக்கு.
“அவன் ஊரில் இருக்கிறானோ இல்லையோ என்று தெரிந்து கொண்டு போன் செய்துவிட்டுப் போவோம்” என்றான் ராமசந்த்ரா.
“இதோ இப்போதே போன் செய்கிறேன்” என்றான் ரமேஷ்.
“நாங்கள் உன் கிராமத்துக்கு வரலாம்னு இருக்கோம்டா” என்ற உடனே போனின் மறுமுனையில் சங்கரத்தின் குரலில் ஆனந்தம் தெரிந்தது.
“வாங்கடா! எத்தனை வருஷமாச்சுடா உங்களை எல்லாம் பார்த்து” என்றான் சங்கரம்.
“ப்ரோக்ராம் ப்ளான் செய்து விட்டு உனக்கு தெரிவிக்கிறோம்” என்றான் ரமேஷ்.
ரயிலோ பஸ்ஸோ என்றால் டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணி காரில் செல்லலாம் என்று தீர்மானித்தார்கள். அவர்கள் வரும் விவரம் தெரிவித்தவுடன் சங்கரம் மிகவும் மகிழ்ந்தான். ஒரே ஒரு நாள்தான் இருப்பார்கள் என்றவுடன் அவனுடைய உற்சாகம் தணிந்துவிட்டது.
“என்னடா இது! அதிசயமா வருகிறீர்கள். நான்கு நாட்களாவது தங்கலாமே” என்றான்.
“இல்லடா. இந்தப் பயணமே மிகவும் கஷ்டத்தோடு ஏற்பாடு செய்தோம். எங்களுக்கும் லீவு இல்லை” என்றான் ரமேஷ்.
“ஆமாம், அதுவும் உண்மைதான். நீங்கள் வருவதாகச் சொன்னதே போதும் எனக்கு” என்றான் சங்கரம்.
பயணத்திற்கு ரெடி ஆனதும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை செய்தார்கள்.
“அவன் அதிகமாகப் படிக்கவில்லை. எப்படி இருக்கிறானோ என்னவோ... நாம் நான்றாக வசதியாக உள்ளோம். ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்போம். அவனுடைய தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வான்” என்றான் சரத்.
“வாங்கிப்பானா? தவறாக நினைக்க மாட்டானா?” என்றான் ரமேஷ்.
“குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லி கையில் வைப்போம்” என்றான் ராமசந்த்ரா.
விடியற்காலையில் நான்கு மணிக்கு கிளம்பினார்கள். நல்ல கார். வசதியாக இருந்தது. சாலையும் நன்றாக இருந்தது. பத்து மணிக்கே சங்கரத்தின் கிராமத்தை அடைந்தார்கள். அந்த கிராமத்தின் பெயர் கணபதிபாலெம். மெயின் ரோட்டிலிருந்து நான்கு கிமீ உள்ளே செல்ல வேண்டும். ஆனால் சங்கரம் மெயின் ரோட்டிலேயே காத்திருந்தான்.
பஞ்சகச்சம் வேட்டி, சட்டை அணிந்திருந்தான், நெற்றியில் விபூதிப் பட்டையும் நடுவில் குங்குமமும் பளபளத்தன. எள்ளும் அரிசியும் சேர்ந்தாற்போல் தலை நரைக்க ஆரம்பித்திருந்தது. சின்னக் குடுமி வைத்திருந்தான். விலை உயர்ந்த உடை, வாட்ச், அழகான மூக்குக் கண்ணாடி, மணக்கும் சென்ட் வீசும் இந்த நால்வரின் முன் திருஷ்டி பொம்மை போல் நின்றிருந்தான் சங்கரம்.
அத்தனை நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் அந்த ஆனந்தத்தில் மூழ்கிப் போனார்கள்.
சங்கரம் தன் மோப்பெடில் முன்னால் சென்று அவர்களுக்கு வழிகாட்டினான். விசாலமான ஓட்டு வீட்டின் முன் நிறுத்தினான். சுற்றிலும் தேங்காய் மரங்களும் மாமரங்களும் காட்சி தந்தன. வீட்டின் முன்னால் ஒரு பெரிய வேப்பமரம் நிழல் தந்தது.
கேட்டைத் தாண்டி உள்ளே சென்றவுடன் ஒரு பெண், “கை கால் அலம்பிக் கொள்ளுங்கள்” என்று செம்பில் தண்ணீர் கொடுத்தாள்.
இத்தகைய சம்பிரதாயமான வழிமுறைகளைக் கடைப்பிடித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன என்று எண்ணிக் கொண்டே நால்வரும் ஷூவைக் கழற்றி விட்டு கால் அலம்பிக் கொண்டார்கள்.
“வாங்கடா!” என்று உள்ளே அழைத்துச் சென்றான் சங்கரம்.
அதற்குள் அனைவருக்கும் இளநீர் கொண்டு வந்து தந்தாள் இன்னொரு பெண்.
முதலில் வராண்டா. பெரிய ஹால். ஜன்னலுக்கு வெளியே கூலர் வைத்திருந்தார்கள். குளுமையாக இருந்தது. மூன்று அறைகள். மிகப்பெரிய சாப்பாட்டறை, சமையலறை, சாமானறை, பூஜையறை. கொல்லைப்புறத்தில் பெரிய மல்லிகைப் பந்தல். வீடு நிறைய மனிதர்கள்.
சங்கரத்தின் தாய், தந்தை, சங்கரத்தின் மனைவி, இரண்டு மகன்கள், சங்கரத்தின் மருமகள், இரு தம்பிகள், தம்பிகளின் குடும்பத்தினர் அந்த வீட்டில் இருந்தார்கள். அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்வித்தான்.
அந்த ஊரின் சிவன் கோவிலில் சங்கரம் அர்ச்சகராக வேலை பார்க்கிறான். தந்தைக்கு ஆக்சிடென்ட் ஆனவுடன் அந்த பொறுப்பு சங்கரத்தின் மேல் விழுந்தது. அர்ச்சகராக இருப்பதோடு மட்டுமின்றி ஜோதிடமும் கற்றுக் கொண்டுள்ளான்.
பெரிய தம்பி பக்கத்து ஊர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறான். அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். இரண்டாவது தம்பி பக்கத்து கிராமக் கோவில் அர்ச்சகராக உள்ளான். அவனுடைய மனைவி போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறாள். சங்கரத்தின் பெரிய மகனும் அவனுடைய மனைவியும் பக்கத்து ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிறார்கள். இரண்டாவது மகன் ரயில்வேஸில் அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர். அவன் மனைவியும் கர்ப்பிணி. தம்பிகளின் பிள்ளைகள் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அனைவரும் சேர்ந்து ஒன்றாக அந்த வீட்டில் வாழ்கிறார்கள்.
வீட்டில் இருப்பவர்கள் எல்லோருமே இவர்களை மிகவும் அன்பாக நலம் விசாரித்தார்கள். சாப்பாட்டு நேரம் வந்தது. இவர்கள் கீழே உட்கார முடியாது என்பதால் மேஜை மீது வாழை இலை போட்டு பரிமாறினார்கள். மருமகள்களின் உதவியோடு சங்கரத்தின் தாயாரே பரிமாறினார்.
கத்திரிக்காய் கறி, தேங்காயும் மாங்காயும் போட்ட துவையல், கீரைப் பருப்பு, அப்பளம், புதிதாக போட்ட ஆவக்காய், போளி, புளியோதரை எல்லாம் சாப்பிட்டவுடன் கண்ணை அசந்து தூக்கம் வந்தது. ஹாலில் கயிற்றுக் கட்டில் போட்டு வசதி செய்தார்கள். நாண்பர்கள் பேசிக்கொண்டே உறங்கினார்கள்.
தூங்கி எழுந்தபோது மணி நான்கு ஆகி இருந்தது. பனை நுங்கு ரெடியாக இருந்தது. மாலை கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தான் சங்கரம். அதன் பிறகு ஊரை சுற்றிக் காட்டினான். ஊரில் அனைவரும் சங்கரத்தை மிகவும் அன்போடு நலம் விசாரித்தார்கள். தன்னுடைய வயல்களை காட்டினான்.
“அப்போது நான்கு ஏக்கர்தான் இருந்தது. இப்போது இன்னும் நான்கு ஏக்கர் வாங்கி இருக்கிறோம். மிகவும் மலிவாகக் கிடைத்தது. ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிந்து விட்டதால் இப்போது விலை ஏறிவிட்டது. நாற்பது லட்சம் வரை போகிறது” என்று கூறினான். அது தவிர வாழைத் தோப்பு, மாந்தோப்பு கூட அவர்களுக்கு இருந்தது. அனைவரும் வீட்டுக்கு திரும்பினார்கள்.
வெளியில் சென்றிருந்த வீட்டு மனிதர்கள் எல்லாரும் கூட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அப்போது வரை இருந்த சத்தமும் சந்தடியும் இரண்டு மடங்கானது.
அந்த வீட்டின் சூழ்நிலையை பார்த்துக் கொண்டே இருந்தால் டைம் மிஷினில் எங்கோ பழங்காலத்திற்கு போனாற்போல் இருந்தது நான்கு நண்பர்களுக்கும்.
வீட்டு தலைவர் கம்பீரமாக இருந்தார். மகன்கள் பெரியவர்களாகி, சம்பாதித்தாலும், ‘அப்பா, அப்பா’ என்று அவரைச் சுற்றி வந்தார்கள். வீட்டில் அனைவரும் அவருக்கு கௌரவம் அளித்தார்கள். மருமகள்கள், வெளியில் வேலைக்குச் செல்பவர்கள், வேலை பார்க்காதவர்கள் என்று எல்லோருமே மாமியாரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவரவர் கௌரவம் அவரவருக்கு இருந்தது. ஒற்றுமையாக இருந்தார்கள்.
ஏதாவது சாப்பிட கொடுத்தால், “அண்ணாவுக்கு கொடுத்தாயா?” என்று தம்பிகளும், “தம்பி சாப்பிட்டானா?” என்று அண்ணனும் தைரியமாக மனைவியை கேட்க முடிகிறது அந்த வீட்டில்.
குழந்தைகள், பெரியப்பா! சித்தப்பா! என்று ஒருவருக்கொருவர் உறவு சொல்லி உரிமையோடு வலம் வந்தார்கள். அதில் எதிலுமே செயற்கைத்தனம் இல்லை. மிகவும் இயல்பாக நடந்தது. அன்பும் பாசமும் நிறைந்து ஒரே நூலில் கோர்த்த முத்துக்களாக இருந்தனர் அந்தக் குடும்ப அங்கத்தினர்கள்.
“பாவம், எங்கள் சங்கரம் வீட்டைத் தாண்டி எங்கும் போக மாட்டான். அவனைப் பற்றி என்ன சொல்வது? சின்னக் குழந்தை போல் இருப்பான்” என்று அவனுடைய தாய் கூறினாள்.
“அதற்கு என்ன செய்வது? அவனை விட்டு என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது” என்று தந்தை கூறினார்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. அப்பாவையும் கோவிலில் சாமியையும் விட்டுவிட்டு என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. ஐம்பது வயதைத் தாண்டினாலும் அம்மா கையால் சாப்பிடும் அதிர்ஷ்டம் எனக்கு இருக்குடா” என்றான் சங்கரம்.
நான்கு நண்பர்களுக்கும் அவர்களைப் பார்த்ததில் சொல்ல முடியாத அளவு திருப்தியாக இருந்தது. இரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு .நண்பர்கள் நால்வரும் விடியற்காலையிலேயே எழுந்து திரும்பப் பிரயாணம் ஆனார்கள்.
அவர்களுக்கு வேஷ்டி, துண்டு, அவர்களின் மனைவிகளுக்கு ஜரிகை வைத்த புடவை வைத்து கொடுத்தார்கள்.
இவர்கள் செல்லும் போது சங்கரத்திற்கு அழுகை வந்து விட்டது.
“என் நிலைமையை பார்த்தீர்கள் அல்லவா? கோவில், அம்மா, அப்பா... இவர்களை விட்டுவிட்டு எனக்கு வர முடியாது. நீங்கள் வந்தது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது” என்றான்.
வீட்டில் அனைவருமே கேட் வரை வந்து இவர்களை வழி அனுப்பினார்கள். கார் கிராமத்தைத் தாண்டி சாலையில் சென்றது.
நான்கு நண்பர்களும் மௌனமாக இருந்தார்கள். சங்கரத்தின் வீடும் அந்த வீட்டின் சூழலும் இவர்களைத் தொடர்ந்து வந்தது. ஏதோ கூற முடியாத வேதனை இவர்களுக்கு ஏற்பட்டது.
இவர்களுக்கும் பெற்றோரும் அண்ணா தம்பிகளும் உள்ளார்கள். எப்போதோ மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பார்கள். ஒருவரைப் பற்றி மற்றவருக்கு அன்பு இருந்தாலும் அவரவர் உலகம் அவரவருக்கு.
ரமேஷின் அம்மாவும் அப்பாவும் முதியோர் இல்லத்தில் உள்ளார்கள். எல்லா வசதிகளும் அங்கு இருக்கிறது.
ராமச்சந்திராவின் அம்மாவும் அப்பாவும் கிராமத்து வீட்டிலேயே இருந்தார்கள். இருவருமே வயாதனவர்கள். தந்தைக்கு உடல்நிலை சரியாக இருக்காது. ஏதாவது கொஞ்சம் உடல்நிலை சரியில்லா விட்டாலும் அம்மாதான் எல்லாவற்றுக்கும் ஓட வேண்டும். பாவம்.
முகுந்தனின் அம்மாவின் அப்பாவும் நன்றாக உள்ளார்கள். பிரயாணம் செய்யவதற்கும் அவர்களுக்கு உடம்பில் தெம்பு உள்ளது. ஆனால் அவனுடைய மனைவிக்கு அவர்களைப் பிடிக்காது.
சரத்தின் பெற்றோர், “உங்கள் நாட்டுக்கு எங்களால் வர முடியாது. எங்களுக்கு அங்கு பொழுது போகாது. அங்கு வந்து நாங்கள் ஏதாவது படுக்கையில் விழுந்தால் கஷ்டம்” என்று சொல்லி வர மாட்டார்கள்.
உடன்பிறந்தவர்கள் அவரவர்கள் வழிமுறை அவரவர்களுக்கு. இவர்களின் குழந்தைகளும் பெரியவர்களான பின் இந்தியாவுக்கு திரும்பி வர விரும்பவில்லை.
அவ்வப்போது வந்து எல்லாரையும் பார்த்துச் செல்லலாம் என்று பிள்ளைகளை அழைத்து வந்தாலும், சுற்றுச்சூழல் மாறுவதால் உடல்நிலைக் கோளாறு, கோவிலுக்கு போய் வேண்டுதலைச் செலுத்துவது என்று பரபரப்பாகவே காலம் கடந்து விடும். மீண்டும் அவரவர் வழி அவரவருக்கு.
அவர்கள் யாருமே கஷ்டப்படவில்லை. பொருளாதார வசதி உள்ள நாட்டில் வசதியாகவே இருக்கிறார்கள். இருக்கும் இடத்தில் நண்பர்கள் உள்ளார்கள். ஒன்றிணைந்து இருப்பார்கள் ஆனால் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் எல்லாம் தூரமாகவே உள்ளார்கள்.
‘சட்டைப் பாக்கெட்டில் இருப்பது தான் நம்முடைய பணம். அருகில் இருப்பவன்தான் மகன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அம்மாவும் அப்பாவும் அருகில் இருக்கும் அந்த அதிர்ஷ்டம் மட்டும் இல்லை. அதுவும் பழகிப் போய்விட்டது சூழ்நிலைக் கைதிகளாகி விட்லும் அதிலும் ஒரு சுகம் உள்ளது என்று நினைத்தார்கள்.
இப்போது திடீரென்று அந்த கிராமத்திற்குச் சென்று சங்கரத்தை பார்த்தவுடன் மனதில் ஏதோ இழந்தாரற்போல் ஒரு வேதனை. எத்தனை விரும்பினாலும் அது போன்ற ஒரு வாழ்க்கை தமக்கு அமையாதல்லவா என்ற ஏமாற்றம்.
சற்று நேரம் கழித்து ராமச்சந்திரா வாய் திறந்தான்.
“அவன் நம்மை விட எதிலாவது குறைவாக வாழ்வானோ என்று நினைத்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நம்மை விட சுகமாகவும் உயர்வாகவும் அவன்தான் வாழ்கிறான்” என்றான்.
“ஆமாம். நாம் கூப்பிட்ட போதே அவன் போனை எடுத்ததால் நம்மால் போய் வர முடிந்தது. அவனைப் பார்த்தது திருப்தியாக இருக்கிறது. அவன் ஏதோ கஷ்டப்படுகிறான் என்று நினைத்தோம். உதவி செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அவனுக்கென்ன? மகாராஜாவாக இருக்கிறான்” என்று மூவருமே என்றாகக் கூறினார்கள்.