சந்திரனே சாட்சி!

சந்திரனே சாட்சி!
Published on

- கிறிஸ்டி நல்லரெத்தினம்

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது புளோரிடாவில் உள்ள நாசாவின் நவீனமயமாக்கப்பட்ட கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியன் விண்கலம் ஆர்ட்டெமிஸ் 1 ஐ தன்னுடன் இணைத்துக் கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து சந்திரனை சுற்றிவர புறப்பட்டிருக்கும் அல்லது போக மனமில்லாமல் புஸ்வாணமாய் புகைந்து கொண்டிருக்கும்!

எது எப்படி இருந்தாலும், எல்லாம் திட்டமிட்டவாறு நடந்தேறினால், 29 ஆகஸ்ட் 2022 அமெரிக்காவின் விண்வெளி சகாப்தத்தில் ஒரு மறக்கமுடியாத நாளாக பதிவேறியிருக்கும். ராக்கெட்டை வானுக்கு அனுப்பும் முதல் முயற்சியில் 98 மீட்டர் உயரமான அந்த பாரிய ராக்கெட்டை எரியூட்டி தொடக்கிவைக்கும் முன் நடைபெற்ற இறுதி பரிசோதனையில் ஒரு சிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. வெப்பநிலையை நுகரும் கருவியில் ஏற்பட்ட கோளாறினால் ராக்கெட்டுக்கு தேவையான அந்த துல்லியமான வெப்பநிலைக்கு ராக்கெட் எஞ்சின் வரத்தவறிவிட்டது என்ற உண்மை வெளிப்பட்டது. உடனே ராக்கெட்டின் எரியூட்டல் நிறுத்தப்பட்டு தவறை
சரி செய்யும் பணிகள் ஆரம்பமாகின. சில நாட்களின் பின் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சியும் ஐதரசன் கசிவால் தோல்வியிலேயே முடிந்தது. 'முதல் கோணல் முற்றும் கோணல்' என்பது இதுதானோ? மூன்றாவது முயற்சி செப்டெம்பர் 20ம் திகதியளவில் நடந்தேறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிசகுகள் காலத்தே கண்டுபிடிக்கப்பட்டிராவிட்டால் 1986ல் விண்கலம் ''சேலஞ்சருக்கு' நேர்ந்த கதியே இதற்கும் நேர்ந்திருக்கலாம். புவியில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட 73வது வினாடியிலேயே Space Shuttle Challenger விண்ணில் வெடித்துச் சிதறிய போது உலகு ஏழு விண்வெளி வீரர்களையும் அவர்களின் கனவுகளையும் இழந்து நின்றது நினைவில் இருக்கலாம். ஆர்ட்டெமிஸ் 1 இல் எந்த உயிர்களும் பயணிக்கவில்லையெனினும் அது போன்ற அனர்த்தம் நிகழ்ந்திருப்பின் பல பில்லியன் மதிப்புள்ள வாணவேடிக்கையாக அது நடந்து முடிந்திருக்கும். நிலவை ஆழ நினைக்கும் அமெரிக்காவின் தன்மானத்தில் ஒரு கீறலாகவும் அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்!

50 ஆண்டுகளுக்கு முன் 1972ல் அப்போலோ 17 விண்கலம் இறுதியாக சந்திரனில் இறங்கியது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்களால் அரசு விண்வெளி நிறுவனமான நாசாவிற்கான பட்ஜெட்டில் கை வைத்தது அமெரிக்க அரசு. ஊரார் வரிப்பணத்தில் கிரகங்களை சுற்றும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் 2010ல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உருவில் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு ஒரு விடிவு வந்தது! நாசாவின் பட்ஜெட்டை அடுத்த 5 வருடங்களுக்கு $6 பில்லியன்களாக உயர்த்தியது மட்டுமல்லாமல் 2030 ஆண்டளவில் மனிதனை செவ்வாய் கிரகத்தில் இறக்கவும் அதற்கான முயற்சியில் ஈடுபடும்படியும் விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார் அவர். சந்திரனை மீண்டும் தொடும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டது.

சும்மா இருந்த தனியார் கம்பெனிகளும் இந்த 'முயற்சி ராக்கெட்டில்' குதித்து ஏறிக்கொண்டன. SpaceX, Blue Origin, Virgin Galactic போன்ற கம்பெனிகள் விண்வெளிக்கு சாமானியர்களை அழைத்துச் சென்று தம் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக்கொண்டன.

சமகாலத்தில் மும்முரமான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நிச்சயம் நடந்தேறின என்பது உண்மையே. இதன் விழைவாகவே தனியார் கம்பெனிகள் இன்று நாசாவுடன் கைகோர்த்து விண்வெளியில் பயணிக்க களம் இறங்கியிருக்கின்றன். ஆர்ட்டெமிஸ்- I இன் தயாரிப்பில் அமெரிக்காவின் போயிங், ஏர்பஸ், லோக்கீட் மார்ட்டின், ஏரோஜெட் ஆகிய கம்பெனிகள் பங்கேற்றுள்ளன.

பல தசாப்தங்களுக்கு நிலவில் நீண்ட கால மனித இருப்பை உருவாக்குவதற்கான சிக்கலான பயணங்களின் தொடரில் கன்னிப்பயணத்தை மேற்கொள்கிறது ஆர்ட்டெமிஸ்-I. இதுதான் அந்த புதிய சகாப்தத்தின் ஆரம்பம்! 42 நாட்கள் விண்வெளியில் சஞ்சரித்து பூமிக்கு தகவல்களை அனுப்பி மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பும்.

2024ல் ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுடன் சந்திரனை சுற்றி வலம் வந்து தகவல்களை சேகரிக்கும். ஆனால், தரையிறங்காது. இது அப்போல்லோ 8 ஐ ஒத்த பயணமாக அமையும். பத்து நாட்கள் நீடிக்கும்      இப்பயணத்தில் மனித உடல்கள் விண்வெளியில் எப்படி தாக்குப்பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் உடல் உறுப்புகளில் என்ன பாதிப்பை பயணம் எற்படுத்தும் என்பதை அறிவதற்குமே இந்தப் பயணம்.

ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கெல்லாம் மகுடம் வைக்கப்போவது ஆர்ட்டெமிஸ் III. ஆம்! 2025ல் விண்ணைக் கிழித்துக் கொண்டு சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் இவ்விண்கலம். அதுதான் திட்டம். மொத்தமாக நான்கு விண்வெளி வீரர்கள் சந்திரனை அண்மித்தாலும் இவர்களில் இருவருக்கே சந்திரனில் காலடி வைக்கும் அதிஷ்டம் கிட்டும். மீதி இருவரும் சந்திரனை சுற்றி வட்டமிட்டுக்கொண்டே நண்பர்களை நோட்டமிட்டவாறு தகவல்களை சேகரிப்பர். தரையிறங்கும் இவர்களில் ஒருவர் பெண் விண்வெளி வீராங்கனையாக இருப்பார் என நாசா அறிவித்துள்ளது. அவர் ஒரு கறுப்பின அமெரிக்கராக கூட இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆம்! மானுட சரித்திரத்தில் பல சாதனைகளை படைக்க இருக்கும் ஆர்ட்டெமிஸ் III விண்ணைத்தொட அதிக நாட்கள் இல்லை.

"ஆர்ட்டெமிஸ்.......இதென்ன பெயர்?.. அரிச்சுவடியை அள்ளித்தெளித்தாற்போல்" என நீங்கள் எண்ணுவது புரிகிறது.

கிரேக்க பெருங்கதையாடல்களில் வான் தெய்வங்களான ஜீயஸ், லெட்டோ தம்பதிகளின் மகளே ஆர்ட்டெமிஸ். இவளின் இரட்டை சகோதரர்தான் அப்போலோ! அப்போலோ காவல் தெய்வம் என கிரேக்க இதிகாச கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆர்ட்டெமிஸ் 'வேட்டையின் தேவதை' (goddess of hunt) என உருவகப்படுத்தப்பட்டுள்ளாள். சந்திரனின் பல மர்மங்களை எம் கண்முன் வேட்டையாடி கிடத்தப்போகிறது ஆர்ட்டெமிஸ். எனவே, இப்பெயர் பொருத்தமானதே!

முன்னர் கூறியதைப் போல் ஆர்ட்டெமிஸ் ||| ஐ நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசாவுடன் Lockheed Martin, Airbus, SpaceX ஆகிய தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து பயணிக்க உள்ளன. 30 நாட்கள் நீடிக்க இருக்கும் இப்பயணத்தில் இரு விண்வெளி வீரர்கள் சந்திரனில் ஒரு வாரம் தங்கியிருப்பர். மனித குலத்தை 'வேற லெவல்' க்கு கொண்டு செல்ல இருக்கும் இப்பயணத்தில் பங்கேற்க இருக்கும் அந்த நான்கு அதிர்ஷ்டசாலிகள் யார் என நீங்கள் கேட்கலாம்.

நாசா 2020ல் 47 விண்வெளி வீரர்களை பயிற்றுவித்து அவர்களில் 18 வீரர்களை இறுதி சுற்றில் தெரிவு செய்தது. இதில் எட்டு பெண்களும் அடங்குவர். இந்த விண்வெளி வீரர்களின் தகமைகள் என்ன என நீங்கள் எண்ணலாம். இவர்களில் பலர் புவியில் இருந்து 408 கி.மீ தொலைவில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பல நாட்கள் வாழ்ந்தவர்கள். சிலர் அமெரிக்க ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் உயர் பதவிகள் வகித்தவர்கள் மற்றும் US விமானப்படை பைலட்டுகள், வைத்திய நிபுணர்கள். பெண் வீரர்களில் ஒருவரான Christina Koch சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தொடர்ச்சியாக வசித்து உலக சாதனை படைத்தவர். எனவே, இவர்களில் யாரை நிலவில் இறக்குவது என முடிவெடுப்பது அத்தனை இலகுவான காரியமல்ல.

மேலே கூறிய 18 பேர்களில் இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் உண்டு! அவர்தான் 45 வயது நிரம்பிய லெப்டினன்ட் கர்னல் ராஜா சாரி. தெலுங்கானாவை சேர்ந்த இவரின் தந்தையார் ஸ்ரீநிவாஸ் சாரி தனது பட்டப்படிப்பை ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்த கையோடு அமெரிக்காவில் குடியேறினார். ராஜா பிறந்தது என்னவோ அமெரிக்காவில்தான் என்றாலும் இன்றும் தனது இந்திய உறவினர்களுடன் நெருங்கிய தொடர்களை பேணிவருகிறார்.

"எனது தந்தையே எனது உத்வேகம். கல்வியின் முக்கியத்துவத்தை எம்முள் விதைத்தது எம் தந்தையே" என்கிறார் ராஜா.

விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர் அமெரிக்க இராணுவப்படையில் "டெஸ்ட் பைலட்டாக" பணிபுரிந்து பல புதிய விமானங்களை துணிச்சலுடன் செலுத்தி வெள்ளோட்டம் பார்த்தவர். ஈராக்கிய போரிலும் F-15E தாக்குதல் விமானங்களை செலுத்தியவர். "Top Gun" திரைப்படத்தில் வரும் F-15, F-16 F-35 ரக விமானங்கள் இவருக்கு விளையாட்டுப் பொம்மைகள்!

2017ல் நாசாவில் இணைந்து 2021ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் குடியேறி அங்கு 177 நாட்கள் வாழ்ந்துகாட்டி சாதனை படைத்தவர் இவர். இப்பயிற்சிகளே லெப்டினன்ட் கர்னல் ராஜா சாரிக்கு நிலவில் கால்பதிக்க முழு தகமைகளையும் வழங்கியுள்ளது. இவரின் கனவு நனவாகுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

இவர் சர்வதேச விண்வெளி நிலயத்தில் இருந்தபோது அமெரிக்க கல்லூரி மாணவர்களுடன் நிகழ்த்திய சுவாரசியமான உரையாடலை கீழே உள்ள காணொலியில் காணலாம்:

ஆர்ட்டெமிஸ்-Iஐ நாசா பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து சந்திரனுக்கு அனுப்புவதன் நோக்கம்தான் என்ன என நீங்கள் எண்ணுவது நியாயமானதே. நாசாவின் இந்த SLS (Space Launch System) வகை ராக்கெட் மாற்று கிரகங்களில் மனித சஞ்சாரத்தை நிலைநிறுத்த எடுக்கப்படும் முயற்சியின் முதல் படி. சந்திரனின் மேற்பரப்பில் மனிதன் நீண்ட நாட்கள் வாழ்ந்து எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறான் என்பதற்கான அறிவியல் விடிவை நோக்கிய பயணம் இது. புவியைவிட அதிக கதிரியக்க செறிவுள்ள மாற்று கிரகங்களில் புவியீர்ப்பு விசை வேறுபட்ட சூழலில் மனிதன் வாழ்ந்தால் அவன் உடல் அச்சூழல் மாற்றத்தை எவ்வாறு தங்கி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு பதில் தேடும் பயணமே இது.

இம்மாற்றங்களைத் துல்லியமாக கணிப்பிட ஆர்ட்டெமிஸ்- I ல் பயணிக்கிறான் "கொமாண்டர் மூணிகின் கம்போஸ்" எனும் பொம்மை மனிதன். இவனுள் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் விண்வெளியில் பயணிக்கும்போது மனிதன் எதிர்நோக்கும் கதிரியக்கம், புவியீர்ப்பு அழுத்தம், இரத்தத்துடிப்பு மாற்றம் போன்றவற்றை துல்லியமாய் கணித்து பதிவு செய்யும். இவர் தனிக்கட்டையல்ல! இவருடன் ஹெல்கா மற்றும் ஜோஹர் எனும் இரு பெண் பதுமைகளும் பயணிக்கும். இவற்றினுள் கருப்பை, மார்புத்தசை கலங்களின் மாதிரிகள் வடிவமைத்து பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி பயணத்தின்போது கதிர்வீச்சினால் பெண் விண்வெளி வீராங்கனைகளின் உடலில் ஏற்படும் பெளதீக, உடலியல் மாற்றங்களை கணித்து ஆராய்வதற்காகவே இந்த ஏற்பாடு. இவற்றினுள் 5,600 உடல் மாற்றங்களை நுகரும் 'சென்சர்களும்' 34 கதிரியக்க பதிவேடுகளும் உள்ளன.

இப்பயணத்தில் சேகரிக்கப்படும் உடலியல் தரவுகள், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாடி அமைத்து மனிதன் வாழும்போது ஏற்படும் எதிர்வினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சியின் முதல் படியே!

“2033ல் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா கால்பதிக்க வேண்டும்” என்ற ஜனாதிபதி ஒபாமாவின் கனவை நனவாக்கும் வேட்கையில் உழைக்கும் நாசாவின் வெற்றி மனிதகுலத்தின் வெற்றி என்று கூறினால் மிகையாகாது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com