கல்கி கதா மஞ்சரீ! (கல்கியின் கதைப் பூங்கொத்து)

கல்கி கதா மஞ்சரீ! (கல்கியின் கதைப் பூங்கொத்து)

பேட்டி: எஸ்.கல்பனா.

கடந்த சரஸ்வதி பூஜையன்று (அக்டோபர் 15) இணையம் வாயிலாக ஒரு நூல் வெளியீடு நடந்தது. 'கல்கி கதா மஞ்சரி' என்ற இந்த சமஸ்கிருத நூலை பதிப்பித்தது சென்னை சமஸ்கிருத பாரதி அமைப்பு.

அமரர் கல்கியின் சிறுகதைகளில் இருந்து 10 சிறுகதைகளை தேர்வு செய்து சென்னைவாசியான முனைவர் ம. ஜயராமன் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருந்தார். இணைய வழியில் இந்நூலை வெளியிட்டவர் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன் அவர்கள். இந்த விழாவில் சிறப்புரை ஆற்றியவர் நாக்பூர் அருகே ராம்டேக்கிலுள்ள காளிதாசர் பெயரிலான சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீனிவாஸ் வர்கேடி அவர்கள்.

"அமரர் கல்கியின் படைப்புகள் மகன் வாசிக்க தாய் கேட்கும் விதம் அமைந்துள்ள தரமான இலக்கியம். இப்படிப்ட்ட மேலான கதைகள் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மகிழ்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டார திரு.இல.கணேசன்.

"தாய் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கிறாள். முதுமை காலத்தில் பிள்ளைகள் தாய்க்கு ஆதரவாக இருக்கிறார்கள். அது போல, எல்லா மொழிகளுக்கும் ஊட்டமளித்து வந்த சம்ஸ்க்ருதத்திற்கு, பிற மொழிகள் இது போன்ற மொழிபெயர்ப்புகள் வாயிலாக ஊட்டமளிக்கின்றன"   என்று மனம்நெகிழ்ந்து பாராட்டினார், துணைவேந்தர் பேராசிரியர் ஶ்ரீநிவாஸ வர்கேடி.

அமரர் கல்கியின் குடும்பத்தை சேர்ந்தவரும் 'கல்கி' வார இதழ் முன்னாள் ஆசிரியருமான சீதா ரவி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் இந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.

அமரர் கல்கியின் 10 சிறுகதைகளை மொழிபெயர்த்த திரு.ஜயராமனுடன் கல்கி ஆன்லைனுக்காக பிரத்தியேகமாகப் பேசினோம்,

''தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கு தரமான இலக்கிய படைப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமரர் கல்கியின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று சொல்ல ஆரம்பித்தார் ஜயராமன்..

''அமரர் கல்கி காந்தியவாதி மற்றும்  தேசிய சிந்தனையுடன் கூடிய  தமிழ் உள்ளம் கொண்டவர் .அவர் படைப்புகள் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்த தமிழ் படைப்புகள் ஆகும். அவற்றை உலகெங்கும் உள்ள சம்ஸ்க்ருத ஆர்வலர்கள் அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

அமரர் கல்கி வாழ்ந்த 1950-களில் நிலவி வந்த சமுதாயப் பிரச்சினைகளை அவரது கதைகள் படம்பிடித்து காட்டுகின்றன. கணவ்னை இழந்த பெண்களின் கையறு நிலை, பெண் கல்விக்கு தடை போன்ற அப்போதைய பிரச்சினைகளை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அவரது கதைகள் விளங்குகின்றன. அந்த வகையில் இப்போது சமுதாயத்தின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து,  இப்போது எந்தளவு சமுதாயம் தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டு வந்தது என்பதை திரும்பிப் பார்த்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு நூல் உதவும்.

மேலும் ஒரு சிறுகதை எவ்வாறு  படைக்கவேண்டும் என்பதற்கு   அமரர் கல்கியின் சிறுகதைகள் மிகச் சிறந்த இலக்கணம். சிறுகதை என்பதன் அளவை மீறவில்லை. அதேசமயம் சிறுகதை இலக்கியத்தின் ஆழ அகலங்களை கல்கி முழுமையாக விளக்கிக் காட்டியுள்ளார். அந்த வகையில் மொழிபெயர்ப்புக்காக நான் தேர்ந்தெடுத்த அவரது 10 சிறுகதைகள்..

*தந்தையும் மகனும் (பிதா புத்ர: ) – ஒரு தந்தையும் மகனும் சத்ரபதி சிவாஜியின்  படையில் போரிட்ட வீர ரஸம் பொருந்திய கதை.

*கேதாரியின் தாய் (கேதாரஸ்ய மாதா) – கணவனை இழந்த பெண்கள் அமங்கலமானவர்கள் எனும் கருத்து நிலவி வந்ததால், ஒரு விதவைத் தாயின் மகனுக்கு ஏற்படும் மன உளைச்சல் பற்றிய கதை.

*இடிந்த கோட்டை (சிதிலம் துர்கம்) – வாழ்க்கையின் சவால்களைக் கண்டு அஞ்சி வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல், எதிர்நீச்சல் போட வேண்டும் எனும் கருத்தைத் தெரிவிக்கும் விறுவிறுப்பான திகில் கதை.

*இமயமலை எங்கள் மலை (ஹிம சைல: மம சைல🙂 – தேசப்பிரிவினை காலகட்டத்தின் பின்னணியில் அமைந்த தேசபக்திக் கதை.

*நம்பர் 888 (ஸங்யா 888 ) – அதிருஷ்டத்தை நம்பி வாழ்க்கையை வீணடிப்பவர்கள் பற்றிய கதை.

*தப்பிலி கப் (ஸௌதாமினீ) – குதிரைப் பந்தையத்திற்கு அடிமையாகி வாழ்வில் இன்னல்படுபவர்கள் பற்றிய பல ரசம் நிறைந்த கதை.

*பாழடைந்த பங்களா (சிதிலம் பவனம்) – ஒரே கதைக்கு பலவிதமான முடிவுகள் அமைத்து சிறுகதை எனும் இலக்கிய வகையின் ஆழ-அகலங்களை வெளிக்கொணரும் திகில் கதை. *விதூஷகன் சின்னுமுதலி (விதூஷக: சின்னஸ்வாமீ) – ஒரு குடும்பத்தை மதுப் பழக்கம் எவ்விதம் சீரழிக்கிறது என்பது பற்றிய கதை.

*கடிதமும் கண்ணீரும் (பத்ரம் அஷ்ரூணி ) – பெண்கல்வி, விதவைகள் மறுவாழ்வு போன்ற கருத்துக்களை தெரிவிக்கும், உருக்கமான கதை.

*வீடு தேடும் படலம் (க்ருஹான்வேஷணகாண்டம்) – நகரங்களில் வீடு தேடி அலைபவர்களின் நிலையை பிரதிபலிக்கும் திகிலும் ஹாஸ்யமும் கலந்த கதை.

மேற்கண்ட இந்த 10 கதைகளிலும் காணப்பட்ட நவரசங்களுடன் கூடிய பல்சுவைத் தன்மையும் , மேன்மையான சமுதாயக் கருத்துக்களும் இவற்றை நான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கக் காரணமாயின.

இவற்றை மொழிபெயர்த்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன?

அமரர் கல்கியின் கதைகளை 2016 முதல் ஒன்றன் பின் ஒன்றாக மொழிபெயர்க்கத் துவங்கினேன். அவை ஒவ்வொன்றாக பெங்களூரிலிருந்து வெளியாகும் "சம்பாஷண சந்தேசம்" எனும் பிரபலமான, சம்ஸ்க்ருத மாத பத்திரிக்கையில் வெளியாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2019-வாக்கில் ஏழு கதைகள் வெளியாகியிருந்தன. அதன் பின் இன்னும் மூன்று கதைகள் சேர்த்தால் ஒரு தொகுப்பாக வெளியிடலாமே எனும் எண்ணம் வந்தது. சம்ஸ்க்ருத பாரதி அமைப்பு அதனை வெளியிட முன்வந்து ஊக்குவித்தது. மொழிபெயர்ப்பு வேலை என்னமோ நடந்து கொண்டிருந்தது ஆனால் இடையே கொரோனா தடை வந்தது. அந்தத் தடையைத் தாண்டி புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது.

(சம்ஸ்க்ருத பாரதி அமைப்பினைச் சார்ந்த, சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது  (2010) பெற்ற திரு ஹெ ஆர் விஸ்வாஸ் இந்த மொழிபெயர்ப்பினை படித்து தனது ஒப்புதலையும் பாராட்டுதலையும் தெரிவித்தார்  என்பது கூடுதல் தகவல்)

இதற்குமுன் வேறெந்த எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்களா?

இல்லை.. 2016-க்கு முன் சிறுகதை மொழிபெயர்ப்பு எதுவும் நான் செய்யவில்லை என்றாலும், கிடத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு பழைய யோகசூத்திரங்களுக்கான வியாஸரின் சம்ஸ்க்ருத உரையைத் தமிழில் பல ஆய்வுக் குறிப்புகளுடன் மொழிபெயர்த்துள்ளேன்.  அதனை மூன்று பாகம் கொண்ட தொகுதியாக சர்வதேச புகழ்பெற்ற யோகா அமைப்பான கிருஷ்ணமாச்சாரிய யோக மந்திரம் , சென்னை வெளியிட்டது.(2016).

இதற்கு முன் எனது மொழிபெயர்ப்பு முயற்சி பதஞ்சலி சரிதம். தஞ்சாவூரில் 17-ம் நூறாண்டில் வாழ்ந்த வடமொழி இலக்கண பண்டிதரான ராமபத்ர தீக்ஷிதரால்  சம்ஸ்க்ருதத்தில் 600 செய்யுள்கள் கொண்ட, பதஞ்ஜலி முனிவரின் வாழ்க்கைப் பற்றிய "பதஞ்ஜலி சரிதம்" எனும் காவியம் இயற்றப்பட்டது. அதனை சம்ஸ்க்ருதத்தில் சுருக்கி, உரைநடையாக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தேன். இதனையும்  கிருஷ்ணமாச்சாரிய யோக மந்திரம்  (2011) வெளியிட்டது.

மேலும், பல்வேறு யாப்புமுறைகளில் அமைந்த எனது சம்ஸ்க்ருத செய்யுள்கள், பாடல்கள்,  ஆகியவைகளின் தொகுதியான "உன்னம்ய த்ருஷ்டம்" (தலைநிமிர்ந்து நோக்கினேன்) எனும் நூலினை எனது ஆங்கில மொழிபெயர்ப்புடன் பெங்களூர் அமைப்பு ஒன்று வெளியிட்டது.

வேத மந்த்ரங்களின் அர்த்தங்களை எளிய சம்ஸ்க்ருதத்தில் "ஸம்ஸ்க்ருத ஶ்ரீ" எனும் மாதப் பத்திரிக்கைக்கு சிறு கட்டுரைகளாக எழுதி வந்தேன். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து வேத விஞ்ஜான குருகுலம், பெங்களூர்   "மந்த்ர-அர்த்த-சிந்தனம்" எனும் நூலாக வெளியிட்டது. இந்த நூலுக்கு கர்நாடக ஸம்ஸ்க்ருத பல்கலைகழகத்தின் "சிறந்த புத்தக விருது" வழங்கப்பட்டுள்ளது (20219-20).

அடுத்தபடியாக நீங்கள் செய்யப்போகும் இலக்கிய விஷயம் என்ன?

தற்போது ஹடயோக பிரதீபிகை எனும் 15-ம் நூற்றாண்டு  சம்ஸ்க்ருத யோக நூலை தமிழில் பல ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் மொழிபெயர்த்து வருகிறேன். இந்த ஆண்டுக்குள் அது நிறைவடைந்து விடும்.  இதனுடன் கூட அமரர் கல்கி அவர்களின் சாகித்திய அகாதமி விருது பெற்ற "அலைஓசை" எனும் படைப்பையும், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய 'மலைக்கள்ளன்' எனும் நாவலையும் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கும் உத்தேசம் உள்ளது.

-இவ்வாறு ஜயராமன் சொல்லி முடித்தார். அவரது முயற்சிகள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துவோம்.

 (கல்கி கதா மஞ்சரீ நூலின் விலை 100 ரூபாய்). இணையம் வாயிலாக இந்த புத்தகம் வாங்கிட –https://www.samskritaseva.com/product/kalki-katha-manjari/

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com