கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!
Published on

எஸ்.மாரிமுத்து

லக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.

பொதுவாக, சங்காபிஷேகத்தை வீட்டில் செய்யும் வழக்கம் இல்லை. கோயில்களில் 54, 60, 64, 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு தலத்துக்கும் உள்ள ஆகம முறைப்படி சங்குகளின் எண்ணிக்கை அமையும். தலைவாழை இலையில் அரிசி பரப்பி, அதன் மேல் தர்ப்பையைப் போட்டு, அதில் சங்குகளை குங்குமம், சந்தனம் வைத்து அலங்கரிப்பார்கள். வரிசையாக வைக்கப்பட்ட சங்குகளுக்கு நடுவில் சிவப்புத் துணியின் மேல் மிகப்பெரிய வலம்புரிச் சங்கு வைக்கப்படும். அதன் அருகில் ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாஹனம் செய்வார்கள். சில கோயில்களில் வலம்புரிச் சங்கு பக்கத்திலேயே இடம்புரிச் சங்கும் வைக்கப்படும். அது அன்னை சக்தியின் உருவமாக போற்றப்படும். இந்தச் சங்குகளில் அம்மையப்பனாம் சிவசக்தியரை ஆவாஹனம் செய்து பூஜை செய்வதே வழக்கம்.

பூஜையில் வைக்கப்படும் சங்குகளின் எண்ணிக்கைக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது. 54 சங்குகளை வைத்து பூஜிக்கும்போது, அந்த அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களின் ஆற்றல், நுண்ணறிவு ஆகியவை வளரும் என்பது ஐதீகம்.

60 எண்ணிக்கையில் சங்குகள் வைக்கப்பட்டிருந்தால், ஆண்டுகள் அறுபதையும் சொல்லி சிவனையும், அன்னை சக்தியையும் சங்குக்குள்ளே ஆவாஹனம் செய்வார்கள். அப்படிச் செய்வதால், சகல உயிர்களுக்கும் நன்மை விளையும், வளங்கள் பெருகும், நாடு செழிக்கும் என்பது நம்பிக்கை.

64 எண்ணிக்கையில் சங்குகள் இருந்தால் ஆயக் கலைகள் அறுபத்து நான்கையும் ஆராதித்துப் போற்றி ஆவாகிப்பார்கள். அப்படிச் செய்யப்படும் சங்காபிஷேகத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு அத்தனை கலைகளும் எளிதாகக் கைவரப்பெறும், கல்வி கூடும், நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

108 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது சில சிவாலயங்களில் வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்யும்போது, சிவனின் ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் ஆகியவற்றோடு, ஆவரளி தேவதைகளையும் சேர்த்து பஞ்சம ஆவரண விதிப்படி பூஜை செய்வார்கள். அப்படிச் செய்யப்படும் சங்காபிஷேகத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு, நற்புகழ் ஆகியவை கிடைக்கும்.

1008 சங்குகளை வைத்து சில ஆலயங்களில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அபிஷேகத்திற்குரிய சங்குகளை அடுக்கும்போது, அவற்றை சங்கு, திரிசூலம், தாமரை இலை, வில்வ இலை ஆகிய வடிவில் அடுக்கி, பூஜை செய்வார்கள்.

கார்த்திகை சோமவார சங்காபிஷேகத்தைக் கண்டு, மனதார வணங்கினால் நோயற்ற இன்பமான வாழ்க்கையை உமாமகேஸ்வரர் அருள்வார். மேலும், தீய சக்திகள் அண்டாது, பிரம்மஹத்தி போன்ற கடுமையான தோஷங்கள் கூட விலகும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com